Tuesday, February 1, 2022

வேலு நாச்சியார் 2

 👩🏿‍🦰🧑‍🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾

வேலு நாச்சியார் 2

By ஹேமா பாலாஜி  | 

துணிவும் தைரியமும் தன் ரத்தத்தில் ஊற வளர்ந்தார் வேலு நாச்சியார். பருவ வயதடைந்ததும் அவரை திருமணம் முடிக்க விழைந்தனர். அவரின் அழகிலும் வீரத்திலும் அறிவிலும் தன் மனதை பறிகொடுத்த சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதர் வேலுநாச்சியாரை மணம் புரிந்தார். திருமணத்துக்குப் பின் தன் தாய் வீடான சத்கந்தியை விட்டு சிவகங்கை சென்று அந்நாட்டின் பட்டத்து ராணியாக சுடர் மிகுந்து விளங்கினார். அங்கே அவரது இல்லற வாழ்க்கை இனிதே தொடங்கியது. வெகு சிறப்பாக வேலுநாச்சியாரும் முத்துவடுகநாதரும் சிவகங்கை சீமையை ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் அன்புக்கு அடையாளமாக ஒரு மகள் பிறந்தாள். வெள்ளை நாச்சியார் என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.   அவர்களது நல்லாட்சிக்கு பிராதானி தாண்டவராயப் பிள்ளை மற்றும் மருது சகோதரர்கள் பக்க பலமாய் துணையிருந்து வந்தனர். இப்படியாக மக்களையும் நாட்டு நலன்களையும் தன் இரு கண்கள் எனக் கருதி ஆட்சி செலுத்தி வந்த நேரத்தில் விதி தன் கோர விளையாட்டைத் தொடங்கியது.

முத்து வடுகநாதர் தன் ஆட்சியை காலணி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர மறுத்துவிட்டார். ஆற்காட்டு நவாபிற்கு கப்பமும் கட்டுவதில்லை. என் நாடு என் மக்கள் நான் உனக்கு எதற்கு கப்பம் கட்ட வேண்டும் என்று கப்பம் கேட்டு வந்த சிப்பாய்களை வெளியேற்றினார். இதனால் பிரிட்டீஷ் பிரபுக்களும் நவாபும் முத்துவடுக நாதரின் மேல் தீராத பகைமை கொண்டிருந்தனர். முத்து வடுகநாதரும் சாமான்ய ஆள் அல்ல. அவரும் வீரத்துக்கும் விவேகத்துக்கும் பெயர் போனவர். ஆங்கிலேயர்களும் நவாபும் வடுகநாதரை நேருக்கு நேர் போரில் சந்திக்க திராணி அற்றவர்களாக இருந்தனர். அவரை எப்படியாவது சதி செய்து அப்புறப்படுத்த தகுந்த சமயம் பார்த்து காத்திருந்தார்கள்.

வடுகநாதர் இறை வழிபாட்டிற்கு காளையார் கோயில் சென்ற நேரத்தில் அவரைத் தாக்க திட்டம் தீட்டினான் நவாப். அவனுக்கு ஆங்கிலேயப் படை உதவ முன் வந்தது. நவீன ரக ஆயுதங்களை வைத்து வடுக நாதர் எதிர்பாரத நேரத்தில் அவரை சுற்றி வளைத்து கோரமாகத் தாக்கிக் கொன்றனர். தன் கணவன் இறந்த செய்தி கேட்டு சொல்லொண்ணாத் துயரம் அடைந்தார் வேலுநாச்சியார். தன் கணவனது உடலை பார்த்துவிடத் துடித்து உடனே காளையார் கோயில் நோக்கி குதிரையில் சென்றார். அவரையும் தாக்கிக் கொல்ல நவாபின் படை காத்திருந்தது. ஆனால் அப்படைகளால் வேலு நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. கணவனை இழந்த கோபத்தில் நாச்சியார் ஆவேசமாக போரிட்டு அப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

காளையார் கோயில் சென்று பார்த்த நாச்சியாரின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. கண் முன்னே கணவனின் சடலம் வெட்டுபட்டும் குண்டடி பட்டும் கிடந்தது. அருகில் ஒரு பாவமும் அறியாத இளைய ராணி கௌரி நாச்சியாரும் வெட்டுண்டு கிடந்தார். வேலு நாச்சியார் அங்கேயே கணவனின் சிதையில் தானும் வீழ்ந்து உடன் கட்டை ஏறத் துணிந்தார். ஆனால் அவரது வீரமும் வைராக்கிய மனமும் தன் கணவனைக் கொன்றவனை பழி வாங்கியே தீர வேண்டும் என சபதம் பூண்டது. அரசனும் அரசியும் இல்லாத நாட்டை நவாபும் ஆங்கிலேயப் படையும் கைப்பற்றிக் கொண்டன. கோட்டையும் அரண்மனையும் எதிரியின் வசமானது. எதிரிப் படைகளில் இருந்து தப்பி மருது சகோதரர்களின் உதவியுடன் வேலுர் வழியாக திண்டுக்கல் சென்றார்.

அவரது ராஜ தந்திரம் கணக்கு போட்டது. நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் பொதுவான எதிரி ஹைதர் அலி. அவரிடம் படை உதவி கேட்பது என்று முடிவெடுத்தார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். அவரது அரண்மனை வாசலில் வேலு நாச்சியாரின் படை வீரர்கள் மூன்று பேர் காத்திருப்பதாக தகவல் அறிந்து உள்ளே அனுப்பச் சொன்னார் ஹைதர் அலி.

என்ன விஷயம் எனக் கேட்க, படை உதவி கேட்டு ராணி நாச்சியார் கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறி ஒரு வீரன் கடிதத்தை ஹைதர் அலியிடம் கொடுத்தான். அவனிடம் உங்கள் ராணி வரவில்லையா எனக் கேட்க. தன் தலைப்பாகையை கழற்றியதும் அவ்வீரன் ராணி வேலு நாச்சியாராக இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார். அது மட்டுமல்லாது தன்னுடைய வேதனைகளையும் பிரச்னைகளையும் மிகச் சரளமாக உருதுவில் விளக்கிக் கூறினார். தனக்கு அவர் உதவி தேவை என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார் வேலு நாச்சியார். தெளிவாக உருதுவில் வேலுநாச்சியார் பேசியதைக் கேட்ட ஹைதர் அலி ஆச்சரியம் அடைந்தார். அவரது உத்தியையும் புத்திக்கூர்மையும் வீரத்தையும் கண்டு மகிழ்ந்தவர் அவருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

No comments:

Post a Comment