Tuesday, February 1, 2022

அம்பி மாமாவின் சஷ்டி விரதம்

 அம்பி மாமாவின் சஷ்டி விரதம்

----------------------------------------------------

            __  ரமணி

அம்பி மாமாவிற்கு ஏன் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை.

அவர் உண்டு அவரின் LIC வேலை உண்டு என்றிருப்பவர், தெரியாத்தனமாய் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேச்சை ஏன் கேட்டார் என்று தெரியவில்லை.

அவராக வேண்டி விரும்பிக் கேட்கவில்லையாம். பக்கத்து வீட்டில் டீக்கடை மாதிரி அலறவிட்டுக் கொண்டிருந்த ரேடியோவில் இருந்து வந்ததைக் கேட்டதால் வந்த வினை. அம்பி மாமா ஒன்றும் பக்திமான் வகையில்லை. 

வாரத்திற்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையன்று பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போய் மூணாம் பிறை மாதிரி  அரைமணியில் மறைந்து போகிற வகையில் விபூதி இட்டுக்கொண்டு அவசரமாய் ஐந்து கொட்டு ஐந்து  தோப்புக்கரணம் போட்டுவிட்டு வெளியில் இருக்கும்  செருப்பு ஞாபகம் துரத்த ஐந்து நிமிஷத்தில் கோவிலைவிட்டு வெளியே வந்துவிடுவார்.

அவர் பக்தி அவ்வளவுதான்.

மறக்காமல் கோயிலுக்கு விளக்குக்காக நல்லெண்ணை எடுத்துச் செல்வார். மாமியின் அரசி கட்டளை அது. 

அந்த ஆயில் விளக்குதான் அவரின் ஆயுள் காப்புப் பணிக்குக் காப்பாக இருக்கிறது என்று மாமி திடமாக( ஆயில் திரவமானாலும் ) நம்புகிறாள். குடும்பத்தின் அடுப்பும் அதனால்தான் எரிகிறதாம். 

சரி, விஷயத்திற்கு வருவோம். 

வாரியார் ஸ்வாமிகள், சஷ்டியின் பெருமையைப் பற்றித்தான் அன்று பேசிக் கொண்டிருந்தார். குமார சஷ்டி விரதம், ஐப்பசி சஷ்டி விரதம், கார்த்திகை சஷ்டி விரதம், சாதா சஷ்டி விரதம் என வகைப்படுத்தி எப்படி விரதம் இருக்க வேண்டும் எதற்காக இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் பாணியில் சிரிக்கவும் சிந்திக்கவும் சொல்லியது அம்பி மாமாவின் தீவிரமற்ற பக்தியை அல்லது வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் மயங்கிக்கிடந்த பக்திப் பொறியை ஊதிவிட்டது.

வாரியாரின் பாதி உரையிலேயே மாமா முடிவெடுத்து விட்டார். அவர் அதிர்ஷ்டம், அதைக் கேட்டுக்கொண்டிருந்த மறு நாளே வளர்பிறை சஷ்டியாய் அமைந்துவிட்டது. என்வே, பரீக்ஷார்த்த முறையில், அடுத்த நாள் வந்த சஷ்டிக்கே விரதம் என்று ஒரு பீஷ்ம உந்துதலில் சபதம் எடுத்துவிட்டார்.

 அதை அப்பொழுதே மாமியிடம் டிக்ளேர் பண்ணாமல், சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று சொல்லாமல் இருந்து விட்டார்.

 ராத்திரி ஒரு தோசையைக் கூடுதலாகச் சாப்பிட்டு நாளைய பசியைச் சரிக்கட்ட முயன்றதில் மாமியின் ஷெர்லாக் ஹோம்ஸ் மூளைக்குள் சந்தேகம் வந்துவிட்டது.

விரதத்தின் முக்கியமான பார்ட் பகலில் தூங்காமல் இருந்து முருகனின் திரு நாமத்தை மனதினுள் எதிரொலித்துக் கொண்டே இருப்பது என்ற வாரியார் ஸ்வாமிகளின் பக்திசார்ந்த உத்தரவையும் செயல்படுத்த முதல் நாளான அன்றே சீக்கிரம் படுக்கப் போனதும் மாமியின் NIA மூளைக்குள் விளக்கெரியச் செய்தது.

மறு நாள் கந்தனை எண்ணிக்கொண்டே கண்விழித்தது, அம்பி மாமாவிற்கு நல்ல சகுனமாகப் பட்டது. வாரியார் ஸ்வாமிகளின் அருளப்பாடும் அப்படித்தான் இருந்தது. எழுந்ததும் படபடவென்று எதையும் செய்யவில்லை. 

காஃபிதான் குடிக்கப் போவதில்லையே என்ற நினைப்பில் மெதுவாகவே அந்த நாளை ஆரம்பித்தார். 

