🎼🎻🌹கோதாவரி நதி தீரம்🌹🎻🎼
ராஜமுந்திரி-பத்ராசலம்-வாரங்கல் தெலுங்கு மண்ணில் ஒரு பயணம்
(சுஜாதா&வெங்கடேசன்)
4) ஓடம் ...பொன் ஓடம் ...
சோனா இன் லாட்ஜுக்கு வந்து கொண்டுவந்த தயிர் சாதத்தை காலி பண்ணிட்டு போட்டிங் கிளம்பறோம்
இனிமே இவர் பேசுவார்…
கோதாவரி அதன் அதிகபட்ச அகலத்தை அடையும்போது வரும் முதல் நகரம் ராஜமுந்திரி. ராஜமகேந்திரபுரி என்ற பேரின் மரூ. ராஜமந்திர் என்ற பேரின் மரூ என்றும் சொல்கிறார்கள். இங்கே உள்ள மூன்று மாபெரும் பாலங்கள் இந்தியாவின் பத்து நீளமான பாலங்களில் வருபவை. எங்கள் படகின்பெயர் விஹாரி . ஐம்பது பேர் வசதியாகச் செல்லத்தக்கது. லாரியின் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. கீழ்த்தளத்தில் நீளமான பெரிய கூடம்போல ஓர் அமைப்பு. குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. அதன் வால்பக்கம் இயந்திர அறை. அதற்கு அப்பால் ஒரு சிறு படுக்கை அறை. மெத்தையுடன் கட்டில்கள்.
இளவெயில் பரவிய கோதாவரி மழைநீர் கலங்கி பித்தளைத்தகடு போல பளபளத்தது. பிரம்மாண்டமான சருமம் போல காற்றில் புல்லரித்தது. மகத்தானோர் பட்டுப்புடவை போல சிற்றலை அடித்தது.
படகு மெல்ல அதிர்ந்து கிளம்பியது. பெரிய படகானதனால் அலைபாயவில்லை. நதியின் ஓட்டத்தை எதிர்த்து நீர்மேல் மூக்கைத்தூக்கிக்கொண்டு நீண்ட ஒளிரும் வாலுடன் சென்றது.
அந்தப்பகுதியில் கோதாவரி இரண்டு கிலோமீட்டருக்குமேல் அகலம் இருக்கும். நாங்கள் சென்றது இரு கைநதிகளில் ஒன்றில். அங்கு சராசரி ஆழம் நூற்றியிருபது அடி என்றார்கள். நடுவே ஆற்றிடைக்குறை தென்பட்டது. மணல்மேடு. அதன்மேல் எருமைகள் மேய்ந்துகொண்டிருந்தன. நீர்ப்பரப்பின் அருகே தெரிந்தது ஆடுகள் என்று தோன்றியது. மெல்ல மெல்ல அவை பெரிய பறவைகள் என்று தெளிவாகியது. ஃப்ளெமிங்கோக்கள்
இரு இடங்களில் நின்று மணல்வெளிமீது நடந்தோம். பற்பல அடி உயரத்துக்கு தூய வெண்மணல் வெளி. மணல் மலைகள். மணலை அறுத்து ஓடிவந்து கோதையில் கலக்கும் சிற்றோடைகள். கரையோரங்களில் மரங்கள் அடர்ந்த காடுகள் வர ஆரம்பித்தன. சில இடங்களில் சிற்றூர்கள். அவற்றின் வட்டக்கூடை போன்ற குடிசைக்கூரைகள். அங்கிருந்து கிளம்பும் சமையல்புகை.
மணல்வெளிகள் மேல் கரிய புள்ளிகளாக எருமைகள் நகர்ந்தன. அவை ஆற்றுக்குறைகளில் எப்படி வந்தன? படகில் கொண்டு விடுவார்கள் என்று படகோட்டி சொன்னார். ஆனால் இருபதுக்கும் மேற்பட்ட எருமைகள் ஒரே கும்பலாக ஸீல் மீன்கள் போல வட்டமான தீவாக நீரில் நீந்தி செல்வதைக் கண்டோம். ஆற்றின் சுழல்களும் வேகமும் ஒரு பொருட்டே இல்லை அவற்றுக்கு.
மணலுக்கு அப்பால் காட்டுக்குள் நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் ஒலி. அங்கிருந்து பார்க்கையில் ஆறு மிகச்சிறிதாகத் தெரிந்தது. எங்கள் படகு ஒரு பொம்மைபோல. அந்த அனுபவத்தை ஏதோ ஒருவகையில் சொல்லாக ஆக்க ஒவ்வொருவரும் முயல்வது போல் இருந்தது. இளவெயில்மேல் நடப்பது போல இருக்கிறது என்றார் ஒருவர். விரைவிலேயே சொற்களை இழந்து சிறுவர்களாக ஆனோம்.
