🎼🎻🌹கோதாவரி நதி தீரம்🌹🎻🎼
ராஜமுந்திரி-பத்ராசலம்-வாரங்கல் தெலுங்கு மண்ணில் ஒரு பயணம்
(சுஜாதா&வெங்கடேசன்)
1)பயண ஏற்பாடுகள்
இரண்டாம் அலை ஓய்ந்து மூன்றாவது அலை வர நாள் பார்த்து வந்த 2021 டிசம்பர்..இவர் மூணாவது அலைக்குள்ள ஒரு ரவுண்ட் டூர் போய்ட்டு வந்துடனும். அப்பறம் அது ஓயற வரைக்கும் வெய்ட் பண்ண முடியாதுங்கறார்.
என்னவோ பண்ணுங்கோங்கறேன். வழக்கப்படி ட்ரேட் செண்டர்ல டூரிஸம் பொருட் காட்சில ஓசியில வாங்கிண்டு வந்த வழவழா பேப்பர் Pamphlets ,இந்தியா மேப்,பேப்பர்ல ,விகடன் குமுதத்துல வந்த பயணக கட்டுரை IRCTC advt எல்லாத்தையும் பரப்பி பாத்துண்டு அதுல இருக்கற ஊர்களுக்கு ticket இருக்குமான்னு இத்தனூண்டு செல்போன் ஸ்கிரீன்ல பாத்துட்டு ஆந்திரா ,பக்கம்தான் உடனே கெடைக்கும் போலருக்கு பத்ராசலம் போணம்னு சொன்னயே (நான் எப்ப சொன்னேன்)என்னோட யோஜனைய கேக்கறாமாதிரி சொல்றார்.
உங்க இஷ்டம் துணைக்கு வரணும்னா எங்க ஒன்னா ரிசர்வ் பண்ணுங்கோ ..நான் ராமரை மானசீகமா கூட சேவிச்சுப்பேன் ன்னு அலட்டலா சொல்றேன். இவர் மேப்பை உத்து பார்த்துட்டு பத்ராசலத்துக்கு பக்கத்துல ட்ரெய்ன் போற பெரிய ஸ்டேஷன் தூரத்தை எல்லாம் ஸ்கேல் வச்சி அளந்து ராஜ முந்திரிதான் விஜயவாடாவை விட அரை இஞ்ச் கிட்ட (மேப்ல)இருக்கு ன்னு சொல்லி எடம் இருக்கான்னு பாக்கறேன்ங்கறார். மூணு நாள்ல (21th நைட் )எடம் இருக்கு..காத்தால போய்ட்டு கோதாவரில குளிச்சிட்டு கோதாவரி கரைலயே ஊர்ஊரா பாத்துண்டு பத்ராசலம் போவோம்ங்கறார். மறுபடி திரும்பறதுக்கு என்ன செய்வள்ங்கறேன். மறுபடி ஸ்கேலால பத்ராசலத்துக்கு மேற்க
பார்த்துண்டு வந்து தோ வாரங்கல் இருக்கே இது பெரிய ஜங்ஷனாக்கும். இங்கேந்து ஒரு வாரம் கழிச்சு திரும்பிடலாம்னு சொல்லி ஒரு குன்ஸா 28 ல வாரங்கல் சென்னை டிக்கட் இருக்குங்கறார்.
எதுல இரண்டு தரமும் ஸ்லீப்பர்தானே ஏசி கீசி பண்ணிடப்போறீங்கங்கறேன். ஆமா ஆமா டிசம்பர் குளிர்ல போய் பண்ணுவேனாங்கறார்(அக்னி வெயில்லயே ஸ்லீப்பர்ல அழைச்சிண்டு போன மகானுபாவன்)
ஆனா இத்தனூண்டு போன்ல ரிசர்வ் பண்ண ஓபன் பண்ணா எங்கயோ விளம்பரத்துல கொண்டு விடறது ..ஒரு தடவ பைசா போய் டிக்கட் வராம அஞ்சு நாள் கழிச்சுதான் வந்தது ..நான் தாம்பரம் போய் நேர பண்ணிண்டு. வரேங்கறார்.
(பொண்ணு வாங்கித்தந்த லேப்டாப்ல பாத்து ஈசியா போட நெட்டுக்கு பணம் கட்டாம பையன் தந்த பழைய ஐ போன்ல ஜியோ சிம்ல மணிக்கணக்கா பயணக்கட்டுரைலேர்ந்து மாட்ரிமோனி வரைக்கும் தடவிண்டிருக்கார்)அடுத்த நாள் தாம்பரம் போய் ரெண்டு மணிநேரம் க்யூல நின்னு ரிசர்வ் பண்ணின்டு வரார்.
எதோ இந்த தடவையாவது கஷ்டப்படாம ராமர சேவிச்சுட்டு இவர் சொல்றபடி ஊர்ஊரா போய் கோதாவரில குளிச்சுண்டே மத்த பெருமாளையும் சேவிக்கலாம்ணு நெனச்சிக்கறேன். (அது மாதிரி ராஜ முந்திரிலேர்ந்து போட் சர்வீஸ்லாம் கெடையாதுன்னும் பஸ்ரூட்டும் காட்டு வழில ஆறு மணி நேரம் போகணும்னும் விஜயவாடாலேர்ந்து கம்மம் வழிதான் நல்ல ரோட்ல நாலு மணி நேரத்துல போக முடியும்னும் கூகுள் ,மேப்பை பாத்தே டூர் புக் பண்ற இவருக்கு தெரியாம நான் பட்ட கஷ்டம் (?)அடுத்தடுத்த
எபிசோடில்...
No comments:
Post a Comment