நினைவலைகள்
ஞானத் தபோதனரை…
எழுதியவர் : சிதம்பரம் க்ஷேத்ரத்து ஆர்க்கே
சமீப காலமாக எனக்கு ஒரு தீவிர ஆசை. சமீபத்திய ஆசை என்பது தவறு. நீறு பூத்த நெருப்பாய் பல காலம் என் மனத்தில் கனன்று கொண்டிருந்த இந்த எண்ணம் இப்போது உள்மனதிற்குள்ளாகவாவது அதிக அளவில் விகசித்துப் பிரகாசிக்கிறது.
வீடு, மனை, மனைவி, மக்கள், சொந்த பந்தம், சொத்து, சுகம் ஆகிய அனைத்தையும் மறந்து ஒரு முற்றும் துறந்த முனிவராகாவிட்டாலும், சாமியாராகவாவது மாறிவிட வேண்டும் என்பதுதான் அந்த பேராசை.
சாமியார் என்றால் எப்படிப்பட்ட சாமியார் ? இனிமேல் தினந்தோறும் நான் பார்த்துப் பழக நேர்கின்றவர்களுக்குக் கூட, நான் யார், என் பெயர் என்னவென்று தெரியாத ஒரு அநாமிகா (name less) வாக, என் பெயரை நானே கிட்டத்தட்ட மறந்துவிட்ட சாமியார். காசு பணத்தைத் தீண்டாத சாமியார். வங்கிக் கணக்கு, பான், ஆதார் அட்டை, மொபைல் போன் போன்ற அடையாளங்கள் ஏதுமற்ற சாமியார். உண்ண உணவு, உடுத்த உடை போன்ற எதற்காகவும் கவலையே கொள்ளாத சாமியார்.
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட பெரு நகரங்களிலும், சிற்றூர்களிலும் ஓயா மடம், அன்ன சத்திரம், ஆண்டிகள் மடம் போன்றவை இயங்கி வந்திருக்கின்றன. தேசாந்தரமாகச் சுற்றி வரும் சாமியார்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும் இவற்றில் எளிதாகவும், இலவசமாகவும் கிடைத்தன. ஊர்ப் பெருந்தனவந்தர்கள் விசேஷ காலங்களில் இம்மடங்களில் தங்க வரும் சாமியார்களுக்கு துவராடை வாங்கித் தருவார்கள்.
ஒவ்வொரு கிராமத்திலும் சாமியாராகப் போனவர்கள் என ஒரு சிலர் பெயராவது அடிபடும். அப்படியே சாமியாராக ஆசைப்பட்டு பல்வேறு காரணங்களால் அந்த ஆசை நிறைவேறாமல் போன வயது முதிர்ந்தவருக்கு, ஆபத்சன்னியாசம் என்னும் இறுதிக்கட்ட சன்னியாச தீட்சை வழங்கி உயிர் பிரியும் தறுவாயில், அவர் தலையில் ஒரு தேங்காயை ஓங்கி அடித்து உடைத்து, அவருக்கு கபால மோக்ஷம் அளிப்பார்கள். அவரை ஒரு யதி ( துறவி) யாகக் கருதி, அவர் உடலை எரிக்காமல் புதைத்த இடத்தில் ஒரு அதிஷ்டானத்தைக் கட்டி வழிபடுவார்கள். இவற்றையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் பார்த்திருக்கிறேன். அதோடு மட்டுமல்ல, அந்த சன்னியாசி முக்தி அடைந்த தினத்தை ஆண்டு தோறும் அவரது ஆராதனை தினமாக கிராம மக்கள் (குறைந்த பட்சம் அவரது குடும்பத்தினராவது) கொண்டாடி, யாக யக்ஞங்களுக்கு ஏற்பாடு செய்து, ஊர்மக்கள் அனைவருக்கும் அன்னதானம் பாலித்தலையும் நான் பார்த்திருக்கிறேன்.
கிரஹஸ்தாஸ்ரமத்தில் வெறுப்பு கொண்ட கணவன் மனைவி இருவருமோ அல்லது தனி நபரோ வானப்ரஸ்தம் என்னும் கடைசி கட்ட வாழ்க்கையைத் தழுவி வனாந்திரங்களுக்குச் சென்று unknelled and uncoffined ஆகத் தங்கள் ஆயுளின் இறுதிக்கட்டத்தைச் சந்தித்த வாழ்க்கை முறை புராண காலத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட வாழ்விறுதி கால வானப்ரஸ்தாஸ்ரம வாழ்க்கையை சாதாரண மனிதர்களிலிருந்து ஜனகர், பஞ்ச பாண்டவர்கள் போன்ற அரசர்கள் வரை விரும்பி ஏற்றதாகவும் தெரிகிறது.
