திகில் சிலைகள்
நள்ளிரவு நேரம் அது..
அந்த காட்டு பகுதியில் உள்ள சாலையில் பகலிலேயே ஆட்கள் போக்கு வரத்து குறைவு.
இரு பக்கமும் மரங்கள் அடர்ந்த அந்த வானாந்திர பிரதேசம் மனித நடமாட்டத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் முற்றிலும் தடை செய்ய பட்டிருந்தது.
காரணம் இரவு நேரம் விலங்குகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் .
அதை மீறி உள்ளே செல்பவர்கள் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்.
சத்யா சிறப்பு அனுமதி பெற்றிருந்தான்.
அவனது நிருபர் உத்யோகம் அதை எளிதாக அவனுக்கு பெற்று கொடுத்து இருந்தது.
சத்ய மூர்த்தி பிரபல துப்பறியும் பத்திரிக்கையாகிய "மூன்றாவது கண் "இன் ஆஸ்தான நிருபர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பத்ரிக்கை தலைமை அதிகாரி இவனை தனது கேபினில் அழைத்து பேசி இருந்தார்.
"தெற்கே இதோ இந்த பகுதியில் அந்த காட்டு பகுதியை பற்றி கேள்வி பட்டு இருக்கியா சத்யா"
அவர் கையில் கூகிள் மேப்.
"தெரியும் சார் நமது பத்திரிக்கை ஏற்கனவே அந்த காட்டு பகுதியில் உள்ள மர்மங்கள் பற்றிய மூட நம்பிக்கைகளை பற்றி ஒரு ஆர்டிகள் போட்டு இருக்கிறது சார் "
"கரெக்ட் ...அங்கே உலவும் பல புரளிகளில் ஒன்று அங்கே இருக்கும் சிலை மனிதர்கள் பற்றியது. அவர்கள் பகலில் சிலையாக இருக்கிறார்கள் என்றும் இரவில் உயிர் பெற்று நடமாடுகிறார்கள் என்றும் அந்த பகுதி கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். அந்த சிலைகளை நேரில் பார்த்து இருப்பதாக சில கிராம வாசிகள் சத்தியம் செயகிறார்கள்.
இரவில் சிலை மனிதர்கள் கதவை தட்டி தண்ணீர் கேட்பதாக சொல்கிறார்கள். அவர்கள் அனைவர் கண்ணுக்கும் தெரிவதில்லை என்றும் ,சிலைகள் எண்ணிக்கை அவ்வபோது கூடுகிறது குறைகிறது என்றும் அவர்களுக்கும் இறப்பு பிறப்பு உண்டு என்றும் அவர்கள் ஏதோ தீய சக்தியால் கட்டு படுத்த படுகிறார்கள் என்றும் பல கதைகள்....
அவர்கள் இரவில் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்களாம்..ஹா ஹா..
அந்த மூட நம்பிக்கைகளை புரளிகளை அழிக்கும் விதமாக ஒரு ஆதார பூர்வ ஆர்டிக்ள் உன்னிடம் எதிர் பார்க்கிறேன். நீ பேய் பிசாசில் நம்பிக்கை அற்றவன் என்று எனக்கு தெரியும்."
சத்யா தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைதான். சீரான 35 கி. மி வேகத்தில் அந்த சாலைகளில் சென்றான்.
இரு புறமும் இருந்த மரண நிசப்தம்.....
அந்த இடத்தின் குளிர்.. எங்கோ கேட்கும் சில இரவு பறவை சப்தம்...இதற்க்கு மத்தியில் இருட்டை கிழித்து கொண்டு இவன் பைக்கின் வெளிச்சம் இதை தவிர வேறு ஏதும் அங்கே தெரியவில்லை.
அப்போது திடீரென்று ...
"கரக் ...கரக் "என்றது இன்ஜின். அதை தொடர்ந்து மோட்டார் பைக் நின்று போனது.
சத்யா கொஞ்சம் அதிர்ச்சியாக பைக்கை விட்டு இறங்கினான்.
அத்துவான காட்டில் பைக் கோளாறு பெரிய பிரச்சனை ஆச்சே !
கீழே இறங்கி பைக்கை அப்படி இப்படி சாய்த்து பார்த்தவன்.
வண்டி ரிசர்வில் சென்று இருந்ததை கவனித்தான்.
'நல்ல வேலை என்னவோ ஏதோ னு பயந்துட்டேன் '
பெட்ரோல் குமிழை ரிசர்வில் திருகி விட்டு கிக்கரை உதைத்தான். வண்டி விரும்ம்மம் என்று கிளம்பியது.
வண்டியை திராட்டில் செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.
