Tuesday, February 1, 2022

பயபக்தி

 49. பயபக்தி (சிசீ 9) #ganeshamarkalam

கஸ்தூ சொல்லிட்டா மறுபேச்சில்லை. அப்படி இருந்துடறதுல பல செளக்கர்யங்கள். கூட வாழ்ந்து பாத்தாப் புரியும்.

இப்போ என்னாச்சு? ஒண்ணும் பெரீசா ஆயிடலை. கார்த்தால காபியக் கொடுத்துட்டு ஆரம்பிக்கரா. “ரெம்ப நாளாச்சே! காஞ்சீபுரமே அழைச்சிண்டு போலையே! போயிட்டு வருவமா?” இன்னொருத்தரா இருந்தா “இப்போ திடீர்னு என்ன மசக்கை? அப்பரமா ஒருநா போனாப் போறாதா?” ஆனால் “இன்னைக்கு நான் போப்போரேன். நீயும் வரதான்னா அழைச்சிண்டு போவேன். இலைன்னா நா மட்டும் கேப் வச்சிண்டு கிளம்பிடலாம்னு இருக்கேன். அப்பரம் உன்னிஷ்டம்.” அப்படீன்னு அவள் சொன்னத சரியா அர்த்தம் செஞ்சுண்டா ஆத்துல பிர்ச்சனையே வராது. “சரீ, 8 மணிக்கு ரெடியாயிடலாம். சுவாமிநாதனுக்கு சொல்லிடு. நான் குளிக்கப் போரேன்.” துண்டத் தேடிண்டு எழுந்து போரேன். அரேஞ்ச்மென்ட் கச்சிதமா பாத்துப்பள்.

சுவாமிநாதன் கல்கி கேப்ஸ் ட்ரைவர். சொன்னா ஓடி வந்துடுவன். ட்ரைவர் பேட்டாக்குமேல இவள் சாப்பாடு வாங்கிக் கொடுத்து கடைசீல ட்ரிப்ஷீட்ட சைன் செய்வதுக்கு மின்னாடி “இந்தா உன் குழந்தைகளுக்கு கொடு!”ன்னு 100ரூயும். வேற சவாரி ஒத்துண்டிருந்தா மாத்து ஏற்பாடு செய்துட்டு வருவன். அதுமட்டுமா? காஞ்சீபுரம் போரமே இவள் என்ன ஆர்டரில் கோவிலுக்குப் போவள் எங்கே காபீக்கு நிப்பாட்டணம், எங்கே லன்ச், தவறாம போய் நிறுத்தவேண்டிய ஜவுளிக் கடைகள் என்னென்னனும் அத்துப்படி. நாம ட்ரைவருக்குப் பின்னாடி ஒளிஞ்சிண்டாப்புல சாஞ்சு உக்காந்துண்டு இவாளுக்கிடையில் நடக்கும் நாடகங்களை ரசிச்சிண்டே பயணப்பட்டா போதும். பசிக்கரச்சே சாப்பிட, தரிசிக்க தெய்வங்கள். எல்லாம் கிட்டும். புதுப் புது கோவிலெல்லாம் பிராப்தம் ஆகும்.

திடீர்னு பக்தி கொப்பளிக்கும் அவளுக்கு. 70கிமீட்டரில் காஞ்சிமஹா க்ஷேத்திரம் இருக்கப்போ சென்னையிலேந்து போயிட்டு வந்தா என்ன? குரோம்பேட்டைலேந்து கார் வச்சிண்டா அரைநா 2k.  நல்ல அவுட்டிங்க். எல்லா சுவாமியும் கும்டூட்டு மடத்துக்கும் போலாம். டிடூர் செய்ய இஷ்டம்னா அரிதான க்ஷேத்திரங்களும். ஏகாம்பரேஸ்வரரும் காமாக்ஷியும் மஸ்ட். வரதராஜப் பெருமாள் முடிஞ்சா. ஸ்மார்த்தானு சொல்லலை. வரவழீல டயம் தோதுப்பட்டால். வீகெண்டில் போகமுடியாதபடி லாக்டவுனுட்டான். எங்களுக்கொண்ணும் கஷ்டமில்லை. நான் ரிடயர்ட், அவள் அனெம்ப்ளாயிட். ஆனா வேலைக்குப் போர பெண்களைவிட பிஸி. இன்னைக்கு கிளம்பிட்டா, நெட் கிளாஸ் இல்லைன்னு அர்த்தம். இல்லை இருந்ததை ராதா மாமி லாஸ்ட் மினிட்டில் கான்செல் செஞ்சிருப்பா. “நீ கிளாஸ் இல்லைன்னுட்டா அதுக்காக ஆத்துலயே கொட்டு கொட்டூன்னு முழிச்சிண்டி இருக்கப் போரேனா?” வீம்புக்கு கிளம்பிடுவள். அதுக்குள்ளேல்லாம் போனா கதை இன்னும் ஸ்வாரஸ்யமாகிடும்! வேண்டாம்.