பல் தேய்ப்பதற்கு முன் மாமியிடம், " இன்னிக்கு நான் விரதம். சஷ்டி விரதம். எனக்கு சாப்பிட ஒண்ணும் வேணாம் " என்று ஒரு விரைப்பான குரலில் சொன்னதில் மாமி கொஞ்சம் அதிர்ந்து போனார்.

" இவ்ளோ நாள் இல்லாத திரு நாளா இப்போ என்ன வேண்டிக்கெடக்கு சஷ்டியும் விரதமும்? நமக்கு என்ன இல்லைன்னு இந்த வேண்டுதல் விரதம் எல்லாம்?  இதுக்கெல்லாம் உங்க உடம்பு ஒத்து வராது....பேசாம 

வேளாவேளைக்கு வயித்துப் பாட பாத்துண்டு படுத்துத் தூங்குங்கோ" என்று ஒரே டேக்கில் தன் நீண்ட பாடலை எந்த rehearsalம் இல்லாமல் பாடி முடித்தாள்.

இத்தனை நாள் இல்லாமல், இன்னும் எவ்வளவோ மோசமான வசவுகளுக்குக் காயமடையாத மாமாவின் ஈகோ, இந்த முறை உப்புச்சப்பில்லாத இந்த நியாயமான அட்வைசுக்கு மைக் டைசனிடம் குத்து வாங்கியது போல வலித்தது. வாரியார் ஸ்வாமிக்கு தான் மானசீகமாகக் கொடுத்த வாக்கு என்ன ஆவது என்ற கவலை வேறு உறுத்த, மாமியிடம், " நான் சொன்னா .... சொன்னதுதான் " என்று ஷேக்ஸ்பியர் நாடக  கிரேக்க வாக்கியம் போல் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அப்படிச் சொல்லிவிட்டாரே தவிர,  பல் தேய்த்துவிட்டு வந்த உடன், அடுப்பங்கரையைத் தாண்டும் பொழுது வந்த காஃபியின் வாசனை, இத்தனை வருஷ கல்யாண வாழ்க்கையில் இல்லாத அளவிற்கு மூக்கைத் துளைத்தது. இல்லை தனக்குத்தான் மூக்கு ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என  மாமாவிற்கு ஒரு சந்தேகம் வந்தது.

மேனகைக்கு விழப்போகும் விஸ்வாமித்ர அவஸ்தை மாமாவிடம் தெரிந்தது. 

மாமியும் அலட்டிக்கொள்ளாமல், மிக அனுசரணையுடன், " விரதம் இருந்தா என்ன? காஃபிக்கு ஒண்ணும் தோஷமில்லை " என்று சொன்னதை அம்பி மாமா ஒருவிதத் தேவையற்ற பிடிவாதத்தோடு நிர்தாட்சயண்மாக நிராகரித்தார்.

வாரியார் ஸ்வாமிகள் சஷ்டி அன்று அதிகாலையிலேயே ஸ்நானம் பண்ணச் சொல்லியிருந்தார். ஆனால், குளித்தால் உடனே பசி வந்துவிடும் என்ற இயற்கை விதியை வெல்ல தனது விழுப்பு நேரத்தை அதிகரித்துக் கொண்டிருந்தார். அதற்காக ஸ்வாமிகளிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

நேரம் ஆகிக்கொண்டே வந்ததால், குளிப்பதை ரொம்பவும் தள்ளிப் போட முடியவில்லை. 

குளித்தபின், வயிறும் மனசைப் போலவே காலியாய் இருந்ததை மாமா உணர்ந்து, நேற்று அதிகப்படியாகச் சாப்பிட்டதெல்லாம் எப்படி பஸ்பமானது எனத் தெரியாத குழப்பத்தோடு,  முருகனும் லேசில் மனதுக்குள் வராமல் சண்டித்தனம் பண்ணியதில் மனம் மெய் எல்லாம் ஆடிப் போய்விட்டது. ரெஸ்ட்லெஸ் ஆன மாமா ஒரு டைவர்ஷனுக்காகக் கோவிலுக்குக் கிளம்பினார். 

கடைத்தெருவை அடைந்த போது, மாமாவின் உள்ளூர் மச்சினர், மாமாவின் சஷ்டிக் கட்டுப்பாட்டை அறியாது, தன் இயல்பான சிக்கனத்தைத் தளர்த்தி, " வாங்கோ அத்திம்பேர், காஃபி சாப்பிடலாம் " என வற்புறுத்தினார். 

மாமாவின் சஷ்டிக் கற்பிற்கு பலமான சோதனை இப்போது. ரொம்ப உரிமையாக மச்சினர் மாமாவின் கையை இழுத்துக்கொண்டு, ஹோட்டலுக்குள் நுழைந்தபின், மாமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹோட்டலிலும் சர்வர் போட்ட பொங்கல் வடை போண்டா போன்ற பெளன்சர்களை சாதுர்யமாக duck செய்துவிட்டார்.

