42. மயில்த்தோகை (சிசீ 9) #ganeshamarkalam
மண்டபத்துக்கு கிளம்பிண்டிருக்கம். “கண்ணா இன்னும் ரெடியாலையா?” கீழேந்து அக்கா. “இதோ வந்துட்டேன்” சொல்லீட்டு அசையவேயில்லை. மாப்பிள்ளையாத்துக்காரா. சித்தே லேட்டாப் போனாத்தான் கெத்தாயிருக்கும்.
மஹாமகக் குளத்துக்கு பக்கத்துல ஹரிதா மஹால். நன்னாத்தான் இருக்கு. போயிருந்தம். இன்னைக்கு சாயங்காலம் ஜான்வாஸமாம். “கார்த்தலயே வந்துடுங்கோ, நாங்க வந்துடுவம், மத்தியானம் சேர்ந்து சாப்டூட்டு சித்தே படுத்திண்டிருந்தா மொள்ள ரெடியாகிக்கலாம். பக்கத்துல ஜெகன்னாதபிள்ளையார் கோவிலில் வச்சு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம். குளத்தை சுத்தி சம்ப்ரதாயமா வந்துடலாம். அப்பரம் ரிசெப்ஷண் டின்னர்! மத்தநா முஹுர்த்த வைபவங்கள்னு ஓடிப்போயிடும். நல்ல நேரம் பாத்து வந்துடுங்கோ!”
அக்கா தெளிவா கேட்டு ஊர்ஜிதப்படுத்திண்டா.. “வரவேற்பில் திறட்டிப்பால் உண்டோன்னோ!” அவள் கல்யாணம் நடந்து 16 வருஷமாச்சு. சம்படம் சின்னதாப் போச்சுன்னு அத்திம்பேராத்தில் யாரோ கிளப்பிவிட்டு அப்பரம் சமாதானமான ஞாபகம். பர்த்தியா எங்கக்கா அவள் மாமியார இப்பவும் வாராவாரம் உண்டு இல்லைன்னு செஞ்சிண்டிருப்பான்னு தெரியும். யானை மெமொரி அவளுக்கு. விஷயத்தை முத்த விட்டது அத்திம்பேரோட மாமியோட ஓர்படி. அவாள்லாம் ஒரு பொருட்டா? அவள் சொல்படி இவாளும் சித்தே ஆட்டிக் காமிச்சதுதான் அக்காக்கு கோவம்.
பரிஜாரகன் செஞ்ச தப்பு. கான்ட்ரேக்ட் விட்டூட்டர் எங்கப்பா. மாப்பிள்ளையாத்துக்குத் தரன்னு பெரீய சம்படம் கொடுத்து வச்சிருந்தர். அதுல ரொப்பிட்டு மிஞ்சினதை சின்னதா காபி ஃபில்டர் சைஜில் இருந்த எவர்சில்வர் டப்பாவுல வழிச்சு ஆத்துக்கு எடுத்துண்டு போக வச்சிருந்தான். “சம்படம் எடுத்துண்டு வாங்கோ, மேளக்காரனை வாசிக்கச் சொல்லுங்கோ, போடோ எடுக்கச் சொல்லுங்கோ!” உத்தரவு பறந்தது. அவாத்து மனுஷா வந்து இறங்கினதும் எங்களுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. காசை வாங்கீண்டு கேடரிங்க் செய்யரவனுக்கு ஓடியிருக்கணுமா பிடாதா? அவன் அஸிஸ்டென்ட்டுக்கு உத்தரவு போட சின்ன டப்பாவை தொறந்து பாத்துட்டு இதுதான் திரட்டிப்பால் சரியாத்தான் செய்யரம்னு கொடுத்துட்டான். அதைச் சம்பந்தி மாமி தன் பெரீய கையில் இடுக்கிண்டா மாதிரி வச்சுண்டு மோவாயால தோள்பட்டையில் ஒரு பேரிடி இடிச்சுட்டு ரூமுக்குள் போனா. நானும் பாத்தேன்
இன்னைக்கு வேற மண்டபம். நடக்கப் போரது என் கல்யாணம். மாப்பிள்ளையாம். அக்கா திரட்டுப்பால் மேட்டரில் கெட்டி. அவளுக்கு நேர்ந்துட்ட அவமானத்துக்கு இந்த சம்பந்தியை சந்தேகப் படுவது சரியாப் படலை. பரிஞ்சு பேசினா இப்பவே அவாத்து கோண்டாகிட்டாம்பள். பரிஜாரகன் அதேயாள். அவருக்கும் 16 வயசு கூடி மெச்யூரிடி வந்திருக்கும்.
