Tuesday, February 1, 2022

வேலு நாச்சியார் 3

 👩🏿‍🦰🧑‍🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾

வேலு நாச்சியார் 3

By ஹேமா பாலாஜி  | 

வேலுநாச்சியார் விருப்பாட்சி  மற்றும் திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாக தங்கி படைகளைத் திரட்டத் தொடங்கினார். போர் புரியும் உத்திகளையும், படைப்பிரிவுகளையும் அங்கிருந்தபடியே ஏற்படுத்தி ஆங்கிலேயரையும் நவாபையும் தாக்க திட்டம் தீட்டினார். அவரின் பிராதான லட்சியமே ஆங்கிலேயப்படையை எதிர்ப்பதும், நவாபை பழிவாங்கி மறுபடியும் சிவகங்கைக் கோட்டையில் தங்களது அனுமன் கொடியை பறக்க விடுவதுமாக இருந்தது. சதா அச்சிந்தனையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

வேலு நாச்சியார் தனது படைகளை 'சிவகங்கை பிரிவு’, 'திருப்புத்தூர் பிரிவு’ ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து அனுப்பி வைத்தார்.

அரண்மனையில் விஜயதசமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆங்கிலேயப் படை வெளியில் காவல் காக்க நாவாப் கோட்டைக்குள் இருந்தான். விழாவிற்கு செல்லும் பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாக வேலுநாச்சியாரும் அவரது பெண் படைப் பிரிவும் மாறுவேடத்தில் ஆடைக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்துச் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள் என்றும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.  குயிலியை உலகின் முதல் மனித ஆயுதம் என்று கூறலாம்.

இவரது படையில் இருந்த மற்றொரு வீராங்கனையும் வேலு நாச்சியாருக்காக தன் இன்னுயிரை ஈந்தார். உடையாள் எனும் வீராங்கனை வேலுநாச்சியார் எங்கிருக்கிறார் எனக் கேட்டு ஆங்கிலேயப் படைகள் பலவாறு துன்புறுத்திய போதும் பதிலேதும் கூறாமல் அவரைக் காட்டிக் கொடுக்காமல் உயிர் நீத்தார். வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார் நாச்சியார்.. இந்தக் கோவில் இன்றும் இருக்கிறது. இது கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது. வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

இவரது ஆட்சியின் போது சிவகங்கை பல முன்னேற்றங்களைக் கண்டது. படையெடுப்பால் சீரழிந்த கோட்டைகள் உறுதியாக மீண்டும் சீரமைப்பு கண்டன. குளங்கள் ஆறுகள் எல்லாம் வெட்டப்பட்டு தூர் வாரி நீர்வளம் மேம்படுத்தப்பட்டது. துனைக்கால்வாய்களை நிறைய ஏற்படுத்தி நீர் பாசனம் விரிவாகி விவசாயம் செழிப்பாகியது.

பின்னாளின் தனது மகளின் மரணத்தால் மனமுடைந்த வேலு நாச்சியார் இதய நோயாளி ஆனார். தன்னுடைய கடைசி காலத்தை விருப்பாட்சி அரண்மனையிலேயே கழித்தார். டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் சிப்பாய்கலகத்தின் மூலமாகவே வெளிப்பட்டது. ஜான்சி ராணி காலத்துக்கு முன்பே வேலு நாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் நாட்டு மக்களைக் காக்க சுதந்திரப் போராட்டத்தை துவங்கிவிட்டார். வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

வடக்கே ஜான்சி ராணி தோன்றியதற்கு 

 முன்பே தோன்றியவர் வீரமங்கை வேலு நாச்சியார். கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறி தானும் மடியும் வழக்கம் உடைய காலகட்டத்தில் வாழ்ந்தும் கூட, தன் கணவனைக் கொன்றவனை பழி தீர்த்து தன்னை விட அதிகளவு படைகளையும் நவீன ஆயுதங்கள் குண்டுகள் என வைத்திருந்த ஆங்கிலேயரை மிகத் தைரியமாகவும் துனிச்சலாகவும் எதிர் கொண்டு போராடி வெற்றியும் பெற்றவர் வேலு நாச்சியார். வட தேசத்து ஜான்சிராணியை கொண்டாடும் நாம் நமது நாட்டு தமிழ் போராளியும் வீர மங்கையுமான வேலு நாச்சியாரைக் குறித்தும் பெருமை கொள்வோம்.

இசைக்கலாம்…

No comments:

Post a Comment