போவோமா பொன்னுலகம் .......
# 02: காரங்காடு படகுச் சுற்றுலா :
தமிழ்நாட்டில் பல சுற்றுலா மையங்கள் பல மாவட்டங்களில் இருந்தாலும், ராமநாதபுரம் ஒரு காய்ந்த பூமியாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் சமீபகாலமாக தொண்டி அருகே அமைந்துள்ள காரங்காடு படகு சவாரியை தமிழ்நாடு சுற்றுலா நிறுவனம் / வனத்துறை சற்று சீர்செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த காரங்காடு திருவாடனையில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையிடமான ராமநாதபுரத்திலிருந்து 64 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 452 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி போன்ற ஊர்கள் அருகில் உள்ளன. வங்காள விரிகுடா கடலருகே உள்ளதால் இங்கு ஈரப்பதம் (humidity) அதிகம்.
காரங்காடு பற்றி அதிகம் அறியப்படாத உண்மை ஒன்று இருக்கிறது என்றால் இதுவும் (சிதம்பரம் அருகே உள்ள) பிச்சாவரம் போல சதுப்புநில காடு கொண்ட (Mangrove forest) இடமாகும்.
Eco-tourism எனப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக இந்த சதுப்பு நில அமைப்புள்ள உப்பங்கழியை (backwaters) மேலும் சிறப்பாக சுற்றுலா பயணிகள் அறியும் / வந்து போகும் வகையில் இங்குள்ள வசதிகளை தமிழக அரசு மேம்படுத்தலாம்.
வசதிக்குறைவுகள் இருந்தாலும் இங்குள்ள சுற்றுலா மையத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு சவாரி மூலம் மாங்குரோவ் காடுகளின் அழகையும், கடல்பசு தீவு, பல்வேறு வகையான பறவையினங்களின் அழகையும் ரசித்து செல்கின்றனர். இக்கிராமத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனதை கவரும் விதமாக அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாகவே கவர்ந்துள்ளன. நீண்டதூரம் படகு சவாரி செய்ய 2 பைபர் படகுகள் உள்ளன. இதில் ஏறி கடலில் பயணம் செய்பவர்கள் இங்குள்ள காடுகளையும், கடல்புறா, கொக்கு, சாம்பல் நாரை, கடல் ஊழா, நீர்க்காகம் போன்ற பறவை கூட்டங்களையும், சீசன் காலங்களில் இங்கு வரும் ஃப்ளமிங்கோ, தேன்பருந்து, கடல் பருந்து, கூழைக்கிடா போன்ற எண்ணற்ற பறவைகளின் அழகையும் இங்குள்ள கண்காணிப்பு கோபுரம் (Observation Tower) மீது ஏறி நின்று பார்த்து ரசிக்கலாம்.
சுற்றுலா பயணிகள் விரும்பினால் கடலுக்குள் நீந்தி கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களை பார்க்கும் வசதியை வனத்துறையை செய்து கொடுத்துள்ளது. இங்கு ஏற்கனவே அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தது. தற்போது படகு குழாம் அருகில் இயற்கை எழில் சார்ந்த வகையில் மரங்களினால் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் அமர்ந்து செலுத்தும் கயாக்கிங் (kayaking) என்று சொல்லப்படும் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்ய பாதுகாப்பு கவசம் (Life jacket) மற்றும் வழிகாட்டுனர் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அருகிலிருக்கும் சுற்றுலா தலங்களோடு, இந்த காரங்காடு படகுச் சவாரியையும் இணைத்துக் கொண்டு நம்முடைய விடுமுறையைத் திட்டமிடலாம்.
ராமநாதபுரம் அல்லது தொண்டி சென்று பிறகு அங்கிருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் பயணித்து காரக்காடு சென்றடையலாம். செவ்வாய் கிழமை வார விடுமுறை என்பதை மனதில் கொள்ளுங்கள். சாப்பிட தேவையானவற்றை, குடிநீர் உட்பட கொண்டுசெல்வது நலம்.
(இந்தப் பதிவை எழுதுவதற்கு ராமநாதபுரத்தில் உள்ள நண்பரிடம் சில தகவல்கள் கேட்டபோது, இந்த காரங்காடு சுற்றுலா பற்றி இந்த வார குங்கும வார இதழில் வந்துள்ளது என்றார். எப்படியோ ஒரு உருப்படியான தகவல் மக்களைச் சென்றடைந்தால் சரி.)
ராம் ஶ்ரீதர்
No comments:
Post a Comment