நதியின் நடுவழியில் பாப்பிகொண்டலு எனப்படுகின்ற பாப்பு மலைகள் குறுக்கிடுகின்றன. இரண்டு மலைத்தொடர்கள் அரணாய் எழுந்துநிற்க அவற்றுக்கிடையில் உள்ள குறுகிய பள்ளத்தின் வழியே வெளியே வந்து விழுகிறது கோதாவரி. ஏறத்தாழ கணவாய் போன்ற அமைப்பு இது. கோதாவரி நதி கிழக்குத் தொடர்ச்சி மலைகளைக் கடந்துவரும் பயணத்தின் கடைசி கட்டம் இது. நாங்கள் கீழிருந்து ஏறுவதால் எங்களுக்கு அவ்விடம் முதலில் வருகிறது. அவ்விடத்தில் ஆற்றுநீரின் ஆழம் நூற்றுக்கணக்கான அடிகள் இருக்கலாம் என்றனர். இரண்டு மாமலைகளுக்கு இடையில் ஒரு நதி பாய்கிறது. அதன் மடியில் நாம் நகர்ந்து ஊர வாய்க்கிறது என்றால் அது எத்தனை அரிய காட்சி என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அடுத்த சில கிலோமீட்டர்களில் அழகிய நதிக்கரைக் கிராமம் ஒன்று தென்பட்டது. அங்கே படகை நிறுத்திவிட்டு ஊருக்குள் உழன்றோம். கிழக்குத்தொடர்ச்சி மலையின் எளிமையான ஆந்திரச் சிற்றூர். உள்ளே சென்றால் காடு மலை திருத்தி விவசாயம் செய்திருந்தனர். மழை விட்டு விட்டுப் பெய்ததால் கால் வைத்த இடமெல்லாம் அரையடி புதைத்தது. தணிவாய் இருந்த இடங்களில் வெள்ள நீர் வாய்க்கால் உருவாக்கி ஓடியது. மலையையொட்டிய மடியில் குளம் எனத்தக்க சிறு நீர்த்தேக்கம் காணப்பட்டது. அதன் ஓரங்களில் அல்லிகள் பூத்திருந்தன. ‘அல்லிகள் பூத்த குளத்தை ஆழ்ந்து ரசி’ என்ற கவிதை வரி நினைவுக்கு வர அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.
காகா காலேல்கர் காந்தியின் சீடர். சுதந்திரப்போராளி. தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்பது இயற்பெயர். கர்நாடகத்தில் பெல்காமில் பிறந்த காலேல்கர் ஒரு மராட்டியர். சர்வோதயா இதழாசிரியராக இருந்தார். இந்திய மொழிகளில் பயணக்கட்டுரைகள் எழுதியவர்களில் காகா காலேல்கரே முதன்மையானவர். கிட்டத்தட்ட அறுபது நூல்கள் எழுதியிருக்கிறார்.மராத்தி. இந்தி, குஜராத்தி மொழிகளில் எழுதிய காலேல்கர் இந்தியாவுக்குள்ளேயே சுற்றியலைந்திருக்கிறார். இந்தியாவின் அறியப்படாத உள்கிராமங்களின் நிலக்காட்சிகளையும் மக்களையும் அழியா ஓவியங்களாக எழுதினார். இந்தியாவின் முக்கியமான நீர்நிலைகள் மற்றும் நதிகளில் நீராடியபடி அவர் சென்ற நீண்ட பயணத்தைப்பற்றி அவர் எழுதிய ‘ஜீவன்லீலா’ என்ற புகழ்மிக்க நூல் தமிழில் சாகித்ய அக்காதமியால் வெளியிடப்பட்டிருக்கிறது
காலேல்கரின் நூலைப்படிக்கும்போதெல்லாம் இந்தியாவின் நதிகளில் எல்லாம் நீராடவேண்டும் என்ற பெரும் கனவு என்னை ஆட்கொள்வதுண்டு. என்னால் முடிந்தவரை நானும் தொடர்ந்து இந்தியாவின் நிலங்களில் பயணம் செய்து வருகிறேன். நிலத்தில் நடந்து நீரில் குளித்தால் மண் நம்மையும் நாம் மண்ணையும் அறிகிறோம். என்னைப்பொறுத்தவரை நான் இந்தியா என்ற மகத்தான யதார்த்தத்தை என் கால்களாலேயே அறிந்திருக்கிறேன்.
ஆகவேதான் பிரிவினை பேசும் எந்த ஒரு மனிதரையும் நான் மனமார வெறுக்கிறேன். இந்த கோதாவரி என்னுடைய நதி. என் முன்னோர்களின் தெய்வவடிவம் இது. ஒவ்வொருநாளும் இதன் பெயரைச்சொல்லித்தான் அவர்கள் நாளைத்தொடங்கியிருக்கிறார்கள். இது என் ஆத்மா. இதை என்னுடையதல்ல என்று சொல்லும் எவரும் எனக்கும் என் சந்ததிகளுக்கும் நிரப்பமுடியாத பேரிழப்பையே அளிக்கிறார்கள்…
No comments:
Post a Comment