எண்ணப்பறவை_4
மறுநாள் 12G பயண சந்திப்பு.
'நீ அண்ணண்ட போன. நரசிம்மன் வந்தார். சொல்லியிருக்கேன் நீ பார்க்கணும் அவரைனு. நாளண்ணிக்கு டாண்ணு பத்தரைக்கு வரேன்னு சொல்லியிருக்கார். முடியுமா உன்னால?'
'கண்டிப்பா வரேங்க்கா. ஒண்ணுமில்லக்கா. ஒரு தொடர்கதை எழுதலாம்னு நெனச்சிண்டிருக்கேன். விகடன் எடிட்டர் ஒத்துண்டார்னா. நரசிம்மன் ஒரு இண்ட்ரோ கொடுத்தார்னா அவாளோட எடிட்டர பார்க்கலாம்னு. அதான்.'
'நல்ல ஐடியா. ஏற்பாடு பண்ண சொல்றேன். கவலப்படாத. மோதிப் பார்த்துடுவோம்.'
சொல்லிவிட்டு கைப்பையை திறந்தாள்.
'இந்தா, உன்னோட அத்தை பையனோட பாஸ் புக். நேத்திக்கே தேடி கெடச்சுடுத்து. அவர் கிட்ட சேர்த்துடேன் நீயே.'
அவன் தன் அத்தை பையன் இல்லை என்ற உண்மையை சொல்லிவிடலாம் என மீண்டும் நினைத்தாள். 'என்னிடமே பொய் சொன்னாயா?' என்று தப்பா நினைத்து விட்டால்?
திருப்பிக் கொடுத்து, 'அவன் தான் இன்னிக்கு வரேன்னு சொன்னானே. அவன் கிட்டேயே கொடுத்திடுங்கோளேன்' என்றுதான் சொல்ல நினைத்தாள். ஆனால் அப்படி செய்யவில்லை.
அதற்கு காரணம் ஒரு க்யூரியாஸிடி. பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் இருக்கும் அவன் விவரங்களை அறிய ஒரு சின்ன ஆசை. பெயர், விலாசம்?
'முன்பின் அறியாத நபரிடம் இப்படி பண்றது தப்பில்ல? ஒரு வேளை இன்னிக்கு அவன் பேங்குக்குப் போய் பாஸ்புக்கை கேட்டான்னா?'
பல கேள்விகளை அவளுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாலும், தானே அந்த பாஸ்புக்கை எடுத்து செல்வது என்று தீர்மானித்தாள்.
'ஒரு சின்ன விளையாட்டை விளையாடித்தான் பார்ப்போமே. ஏதாவது பிரச்சனை வந்தால் அபி அக்காவிடம் நாளை பஸ்ஸில் திருப்பிக் கொடுத்தால் போச்சு.'
பருவம் மனதில் புகுந்து கொண்டு விளையாட்டுக்கு மனதை ஒத்துக் கொள்ள வைத்தது.
ஆஃபீஸ் சென்றவுடன் முதல் காரியமாக அவன் பெயர், விலாசத்தை நேற்று அபிராமி கொடுத்த டைரியில் எழுதிக் கொண்டாள்.
பெயர் அரவிந்த். கிழக்கு தாம்பரம் கம்பர் தெரு அட்ரஸ்.
அமுதா-அரவிந்த் இணைத்துப் பார்த்து ஒரு பருவச் சிரிப்பு. இணைவானா என்று தெரியாமல் ஒரு இணைப்பு. சிறிது நேரம் ஆஃபீஸில் பலர் இருந்தும் யாரும் கண்களுக்கு தெரியாத ஒரு உணர்வு. பிறகு அலுவலக வேலைகளில் கவனம், இருந்தாலும் அவ்வப்போது ஒரு 'பட பட', என்ன ஆகுமோ என்று.
அரவிந்த் கௌண்டருக்கு வருகிறான். 'அஸிஸ்டண்ட் மேனேஜர் கிட்ட வாங்கிக்கங்க. நேத்தே தேடி கண்டுபிடிச்சு என்ட்ரிகளெல்லாம் போட்டு கொடுத்துட்டேன்.'
