Tuesday, February 1, 2022

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர்

 வெங்கட சுப்ரமணியம்

மன்னார்குடி மதிலழகு என்று மார்தட்டிக் கொண்டிருந்த எனக்கு ”திருவிரிஞ்சை மதிலழகு” என்று நீல பெயிண்ட் பின்னணியில் வெள்ளையில் எழுதியிருந்ததைப் படித்ததும் “அட!” என்றிருந்தது. ஆமாம்... திருவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தின் மதில் சுவர்களில் வரிசையாய் நந்தி அமர்ந்திருக்க தலை தூக்கிப் பார்க்கும் போது சூரிய ஒளியில் நம் கண்கள் கூசுகிறது. மன்னை மதிலை விட சிறியது என்பதை என் கண்கள் அளந்து சொன்னது. ஒரே உசரமாகவும் இருக்கலாம்! :-) 

“எங்கயாவது வெளில போகலாம்ப்பா..” என்ற எனதிரு செல்ல மகள்களின் ஆசையை விரிஞ்சிபுரம் சென்று தீர்த்து வைத்தேன்.  கோவிலில் கூட்டமில்லை என்பது கோபுரவாசலிலேயே தெரிந்தது. கோபுரத்துக்கு உள்ளே கோயிலில் இருப்பவர்களை விட கோபுரவாசலில் தர்மம் கேட்டு தட்டு தூக்குபவர்களின் திருக்கூட்டம் ஜாஸ்தி இருந்தது.

செப்புக் கொடிமரம் தாண்டினால் இடதுபுறம் ஹேரம்ப கணபதி ஆஜானுபாகுவாய் அருள்பாலிக்கிறார். தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம்.

வாசலில் நின்றாலே வழித்துணைநாதர் (மார்க்கபந்தீஸ்வரரின் செந்தமிழ் திருநாமம்) தெரிகிறார். பாணம் நல்ல உசரம். ஆறடி இருக்கும். சுயம்பு மூர்த்தி. இறைவன் சிரசுக்கு மேலே ருத்ராக்ஷ பந்தல் போடப்பட்டிருக்கிறது. கைக்கூப்பிக்கொண்டே பக்தியுடன் நெருங்குகிறோம். பொன்னான் மேனியன் புலித்தோலாடையை  அரைக்கசைத்திருக்கிறார். வெள்ளிப்பூணுல் மின்னுகிறது. புலியாடைக்கு உள்ளே வெள்ளை வேஷ்டியில் பஞ்சக்கச்சம். சிகப்பும் வெள்ளையுமாக இரண்டு மாலைகள். விபூதி எட்டூருக்கு மணக்கிறது. வில்வ பத்ரம் ஆவுடைக்கு கீழே அர்ச்சனை செய்யப்பட்டு சிதறிக் கிடக்கிறது. அரை இருட்டில் இடது புறம் ஏற்றிய தொங்கு விளக்குகள் சிந்திய ஒளியில் கைலாயத்திலிருந்து சிவபெருமான் லிங்கரூபியாக நேரடிக் காட்சி தருவது போல இருந்தது.

“அர்ச்சனையா?”

“இல்ல... தீபாராதனை போதும்...”

“நமஸ்தே அஸ்து பகவன்....” அவர் கர்ப்பக்ரஹத்தினுள் வழித்துணைநாதர் அருகில் சென்று சத்தமாக உச்சாடனம் செய்ய நாங்களும் எங்கள் இடத்திலிருந்து சொல்லி ”ஸ்ரீமன் மஹாதேவாய நம:” என்று கைக்கூப்பினோம்.  தீபாராதனையில் மார்க்கபந்தீஸ்வரரின் அடிமுடி தெரிந்தது.

“பாணம் முன்னாடி வளைஞ்ச மாதிரி இருக்குமே...” என்றேன் தீபாராதனை தட்டோடு வெளியே வந்த குருக்களிடம்.

“ஆமாம்... இப்போ முழு அலங்காரத்துல இருக்கார். அபிஷேகம் பண்ணும்போதுதான் தெரியும்...”

பாணம் முன்னாடி வளைஞ்சிருக்குமா? அதென்ன?