எதிரே க்ளோசப் இல் வண்டி ஹெட் லைட் வெளிச்சத்தில் ஒரு கிழவி நின்றிருந்தாள்.
கூன் விழுந்து , தலை முழுக்க சுருட்டை முடியுடன், ஒரு கருப்பு போர்வையை போர்த்தி கொண்டு ,தொங்கும் காதுகளுடன் இப்படி சாலையில் திடீரென முளைத்த அந்த திகில் கிழவியை பார்த்து ஒரு கணம் ஆடி போனான் சத்யா. அவள் தலையில் ஆங்காங்கே மட்டும் சொட்டையாய் இருந்தது திகிலை இன்னும் கூட்டியது.
பிறகு கொஞ்சம் சுதாரித்து
" யாரு " ..என்றான் .
கொஞ்சம் கடினப்பட்டு குரலை வரவழித்தான்.
இந்த அர்த்த ராத்திரியில் காட்டு வழியில் ஒரு குடு குடு பாட்டியா ?
"51" என்று சம்பந்தம் இல்லாமல் எதையோ சொன்னாள் அந்த கிழவி
"என்ன சொல்ற ஒன்னும் புரில யார் நீ ..." என்றான். அவளை பார்த்ததில் ஆச்சர்யம் அடைந்து இருந்தான்.
"தம்பி ஒரு உதவி பா...பக்கத்துல தான் ஏன் ஊரு இருக்கு கொஞ்சம் விட்டுடுறியா பா "
குரலில் உப்பு காகிததின் கரகரப்பு இருந்தது. ஆன் குரலும் பெண் குரலும் கலந்தது போல ஒரு கலவை யான குரலாக அது இருந்தது.
மழையில் நனைந்த கோழியின் முனகல் போல அதில் ஒரு நடுக்கம் இருந்ததது.
' ச்ச ஏதோ கிராமத்து கிழவி '
" பாட்டி ஒழுங்கா புடிச்சி உட்காருவியா...வா " என்றான்.
மனதில் 'இந்த கிழவிக்கு அந்த சிலை மனிதர்களை பற்றி தெரிந்து இருக்கும் கொஞ்சம் கிளறி பார்த்தால் புது தகவல்கள் கிடைக்கலாம் ' என்ற எண்ணம் வந்தது.
"பக்கத்துல ஒரு ஓடை போகுது அதுல பாலம் பக்கத்துல போற ரோட்டு கிட்ட இறக்கி விட்டுடுப்பா போதும் "
என்றாள் அவள்.
அவளை ஏற்றி கொண்டு சற்று தூரம் சென்றவன்...
"பாட்டி இங்க நைட்ல தனியா வரியே உனக்கு பயமா இல்ல இங்க ஏதோ சிலை எல்லாம் நைட்ல உயிர் வந்து சுத்துதாமே " என்றான்.
பாட்டி ஒரு விசித்திர சிரிப்பு சிரித்தாள்
" அதுங்க பாட்டுக்கு வரும் போவும் பாவம் நல்ல மனுசாலுங்க. நாம அதுக்கு ஏன் பயப்படனும் . நான் நிறைய பார்த்து இருக்கேனே" என்றாள்.
"என்னது....நீ நிறைய பார்த்து இருக்கியா அப்போ அந்த கதை எல்லாம் உண்மைன்னு சொல்றியா "
" தம்பி இதுல என்ன பொய் இருக்கு அதுங்க இங்க தான் நடமாடிட்டு இருக்கு... அதுங்க எதிர வந்தா ஒன்னு மட்டும் நீ கவனமா இருக்கணும்........."
என்று சொல்லி கொண்டு வந்த நேரத்தில் சத்யா எதிரே அந்த சின்ன ஓடையை கவனித்தான் அதன் மேல் இருந்த பாழடைந்த பாலம் ஒன்று நிலவொளியில் சோகையாக தெரிந்தது அதற்க்கு வலது பக்கம் ஒரு மண் ரோடு பிரிந்ததை கவனித்தான். அந்த இடம் வந்த உடன் பாட்டி தன் கதையை நிறுத்தி விட்டு
"இங்க தான் இங்க தான் "என்றாள்.
"இங்க உட்டுடு பா தம்பி இந்த பக்கம் ஒரு அரை மைல் ல தான் ஊர் இருக்கு
நான் போய்கிறேன் "
என்று இறங்கி நடக்க தொடங்கினாள்.
கையில் ஏதோ பை வைத்து இருந்ததை அப்போது தான் கவனித்தான் சத்யா.
அதை சுருட்டி பிடித்து கொண்டு அந்த கிழவி மண் ரோட்டை நோக்கி நகர தொடங்கினாள்.