90 நிமிஷத்துல படப்பை வழியா வந்தாச்சு. “உங்களுக்கு பசிச்சதுன்னா சம்படத்தில் ரவா உப்புமா கொண்டுவரேன்.” ஏறிண்டதும் சொல்ரா. உப்புமான்னு தெரிஞ்சிட்டது! ஏன் பசிக்கப் போரது? சுவாமிநாதனுக்கு கொடுத்துடலாம். மத்யானமா நல்ல சாப்பாடு இத்தனை பெரீய ஊரில் கிடைக்காமலா? இல்லைன்னாலும் ஏகாதசீன்னு நினைச்சுண்டுடலாம். உப்புமா? நெவர்.

காமாக்ஷியம்மன் கோவில் மொதல்ல. அப்பரம் ஏகாம்பரேஸ்வரர். இன்னொரு சிவன் கோவில் பாத்தாணம்னு இந்தண்டை இருக்கும் கச்சபேஸ்வரர் கோவில் போனம். இடையில் காஞ்சிமடத்தில் துளசி வாங்கி பிருந்தாவனத்தில் தந்தாச்சு. நின்னு நிதானமா மணி 11 ஆச்சு. “உப்புமா சாப்பிடரேளா? ஷுகர் மாத்திரை போட்டுக்க வேண்டாம்?” “வேண்டாம்”. மேட்டர் குளோஸ். “அப்படீன்னா சாப்பாட்டுக்கு இன்னும் நாழியிருக்கு. ஒரு பெருமாள் கோவில் பாத்தாணம்”. என்ன செய்யலாம்னு யோசிக்க சுவாமிநாதனே “வைகுண்ட பெருமாள் கோவில் போலாம் மாமி. போன 3தடவையா பாக்காதது”. அப்படீன்னா இதுக்கு மின்னாடி 4ஆவது தடவை வந்தப்போ அங்கே போயிருக்கம். யோசிக்கரேன் எனக்கு ஞாபகத்துல வரவேயில்லை. நாம கூட வரலையோ? தனியா வந்தளோ? தேவாரகிளாஸ் தோழிகளோட? டெம்போ ட்ரேவலெர் கொள்ளளவுக்கு ஆள் சேத்து டாட்டா சுமோவுல அடச்சிண்டு போயிருப்பா. கிரிஜா மாமி உபயமா? இவாள்லாம் செளரியமா உக்காந்துண்டு ட்ரைவரை வெளீல பிதுக்கி வச்சுண்டு ஊர் ஊராபோயிருப்பா. ஃபுல்டே பேட்டா கொடுத்தாரது ஒண்ணு விடாம பாத்துடணம்னு. திரும்பி வந்த ட்ரைவர் கதியப் பத்தி எழுதினா கதை ரெம்பவே சுவாரஸ்யமாப் போயிடும்.

அப்படி இவா போரச்சே வழீல சாப்பிட என்ன பண்ணி எடுத்துண்டிருப்பா? அதெல்லாம் பேசி வச்சிண்டு டூப்ளிகேட் ஆகிடாம வக்கணையா செஞ்சு கட்டி எடுத்தூண்டு போயிருப்பாளுவ. இப்படி வந்த ஒரு கும்பல் 16 உப்புமா டப்பாவ ஒருசேர தொறந்திருந்தா காஞ்சீபுரம் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் மொப்பம் பிடிச்சிண்டு வந்து அரெஸ்ட் செய்திருப்பான்.

வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு வந்தப்போ மணி 11:15. 12க்கு நடைசாத்திடுவாளாம். 8ஆம் நூற்றாண்டு கோவில். இதுக்கு நேரெதுக்கால கோடு போட்டாப்போல 4கிமீ தூரத்துல கைலாஸநாதர் கோவில். அது இன்னும் புராதனமானது. ரெண்டுத்தையும் நரசிம்மவர்ம பல்லவன் கட்டினதாம். வைகுண்ட பெருமாள் கோவிலுக்கே திரு பரமேஸ்வர விண்ணகரம்னுதான் பேரு. பெருமாளை பரமேஸ்வரனாவும் ஈஸ்வரனை நாராயணனாவும் பாவிச்ச காலங்களில் கட்டப்பட்டன! ஆச்சர்யமா இல்லை! கோவிலை தொடாம சுவாமி கும்டூட்டு பிரதக்ஷணமா வரணம். இல்லைன்னா பேந்து வர ஸ்டேஜில் இருக்கும். ஏதோ செஞ்சு ஸ்திரப்படுத்தி வச்சிருக்கா ஆர்கியலாஜிகல் டிபார்ட்மென்ட். கோவிலில் மூணு மாடங்கள், மூணு பெருமாள். தரைத் தளத்தில் அமர்ந்த பெருமாள். நடுத்தளத்தில் சயனப்பெருமாள் ஏகாதசி அன்னைக்கு மட்டும் தரிசனம். மேல்தளத்தில் நின்ற பெருமாள். பாக்க அனுமதியிலை. தெருக்கோடீலயே இறங்கி வரம். சட்டுன்னு ஞாபகம் வந்தது கணேஷ் கல்யாண் இந்தத் தெருவுல இருக்கும் ஒருத்தரைப்பத்தித்தான் “கேட்டுச் சத்தம்”னு கதை எழுதினர்.

நுழையரத்துக்கு மின்னாடி யானை. எங்கேந்து வந்ததோ, இந்தக் கோவிலில் யானை வச்சிருக்கலைன்னு தெரியும். பெரீசா திருமண் இட்டூண்டு. சின்ன ஆண் யானை. அப்படியும் இப்படியுமா தலையை ஆட்டிண்டு சந்தோஷமா. சித்தே தள்ளீ பாகன். நாமத்தைப் போட நிறைய நேரம் எடுத்திண்டிருக்கணம். இதுவும் வாகா காட்டியிருக்கணம். இட் இஸ் எ வொர்க் ஆஃப் ஆர்ட்!  அதைப் பாத்ததுமே மனசுக்குள் பக்தி வந்து பூந்துக்கும். கஸ்தூரி கன்னத்துல போட்டுண்டே “உள்ளே போயிட்டு வந்துடலாம் அப்பரம் யானையைப் பாக்கலாம்!” எனக்குச் சொல்ரா. நான் என்னமோ இதுகிட்டக்க நின்னுண்டு பேக்கு மாதிரி பராக்கு பாத்துண்டு அவள் பெருமாளோட ஐக்கியமாறதை டிலே செய்ய பிளான் போட்டாப்புலேயும் அதை அவள் மோப்பம் பிடிச்சு முறியடிச்சுட்டாப்போலவும். நான் அப்படியெல்லாம் நினைக்கலை. யானைக்கு உப்புமா கொடுத்தா சாப்பிடுமான்னு இல்லை கொடுத்தவாள மிதிச்சுடுமான்னு மட்டுமே சந்தேகம் வந்தது.

அமர்ந்தகோலத்துல இருக்கும் பெருமாளை பாத்துட்டு சுத்திண்டு வந்து தாயார சேவிச்சுட்டு வாசலுக்கு வந்தா யானையக் காணம். கஸ்தூ என்னை விட்ட லுக்கில் என்னமோ நான்தான் விரட்டி அடிச்சுட்டேன்னு நினைக்கரான்னு பட்டது. இந்தண்ட மரத்தடீல நகத்தி நிக்க வச்சிருக்கான். வெய்யலில் கருத்துப் போயிடுத்துன்னா? யானை எப்படி கருக்கும்? இருக்காது. வெய்யலில் வியர்த்துவிட்டு நாமம் அழிஞ்சுடுத்துன்னா? அது சரியா பட்டது. ரெண்டுமில்லை. மின்னாடி நிறுத்தின இடத்தில் கோவிலுக்கு வரவா வராம போய்டுவத கண்டுபிடிச்சு இப்போ எல்லார் கண்ணும் படும்படியா நகத்தி நிப்பாட்டியிருக்கான்

