Tuesday, February 1, 2022

வை.மு. கோதைநாயகி

 👩🏿‍🦰🧑‍🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾

12. வை.மு. கோதைநாயகி

By ஹேமா பாலாஜி  | |  

ஐந்தரை வயதான அந்தக் குழந்தை தனக்கு புதிய பட்டுப் பாவாடை சட்டை போட்டு விடுவதையும், விதவிதமான நகைகள் பூட்டுவதையும், ஆண்டாள் கொண்டையிட்டு நீண்ட சடையில் பூக்கள் தொடுப்பதையும் மிகவும் ஆசையாக செய்து கொண்டது. அந்த அறையில் இருந்த கண்ணாடியில் தன் சின்னஞ்சிறு உருவத்தை முகமெல்லாம் பூரிப்பாக இப்படியும் அப்படியும் ஆடி ஆடி திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது.

வெளியில் இருக்கும் தன் தோழிகளுக்கு காண்பிப்பதற்காக ஓடிய குழந்தையை ‘கண்ணம்மா உனக்கு கல்யாணமடி தங்கம். வெளியில் எல்லாம் இப்படி ஓடிக் கொண்டிருக்கப்படாது. உன்னை மனைக்கு கூப்பிடவரை இந்த ரூமிலேயே சமத்தா உக்காந்துண்டு இருக்கனும் சரியா?’ என்று அவளது சித்தியின் குரல் மென்மையாய் தடுத்து உள்ளே அழைத்து உட்கார வைத்தது. ‘போங்கோ சித்தி, எத்தனை நாழி உள்ளேயே இருக்கறது’ என தன் மழலைக் குரலில் சொல்லிச் சிணுங்கியபடியே மருதோன்றி இட்டுச் சிவந்திருக்கும் தன் கை அழகை பார்க்க ஆரம்பித்து விட்டது.

அரளி மொட்டுக்களைப் போல சீராக சிவந்து இருந்த அந்தப் பிஞ்சு விரல்கள் தான் பின்னாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல், நாடகம், கதைகள் என எழுதித் தள்ளியது. அக்குழந்தை தான் வை.மு. கோதைநாயகி.  சிறந்த எழுத்தாளர், வெற்றிகரமான பத்திரிக்கையாளர், சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகி, இசைக் கலைஞர் என பல பரிணாமங்களில் தன்னை நிறுவிக் கொண்ட அசாத்திய பெண்மணி.  

1901 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார், பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர். கோதைக்கு ஒரு வயது இருக்கும் போது தன்னுடைய தாயை இழந்துவிட்டார். பாட்டி வேதவல்லி அம்மாளிடமும் சித்தி (சித்தப்பாவின் மனைவி) கனகம்மாளிடமும் வளர்ந்தார். சிறு வயது முதலே தன் சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருந்ததில்லை. கோதையும் பள்ளி செல்லவில்லை. அவருக்கு அக்கால பழக்கத்தின் படி பால்ய விவாகம் செய்துவிட்டனர்.

1907–ல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது, திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் ஆசாரம் அனுஷ்டானங்களைக மிகச் சிரத்தையாகக் கடைப்பிடிக்கும் ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்கள். அக்குடும்பத்தினருக்கு, அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும், வைணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது.

திருமணத்துக்குப் பிறகு குடும்பப் பெயரான வைத்தமாநிதி முடும்பை என்ற பெயர் கோதைக்கும் சேர்ந்தது. அதனால் அவர் (வைத்தமாநிதி முடும்பை) வை.மு. கோதைநாயகி ஆனார். ஆசாரம் மிக்க குடும்பம் ஆனாலும் பெண்களின் வளர்ச்சிக்கு தடை போடும் பழமைவாதிகளாக அவர் புகுந்த வீட்டினர் இல்லாதிருந்தது அக்காலத்தின் மிகப்பெரும் ஆச்சரியம்.

பள்ளி செல்லாததால் கோதைக்கு எந்த மொழியும் எழுதப் படிக்கத் தெரியது. ஆனால் செவிவழி கேட்டே அனைத்து பாசுரங்களையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரின் புகுந்த வீட்டினர் தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலுமே அதீத புலமை கொண்டவர்கள். ஆழ்வார்களின் பாசுரங்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்கள். மூத்த மாமனார் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கும், நன்னூலுக்கும் உரை எழுதியவர். அதனாலயே பள்ளிக்குக் கூட சென்றிராத கோதைக்கு வீட்டில் ஓரளவு கல்வியறிவு பெறும் வாய்ப்பு கிட்டியது. தன் மாமியாரிடம் தெலுங்கும் கற்றுக் கொண்டார்.

தொடரும்

No comments:

Post a Comment