ஏதோ அடிபட்ட தவளை ஒன்று தவழுவதை போல் இருந்தது அவள் நடை.
சத்யாவிற்கு அவள் சொல்லி கொண்டு வந்த விஷயத்தை முழுதாக கேட்க வேண்டும் போல இருந்தது.
"பாட்டி... அரை மைல் தானே உட்காருங்க நான் விட்டுடறேன் " என்றான்.
"உனக்கு எதுக்குப்பா சிரமம் " என்றவளை சமாதான படுத்தி
"அட சும்மா உட்காரு பாட்டி " என்றான்.
பிறகு 15 நிமிடம் அவர்கள் ஏதும் பேச வில்லை.. சத்யா மெல்ல கேட்டான் ..
எங்க பாட்டி இங்க ஊரு எங்க இருக்கு?
ஆமாம்...ஏதோ சொல்லிட்டு இருந்தியே
என்னது... அவங்க எதிரே வந்தா என்ன அது....."
பாட்டி கொஞ்சம் எக்கி கண்களை சுருக்கி எங்கோ பார்த்து "தம்பி அங்க தான் பா "என்றாள்.
தூரத்தில் அவள் காட்டிய இடத்தில ஊர் இருப்பதற்கான அறிகுறியாக ஆங்காங்கே தீ வட்டிகள் எரிந்து கொண்டிருந்தன.
"தம்பி ...அது வந்து அவங்கல நீ பார்த்தா அவங்க உன் தலைல கை வைக்க முயற்சி பண்ணுவாங்க அதுக்கு மட்டும் நீ விட்டுட கூடாது உன் உயிருக்கே ஆபத்து . அப்படி வச்சிடாங்கனா அதே நொடி உன் உயிர் காத்துல கறஞ்சிடும் "என்றாள்.
சத்யாவுக்குள் பயம் ஒரு மெல்லிய இழை போல எட்டி பார்க்க...
சொல்லி முடித்த அந்த கிழவி திடீர் என்று அந்த காரியத்தை செய்தாள்.
சத்யா தலையில் ஓங்கி கை வைத்தாள்.
சத்யா அதிர்ந்து போய் ..
"ஆ " என்று அலறினான்.
பைக்கை தடுமாறி நிறுத்தினான்.
அந்த கிழவியின் சிரிப்பு வவ்வாலின் கீச்சு குரல் போல கிக்கி கிக்கி என்று ஒலித்தது.
சத்யா தனது உடலை ஒரு முறை தடவி பார்த்து கொண்டான்.
"என்ன தம்பி பயந்துடியா " என்றாள் அவள் தனது சொர சொர குரலில்.
"நான் சொன்னது அந்த சிலை மனுஷாலுங்கள பத்தி என்ன பத்தி இல்ல நான் கை வச்சா எல்லாம் ஒன்னும் ஆகாது" என்றாள் .
சத்யா கொஞ்சம் கிலியுடன் பைக்கை கிளப்பினான். மனதின் ஒரு ஓரத்தில் இவ்ளோ நேரம் கூட வருவதே அந்த சிலை மனுஷி தானா என்கிற மெல்லிய சந்தேகம் வந்து தொலைத்து இருந்தது.
என்னதான் பேய் பிசாசில் நம்பிக்கை இல்லை என்றாலும் பயம் யாரை விட்டது.
"தம்பி அதோ ஊரு வந்துடிச்சி "என்றாள் பாட்டி. தீ வட்டிகள் நெருங்கி இருந்தன.
"பாட்டி.... வந்து...நான் அந்த உயிருள்ள சிலைகளை பார்க்கணும்னா எங்க பார்க்கலாம் " என்று தயங்கி தயங்கி கேட்டான்.
அதற்க்கு அந்த கிளவி "51 " என்றாள்.
"என்னது புரில ....அந்த மனிதர்கள் இருப்பது நிஜமா நான் அவங்களை பார்க்கலாமா என்று கேட்டேன் "
அதற்க்கு பாட்டி மறுமொழியாக மீண்டும் " 51 " என்றாள்.
பிறகு இடைவெளி விட்டு விட்டு அந்த 51 ஐ சொல்லி கொண்டே இருந்தாள்.
இவள் திடீரென எதை என்னுகிறாள் என்று குழம்பிய சத்யா. அங்கே தீ பந்தம் மிக நெருங்கி இருந்ததை பார்த்து பைக் வேகத்தை குறைத்தான்.
நிறைய ஜன நடமாட்டம் போல தெரிந்த அங்கே நெருங்க நெருங்க...பைக் வெளிச்சம் பட்டு தெரிந்த காட்சியில் அதிர்ந்தான்.
