Tuesday, February 1, 2022

ஸ்டார் இல்லாத ஹோட்டல்கள்

 என் டயரியின் இன்றைய பக்கங்கள் .

  ஸ்டார் இல்லாத ஹோட்டல்கள்!

எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகத்தான் கடவுள் ஹோட்டல்களை படத்தார்.                                 ( யாரோ ஒரு உணவு ரசிகர் ) 

இருக்கின்றது.

[நெடுஞ்சாலைகளில் சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் அவ்வளவாக பிரபலமாகத ஓட்டல்களின் வாசலில் கைகளில் வண்ண கொடிகள் , வாயில் பிகில் சகிதமாக ஏறக்குறைய வாகனங்களின் முன் விழுந்து அந்த ஓட்டல்களுக்கு அழைக்கும் அந்த பசித்த முகங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ] 

நல்ல ஹோட்டல்கள் ஒரு நகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று    ஒவ்வொரு நாளும் அனேக மனிதர்கள் பிழைப்புக்காக புதியநகரங்களுக்கு குடியேறுகின்றனர். அவர்களுக்கு நட்புக்கரம் நீட்டிவரவேற்பது ஹோட்டல்களே. அவர்கள் மட்டுமல்ல. ஆன்மீகப் பயணம்மேற்கொண்டு ஊர் விட்டு ஊர் வருபவர்கள், நீண்ட தூரம்  நாட்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கும் லாரி,டிரக்குகள் இவை எல்லா ம்நம்பி இருப்பது ஹோட்டல்களே. சினிமா, பீச் போல ஒரு பொழுது போக்கும் இடமும் இதுவே. 

ஹோட்டல் என்று பொதுவாக அழைக்கப் பட்டாலும்  அவைகளுக்குள் பலவகைகள் உண்டு. அவை அந்தஸ்தின் அடிப்படையில் ஸ்டார் ஹோட்டல்கள், ஸ்டார் இல்லாத ஹோட்டல்கள் என்று அறியப்படும்.

ஸ்டார் ஹோட்டல்கள் எனக்கு அறிமுகம் கிடையாது. ஆனால் அவைகளைப்பற்றித்  தெரியும்.  அவைகளுக்கு என்னைத் தெரியாது.மற்ற எந்த தொழில்களைப்போலவே ஹோட்டல்களும் பல மாறுதல்கள சந்தித்து விட்டது.  

என் அப்பா சொன்ன ஹோட்டல்கள் (அவர் காலத்து ) என் நினைவில் இருக்கின்றது. அவர் ஊட்டியில்வேலையில் இருந்த ஹோட்டலைப் பற்றி சொல்லுவார். அது காலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு விடும். என்றாலும் ஐந்து மணிக்குத்தான் வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவார்களாம். அந்த ஒரு மணி நேரத்தில் ஹோட்டல் டேபிள்,தரை சுத்தப்படுத்தபட்டு பளீரிடும்.நல்ல ஊது பத்தி மணத்துடன் , ஸ்வாமி    படங்கள் மணமுள்ள மலர்கள் வாசம் வீச ஒரு தெய்வீக சூழ் நிலையில் அத்தனையும் மீறிக்கொன்டு காபி மணம் வீசுமாம்.

ஏழு மணி தொடங்கி ஒன்பது மணி வரை காலை டிபன் .இட்லி வடைதோசை பொங்கல் மட்டும்தான். ஞாயிறு மட்டும் பூரி,அடை கிடைக்கும். ஒரு மணி முதல் மூன்று மணி வரை சாப்பாடு.பின்னர் மாலை ஐந்து முதல் எட்டு மணி வரை இரவு டிபன்.அது உப்புமா,சப்பாத்தி மட்டும். ரொம்பவும் லிமிடெட் வாடிக்கையாளர்கள்.