'ஃபைன். நான் பார்த்து வாங்கிக்கறேன். தேங்க்ஸ். நான் ஏதாவது கோபத்துல பேசி இருந்தால் மன்னிச்சிடுங்க.'
புன்சிரிப்பு பறிமாற்றம். அபிராமி கேபினுக்குள் கதவை தட்டி, 'மே ஐ கம் இன் மேடம்?'
'சார், உங்க பாஸ்புக்க உங்க மாமா பொண் கிட்ட இன்னிக்கு கார்த்தாலேயே கொடுத்துட்டேன்.'
'என்ன மேடம் நீங்க. நான்தான் வந்து கலெக்ட் பண்ணிக்கறேன்னு சொன்னேனே நேத்திக்கு. அவங்க யாருன்னே தெரியாது மேடம். நேத்திக்குதான் அவங்களையே இந்த பேங்க்குல பார்த்தேன். அவங்க பேர் கூட தெரியாது.'
அபிராமிக்கு ஆச்சர்யமும் கோபமும்.
'திருட்டு லூஸு. எதுலதான் விளையாடறதுன்னே தெரியல அதுக்கு.'
மனதிலே அமுதாவுக்கு திட்டு.
'ஏன் சார். உங்களுக்கு நேரதானே உங்கள தன்னோட அத்தை பையன்னு சொன்னாளே. அப்ப கம்முனு இருந்தீங்களே. எனிவே தப்பு என்னோட பேரிலேயும் இருக்கு. நான் அவ கிட்ட கொடுத்திருக்க கூடாது. ஐ ஆம் சாரி.'
'சரி மேடம், இப்ப இதுக்கு என்னதான் சொல்யூஷன்?'
'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இங்கேயே. ஃபோன்ல அவள புடிக்கிறேன்.'
சுழற்றிக் கொண்டே இருந்தாள். லைன் கிடைக்கவில்லை.
'சார் நீங்க கோச்சிக்கலைனா ஒண்ணு சொல்லட்டுமா? அவ பேர் அமுதா. இங்க தான் ஐஜி ஆஃபீஸ்ல டிஐஜி குருராஜனுக்கு பி.ஏ. வா இருக்கா. இஃப் யூ டோண்ட் மைண்ட் அவ ஆஃபீஸுக்கு போய் கலெக்ட் பண்ணிக்கிறேளா. ஷீ இஸ் மை பெஸ்ட் ஃபரெண்ட். சாரி ஃபார் ஆல் இன்கன்வீனியன்ஸ்'.
'சரிங்க... வேற வழி?'
என்னென்னவோ அபிராமியை திட்ட வேண்டும் என்றுதான் நினைத்தான். இருந்தாலும் அபிராமி சொன்னதில்
இருந்த ஞாயத்தையும் யோசித்தான். 'உங்க அத்தை பையன்னு சொன்னாளே. அப்ப கம்முனு இருந்தீங்களே..'
'அந்த பொண்ணாவது இன்னிக்கு அந்த பாஸ்புக்க இவங்க கிட்டேந்து வாங்கும்போது உண்மைய சொல்லியிருக்கலாமே. சரியான பொம்பளையா இருக்கும் போல இருக்கே!'
'இரண்டு கிலோ மீட்டர் போகணுமே ஐஜி ஆஃபீஸ் போக. அங்க போய் அந்த பைத்தியம் என்ன பாடு படுத்தப் போறதோ தெரியலையே. எல்லாம் என்னோட நேரம்.'
'அனந்த கிருஷ்ணன் வண்டிய வேற எடுத்துண்டு வந்திருக்கோம். இன்னும் அந்த ஆளுக்கு வேற எல்லா கதையையும் சொல்லி பல்ல இளிக்கணும். இல்லாட்டி இன்னொரு தடவை வண்டி கொடுக்க யோசிப்பார்.'
எக்ஸ்ப்ளோரர் வண்டி ஸ்டார்ட் ஆகும்வரை அரவிந்தின் புலம்பல் தொடர்ந்தது.
தொடரும்....
No comments:
Post a Comment