அங்கே ஊர் ஏதும் இல்லை..
நிறைய சிலைகள் ஆங்காங்கே நின்றிருந்தன. பெரும்பான்மை சிலைகள் கையில் தீ பந்தம் எரிந்து கொண்டிருந்தது.
சத்யா அடி வயிற்றில் கிளம்பிய பய உருண்டையை கஷ்ட பட்டு கட்டு படுத்தினான் உடல் தீடீரென உலையில் போட்டது போல காட்டு குளிரை மீறி வியர்க்க தொடங்கியது.
பைக்கை மெல்ல ஸ்டான்ட் போட்டு நிறுத்த.. இப்போது ஹெட் லைட் வெளிச்சத்தில் அவர்கள் மிக தெளிவாக தெரிந்தார்கள். விறகு பொருக்குபவள்... ஆடு மேய்ப்பவள்.
பாலூட்டும் தாய்.. சுமை தூக்கி செல்பவன் என்று அவர்களில் இயல்பாக பல சிலைகள் இருப்பதை பார்த்தான் மெல்ல தனது கேமராவை ஆன் செய்து அதை படம் பிடித்தான்.
அங்கே இருந்த மொத்தம் ஆட்களை என்னினான். மொத்தம் 50 இருந்தது.
பாட்டி சொன்ன 51 நினைவுக்கு வர திரும்பி பாட்டியை தேடினான் அங்கே அவள் இல்லை...
தனது டார்ச்சை உயிர்பித்து ஆங்கங்கே ஒளியை பீய்ச்சி பார்க்க...கிழவியை எங்கேயும் காண வில்லை.
அப்போது....
தனது தலையை ஏதோ தொடுவதை உணர்ந்தான்.
நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.
அந்த கிழவி ஒரு வௌவால் போல மர விழுதுகளில் தொங்கி கொண்டு இருந்தாள் .இவன் தலையை ஏதோ ஒரு எலும்பை வைத்து தொட்டாள் எதையோ முனுமுனுதாள்.
சத்யா கண்கள் இருண்டு...ஏதோ மயக்க நிலையில் இழுத்து செல்ல பட்டான்
✴ ✴ ✴ ✴
எவ்வளவு நேரம் கழிந்தது என்று தெரியவில்லை.
அவன் கண் விழித்த போது கண்ட காட்சி அவனை திகிலின் உச்சத்தை அடைய செய்தது.
இப்போது அங்கே இருந்த சிலைகள் மிக இயல்பாக நடமாடி கொண்டிருப்பதை பார்த்தான். அரிசி புடைப்பதும் ...இடத்தை பெருக்குவதும் குழந்தைக்கு பால் கொடுப்பதும்....
குறிப்பாக ஒன்றை கவனித்தான். அவர்கள் அந்த சூனிய கார கிழவிக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள்.
இதற்க்கு மேல் இங்கே இருக்க முடியாது என்று முடிவு செய்தான் சத்யா..ஓட எத்தனித்த போது தான் கவனித்தான் தன்னால் கால்களை நகர்த்த கூட முடியவில்லை.
ஓடும் முயற்சியில் உருண்டு விழுந்து இருந்தான். அந்த சூனியகாரி திரும்பி பார்த்தாள் .இவனை நெருங்கி வந்து தூக்கி நிறுத்தி இவன் தலையில் எலும்பை வைத்தாள்.
"புதுசுல அப்படி தான் இருக்கும் ஹி ஹி 51....51...என்றாள் "
அப்போது தான் அந்த உண்மையை உணர்ந்தான் .
அவன் ஒரு சிலை ஆகி இருந்தான்.
✴ ✴ ✴ ✴
அந்த காரில் 4 பேர் இருந்தார்கள் .அப்பா அம்மா இரண்டு பசங்க ....ஒரு சிறிய குடும்பம் அது.
"நான் அப்பவே சொன்னேன் நைட்ல இந்த வழியா போக வேணாம்னு கேட்டிங்களா இப்ப பாருங்க கார் வழில நின்னு போச்சி " என்றாள் அந்த பெண்மணி.
"ஏங்க.... இது யாருங்க ?இங்க பாருங்களேன். யாரோ ஒரு பாட்டி ,நம்ம காருக்கு பின்னாடி நிக்குது .... என்ன அது எதையோ என்னிக்கிட்டு இருக்கு.. இங்க பாருங்களேன்....."
அந்த கணவன் திரும்பி பார்த்தான்.
"52,... 53, ....54,... 55 ....ஹி ஹி ஹி ஹி என்றாள் அந்த கிழவி.
No comments:
Post a Comment