எண்ணப்பறவை_3
மறுநாள் பதினோறு மணி இருபது நிமிடம். அவசரம் அவசரமாக அபிராமியின் கேபினுக்குள் நுழைகிறாள். படு பிஸி அவள்.
'இன்னும் வரல அவர். கொஞ்ச நேரம் பார்ப்போமா?'
'அக்கா, நீங்க பிஸியா இருக்கேள். நான் ஃப்ரண்ட்டுல உட்கார்ந்திருக்கேன். அவர் வந்தோண்ண சொல்லுங்கோ.'
ரிஸப்ஷன் ஸைடில் இருந்த ச்சேர் ஒன்றில் அமர்கிறாள்.
அப்போது ஒரு இளைஞன். ஸ்மார்ட் லுக்கிங். ஸ்டெப் கட்டிங், பெல் பாட்டம், பேண்ட் பின் பாக்கெட்டில் ஒரு சீப்பு. மாநிறத்துக்கு சற்று கூடுதல் வெளுப்பு. அம்ஸமாக பொருந்தியிருந்த மூக்குக் கண்ணாடி.
வெயிலின் தாக்கத்தில் அவன் நெற்றியியல் தெரிந்த வியர்வைத் துளிகள். கர்ச்சீஃப் ஒன்றால் அழுத்தி துடைத்துக் கொண்டு சேமிப்பு கணக்கு கௌண்டருக்கு செல்கிறான்.
பார்வையை அவனிடமிருந்து விலக்கிக் கொள்ள முடியவில்லை அவளால். அவனிடத்திலிருந்து ஒரு மைல்ட் ஸென்ட் வாசனையும் அவளை கடந்து சென்றது அவள் மனதில் பதித்துவிட்டு. 'ஓ... வாட் எ ஃப்ரேக்ரன்ஸ்!'
திடீரென்று பெருத்த மேஸ்குலின் வாய்ஸ் கௌண்டர் பக்கத்திலிருந்து. அட, அவனே தான்!
'என்ன சார். எத்தனை தடவ பாஸ்புக்குக்காக வரது. இதோட மூணாவது தடவ. வேல வெட்டி இல்லாதவன்னு நெனச்சீங்களா? மேனேஜரை பார்த்து ரிப்போர்ட் பண்ணத்தான் போறேன். ஒர்ஸ்ட் கஸ்டமர் ஸர்வீஸ்.'
என்னமோ அவனுக்கு உதவலாமே என்று தோன்றியது அமுதாவுக்கு.
'என்ன பிரச்சனை சார்? நான் தெரிஞ்சுக்கலாமா?'
அமுதா அப்படி கேட்கும் போதே அவன் மீது ஒரு தீர்க்கமான பார்வை.
'பின்ன என்னங்க பத்து நாளைக்கு முன்னாடி என்னோட பாஸ்புக்க இவர் கிட்ட கொடுத்தேன் எண்ட்ரி போட. பிஸியா இருக்கேன், போட்டு வைக்கறேன்னு சொன்னார். அடுத்த நாள் வந்தபோது பாஸ்புக்க கைமறதியா எங்கேயோ வெச்சுட்டேன், தேடி வைக்கறேன்னு சொன்னாரு. நாலு நாள் முன்னாடி வந்து கேட்டு அதே கதை. எத்தனை தடவைங்க வரது. புதுசா ஒரு பாஸ்புக்காவது போட்டு தாங்கன்னா, அதுவும் மாட்டேங்கறாரு.'
அவன் இது விஷயமா ரொம்ப நொந்திருப்பது புரிந்தது அவளுக்கு. உதவலாமே அவனுக்கு என்றும் தோன்றியது. இருக்கவே இருக்காளே அபி அக்கா என்ற நம்பிக்கையில்.
'இவ்வளவு தானே சார். ஏன் கவலைப் படுறீங்க. நான் ஹெல்ப் பண்றேன் உங்களுக்கு. இந்த சீட்டில் கொஞ்சம் உட்காருங்க. வெயில்ல வந்திருக்கீங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் எ ஒயில். ஐ வில் ப்ரிங் ஸம் வாட்டர் ஃபார் யூ.'
ஏதோ அவள் தீர்த்து வைப்பாள் தன் பிரச்சனையை என்று நினைத்தானோ என்னவோ, உட்கார்ந்தான்.
அங்கிருந்த பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து வந்தாள். முதலில் மறுத்தான். பிறகு வாங்கிக் கொண்டான்.