1 மணிநேரத்தில் மண்டபத்துல இருந்தாணம். மாடி ரூமில் என்ன செஞ்சிண்டிருக்கேன்?
பழைய அட்டப் பொட்டிய எடுத்து வச்சுண்டு தலைய விட்டூண்டு. இதெல்லாம் 2நா போனா இப்படி சாவகாசமா நாஸ்டால்ஜிக்கா எடுத்து வச்சுண்டு பாக்க முடியாது. சுபத்ராவ அழைச்சுண்டு வந்துடுவேன். யாரு சுபத்ரான்னு கேப்பேள். நான் கல்யாண செஞ்சுக்கப் போர பெண். அவள பக்கத்துல வச்சிண்டு எப்படி? அப்படி என்ன இதுல இருக்கு?. கேட்கத் தோணும். சொல்லிடரேன்
பிஞ்சுடாம இருக்கட்டும்னு மேலாக ஒரு மயிலிறகு. 10ஆவது படிக்கரச்சே கீதாவுக்குத் தர வாங்கி வச்சது. தெகிரியமே வரல. கீதா கோள்ளை அழகு. 7ஆவதுலேந்தே காதல். ஒருக்கா அதை லெட்டரா எழுதி அவள் கணக்குப் புஸ்தகத்தில் வச்சாச்சு. ஹோம்வொர்க் செய்யரப்போ பாப்பள் நாளைக்கு பதில் வரட்டுமே! 3நாளா பேச்சுமூச்சில்லை. அப்பரம் ஒருநா ஸ்கூல் பஸ்ஸுல வரப்போ “உன் கணக்கு புஸ்தகம் இரவல் தரியா?” “எதுக்கு?. நீ 9ஆவது உனக்கெதுக்கு என்னுது? லெட்டர் எழுதி வைக்கவா? எனக்கு எங்காத்துலேயே அத்தை பையன் பெசி வச்சிருக்கா. அவனைத்தான் பிடிக்கும். லீவுக்கு மதுரைல அவாத்துக்குப் போரம்”. சப்புன்னு போச்சு. அவள் 10ஆவது முடிக்கமுட்டும் மனசளவில் விடமுடியலை. அப்பத்தான் இந்த மயிலிறகை கொடுத்து இன்னொருக்கா அட்டெம்ப்ட் செய்யலாம்னு. அரியர்ஸ் வச்சதை முடிச்சுடணம்போல. தெகிரியம் இல்லை
நிறைய வலென்டைன் டே கார்ட்ஸ். எனக்கு வந்தது. பெண் நண்பிகள் அனுப்பிச்சது. ஒண்ணும் செட்டாலை. அனுப்பிச்சவா கும்மோணம் இல்லை தஞ்சாவூர், திருநாகேஸ்வரம், மன்னார்குடி, திருவையாறு இல்லைன்னா மாயவரம்னு. பழைய காலேஜ் க்ரூப் போட்டோவுல இன்னைக்கும் அடையாளம் காமிச்சுடுவேன். சில்வண்டு மாதிரி இருப்பா படத்துல. அதுனாலேயோ என்னவோ கையில் ஆம்படவேயில்லை. கற்பகம்னு நான்-ப்ரேமின் ஒருத்தி. வெஜ்தான். அவாளுக்கு குத்தாலம். “லீவுக்கு எங்கூருக்கு வா கண்ணா! எங்க வயலுக்கெல்லாம் அழைச்சிண்டுபோய் காமிக்கரேன்”. பஸ்ஸுல ஏறினா 30நிமிஷம். நிச்சயம் வருவேன்னு ஃபேர்வெல் பார்டீல ஸ்க்ராப் புக்கைத்தந்து கையெழுத்து வாங்கிண்டா. “ஐ லவ் யூ”ன்னு போட்டூட்டு போடணம்”னு ஞாபகப்படுத்த எழுதித் தந்தேன். அவள் கண்கள் அன்னைக்கு ஜொலிச்சது இன்னைக்கும் மறக்கமுடியாது.