இவ்வாறாக சுயமாகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் உதாசீனத்தினாலோ குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகளில் வெறுப்புற்று, முற்றும் துறந்த சாமியார் வாழ்க்கை வாழும் ஒரு வாய்ப்பு நம் முன்னோர்களுக்குக் கிடைத்து வந்திருக்கிறது. இன்றைய நவீன அவசர கதி closed door nuclear family யுகத்தில் அழிந்துபோன பல நல்ல விஷயங்களில் இந்த வாய்ப்பும் ஒன்றாகிப் போனது காலம் செய்த கோலம்.
காவி உடை, கையில் திருவோடு என வீட்டைத் துறந்து இன்றைக்கு நான் வெளியில் வந்தால் , அடுத்த நொடியே பிச்சைக்காரன் என அழைக்கப்பட்டு விடுவேன். அதாவது உயர்வான வானப்ரஸ்தம், சன்னியாச தர்மம் எல்லாம் மறைந்து, மறந்து போனதால், பிச்சைக்கார வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவனாக நான் மலினப் பட்டுவிடுவேன்.
இருப்பினும் எனக்கு சாமியாராக வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வலுப்பெற்று வரத்தான் செய்தது. அதே நேரத்தில் நான் விரும்பிய சாமியார் வாழ்க்கைக்கான totally withdrawn சூழல் எங்கும் கிடைக்காது என்பதையும் நானறிந்தே வைத்திருந்தேன்.
இந்த சூழ்நிலையில்தான் கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்ந்திருந்த பௌர்ணமி தினமொன்றில், ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையில், தம்பதி சமேதராய் கிரிவலம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
ஹா… என்ன பாக்கியம்! கண்டறியாதன கண்டேன் எனும்படிக்கான கண்கொள்ளாக் காட்சியை நான் கிரிவலம் செய்யும்போது கண்டேன்.
மலை சுற்றும் பாதையில் மேற்காகத் திரும்பிய உடனேயே தமிழக அரசின் மிகப்பெரிய நெல் சேகரிப்பு மையம் வரும். அது தொடங்கி சுமார் நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு அடி அண்ணாமலை கௌதம ஆஸ்ரமம் வரையில் பாதையின் இரு மருங்கிலும், கட்டுக் கட்டாக சாமியார்களை நான் கண் கொள்ளாக் காட்சியாகக் கண்டேன்.
தாடி மீசை நிரம்பி வழியும் சாமியார்கள், மொட்டைத் தலையைச் சுற்றி உருத்திராட்சம் அணிந்த சாமியார்கள் என்று பல வேறு தோற்றங்களில் இருந்தாலும், அவர்களிடம் பொதுவாகக் காணப்பட்டது உடல் முழுதும் அதிக அளவில் திருநீற்றுப் பூச்சும், உருத்திராட்ச மாலைகளும், இவற்றோடு காவி நிற வேட்டியும், துண்டும். சிலர் காவி நிறத்தில் அரைக்கை சட்டை கூட அணிந்திருந்தார்கள்.
இலேசாகப் பனி பெய்யும் காலை ஏழு மணி குளிரிலும், நூற்றுக் கணக்கான சாமியார்கள் அங்கும் இங்கும் நடந்த வண்ணம் இருந்தார்கள். அனைவருமே சுத்தமாக நன்கு குளித்து,நெற்றி மற்றும் உடலில் வெண்ணிற திருநீறணிந்து, பளிச்சென்று திகழ்ந்தார்கள். சிலர் கைகளில் கமண்டலம் ( கைப்பிடி வைத்த உலோக கிண்டி) மற்றும் கைத்தாங்கி ( தமிழ்ப் படங்களில் தாடி வைத்த அகத்திய முனிவர் அக்குளில் நிரந்தரமாக வைத்திருக்கும் u வடிவ நுனியுடன் கூடிய ஒரு மர ஸ்டாண்ட் ) ஆகியவற்றைத் தரித்திருந்தார்கள். அந்த ஏரியாவில் ஏதாவது புராணத் திரைப்படம் எடுக்கப் படுகிறதோ என நான் சந்தேகப்படுமளவிற்கு ப்ரெஷ்ஷான மேக்அப்புடன் ஏகப்பட்ட சாமியார்கள் நடமாடிய வண்ணம் இருந்தார்கள்.