காஃபிக்குத் தான் தோற்றதை எண்ணி  வீட்டினுள் நுழைந்த மாமாவின் வருத்தத்தை, சாப்பிடாததினால் வந்த தளர்ச்சி என்று எண்ணி மாமி,

 " இதப் பாருங்கோ! வ்ரதம்னா பச்சத்தண்ணி பல்லுல படாம இருக்கணும்னு ஒண்ணும் இல்ல; இதுதானே உங்களுக்கு முதல் தடவை. காஃபிக்கு ஒண்ணும் தோஷம் இல்லை"

 என்று சொல்லிக்கொண்டே, அந்த மணம் குணம் நிறைந்த திரவம் தளும்பிய சூடான டம்ப்ளரை அவர் கையில் திணித்துவிட்டு, அடுத்த காரியத்தைப் பார்க்கப் போய்விட்டாள்.

மாமா மீண்டும் தோற்றதை எண்ணி வீட்டிலும் ஆஃபீசில் இருப்பதைப் போலவே உணர்ந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கந்தா கடம்பா என்று அவர் மனம் அரற்றிற்று. தனக்குள் லேசாக எட்டிப் பார்த்த முருகனைக் கண்ணை மூடிப் பிடித்துவிடலாம் என்று மாமா நினைத்த போது, ஏறக்குறைய தூங்கிவிட்டிருந்தார். 

வாசலில் யாரோடோ மாமி சண்டை போட்டுக்கொண்டிருந்த சத்தத்தில் விழித்தபோது மணி பன்னிரெண்டு ஆயிருந்தது. 

வயிறை, சஷ்டி விரதத்திற்குச் சரியாகத் தயாரிக்கவில்லை என்பதை மாமா உணர்ந்துவிட்டார்.

 எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு ஆளான பணமதிப்பிழப்பு அல்லது ஜி.எஸ்.டி அமல்படுத்தல் மாதிரி ஆகிவிட்டதோ என மாமாவின் பொது அறிவிற்குத் தோன்றிற்று. 

மாமாவின் வதங்கின முகத்தைப் பார்த்து, மாமி தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள். மாமாவின் பலஹீனமான மறுதலிப்பைப் பொருட்படுத்தாது, மாமி தட்டில் பரிமாறிக்கொண்டே, " ராத்திரி ஒரு வேளைக்குப் பட்டினி இருந்தா போறும்..." என்றாள்.

மறுபடியும் சஷ்டி சப்தமியை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருந்தது.

மூன்று மணிக்குக் காஃபி என்ற நிரலும் தவறவில்லை. 

ராத்திரிக்கு இருக்கட்டும் என்று ஒரு சப்போர்ட்டுக்காக மாமி வாங்கி வைத்திருந்த செவ்வாழை மிகவும் வாளிப்பான இளமையுடன் இருந்தது. 

ஆறு மணிக்கே மாமி அடுப்பில் போட்டுக் கொண்டிருந்த ஆசிர்வாத் சப்பாத்தி வாசனை முருகனின் ஆசிர்வாதத்தை வாங்கிக் கொடுக்காது போலிருந்தது.

" விரதம்னா, அரிசிச் சாதம்தான் சாப்பிடக் கூடாது. கோதுமைக்கு  விலக்கு உண்டு" என்று அரசியல் சாசன ஷரத்தை பராசரன் அவர்களைப் போல எடுத்துச் சொல்லி,  தக்காளிச் சட்னியோடு மாமி கொடுத்த சப்பாத்தியை வேண்டாம் என்றும் சொல்லும் அளவுக்கு மாமாவிடம் இப்போது மனதில் தெம்பில்லை. 

ஒன்பது மணிக்கு, இரண்டு செவ்வாழையும் ஒரு டம்ப்ளர் பாலும் நிறைவாக வர, ஒரு சாதாரண நாளின் அளவைவிட  அதிகம் சாப்பிட்டு விட்டதாய் மாமா உணர்ந்தார். 

இரவு  கனவில், வாரியார் ஸ்வாமிகள் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததாய் என்னிடம் அடுத்த நாள் மாமா வருத்தமாய்ச் சொன்னார். 

அம்பி மாமா என் தமக்கையின் கல்யாணத்தின் போது எவ்வளவோ உதவிகள் செய்தார். பணம் காசு என்பது மட்டுமில்லாமல், ஒரு நண்பனைப் போல, ஒரு தகப்பனைப் போல எனக்கு அவர் செய்ததையெல்லாம் என்னால் மறக்க முடியாது.

அதற்கு நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்.? அவர் அனுஷ்டிக்க முடியாமல் போன சஷ்டி விரதத்தை நான் விடாமல் கடைப் பிடிக்கிறேன். முருகன் அதற்கான பலனை அம்பி மாமாவிற்கே கொடுக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு.

No comments:

Post a Comment