குத்தாலம் போயிருந்தா கம்மாயில குளுப்பாட்டி விட்டு வயலில் புரட்டி எடுத்து திருப்பி அனுப்பியிருப்பா. போரத்துக்கு தெகிரியம் வரலை. திடுதுப்புன்னு அவளோட கல்யாணப் பத்ரிகை மட்டும் தபாலில் வந்தது. ஒரு நல்ல ப்ரீமேரிடல் அனுபவம் மிஸ் செஞ்சுட்டம்னு பட்டது.
படிச்சு முடிச்சுட்டு கப்பு பேங்கில் உத்யோகம். TSR பிக் ஸ்ட்ரீட் கும்மோணம் மெயின் ப்ரான்சில் என்னைச் சுத்தி கோபிகைகள் மாதிரி லேடீஸ் பட்டாளம். 30 பெர்சென்ட் கல்யாணம் ஆகாதவா. ஒண்ணூம் மடியலை. யாருக்கும் செட்டிலாவதில் விருப்பமில்லை. சிரிச்சு சிரிச்சு பேசி மயக்குவா. லன்ச்சில் அவாத்துலேந்து செஞ்சுண்டு வந்த சாம்பார் சாதம் இல்லைன்னா பீன்ஸ் கரி எல்லாம் ஷேர் செஞ்சுக்கலாம்னு நீட்டுவா. எம்மேல் ஆசையா இல்லை எங்காத்தில் அம்மா பண்ணிக் கொடுத்த சேம்பு ஃப்ரைமேல் காதலான்னு புரிஞ்சிக்கவே முடியாம பாடி லேங்குவேஜ் இருக்கும்.
இவாளில் யார் சரின்னாலும் மடிஞ்சு போக நான் ரெடியா இருப்பதா விதவிதமா ஹின்ட் கொடுத்துப் பாத்தாச்சு. அவா பாட்டுக்கு நெறுங்கிப் பழகுவதும் நான்வெஜ் ஜோக் அடிச்சாலும் சளைக்காம பதிலுக்கு அவா பங்குக்கு அடிச்சுண்டு ஆபீஸ் பிக்னிக் அது இதுன்னு போனா கூட வந்து பாவனையா சல்லாபிச்சுட்டு கடைசீ வரைக்கும் ஒண்ணும் தெளிவா புரியாம அப்படியே இருந்துட்டேன்
அப்பத்தான் சுபத்ரா ஜாதகம் வந்தது. ஒரு வயசுதான் சின்னவள். “ரெம்ப கம்மியில்லையோ?” ஆரம்பிச்சது அக்காதான். பட்டுனு என்னத்தையோ சொல்லி அம்மா அவ வாய அடைச்சுட்டா. அப்பா சத்தமா என் காதுபடவே “வயஸ் வித்யாசமே இல்லைனாலும் ஓகே!” எனக்குத்தான் லஜ்ஜையாப் போச்சு. ஜாதகத்தில் 4 பொருத்தமாம். அவளும் எம்ப்ளாயிட். காலேஜ் லெக்சரர். உள்ளூராப் போச்சு. 3 பொண் குழந்தைகள் அவளப்பாவுக்கு 2 வீடு இருக்கு. திருக்கருகாவூர் பக்கத்துல நிலம். என்னைப் பிடிச்சதா க்ளியரா சொல்லலை பேங்க் உத்யோகம் பிடிச்சிருந்ததாம்
சுபத்ரா போடோல சித்தே ஹெல்தியா தெரிஞ்சள். ஒல்லியா ஸ்லிம்மா ஹெல்தியா இருப்பது எப்படி தாட்டியா வாட்ட சாட்டமா ஹெல்தியா இருப்பது எப்படி? ரெம்ப யோசிக்க விடப்பிடாது இவனைனு பாத்திண்டிருந்த போடோவை அம்மா பிடிங்கி வச்சிண்டு “கண் அழகா இருக்குடா மூக்கும் முகவெட்டும் லக்ஷ்மீகரமா, உன்னை ஆவாத்துல எல்லாரும் வாத்ஸல்யமா பாத்துப்பான்னு படரது!” சொல்லீட்டு கவரில் திரும்ப வச்சுட்டா. இப்படித்தான் இதுவரைக்கும் வந்த 268 ஜாதகத்தையும் போட்டோக்களையும் விதவிதமா வர்ணிச்சு பாராட்டினா. என்ன ஒண்ணு இத மட்டும் அடிக்கடி தினம் ஒரு வாட்டியாவது எடுத்து வச்சுண்டு என் காதுபட பெசி என்னை ப்ரெயின் வாஷ் செஞ்சா.