இதில்  ஹைலைட் அதன் உரிமையாளர் ஒரு ராவ் .நல்ல சிகப்பு நிறம்.அவர் தினமும் தயாரிப்புகளை ஹோட்டலில் ஒரு பெரிய ராமர் பட்டாபிஷேக படத்தின் முன் வைத்து கண்ணருளப்பண்னி விட்டுத்தான் டேபிளுக்கு வரும் என்று அப்பா அதை அனுபவித்து சொல்வார். இவர் அங்கே சாப்பிட அந்த ஹோட்டலிலில் ரெகுலராய் சாப்பிடும் 

ஒருவர் சிபாரிசு செய்ய வேண்டி இருந்த்து. அங்கு அனேகமாய் எல்லோரும் மாதம் முழுவதும் சாப்பிட்டு விட்டு முதல் வாரத்தில் பணம் தருவார்கள்.அதற்கு வசதியாய் ஒரு நோட்டு கல்லாவில் வைத்து இருப்பார்கள். அவரவர்கள் சாப்பிட்ட பின் 

அந்த பேரேட்டில் அவர்களுக்கான பக்கத்தில் சாப்பிட்ட ஐட்டத்தை மட்டும்அவர்களே எழுதி விடவேண்டும். சரியாக  ஒன்றாம் தேதி காலையில் அவரவர் சாப்பிட்டதற்கு கணக்கிடப்பட்டு எழுதி இருக்கும். அவரவர்பணம் கொடுத்ததும் அந்த பக்கம் குறுக்கே கோடு போட்டு விடுவார்கள். இதில் விசேஷம் என்ன என்றால் கஸ்டமர் 

எழுதுவதையும் , ராவ் போட்ட கணக்கினை கஸ்டமரும் சரி பார்த்த்தில்லை என்பதுதான்!

என் காலத்தில் ஹோட்டல்கள்  மாறிப்போனது. நுழையும் இடத்தில்முதலாளி கல்லா.அவர் பார்வயில் டேபிள்கள். எல்லா ஹோடல்களிலும் ஒரே மாதிரியான ஷோகேஸ். அது சமையல் அறையை மறைத்து இருக்கும். அதில் பூரி, இட்லி,வடை போன்றவை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.அதன்  நடுப்பகுதியில் ஸ்வீட் ,அனேகமாய்மைசூர்பாகு ஒரு கோட்டை அமைப்பில் அடுக்கி இருக்கும். யார் ஆர்டர்செய்தாலும் சமையில் அறையில் இருந்து மட்டுமே சுட சுட எடுத்து வருவார்கள். இந்த ஷோ கேஸ் ஐட்டங்கள் எப்போது செலவாகும் என்று ஆசரியப்படுவேன். ரொம்ப நாள் கழிந்த பின் தான் தெரிந்தது.அவைகளே சுட வைக்கப்பட்டு சமையல் அறை வழியாய் வரும் என்பது. அந்த ஷோகேசில் இருந்து ஒரு நீள் நூல் தொங்கும். அதிலிருந்து நூலை இழுத்தபடியே இலையில் உணவுப் பண்ட்ங்களை வைத்து மடித்து பேப்பரில் சுற்றி நுுலால் கட்டும் பார்சல் செக்‌ஷன் இப்பொழுது வழக்கொழிந்துபோன ஒன்று.

கர கர வென்ற சப்தத்துடன் சிலோன் ரேடியோ, சர்வர்கள் சப்தம் பாத்திரங்கள் உருளும் ஓசை இதெல்லாம் ஓட்டலகளின் அடையாளம்.இன்று ரொக்கம் நாளை கடன். கெட்டி சட்னி இல்லை. இட்லி தோசைக்கு சர்க்கரை கிடையாது,புகை

பிடிக்காதிர்கள்.போன்றஅறிவிப்புகள் இருக்கும். ஒரு பெரிய போர்டில் விலை விலை எழுதப்பட்டு இருக்கும். விலை ஏறும்பொழுது காலண்டரில் இருந்து எண்கள் கத்தரித்து ஒட்டப்பட்டு இருக்கும்.