இவள் கிட்டக்கே போய் அர்ச்சனை முடிஞ்சு கிடெச்ச பிரஸாதத்தை பாகன்கிட்டக் கொடுக்கரா. அவன் தேங்காய் மூடியையும் சீப்பு வாழப்பழத்தையும் யானைக்கே கொடுத்துட்டு கஸ்தூரியை ஏக்கமா பாக்க இவள் யானைக்கு மின்னாடி குனிஞ்சு நிக்கவே இவன் சொல்ரத்துக்கு மின்னாடி யானையே தும்பிக்கய துக்கி இவள் தலேல பாவனையா வச்சுட்டு எடுத்துண்டது. இவள் சந்தோஷ மிகுதீல பர்ஸைத் தொறந்து 50 ரூவாத்தாளை அதுக்கு நீட்ட அது தும்பிக்கையால வாங்கி பாகனிடம் இந்தா வச்சுக்கோனு நீட்ட பத்திரப்படுத்திண்டான்.

“என்னைக்கு இருந்தாலும் பிள்ளையார் அழகுதான், இன்னைக்குப் பூரா பாத்துண்டேயிருக்கலாம்”. “ஆமாம் கஸ்தூரி ஆனா இது ஐயங்கார் பிள்ளையார். நாமத்தை பாத்தியா?” “பிள்ளையாருக்கு பேதமில்லை. நம்மாத்து பக்கத்தாத்து நரசிம்ம ஐயங்காருக்குத்தான் பேதம். கற்பக விநாயகர் தெருவுல ஊர்வலமா வந்தாக்கூட ஆத்து வாசலுக்கு வந்து தரிசனம் செய்யமாட்டர். ஆனா நாம நாமம் போட்ட பிள்ளையாரப் பாத்து கன்னத்துல போட்டுப்பம்”. விஸாரிச்சா யானை காமாக்ஷியம்மன் ஆலயத்துக்கு மடத்துல வாங்கிக் கொடுத்த யானையாம். எல்லாக் கோவிலுக்கும் போயிட்டு வருமாம். ஆச்சார்யாள் உத்தரவு பேதபாவம் கூடாது. யானை கோவிலில் இருந்தா ஐஸ்வர்யம், மனுஷா ஆவலா வருவான்னு சுத்து வட்டாரத்துல இருக்கும் எல்லா கோவில்களுக்கும் யானைய அனுப்ப சொல்லியிருக்காராம். “சாயங்காலமா காமாக்ஷியம்மன் கோவில் கொட்டாயுல போய்ப் படுத்துக்கும் சார்!” “அப்போ இன்னைக்கு திருமண் நாளைக்கு திருநீரா?” “அமாம் சார். இதில் பெரீய தத்துவமே இருக்கு சார், ஒண்ணு மண் இன்னொண்ணு சாம்பல். ரெண்டும் மனுஷா கடைசீல என்னவா ஆகப் போராங்கன்னு புரிஞ்சிக்க. எதுவானா என்ன?”

சட்டுன்னு விளங்கித்து. யானைய வச்சிண்டு இப்படி அலங்காரம் செஞ்சு நெத்தீக்கு இட்டு விடுவதுக்கான தாத்பர்யம் இவன் மனசுக்கு புரிஞ்சதை சிம்பிளா சொல்லிட்டான். சின்னவயசில் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் யானையப் பாக்கரச்சே இத்தனை பெரீய கருப்பு உடம்பை ப்ளேக் போர்ட் மாதிரி நினைச்சு சாக்பீஸ்ல போட்டு வச்சிருக்கா, கோவில் சுவாமியோட எம்ப்ளமா இல்ல வரவாளுக்கு ஒரு மெஸ்சேஜா?. 

கஸ்தூ கேக்கரா “என்ன பலமான யொசனை?” சொன்னேன். “எல்லாத்துக்கும் டீப்பா யோசிக்கேண்டாம். கோவிலுக்குன்னு வந்துட்டு டெத் பத்தி என்ன சிந்தனை?” “டெத் இல்லைடீ. சுவாமியோட நாம ஐக்கியமாகப்போகும் காலத்தை நினைச்சுப்பாத்துக்கன்னு வாசல்லயே யானைய நெத்தீக்கு இட்டு நிக்க வைக்கராளோன்னு டவுட்”. கஸ்தூரி என்னைக்கு நான் சொல்வதை ஏத்துண்டிருக்கா? “நீங்க தப்பா சொல்ரேள். வரவா பல்வேறு சிந்தனைகளோட வரப்போ தூரத்துலேந்தே கோபுரமும் கோவில் வளாகமும் கண்ணுல பட்டு, வாசல்லவே இப்படி யானை நின்னா சட்டுன்னு மற்ற சிந்தனைகள் கலைஞ்சுபோய் பக்தி மேலோங்கும். அதுக்கப்பரமா செய்யும் சுமாமி தரிசனம் பயனுள்ளதா இருக்கும்னு நம்ப மனசை ஒருமுகப்படுத்தத்தான் இதெல்லாம்”. பாகன் எல்லாத்தயும் கேட்டுண்டு.