திருவண்ணாமலையில் முடி காண முடியாத பிரம்மன் தான் சிவனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சொன்னான். அப்போது சிவன் பிரம்மனுக்கு சாபமிட்டார். அந்த சாப நிவர்த்திக்காக பிரம்மன் பூஜித்த சிவன் மார்க்கபந்தீஸ்வரர். பிரம்மாவுக்கு விரிஞ்சன் என்றொரு பெயர் உண்டு. அதனால்தான் இது விரிஞ்சிபுரம்.  பிரம்மன் சிவனைப் பூஜித்து சாப விமோசனம் பெறுவதற்கு அங்கு ஒரு சிவாச்சாரியார் குடும்பத்தில் சிவசர்மனாகப் பிறந்தார். மிகவும் சிறியவனாக இருக்கும் போது சிவனுக்கு  அபிஷேகம் செய்ய விரும்பினான். உயரம் எட்டாமல் வருந்தியபோது சிவனார் தனது சிரசை தாழ்த்திக் கொண்டார். அதனால் சிவன் தலையை குனிந்து கொள்வது போல பாணத்தின் நுனியில் சிறிது வளைந்திருக்கும்.

இங்கே சிம்மதீர்த்தத்தில் குளித்தால் பிள்ளைவரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வழித்துணைநாதர் சன்னிதியில் திருவலம் வருகையில் “இங்கே ஸ்வஸ்திக் போடாதீர்கள்” என்று எழுதி வைத்திருந்தார்கள். அதென்ன ஸ்வஸ்திக் போடுவது? என்று மூளையில் ஒரு கொக்கி விழுந்தது. வெளிப் பிரகாரத்தில் புலி வாகன சாஸ்தாவுக்குப் பதில் யானை மீதில் சாஸ்தா பொறித்த தூண் கண்களைக் கட்டி இழுத்தது. அருகில் சென்று கண்களை மூடி பக்தியுடன் கும்பிட்டோம்! 

மரகதவல்லி/மரகதாம்பிகை அம்பாள் சிறிய மூர்த்தம். தனி சன்னிதியில் சிகப்பு புடவையில் கருணைப் பார்வையோடு அருள்புரிகிறாள். தீபதரிசனத்தில் ஜொலிக்கிறாள். பிரதக்ஷிணம் வந்த போது கருங்கல் சுற்றுச் சுவர் முழுக்கவும் ஸ்வஸ்திக் போட்டிருந்தார்கள். வெள்ளையில் சிவப்பில் கருப்பில் என்று பல வர்ணத்தில் ஸ்வஸ்திக் சிரித்தது. ஸ்வாமி பிரகாரத்தில் மூளையில் விழுந்த கொக்கி இங்கே விலகியது! :-)

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க மார்க்கபந்தீஸ்வரர் அருள் புரிகிறார். ஒரே நாளில் சிவசர்மனாகப் பிறந்த பிரம்மனுக்கு  உபயநயனம் செய்து வேதம் கற்றுக்கொடுத்து அறிவொளி ஏற்றிய ஈஸ்வரன் ஆதலால் இந்த சிறப்புடன் இங்கே அருள்பாலிக்கிறார்.

அப்பய்ய தீக்ஷிதர் “சம்போ மகாதேவ தேவா.. சிவ சம்போ மகாதேவ தேவேச சம்போ...” என்று ஆரம்பித்து “பஜே மார்க்கபந்தும்.. பஜே மார்க்கபந்தும்” என்று உருகி உருகி மார்கபந்து ஸ்தோத்திரம் இயற்றி வழிபட்டுள்ளார். மார்க்கபந்து ஸ்தோத்திரம் படிப்பவர்களுக்கு சகல காரிய சித்திகளும் கிடைக்கிறது.

உங்கள் வாழ்க்கை வழித்துணைக்கு நிச்சயம் வழித்துணைநாதரை வழிபடுங்கள். அவரை பூஜிக்கும் எல்லோருக்கும் நல்ல வழிப் பிறக்கும்!

ஓம் நமசிவாய:

#விரிஞ்சிபுரம்

#மார்க்கபந்தீஸ்வரர்

#அப்பைய_தீக்ஷிதர்



No comments:

Post a Comment