இங்கு ரகசியம் என்பது கிடையாது. நாம் ஆர்டர் செய்தவுடன்  சாருக்கு இட்டிலி வடை என்று சமையல் அறைக்கு அறிவிப்பார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் சாருக்கு ஒன்னரை ருபா பில்என்று அறிவிப்பார்கள்.  ஆர்டர் செய்துவிட்டு கேன்சல் செய்தால் சாரோட 

பூரி கேன்சல் என்று நம் விவரங்கள் அனத்தும் ஒலிபரப்பபடும். நமக்கும் சர்வர் கொடுக்கும் பில்லை ஒரு தடவை சரி பார்க்காமல் இருக்க முடியாது. அவர்களும் அப்படியே .நம்மை  நம்புவதில்லை. ஹோட்டல் முதலாளி கல்லாவிலிருந்து கண்காணித்தபடியேதான் இருப்பார். ( ராவ் ஹோட்டல் மாதிரி இப்பொழுது நடத்த முடியாது ) அதை விட மோசம் நாம் சாப்பிடும் டம்ளரில் இது சுதந்திர பவனில் திருடப்பட்டது என்று பொறித்து இருப்பார்கள் !  ( No trust only vigilance)

வாசலில் டிபன் ரெடி!சாப்பாடு தயார்! போர்டுகள் ஹோட்டல் லீவு நாட்களில் கூட இருக்கும்.சில வருஷங்களில் ஃபேமிலி ரும் என்று வந்தது. ஐஸ் கிரீம், குளிர் பாணங்களும் விற்பனைக்கு வந்தது. வழக்கமான உணவுப் பொருள்களோடு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு புதிய ஐட்டம் .அதை அறிவிக்க இன்றைய ஸ்பெஷல் என்று போர்டு காட்சி அளித்தது.

வழக்கமான சட்னிடன் குறைந்தது நான்கு வகை சட்னிகள் வண்ணமாக அறிமுகமானது. பசிக்கு ஹோட்டல்களை நாடுவது போய் இப்போது ருசிக்குப்  போவது பழக்கமானது.காதில் பென்சில் வைத்த சர்வர்கள் காணாமல் போனார்கள். பில்கள் குத்திவைக்கும் ஸ்பைக் , டிங் என்று ஓசை எழுப்பும் டேபிள் மணி இவை போய் CCTV , ஃபோல்டரில் பில் கொடுத்து டிப்சுக்கு காத்திருக்கும் சீருடை அணிந்த சர்வர்களே காணப்படுகின்றார்கள்.  சாப்பிடதும் இலையில் மிஞ்சியதற்கு வெளியில் காத்து நிற்கும் பிச்சைக்காரர்கள்  இப்பொழுது இல்லாமைக்குக் காரணம் மிஞ்சியதை நமக்கே பார்சல் செய்து தரும் வசதி வந்ததால்தானோ .? 

என்றாலும் எனக்கு நினைவில் இருப்பது பழமையான ஹோட்டல்களே! சேலத்தில் டவுன் ரயிவே ஸ்டேஷன் வாசலில் கிருஷ்ணா  பவன் அடை அவியல்,மக்மல் பூரி, மலபார் லாட்ஜ்பாதாம்ஹல்வா,சின்ன மசால் தோசை, வில்வாத்ரி,வெங்காய பஜ்ஜிபில்டர் காபி, சிவ சக்தி விலாஸ் இட்லி தோசை ஐந்து சட்னிகளுடன்,ஆரியபவன் பூரி டீ, அரசு ஐஸ் கிரீம் ரோஸ் மில்க் இதெல்லாம் எங்களுக்கு மட்டுமே கிடத்த ருசியான அனுபவம்.

வின்செண்ட் எதிரேஒரு ஹோட்டல் .கோகுல விலாஸ். அதில் அமாவசை அன்று ஸ்பெஷல் சாப்பாடு. அந்தஹோட்டல் பாஷைப்படி பிரதி அமாவாசை தோறும் வடை பாயசத்துடன் சாப்பாடு. பருப்பு வடை ஒன்று ஒரு டம்ப்ளர் சேமியா பாயசம் கிடைக்கும். தவறாது நாங்கள் சிரார்த்த காக்காய் போல தயாராக இருப்போம். கே. டி என்னும் என் ஃப்ரெண்ட்ஹோட்டல் காரரிடமே  அடுத்த அமாவசை எப்போ என்று  கேட்டுக்கொள்வான்!   ஆனந்தா ஹோட்டலில் திங்கள் அன்று சின்ன வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், எலுமிச்சை ரசம்,அப்பளம் .இதற்காகவே ஒரு மைல் போய் சாப்பிட்டுவிட்டு வருவோம்.

