Seruvaamani_92
பாஸ்கர் சத்யா
'அப்பா, நான் கொஞ்ச நேரம் நந்தினியுடன் இருந்து விட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்கு போங்கோ விக்கியை அழச்சிண்டு.'
'ஏண்டா, பேரன் வேணா இருக்கட்டுமே. அவளுக்கு ஆறுதலா இருக்குமே.'
'இல்லப்பா. அப்புறம் அவன் பாலுக்கு ஏதாவது அடம் பிடிப்பான். சார் ஜாக்ரதையா இருக்க சொன்னாரோன்னோ. நானே லஞ்சுக்கு ஆத்துக்கு வந்துடுவேன்.'
சரியாகப் பட்டது. இருவரும் விக்கியுடன் கிளம்பினார்கள்.
'சாலி, குழந்தைக்கு ஒண்ணுமில்லைனு சொல்லிட்டார் டாக்டர்.'
செருவாமணி விசாலத்திடம் சொல்லும்போதே குரல் தழு தழுத்தது சந்தோஷத்தில்.
'பால வாத்தேளே. உங்க ஆனந்த விநாயகர்தான் அவ பக்கத்தில நின்னுருக்கார்.'
'வாஸ்தவம்தான் மாமி. சரியா சொன்னேள். ஒரு மாசமா நான் பட்ட அவஸ்த இருக்கே.'
மூர்த்தி தன் க்ராட்டிட்யூட ஆனந்த விநாயகருக்கு செலுத்தினார்.
'மாமா, அப்புறம் மறந்துடுவேன். உப்புமு ஃபோன் பண்ணுனா சிங்கப்பூர்லேந்து. ஒரு வாரமா ட்ரை பண்றாளாம். அவ மாமியாருக்கு உடம்பு சரியில்லையாம். தஞ்சாவூர் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காளாம். ஒருவாரம் லீவுல மாப்ள வராராம் எல்லாரையும் அழச்சுண்டு. நேரா தஞ்சாவூர் போறாளாம். அங்க பார்த்துண்டு இங்க வராளாம்.'
'நந்தினி உடம்ப பத்தி சொன்னேன். துடிச்சு போயிட்டா. நாலு மணி வாக்குல ஃபோன் பண்றாளாம் திருப்பியும். சொல்ல சொன்னா.'
'ஃபோன் நம்பர் கொடுத்தாளா?'
'ஏதோ சொன்னா, அரையும் குறையுமா குறிச்சுண்டிருப்பேன்னு நெனைக்கிறேன். குரலே ரொம்ப க்ஷீணமா இருந்தது. அங்க ஃபோன் பக்கத்துலயே வெச்சிருக்கேன் பாருங்கோ.'
இன்டர்நேஷனல் PP கால் புக் செய்தார் மூர்த்தி அந்த நம்பருக்கு.
'என்ன என்னை பகவான் இப்படி சோதிச்சிண்டே இருக்காரே. இப்பத்தான் கொஞ்சம் நிம்மதி கெடச்சது. அதுக்குள்ள இன்னோண்ணா?'
அதிசயமாக உடனே லைன் கிடைத்து விட்டது.
'அப்பா, மொதல்ல நந்தினி எப்படி இருக்கா? அத சொல்லுங்கோ. கேள்வி பட்டதிலேந்து பட படன்னு இருக்கு. இவ்வளவு நடந்திருக்கு எனக்கு ஃபோன் பண்ணனும்னு தோணவே இல்லையா? அப்படி என்னப்பா பாவம் செஞ்சேன்?'
'சொல்லியிருந்தா, இன்னும் பட படன்னு இருந்திருக்கும். இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே.'
அழுகை, கோபம், ஏக்கம், ஆதங்கம் எல்லாம் கலந்த உப்புமுவின் உரையாடல்.
'மாமியாருக்கு ச்செஸ்டுல நீர் கொண்டுருக்கு. பயப்படும்படி இல்ல. இப்ப ப்ளம்மெல்லாம் எடுத்தாச்சு. இப்ப மூச்சு நன்னா விடமுடியறதாம். இந்த தடவ அவாள எப்படியாவது சம்மதிக்க வெச்சு சிங்கப்பூருக்கு அழச்சிண்டு போகலாம்னு தீர்மானமா இருக்கோம்.'
'அதுதான் சரி. நானும் லெட்டர் போடறேன் சம்பந்திக்கு. பேத்தி எப்படி இருக்கா? மாப்ள..?'
'எங்களுக்கென்ன? நாங்க எல்லோரும் நன்னா இருக்கோம். இங்க அஃபிஷியல் லாங்க்வேஜே தமிழ்தான். நிறைய தமிழா இருக்கா? பெருமாள் கோவில் மாரியம்மன் கோவில்னு அமக்களமா இருக்கு.'
'இங்க வாயேம்மா. நானும் உங்க கூட வேணா தஞ்சாவூர் வரேனே.'
'வேணாம்ப்பா. நந்தினி உடம்புதான் முக்கியம் இப்ப. நாங்க தஞ்சாவூர் போயிட்டு திரும்பி போகும்போது வரோம் கண்டிப்பா. அவா ரெண்டு பேரையும் சிங்கப்பூர் அழச்சுண்டு போர விஷயமா உங்க கிட்டேயும் பேசணுமே.'
'சரிம்மா. மாமியார் உடம்ப பார்த்துட்டு ஃபோன் பண்ணு தஞ்சாவூர்லேந்து மறக்காம.'
உப்புமுவிடம் பேசியதில் சற்று நிம்மதி மூர்த்திக்கு.
ராஜு நர்ஸிங் ஹோமில் பாலுவும் நந்தினியும் பேசித் தீர்த்தனர். எதிர்பார்க்கப் பட்ட ஸைட் எஃபெக்ட் எதுவும் இல்லை. ஆரோக்கியமாகவே இருந்தாள் நந்தினி.
'ஐ ஆம் சாரி மை டியர். அன்னிக்கு நீ தலையில அடி பட்டதுன்னு சொன்னபோதே கவனிச்சிருக்கணும். எங்க சாரும் என்ன நல்லா சத்தம் போட்டார்.'
அந்த 'மை டியர்' என்ற வார்த்தைகளைக் கேட்டதில் வந்த நாணப் புன்னகையை மறைக்க நினைத்தும் முடியவில்லை. சட்டென்று பாலுவின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு, 'அதனால என்ன பரவாயில்ல. இப்பதான் ஒண்ணும் இல்லைனு ஆயுடுத்தே'
அருகாமையில் இருந்த ஹோட்டலில் இருந்து மதிய உணவை வரவழைத்தான் தனக்கும் அவளுக்கும்.
ஊட்ட முயற்சித்தான் அவளுக்கு. நாணத்தால் மறுத்தாள்.
மாலை ஐந்து மணிக்கே டிஸ்ச்சார்ஜ்.
தொடரும்....
No comments:
Post a Comment