Sunday, February 20, 2022

எண்ணப்பறவை_7

எண்ணப்பறவை_7

அன்று மதியத்திலிருந்து வேலையில் படு பிஸி.  வீட்டிற்கு கிளம்பும்போது ஏழரையைத் தாண்டி விட்டது.

'எண்டி இவ்வளவு லேட்டு.  ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமோன்னோ?  பயந்துட்டேன்.'

கேட்ட அக்கா குமுதாவிடம் அலுவலக வேலையை பற்றி கூறினாள்.

'சரி, கைகால் அலம்பிண்டு சாப்பிட வா.  மதியான கூட்ட சுட பண்றேன், சப்பாத்திக்கு தொட்டுக்க.'

தாயில்லா குழந்தைகள் இருவரும்.  வயிற்று வலின்னு டாக்டர் கிட்ட போன போது ஆபரேஷன் அது இதுன்னு என்னென்னவோ ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு அம்மா போய் சேர்ந்து.

அப்பா கணபதி சுந்தரம்.  இரண்டு பெயர்களை ஒண்ணா வெச்சிண்டதால முழுப் பெயர் அவருக்கே சில சமயம் மறந்து விடும்.  ஏன் என்றால், சிலர் அவரை கணபதின்னு கூப்பிடுவார்கள், சிலர் சுந்தரம்னு கூப்பிடுவார்கள், ஆஃபீஸில் சுருக்கமாக GS சார்.

திருச்சி பெல் கம்பெனியில்  வேலை.  க்வார்டர்ஸில் நன்றாக ஒன்றாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த குடும்பம்.  அம்மா வாலாம்பா மறைவிற்குப் பிறகு அப்பா ஒரு இடம் குழந்தைகள் ஒரு இடம்.

எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ் மூலம் அமுதாவிற்கு போலீஸ் டிபார்ட்மெண்டில் மெட்ராஸில் வேலை கிடைத்தது.  தனியா குழந்தை கஷ்டப்படக் கூடாது என்பதற்காக குமுதாவையும் அவளையும் வெஸ்ட் மாம்பலத்தில் ஜெய்சங்கர் தெருவில் தெரிஞ்சவா மூலம் ஒண்டிக் குடுத்தனத்தில் ஜாகை வைத்துக் கொடுத்து விட்டார்.

மாசத்துக்கு ரெண்டு தடவை ரெண்டு குழந்தைகளையும் வந்து வந்து பார்த்துவிட்டு செல்வார்.

மனைவியைப் பிரிந்த சோகத்துடன் அவள் நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் திருச்சியில்.  இன்னும் ஐந்தாறு வருஷம் ஓட்டியாகணும் ரிடைர்மெண்ட் வரைக்கும் திருச்சியில்.

இரண்டு பெண்களுக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்.  வாலாம்பாள் ஏதோ அங்கும் இங்கும் சிக்கனமா இருந்து இரண்டு பெண்களுக்கும் முப்பது பவுன் நகைகளை சிறுக சிறுக சேர்த்து வைத்து விட்டு போய் சேர்ந்துட்டா.  மீதி இவர் சாமர்த்தியத்தால இரண்டு பேரையும் நல்ல மாப்பிள்ளைகளா பார்த்து கரை சேர்க்கணும்.

தாயில்லா குழந்தைகளுக்கு மாரல் சப்போர்ட் கொடுக்க வேண்டும், தன் சோகங்களை மறைத்துக் கொண்டு.

குமுதாவுக்கு சாரீரம் நன்றாக இருந்ததால் பாட்டு கற்றுக் கொண்டாள்.  அவ்வப்போது அங்குள்ள ரேடியோ அலுவலகத்தில் கூப்பிடும்போது பாடிவிட்டு வருவாள்.

அமுதாவிற்கு துணையாக மெட்ராஸ் வந்த அவள் பொழுது போகாத காரணத்தினால் ஒரு சேட் கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதமாக போய் கொண்டுருக்கிறாள்.

சிறுவயது முதல் வாலுத்தனமும் சுட்டித்தனமும் அமுதாவிடம் அதிகம்.  ஆனாலும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவளிடத்தில் சுட்டித்தனம் பெருமளவு குறைந்து விட்டது.

பத்திரிக்கைகள் படிப்பதில் சிறு வயதில் ஏற்பட்ட ஆர்வம் கதைகள் நாமே எழுதினால் என்ன என்று முயற்சியில் இறங்க வைத்து விட்டது.

வீட்டின் கடைக் குட்டி.  செல்லம் வேறு.  அதுவும் குமுதாவிற்கு அவள்தான் எல்லாம்.  தாயின் மடியில் படுத்த நேரங்களை விட தமக்கையின் மடியில் உறங்கிய நாட்களே அதிகம்.

இரண்டு பேரும் ஆஃபீஸ் விட்டு வந்த்திலிருந்து பத்து மணி வரை அரட்டை.  அதற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அமுதா ஏதேதோ எழுதிக் கொண்டிருப்பாள்.

குமுதா காலையில் ஆறு மணிக்குள் எழுந்து விடுவாள்.  வாசல் பெருக்கி, கோலம் போட்டு, காஃபியும் போட்டுவிட்டு அதன் பிறகே அமுதாவிற்கு சுப்ரபாதம் பாடி அவளை எழுப்புவாள்.  

'செல்ல குட்டி எழுந்திருடி'.

'லேட்டாகறது பார்.  ஆஃபீஸ் போகணுமோனோ.'

'சீக்கிரம் சீக்கிரம்.  மணி எட்டாகறது பார்' என்று ஏழு மணிக்கே சொல்லி எழுப்புவாள்.

ப்ரஷ்ஷின் மீது பேஸ்ட் கூட வைத்து விடுவாள் அவள் எழுந்து கொள்வதற்குள்.

அம்மா இறந்தபின் அமுதாவை ஒரு குழந்தைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டு வருகிறாள்.

'ஏண்டி, இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருக்கும்.  சீக்கிரம் ஆஃபீஸ் போகணும்னு சொன்னியே நேத்து ராத்திரி.'

'டயர்டா இருக்கு குமுதா.  எப்போதும் போலவே கிளம்பறேன்.'

'சீக்கிரம் கிளம்பினாத்தானே சீக்கிரம் வேலையெல்லாம் முடிச்சிட்டு ஆத்துக்கு நேரத்தில வரலாம்.'

ஏதோ எழுந்தாளே தவிர அவளுடைய அன்றைய சோம்பேரித்தனம் எட்டு மணிக்குத்தான் தயார் படுத்தியது.

'வரேன் குமுதா.  ராத்திரி வரதுக்கு லேட் ஆனாலும் ஆகலாம்.  எனக்காக வெயிட் பண்ணாம சாப்டு.'

கைப்பையின் ஸிப்பை திறந்து டிஃபன் பாக்ஸை வைக்கும் போது அரவிந்தின் விஸிடிங் கார்ட் இருந்தது அதனுள்.

அந்த விஸிடிங் கார்டின் கதை நினைவிற்கு மின்னலாக வந்ததால் சற்று சிரிப்போடு கையில் எடுத்துப் பார்த்து விட்டு உள்ளே வைத்தாள் மீண்டும்.

'பாஸ்புக் உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல தான் வேலை பாக்குதோ?  பக்கம்தான்.'

சிரித்துக் கொண்டே அயோத்யா மண்டபம் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள்.

பாஸ்புக் சிந்தனைகள் அவளை சிரிக்க வைத்தே நடக்க வைத்தன.

தொடரும்...

No comments:

Post a Comment