அவர்களில் மிகச்சிலர் தவிர யாரும் கிரிவலம் வரும் பக்தர்களிடம் யாசகம் கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் யாரையும், எதையும், கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மலையை நோக்கியும், மலைப் பகுதியிலிருந்து வெளியேறியும் வரும் சாமியார்கள், வாய்க்கால் கல்வர்ட் மேடை மீது அமர்ந்த வண்ணம், தரையில் சாக்குத் துணியை விரித்து அதில் சாய்ந்த வண்ணம், சூரியனைப் பார்த்த நிலையில் தியானித்த வண்ணம் என வகை வகையான சன்னியாசிகளைப் பார்க்க முடிந்ததே தவிர, வெட்டி அரட்டை அடித்துக்கொண்டு, போவோர் வருவோரிடம் ஈயென இரந்துண்ணும் இழிநிலையாளர்கள் எவரையும் நான் காணவில்லை.
சிறிது தூரம் சென்றபின் நீலநிற ஆட்டோவில் வந்திறங்கிய இரட்டை நாடியான மனிதர் ஒருவர் கண்ணெதிரில் பட்ட சாமியார்களுக்கெல்லாம் சுடச்சுட இட்லி, வடை, சாம்பார் சட்னியை பேப்பர் பிளேட்டில் வைத்து வழங்கியதைப் பார்த்தேன். ஐந்தடி தள்ளி இன்னுமொரு பெண்மணி ( அவரின் மனைவியாக இருக்க வேண்டும் ) சிற்றுண்டி உண்டு முடித்த சாமியார்களுக்கு பேப்பர் கப்புகளில் சூடான காப்பியை வழங்கினார். மகிழ்ச்சியுடன் அவற்றை ருசித்து உண்டு முடித்த சாமியார்கள் தங்கள் பார்வையாலேயே தம்பதியினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நகர்ந்தனர். வாய்ப் பேச்சு ஏதுமில்லை.
நான்தான் ஆட்டோவில் வந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். இவரைப்போல் இன்னும் நான்கைந்து தயாள குண தனவந்தர்கள் திருவண்ணாமலையில் இருப்பதாகவும், தினசரி மூன்று வேளையும் ஏதாவது ஒரு உணவுப் பொருளை, மலையடிவாரத்தில் உள்ள சாமியார்கள் சுமார் முந்நூறு பேருக்கு தங்களுக்குள் முறை வைத்து தந்து வருவதாகவும் தெரிந்து கொண்டேன். அதோடு மட்டுமல்லாமல் சென்னை, கோவை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் துணி வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் பெரும் பணக்காரர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது இங்கு வந்து சாமியார்களுக்குத் தங்கள் கைகளாலேயே காவி வஸ்த்ர தானம் செய்வதையும், பள்ளிப் பாளையத்தைச் சேர்ந்த ஒரு மில் அதிபர் மார்கழி மாத ஆரம்பத்தில் அனைவருக்கும் போர்வையும், கம்பளி சால்வையும் வழங்குவதையும் அறிந்து கொண்டேன்.
" நீங்கள் ஏன் ஒவ்வொரு சாமியாராகத் தேடிப்போய் இட்லி காப்பி கொடுக்கிறீர்கள் ? அவர்களை ஓரிடத்தில் சேரச் சொல்லி டிபனைக் கொடுத்தால், வேலை எளிதாகி விடுமே? " என நான் தெரியாத்தனமாக அவரிடம் கேட்டு விட்டேன்.
அவர் பதை பதைத்துப் போய்விட்டார். " அது ரொம்ப பாவம் சார்… இவங்க இருக்கிற இடம் தேடிப் போய் உபச்சாரம் பண்ணுவதுதான் மரியாதை...இவங்களை பிச்சைக்காரங்களா நினைச்சுடாதீங்க சார்… அவ்வளவு பேரும் சாமியார்கள், முற்றும் துறந்த சன்னியாசிகள் மற்றும் சாதுக்கள்…"
ஆஹா…சாமியார்களையும், சன்னியாசிகளையும் பிச்சைக்காரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தேவ வாக்கையல்லவா ஆட்டோவில் வந்த தனவந்தர் அள்ளி வழங்கி விட்டார் !
