எண்ணப்பறவை_8
அயோத்யா மண்டபம் பஸ் ஸ்டாப் அமுதா வருவதற்கும் அபிராமி வருவதற்கும் சரியாக இருந்தது.
'என்ன வேலை பண்ணின நீ. எனக்கு எவ்வளவு அவமானமா போச்சு தெரியுமா? அந்த ஆளு, அதான் உன்னோட அத்த பையன் வாங்கு வாங்குனு வாங்கிட்டான். நீ உண்மையை சொல்லிட்டு பாஸ்புக்கை என் கிட்டயே கொடுத்திருக்கலாம். வெரி பேட். எதுல தான் விளையாடறதுன்னு தெரியாதா உனக்கு.'
'சாரி, அக்கா. இப்படி ஆகும்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா..'
'என்ன சாரி வேண்டி கிடக்கு. இனிமே இப்படி பண்ணாதே. கெட்ட கோபம் வரும்.'
'சரி அக்கா. மன்னிச்சுக்கோங்கோ. இனிமே செய்ய மாட்டேன்.'
பஸ் வந்தது. கடைசி ரோவில் ஸீட்டுகளும் கிடைத்தன இருவருக்கும். சில நிமிடங்கள் பேசவில்லை.
அபிராமிக்கும் வம்பு வேண்டுமே. அவளே ஆரம்பித்தாள்.
'என்ன உங்க அத்தை பையன் வந்தானா? உன்ன பார்த்தோண்ண வழிஞ்சிருப்பானே.'
சிரித்துவிட்டு அவன் வந்து போனது மற்றும் கலீக்ஸ் எல்லோரும் கிண்டல் பண்ணினது எல்லாவற்றையும் சொன்னாள்.
'பார் எவ்வளவு தூரம் ஒரு பொய் உன்ன கொண்டு விட்டிருக்கு. ஊர் விட்டு ஊர் வந்திருக்க. பொல்லாத ஊரும்மா மெட்ராஸ். நீ நினைக்கற மாதிரியெல்லாம் இல்ல.'
தலையை குனிந்து கொண்டாள் அமுதா. அபிராமி சொல்வதிலும் ஞாயம் இருக்கத்தானே செய்கிறது?
'அப்புறம் அக்கா. நாளைக்கு நரசிம்மன் சாரை பார்க்க முடியாது அக்கா. ஆஃபீஸ்ல ஒரு பெரிய வேலை ஐஜி கொடுத்திருக்கார். சித்த நாழி கூட அங்கேயும் இங்கேயும் நகர முடியாது.'
'சரி. நரசிம்மன் எங்கே போயிடப் போறார். அடுத்த வாரம் வெச்சிக்கலாம். நோ ப்ராப்ளம்.'
'கண்டிப்பா மீட் பண்ணனும் அக்கா. மறந்துடாதீங்கோ. நானும் ஞாபகப் படுத்தரேன்.'
'ஒரு சந்தோஷ சமாச்சாரம் சொல்றேன் உனக்கு. எனக்கு நாள் தள்ளி போயிருக்கு. இன்னிக்கு டாக்டர் கிட்ட போய் கன்ஃபர்ம் பண்ணிக்கப் போறேன். ஆத்துக்காரர் சாயந்திரம் ஆஃபீஸ் வரார். ஆழ்வார் பேட்டையில் டாக்டர் பத்மா ஸ்ரீதரை பார்க்கப் போரோம்.'
கேட்டவுடன் அமுதாவிற்கு அளவில்லா சந்தோஷம். பஸ்ஸுனு கூட பார்க்காமல் அபிராமியை கட்டிக்கொண்டு ஒரு இச். கூடவே ஒரு கங்ராட்ஸ்.
'ட்ரீட் மறக்காதீங்கோக்கா.'
'கொடுக்கலைனா என்ன கொன்னுடமாட்டே? கண்டிப்பா அமுதா. நாளைக்கு ரிஸல்ட் சொல்றேன்.'
'உங்க பிரசவத்தும்போது நான் லீவு போட்டு பார்த்துக்கறேன். எப்ப ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்கோக்கா.'
'நீ இருக்கரச்சே எனக்கென்ன கவலை?'
ஆஃபீஸ் வந்தாள் அமுதா. நாள் முழுவதும் படு பிஸி. லஞ்ச் கூட மதியம் மூன்று மணிக்குத்தான். டேபிளில் வைத்துவிட்டுப் போன டீயை டீக்கடைக் காரன் அப்படியே எடுத்துக் கொண்டு போனான்.
கண்ட்ரோல் ரூமுக்குப் போவதும் ஒவ்வொரு காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்வதும் விவரங்களைப் பெறுவதுமாக இருந்தாள்.
இரவு வீடு வரும்போது மணி ஒன்பதாகி விட்டது.
'இந்த வாரம் அப்பா ஞாயித்துக் கிழமைதான் வராராம். ஃபோன் பண்ணியிருந்தார். சனிக்கிழமை ஏதோ திருச்சிலே வேலை இருக்காம்.'
'ஒரு நாளைக்காக ஏன் அலையணும் குமுதா? வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே. எனக்கும் இந்த வாரம் ஞாயித்துக் கிழமை ஆஃபீஸ் போவேனோன்னு டவுட்டா இருக்கு.'
'பரவாயில்லைடி. வந்துட்டுதான் போகட்டுமே. ஞாயித்துக்கிழமை அங்க போர் அடிச்சிண்டு இருக்கரதுக்கு இங்க வரட்டுமே.'
'குமுதா, ஐ ஆம் ஸோ டயர்ட். நான் சாப்டுட்டு படுத்துக்கறேன்.'
ஒரு ச்சேஞ்சா இருக்கட்டுமேன்னு பொங்கல் செய்திருந்தாள். காலையில் செய்த முள்ளங்கி சாம்பாரை சுடவைத்து பொங்கலுக்கு தொட்டுக்க.
தேய்ப்பதற்காக டிஃபன் பாக்ஸை அமுதாவின் கைப்பையிலிருந்து எடுத்தபோது அரவிந்தின் விஸிடிங் கார்ட் கீழே விழுந்ததை குமுதா கவனிக்கவில்லை.
கீழே விழுந்திருந்த அந்த கார்டைப் பார்த்தாள் அமுதா.
'ஒருவேளை குமுதா பார்த்திருப்பாளோ?'
'பார்த்திருந்தால் யார் இதுன்னு கேட்டிருப்பாளே. அவளா கேட்டா சொல்லிக்கலாம்.'
அதை பத்திரமாக கைப்பையின் இன்னொரு பையில் வைத்து ஸிப்பை போட்டு மூடினாள்.
தொடரும்...
No comments:
Post a Comment