எங்கள் வீட்டுக்கு மிக அருகில் இருந்த பிருந்தா ஹோட்டல் என் அப்பாவும் அவரது நண்பர்களும் மாலை சில சமயங்களில் நுழைவார்கள். இணைப்பாக நானும் சேர்ந்தது உண்டு.சுவாரஸ்யமான சம்பவங்களும் ஹோட்டல்களில் ஏற்பட்டது உண்டு.

நானும் என் ஃப்ரென்ட் ஒருவனும் ஆரியபவனில் விலையைப் பார்துகொண்டே பூரியும் டீயும் சப்பிட்டுவிட்டு பில்லுக்கு காத்து கொண்டிருந்த போது உங்கள் பில்லை அவர் கொடுத்து விட்டார் என்று சர்வர்சொன்னார்.ஆச்சர்யத்திடன் திரும்பி பார்த்தால் என் அம்மாவின் கசின் (பின் நாளில் அவர் பங்களா அவுட் ஹவுசில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் குடி இருந்தோம்.) முன்பே தெரிந்துஇருந்தால் ஆளுக்கு இன்னும் இரண்டு பூரி சாப்பிட்டு இருக்கலாமேஎன்று வருந்தினோம். அதற்கு பின்னர் அது மாதிரி அதிர்ஷ்டம் அமையவே இல்லை.

சிவ சக்தி விலாஸில் எப்பவுமே கூட்டம் மிக அதிகமாய் இருக்கும்.அது பேலஸ் தியேட்டர் பக்கத்தில் இருக்கும். சினிமா விட்ட உடன்அங்கு சாப்பிட டேபிள் கிடப்பது கஷ்டம். என் கசின்கள் இருவருடன் பேலஸில் சினிமா பார்த்து விட்டு இந்த ஹோட்டலுக்கு போய் கஷ்டப்பட்டு இடம் பிடித்து ஆளுக்கு ஒரு இட்டிலி சாப்பிடவுடன்அடுத்தது என்ன என்று கேட்டதும் அவ்வளவுதான். பில் போடுங்கஎன்றதும் தொண்ணூறு பைசாவுக்கு பில்வேறு என்று அவன் சீறினான்.பின்னாளில் மினிமம் பில் ஐந்து ரூபாய் என்று போர்டுபோடதற்கு நாங்கள்தான் காரணமோ?

எங்கள் ஆஸ்தான ஹோட்டலாக பின்னாளில் விளங்கியது கௌரிஷங்கர். அந்த ஹொட்டல் வாசலில் எங்களுக்காக ஒரு பெஞ்ச் இருக்கும். வீட்டில் கூட சில நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கலாம்.இங்கு சாப்பிடாத நாளே கிடையாது. தோசைக்கு குருமா,மூன்று பேர்சாப்பிடும்படி இரண்டு காஃபி இதெல்லாம் எங்களுக்கான சிறப்பு சலுகைகள்.

கோயம்புத்தூர் போனவுடன் கௌரி ஷங்கர்,ஹோட்டல் காஃபி சாப்பிட்டதும்  அதுதான் காஃபியின் பெஞ்ச் மார்க் என்று சொல்லும்படியாய் இருந்தது. (காபி பொடியில்  அபின் கலந்து இருந்ததாக ஒரு புரளி உண்டு )

ஜாதி ஒழிப்பு போராட்டத்துக்கும் தப்பி பிராமணாள் காஃபி ஓட்டல்,உடுப்பி ஹோட்டல் ,உலகமெங்கும் பரவிவிட்ட சரவணா பவன்,தேசிய நெடுஞ்சாலை யில் அடையார் ஆனந்த பவன், கடைசியாகபிரபலமான அம்மா உணவகம் வரை இதெல்லாம் ஹோட்டல் வரலாற்று கல்வெட்டுகள்.