இனி என்ன ? அடுத்து வரும் ஒரு சுப யோக சுப தினத்தில், நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் கிளம்புவது என்னும் வாக்கிற்கு ஏற்ப, என் அடுத்த காரியம் திருவண்ணாமலை திருத்தலத்தில் சாமியார் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியதுதான் என்னும் முடிவிற்கு நான் அப்போதே வந்துவிட்டேன்.
இருந்தாலும் இதுநாள் வரை என் வாழ்க்கையில் நான் அனுபவித்து வந்த சில அத்தியாவசியத் தேவைகள் அங்கும் கிடைக்குமா என்பதை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது என்னும் எண்ணத்துடன் ஒரு வாட்டசாட்டமான சாமியாரை அணுகினேன்.
" சாமி, நீங்கள்ளாம் தினசரி காலங்காத்தாலே எழுந்திருந்து டாய்லெட்டுக்கு எங்கே போறீங்க ? எங்கே துவைச்சுக் குளிக்கிறீங்க ? இராத்திரி நேரத்துல எங்கே தூங்குறீங்க ? வெய்யில், மழைன்னா எங்கே ஒதுங்குறீங்க ? உங்க வாழ்க்கை முறையே ஒரு புரியாத புதிரால்ல இருக்கு ? " என்று அவரிடம் கேட்டேன். இவற்றிற்கு அவர் தரும் பதில்கள் எனக்கும் சாதகமாக அமையுமென்றால், அடுத்த முகூர்த்தமே எனக்கு நல்ல முகூர்த்தம்தான்…
தன் வெண்பற்கள் பளீரிட அந்த ஆஜானுபாகு சாமியார் என் கேள்விகளுக்கு ஏதோ பதில் சொல்ல ஆரம்பித்தார். இதுநேரம் வரை ஆச்சரியமாக அமைதி காத்து வந்த வந்த என் சகதர்மிணி, என் இடது முன்கையைப் பற்றித் தரதரவென்று இழுத்தபடிக்கு சாமியார் காதுபட இரைந்து பேசினாள்.
" இந்த சாமியாரைப் பார்த்தாலே பைராகி மாதிரி தெரியறது... இவர் கிட்டெல்லாம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு ? ஏதாவது மந்திரிச்சு, கிந்திரிச்சு வைச்சுடப் போறார்...பேசாம வாயைப் பொத்திண்டு வாங்கோ…
" ஏற்கனவே இப்பல்லாம் மத்தியானம் மூணு மணி வாக்கிலே டீயைக் குடிச்சுட்டு வாசல் உஜாலாலே ஒக்காந்தேள்னா, எங்கே பாக்கறேள்னே கண்டு புடிக்க முடியாமல் வெறிச்சுப் பாத்துண்டிருக்கேள்… தஞ்சாவூர் ஆஸ்பிட்டல்லே சைகாட்ரிஸ்ட்டா இருக்கற என் ஒண்ணுவிட்ட அண்ணன், ' கவனமாப் பாத்துக்கோடி கோமு…
இதுவே முத்திப்போனா உங்காத்துக் காரருக்கு சைக்கோ ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டி வந்துவிடும்… ஒரே இடத்துலே, ஒரே எண்ணத்திலே அவரை ரொம்ப நேரம் இருக்க விட்டுடாதே...' ன்னு சொல்லியிருக்கான்… பைத்தியம் புடிச்சு பாயைச் சுரண்டறது ஒண்ணைதான் இதுவரைக்கும் பண்ணாம இருந்தேள்...அதையும் பண்ண ஆரம்பிச்சுடாதீங்கோ…"
என்று கத்தியவாறு என்னை இழுத்துச் சென்றாள்.
இதனைக் கண்ட அந்த சாமியார் தன் வெண்பற்களை மேலும் அதிக அளவில் காட்டி உரக்கச் சிரித்தார். அவர் சிரிப்பு மலையில் பட்டு எதிரொலித்தது.
சாமியாரின் சிரிப்பிற்கு எதிரொலி சிரிப்பு அண்ணாமலை யாரிடமிருந்து வந்திருக்கும்.
**********
Hanging Bodhi !
No comments:
Post a Comment