அம்மா வந்தாள்
“அப்பா ரெண்டு நாளா சாப்பிடவே இல்லையே, ஏன்னு கேட்டியாமா?
பெருமூச்செறிந்தாள் ராதா. “கேட்காம இருப்பனா? கேட்டேன். சரியான பதில் இல்லை.”
“பாட்டி போனது இன்னும் அப்பாவுக்கு துக்கமா இருக்குமாமா?”
“இருக்கலாண்டி. இல்லேன்னு சொல்லலை. ஆனா அதுக்காக இத்தனை நாள் அப்பிடியே பிரமை பிடிச்சாப்ல இருக்கணுமா? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. எல்லா தப்பையும் என் தலை மேலதான் போடறாரு உங்கப்பா. கடைசி நாள்ல அவங்க அம்மாவோட இருக்க முடியாம போச்சாம். அதுக்கு நா தான் காரணமாம். அதையே சொல்லி சொல்லி புலம்பறாரு”
நித்யா அமைதியாக இருந்தாள். அப்பாவின் கோவம் அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அம்மாதான் குற்றவாளி என்பது சரியல்ல. என்ன செய்யலாம் என்பது நித்யாவுக்கும் புரியவில்லை. பாட்டி இறந்து போய் இருபது நாட்களாகி விட்டன. செய்யவேண்டிய எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக செய்து விட்டார் பாலன். ஆனாலும் அவருக்கு சோகம் குறையவில்லை. மனசு பொங்கி பொங்கி வருகிறது. முதல் ரெண்டு நாள் முழு பட்டினி. அடுத்த ரெண்டு நாள் இரவில் மட்டும் சாப்பிட்டார். கடந்த ரெண்டு நாட்களாக மறுபடியும் முழு பட்டினி. அப்பாவைப் பார்க்க நித்யாவுக்கு மிகவும் பாவமாக இருந்தது.
“பாட்டி மேல அப்பா இவ்வளவு பாசமா இருக்கறது தப்பாமா?
“தப்புன்னு யாருடி சொன்னா? நான் சொன்ன மாதிரியே கேக்கறயே? எல்லாம் என்னையே சொல்லுங்கடி”
“நான் அப்பிடி சொல்லலமா. ரொம்ப கஷ்டப் பட்டு நாலு வீடுங்கள்ல வேலை செஞ்சி பாட்டி நம்ப அப்பாவை வளத்திருக்காங்க. அதனால அம்மாவை கடைசி வரைக்கும் தன்னோட வச்சி காப்பாத்தணும்னு அப்பா கண்டிப்பா நினைச்சிருப்பார் தானே?”
“தாராளமா செய்யட்டுமே. நான் அவர் ஆசைக்கு குறுக்க நின்னேனா என்ன? நான் வந்து உங்க பாட்டியை வெளிய போங்கன்னு சொன்னனா? அவங்களா போயிட்டாங்க. அது என் தப்பா?”
நித்யாவுக்கு மேலே கேட்க சங்கடமாக இருந்தது. ஆனால் இந்த நிலைமையை எப்படியாவது சரி செய்தாகணுமே! அப்பா ரொம்பவே இடிஞ்சிப் போயிட்டார். அம்மாவை கடைசி காலத்துல தன் வீட்டுல வச்சிக்க முடியலையேங்கற குற்ற உணர்ச்சி அவரை உறுத்திகிட்டு இருக்கு. ஆனா அதுக்கு அம்மாதான் காரணமா? அம்மா எதை செஞ்சாலும் எங்கம்மா செஞ்சா மாதிரி இல்லேனு ஒரு வார்த்தை சொல்லாம இருக்க மாட்டாரு அப்பா. “ரசம் எங்கம்மா வைக்கற மாதிரி இல்லை. மாங்கா ஊறுகான்னா எங்கம்மா கையால போட்டு சாப்பிடணும்” இந்த மாதிரி தினம் சொல்லுவார். அது அம்மாவுக்கு கஷ்டமாத்தானே இருக்கும்.
“இங்க பாரு நித்யா, எல்லாக் குடும்பங்கள்லயும் மாமியார்-மருமக பிரச்சினை இருந்துகிட்டே தான் இருக்கும். நம்ப வீட்டுல பெரிசா எதுவும் நடக்கலை நான் புடவை கட்டறதில்லைன்னு உங்க பாட்டிக்கு ஒரு குறை. அதைத் தவிர பெரிசா என் பேர்ல கம்ப்ளெயின்ட் எதுவும் இல்லை. சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும் போகும். அதுக்காக வீட்டை விட்டே வெளிய போயிடறதா? எனக்காக வேணாம், அவங்க பிள்ளைக்கோசரமாவது இங்க இருக்கணும்னு நினைக்க வேண்டாமா?”
“அம்மா நீ என்னை விட வயசுல பெரியவங்க. உனக்குத் தெரியாதது இல்லை. எல்லா ஆம்பளைங்களும் அம்மா கோண்டுதான். அம்மா முந்தானையையே பிடிச்சிகிட்டுதான் வாழறாங்க. கொஞ்சம் நீயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”
சுர்ரென்று கோபம் ஏறியது ராதாவுக்கு. “என்னாடி என்னமோ நூத்துக் கிழவி மாதிரி பேசற. என்னத்த நான் அட்ஜஸ்ட் பண்ணிக்காம போயிட்டேன். நீ தான் ரொம்ப கண்டயாக்கும்”
“அம்மா சரிம்மா. சரி. அந்த பேச்சை விடு. இங்க பாரு. அப்பாவும் இப்பிடி இருக்கக் கூடாது. ஒரு ஸ்டெப் இறங்கி வரணும். நீயும் ஒரு ஸ்டெப் இறங்கணும். இல்லேன்னா இந்த வீட்ல நிம்மதி இருக்காது. உன்னாலதான் அம்மாவைப் பிரிய வேண்டி இருந்ததுன்னு அப்பா நினைக்கிறார் போல இருக்கு. அதை அப்பா மாத்திக்கணும். நீயும் நம்ப அப்பாவுக்காக கொஞ்சம் இறங்கிப் போகணும்.”