எங்கள் சேலம் காலேஜில் கண்ணப்பன் நடத்திய காண்டினைப் பற்றியும் சொல்லவேண்டும். அதற்கு ஸ்டார் மட்டுமல்ல . பேரும் கிடையாது. கூரை வேயப்பட்ட இடத்தில் ஒரு நீள பெஞ்ச் அதற்கு எதிராக இரண்டு டேபிள் , இவ்வளவுதான் காண்டீன். டீ ,காபி , வடை , பட்டை சாதம் இவ்வளவே மெனு. எந்த ஐட்டம் கேட்டாலும் கூடவே இரண்டு வடைகளும் வைப்பது அவனது பிசினெஸ் ஸ்டேடஜி. சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும்  பில்லில் அவன் வடைக்கான காசை அவன் சேர்ப்பான். பெரும்பாலான மாணவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் கணக்கில் எழுது என்று சொல்வார்கள்.  வருட முடிவில் கணக்கு நோட்டில் இருப்பதில் பாதி கொடுத்து புல் செட்டில்மெண்ட் செய்வார்கள். அப்படியும் அவனுக்கு லாபம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பத்து வருஷமாக காண்டின் நடத்தியிருப்பாரா?

இன்று ஸ்விகி என்றும் பிற பெயர்களிலும் மோட்டார் பைக்குகளில் குறுக்கும் நெடுக்குமாய் பயணிப்பதைப் பார்க்கும்பொழுதெல்லாம் 

இரண்டாவது அக்ரஹாரத்தில் கூடையில் இட்டிலியும் , வாளியில் சட்டினியுமாக ( இட்டிலி இரண்டு ஐந்து பைசா ) காலை (கூவாமல்) விற்கும் அந்த பெரியவரையும் , 

ஆபிஸ் ஆபிஸ் ஆக போய் லஞ்ச் டைமில் தோசை, இட்லி ( மிளகாய் பொடியுடன் ) வெகு சிலருக்காக மட்டும் தயிர் சாதமும் கொண்டு விற்கும் “ வைத்தி “ அவர்களும் , 

நான் ஜாம்ஷெட்பூரில் இருந்த பொழுது ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே தள்ளு வண்டியில் கொண்டுவரும் இட்லி , மசால் தோசை ,அதன் ருசி அந்த சர்தாரின் முகம் , அவர் வருகையை அறிவிக்கும் வகையில் தோசைக்கல்லில் கரண்டியால் அவர் எழுப்பும் அந்த ஓசை 


இதெல்லாம் ஞாபகம் வருவதை மறக்க முடியாது.


காலம் மாறியது. மெனு கார்டு, டிப்ஸ், போன்றவை அறிமுகமானது.சாப்பிட்ட பில்லில் சாப்பிட்ட உணவுக்கான தொகையுடன் பலவிதமான வரிகள் சேர்க்கப்பட்டு பில் என்பது புரியாமலேயே   பணம்செலுத்தினோம். இன்று ரொக்கம் என்பது போய் கார்டு மூலம் கடனில் சாப்பிட்டோம்.

வீட்டில் இருந்தபடியே தேவையான் ஹோட்டல்களிருந்து வேண்டிய உணவுகளை வீட்டு வாசல்படியில் தர பல ஆப்ஸ் வந்து விட்டது. என்றாலும்இப்போதும் இந்த நட்சத்திர அந்தஸ்து பெறாத ஹோட்டல்கள்தான்அனேகம் பேரை பசியாற்றுகின்றது. பல கனவுகளோடு ஊரை விட்டுபிழைக்க வந்தவர்கள் பசிக்கு சோறிடும்.ஓடி வந்தவர்களுக்கு கிடைக்கும் முதல் வேலையே ஹோட்டலில்தான்.

கேண்டின், தாபா, மோட்டல், ஃபுட் கோர்ட் என்று பல பெயர்களில்இன்று ஹோட்டல்களுக்கு பெயரில் சர்வதேச  உணவுகள் ஒரே இடத்தில் இன்று கிடைத்தாலும் 

அந்த புகை படிந்த , சந்தடி மிகுந்த ஸ்டார் இல்லாத அந்த ஹோட்டல்கள் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கின்றது.

சாரதி.

23/01/2022.

.

No comments:

Post a Comment