நேரில் பாத்துண்டுடலாம்னு ஹோட்டல் ராயாஸ் கிராண்டில் ஹைடீக்கு எங்கப்பாவே ஏற்பாடு செஞ்சுட்டர். அவாத்துல கூப்பிடராப்புல தெரியலை. சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்னு நாங்களே இனிஷியேடிவ் எடுத்து அந்தப் படலம் முடிச்சம். அப்படி செஞ்சதால அடுத்த கட்டத்துக்கு பேச்சு வார்த்தையை கொண்டு போக முடிஞ்சது. அப்பரம் என்ன சட்டுபுட்டுன்னு எல்லாம் முடிவாகி சுபத்ரா என்னைக் கல்யாணம் செஞ்சுப்பதா சொல்லிட ஏற்பாடெல்லாம் ஆரம்பிச்சா. 288இல் ஒண்ணத்தான் நேரில் பாத்தியான்னா இல்லை. 8 பாத்திருப்பேன். யாருக்கும் என்னைப் பிடிக்கலை. அக்காவுக்கு சுபத்ராமேல பொறாமப்படும்படியா ஒரு விஷயம். சுபத்ராவுக்கு நீண்ட கூந்தல். சாட்டைமாதிரி. சாப்பிட உக்காந்துக்கரா பின்னாடீலேந்து இப்படீக்கா வந்து மடீல அப்படீக்கா கிடக்கு.
“நீ அதிர்ஷ்டக்காரண்டா. உனக்கு வரப்போரவளுக்கு நீண்ட கூந்தல்”. ஆன முட்டும் யோசிச்சுப் பாத்தேன். ஆத்துக்காரிக்கு நீளமா முடியிருந்தா கட்டிக்கப் போரவனுக்கு என்ன அதிர்ஷ்டம்? ரெம்ப நாளைக்கு மின்னாடி திண்ணைல கணேஷ் கல்யாண் எழுதின கதையொண்ணில் ஆத்துக்காரரை பின்னல வச்சு கழுத்தை நெறிச்சு ஒரு பொண் கொன்னு போட்டுடுவள். இப்படித்தான் கொன்னானு கண்டுபிடிக்கவே ரெண்டுநா கதையை இழுத்தடிச்சர். கண்டுபிடிச்சாச்சுன்னு போனா அவள் பாப் வெட்டிண்டு நிப்பள்! மர்டெர் வெப்பனை கோர்ட்டுல ப்ரொட்யூஸ் செய்யமுடியாது பாருங்கோ. எனக்கு இதுதான் நினைவுக்கு வந்து கிலியக் கிளப்பித்து.
ஆனா ஒண்ணு சுபத்ரா அழகாத்தான் பட்டா. நிச்சயம் பண்ணினதும் கல்யாணத்தேதிக்கு 50நா இருந்தது அப்பப்போ என்னோட போனில் பேசரப்போ இல்லை மின்னாடியே சொல்லிவச்சு பேங்கில் ஷார்ட் லீவ் எடுத்துண்டு அவ காலேஜுக்குப் போயிட்டு அப்படியே சுத்தீட்டு ஸ்கூட்டரில் அவளை அவாத்துத் தெருக்கோடீல இறக்கி விட்டூட்டு வரப்போலாம் எப்போ கல்யாணம் ஆகும்கிர அவசரம் ஃபீல் ஆவதை வெக்கப்படாம சொல்லுவா. எனக்கும்னு நானும் உனக்கு ரொமேன்டிக்கா பேசவே வரலைன்னுடுவள்.
அதான் இனிமேல் ஏகபத்தினி விரதனா வாழ்ந்து காட்டிடுவம்னு அட்டைப் பொட்டியை தூக்கி வச்சுட்டு ட்ரெஸ் செஞ்சுண்டு கீழே வரேன். அக்கா “வா நெத்தீக்கு இட்டுக்கோ சுபத்ராவாத்தில் எல்லாரும் மண்டபத்துக்கு வந்தாச்சாம், காத்துண்டிருக்காளாம்”. என் பெஸ்ட் மேன், மாப்பீள்ளைத் தோழன் வழுக்கைத் தலை அத்திம்பேர் என் பக்கத்துல காரில்.