“அப்படியும் வச்சுக்கலாம் அம்மா. ஆனா பக்தீன்னா என்னம்மா?” திக்குன்னுது. எல்லாருக்கும் மனசுல பக்தி உண்டு. என்னன்னு கேட்டா சொல்ல வருமா? ஆனா கஸ்தூரி சும்மா இருப்பாளா.

“நமக்கு இஷ்ட தெய்வத்தை எந்த நேரமும் இடைவிடாமல் நினைத்து அன்பு செலுத்துவது அல்லது காதல் செலுத்துவது பக்தி”. “இந்த பெருமாளொ முருகனோ நமக்கு எந்தவிதத்துல அறிமுகம்? காதல் எங்கேந்து எதுக்கு வரும்?” அவன் விடலை. இப்போ நான் சொல்ரேன். “நம்மை மீறின சக்திய கடவுள்னு வச்சிண்டாச்சு. அதனால் அதனிடம் நமக்கு தானாவே பயம் மரியாதை ஏதாவது ஒண்ணுன்னா முறையிட, அப்பப்போ ஒண்ணூம் இல்லைன்னாலும் போய்ப் பாத்துட்டு என்னை காப்பாத்து, நன்னா வச்சுக்கோன்னு வேண்டிப்பது பக்தி. நம்பிக்கை சார்ந்த விஷயம். கொஸ்சீன் பிடாது” “அப்படீன்னா சார் ஏதோ கடவுள் உதவியில்லாம நாம நிம்மதியா வாழ்ந்துட முடியாது என்பதுனால ஏற்பட்ட பயமா பக்திய வச்சுக்கலாமா?” “ஆம்”னு கஸ்தூரிய கேக்காம தலையாட்டிட்டேன்.

“பெரீய பெரீய ஆள்வாருங்க, நாயன்மாருங்க உண்மையா பக்தி செலுத்தியிருக்கலாம் ஆனா நம்மைப் போல சாதாரணமான மனுசங்க பயத்துனாலத்தான் கோவிலுக்கு வராங்க. ஏதாவது நல்லது நடக்கட்டும், கஷ்டம் வந்தா சுலபமா தீரவேண்டும், இல்லை வராமலேயே தடுக்கலாம், மரண பயம், வலியில்லாத மரணவாவது அமையட்டுமேன்னு பக்தீன்னு ஒரு போர்வையை போத்திட்டு கோவிலுக்கு வராய்ங்க. சரியா?” இதுக்கு கஸ்தூரியே தலையாட்ட இவன் என்னமோ முக்கியமா சொல்ல வரான்னு பட்டது.

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா சார். மிருகங்களுக்கும் பறவைங்களுக்கும் மரணபயமே இல்லை. அந்த ஆறாவது அறிவு இல்லாததால. குறிப்பா யானைக்கு. அத்தனை கம்பீரமா, பலம் பொருந்தியதா காட்டில் சுதந்திரமா சுத்தும் இதுக்கு பயமே கிடையாது. அப்படிப்பட்ட யானைய குளிப்பாட்டி நெத்தீல இப்படி வரைஞ்சு கோவில் வாசல்ல நிக்க வைப்பது எதுக்காக? கோவிலுக்கு வரவங்களும் இதைப் பாத்து மரணத்தை பத்தின பயத்தை தூர வச்சிட்டு உண்மையான பக்தியோட கோவிலுக்குள் நுழையட்டுமேன்னு தான் சார்”.

அன்னைக்கு அந்த யானை நெத்தீல இருந்த திருமண்ணுக்கு புதுசா அர்த்தம் கிடைத்தது. யானையின்பால் சொல்லொண்ணா பக்தியும் கிளிர்த்ததுன்னு வச்சுக்கலாம். அது பயபக்தி இல்லை. சுத்தமான பக்தி.



No comments:

Post a Comment