“சரிடியம்மா மகராணி. என்ன செய்யலாம்னு நீயே சொல்லிடு. அதுப் பிரகாரம் நான் செஞ்சிடறேன்” கோபம் கொப்பளிக்க உதடுகள் துடிக்க தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசினாள் ராதா. நித்யா யோசிக்கத் தொடங்கினாள். அம்மா, அப்பாவின் மனக்குமுறல்களை நீக்கி ரெண்டு பேரையும் சுமுகமாக்கணும். எப்பிடி செய்யலாம்? முதல்ல அப்பா கிட்ட பேசணும். அவர் சோகத்தைப் புரிஞ்சிக்கணும். அவரை சமாதானப் படுத்தணும். அம்மா மேல பெரிசா தப்பு எதுவும் இல்லைங்கறதை அப்பாவுக்குப் புரிய வைக்கணும். சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட்…….செஞ்சிடுவோம். எப்ப பாரு அம்மாவை பாட்டியோட கம்பேர் பண்றதை நிறுத்துன்னு அப்பா கிட்ட சொல்லணும்.
நித்யா எழுந்தாள். நடந்தாள். நடந்து போனவைகளை, பாட்டியின் நிலைமையை நன்றாக யோசித்தாள். யாருக்கும் யார் மேலேயும் பொறாமையோ, விரோதமோ கண்டிப்பாக இல்லை. பாட்டி கௌரவமாக விலகிக் கொண்டார். அப்படி இருக்கும் போது இந்த சிக்கலை சரி பண்ண முடியாதா என்ன? யோசித்தவளுக்கு மெல்ல ஒரு யோசனை உதயமாகியது. அப்பாவுக்குக் குழந்தை மனசு. குழந்தை மாதிரி பிடிவாதம் பண்றார். சரிப் படுத்திடலாம்.
***
வெள்ளிக்கிழமை வந்தது. பத்து நாள் தாடி. பழைய சட்டை என்று கோலத்தை மாற்றாமலேயே வாடி, வதங்கிப் படுத்துக் கிடந்தார் பாலன். அவர் மனம் சமாதானம் அடையவில்லை. கடந்த ரெண்டு நாட்களாகவே நித்யா அவரிடம் நிறைய பேசி இருந்தாள். ஓரளவிற்கு அவருடைய தவறுகளை அவருக்குப் புரிய வைத்திருந்தாள். அவருடைய குற்ற உணர்ச்சியையும் குறைத்திருந்தாள்.
நித்யா கண்ஜாடை காட்டவும், அறையிலிருந்து வெளியே வந்தாள் ராதா. மெல்ல அருகில் வந்து பாலனைத் தொட்டாள். “காபி சாப்பிடுங்களேன் சூடா கொண்டு வந்திருக்கேன்”
மெல்ல நிமிர்ந்து ஆயாசமாக ராதாவைப் பார்த்த பாலன் திடுக்கிட்டார். அவர் உடலெங்கும் குப்பென்று மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. திடீரென ஒரு மகிழ்ச்சி வெள்ளம் அவர் உடம்பில் புகுந்து தந்தன தந்தன என்று சோர்ந்து போயிருந்த நியுட்ரான்களை மீட்டி விட்டது. கண்களில் ஒரு பிரகாசம் துளிர் விட்டது. அரைப் பட்டினி, கால் பட்டினியால் வாடிப் போயிருந்த உடல் திடீரென முறுக்கேறி புடைத்தது.
கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார் பாலன்.
அவருடைய அம்மாவின் புடவையில் அவர் மனைவி !
அசந்து போனார். அம்மாவே வந்து விட்டாளோ. புடவையே கட்டத் தெரியாதே என்று இருந்த ராதா….இப்போது புடவையில்…..அதுவும் அம்மாவின் புடவையில்.
“ராதா” என்று வீடே அதிரும்படி அழைத்து, அவளை அமர்த்தி, அவள் மடியில் முகம் புதைத்தார் பாலன். அவர் குலுங்கி குலுங்கி அழ அவருள் புதைந்து போய் கெட்டிப் பட்டுக் கிடந்த, அவரின் சோகப் பனிக்கட்டி மெல்ல மெல்லக் கரைய ஆரம்பித்தது. தன் கணவனின் தலை முடியைத் தடவிக் கொண்டிருந்த ராதாவின் கண்களிலும் கண்ணீர் துளிகள்.
இந்த வினோத ஜோடியை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா. அவள் நினைத்தது சரிதான்.
“மனைவியிடம் அம்மாவைத் தேடும் ஆண்கள்”
(அழகாக படம் வரைந்து கொடுத்தவர் திரு. Govindaraj Lakshminarayanan அவர்கள். அவருக்கு கோடி நன்றிகள்)
No comments:
Post a Comment