இப்போ ஜான்வாசம், விரதம், நிச்சயதார்த்தம், பரதேசிக் கோலம், ஊஞ்சல், பச்சப்புடி, கன்யாதானம்னெல்லாம் விவரிச்சிண்டிருந்தா முடியுமா? டயரக்ட்டா சாந்தி முஹூர்த்ததுக்கு போயிடலாம்னு தோணித்து. என் அவசரம் புரிஞ்சிண்டா தேவலை.
“நலங்கெல்லாம் வேண்டாம் இவா என்ன சின்னக் குழந்தைகளா?” அப்பா. எங்கே வைங்கோன்னு யாராவது சொல்லிடப் போராளோன்னு அவாத்து மனுஷாளுக்கும் பரம சந்தோஷம். ரிசெப்ஷணும் நேத்தே ஆகிடுத்தோன்னோ, நெறுங்கின மனுஷாளத் தவிர எல்லாரும் கிளம்பிப் போயாச்சு. படிப்ப முடிச்சு ரெம்ப வருஷமானதால் கூடப் படிச்சவான்னு யாரையும் ஞாபகம் வச்சுண்டு கூப்பிடலை. ஆபீஸ் கொலீக்ஸ் பாதிப்பேர் ரிசெப்ஷணுக்கே வந்துட்டு போயாச்சு. நப்ஷியல்ஸுக்கு நிறைய டயம். சத்திரத்துலவே வச்சுண்டதால கொட்டுகொட்டுன்னு உக்காந்திருக்கம்
அந்த சமாச்சாரததில் எங்க ரெண்டுபேருக்கு மட்டுமே ஈடுபாடு இருப்பதுபோல சொச்சப்பேர் என் அக்கா அத்திம்பேர் அவாத்தில் சுபத்ராவோட 2 அக்காக்களும் அவா ஆத்துக்காரர்களும் ஏனோதானோன்னு வந்துண்டும் போயிண்டும் எப்படா விடியும் நாமபாட்டுக்கு வேலையப் பாக்கப் போலாம்னு
என்ன தோணித்தோ சீக்கிரம் சாப்டூட்டு பொண்ணு மாப்பிள்ளையை சயன அறைக்குள் அனுப்பிச்சுட்டா கார்த்தால சீக்ரம் சத்திரத்தை காலி செஞ்சுடலாம்னு ஏகமனதா முடிவெடுத்தா பாருங்கோ அந்த விஷயத்தில் ரெண்டு சம்பந்திப்பேரும் சிண்டப் பிடிச்சுக்காம ஒத்துப்போன அதிசயம் நடந்தது
ரெண்டுபேரும் சேர்ந்தே மாடிப்படியேறி போணம். நடக்கப்போர காரியத்துக்காக சிம்பிளா பளிச்சுன்னு சாதாரண புடவையும் மேட்சிங்க் ப்ளவுஸும். நான் நடராஜ் வேஷ்டியும் ஜிப்பாவும். பால் பழமெல்லாம் பாவனையா உள்ளே வச்சாச்சாம். பால் சொம்பெல்லாம் துக்கிண்டு படியேறவேண்டாம்னுட்டா
உள்ளே நுழைஞ்சதும் சுபத்ரா சொல்ரா “களைப்பா இருக்கு, கல்யாணம்னா எத்தனை செஞ்சுக்க வேண்டியிருக்கு!” தன் நீண்ட கூந்தலை மின்னாடி எடுத்து விட்டூண்டு கனக்கரதுன்னு அதில் பின்னிப் பிணைந்துகிட்ந்த 4 அடி சவுரியை அவுத்து தூரக்க வைக்கரா. ஸ்பெஷலா சொல்லிப் பண்ணினதோ! “அட இதுதானா சமாச்சாரம்!” எங்கக்கா பொறாமைப்பட எதுவுமேயில்லைன்னு பட்டது.
நானும் இதோ வரேன்னுட்டு பாத்ரூமுக்குள் போய் மொள்ள கலைஞ்சுடாம, நாளைக்குக் கார்த்தால திரும்ப எடுத்து மாட்டீண்டாணமே அதுனால கவனமா என் “விக்”கை கழட்டி கையில் தாம்பூலத்தட்டு மாதிரி பிடிச்சுண்டு படுத்துக்க வரேன். 43 வயசில் கல்யாணமானா இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்!
மயில் பாக்க அழகாத்தான் இருக்கும். மழைவந்ததும் தோகையக் கழட்டிவச்சுட்டு ஆடக்கிளம்பினா?
No comments:
Post a Comment