'நம்ம நாட்டுல நமக்கு ஏதாவது காரியம் ஆகணும்னா அதுவும் உடனே ஆகணும்னா, ஒண்ணு பணம் இருக்கணும், இல்லாட்டி நமக்கு இன்ஃப்ளூயன்ஸ் பண்ண யாரையாவது தெரிஞ்சிருக்கணும்.'
'சரியா சொன்னீங்க மேடம்.'
'எனக்கு தெரிஞ்சவங்கதான் இங்க அஸிஸ்டண்ட் மேனேஜரா இருக்காங்க. அவங்க கிட்ட போலாம் வாங்க.'
நேராக அவனை அபிராமி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
'மேடம், இவன் என்னோட அத்தை பையன். இவனுக்கு இங்க அக்கௌண்ட் இருக்கறது இன்னிக்குதான் எனக்கே தெரியும். இவனுக்கு ஏதோ பிரச்சனை இந்த ப்ராஞ்ச்சுல. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?'
அவன் அவனுடைய பி்ரச்சனையை சொன்னான்.
'இவ்வளவு தானே. எனக்காக ஒரே நாள் டைம் கொடுங்க. நாளைக்கு இதே டயத்துக்கு வந்து உங்க பாஸ்புக்க வாங்கிக்கோங்கோ. ப்ளீஸ்.'
'தேங்க் யூ மேடம்'
அமுதா தேங்க் பண்ணியவுடன், அபிராமி தன் மேஜை ட்ராயரை திறந்தாள்.
'இது உங்களுக்கு. இது உங்க அத்தை பையனுக்கு.'
அவள் அவர்களிடத்தில் நீட்டியது இரண்டு டைரிகள். 1981ம் வருடம் பிறந்து அப்போதுதானே பத்து நாட்கள் முடிந்திருக்கிறது.
வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.
'என்னங்க, நீங்க பாட்டுக்கு என்ன அத்தை பையன்னு சொல்லிட்டீங்க. அந்த மேடம் வேற உங்க ஃப்ரெண்டுன்னு சொன்னீங்க. பின்னாடி தெரிஞ்சுதுன்னா தப்பா நினைக்கப் போறாங்க. நீங்க எனக்காக தானே பொய் சொல்றீங்கன்னு நானும் ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு. ரொம்ப டைம்லியா வந்து ஹெல்ப் பண்ணுனீங்க. ரொம்ப தேங்க்ஸ் மேடம்.'
வாசலில் அவனுடைய என்ஃபீல்ட் எக்ஸ்ப்ளோரர் டூ வீலர் நிறுத்தியிருந்தான். அதை கிக் ஸ்டார்ட் செய்யும்போது அவன் ப்பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் பெட்டி கீழே விழுந்ததைப் பார்த்தாள். அவன் அதை கவனிக்கவில்லை.
'சார், உங்க ப்பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஏதோ கீழே விழுந்தது பாருங்க.'
பார்த்தான். ஆனால் எடுக்கவில்லை.
'ஒண்ணும் விழலையே மேடம்.'
'சிகரெட் பாக்கெட்?'
'நோ மேடம். ஐ ஆம் நாட் எ ஸ்மோக்கர்'.
இப்படி அவன் சொன்னதும் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
'இவன் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும்? ஏன் பயப்படணும்? எப்படியோ இவனாவது என் கிட்ட பயப்படட்டுமே.'
அவன் மீண்டும் ஒரு முறை த்தேங்க்ஸ் சொல்லிவிட்டு விடை பெற்றவுடன் சிரித்துக் கொண்டே பேங்க் உள்ளே செல்கிறாள்.
அமுதா பேங்க் உள்ளே செல்ல, பாங்க் ப்யூன் அவளை நோக்கி வந்து, 'மேடம் உங்கள கூப்பிடறாங்க' என கூறுகிறான்.
'அமுதா, நரசிம்மன் வரல. வீணா வெயிட் பண்ண வேண்டாம். இன்னிக்கு இதுக்கு மேல வரமாட்டார்னுதான் தோணறது. நீ கெளம்பு.'
'அப்புறம்... அவனுக்கு நேர உங்கள அக்கான்னு கூப்பிட வேண்டாம்னு தான் மேடம்னு கூப்பிட்டேன்.'
'புரிஞ்சுண்டேன் அமுதா. அப்புறம்.. ஒன்னோட அத்தை பையன் கிளம்பிட்டாரா? வெரி ஸ்மார்ட் லுக்கிங் க்ரேட் அண்ட் ஹேண்ட்ஸம்.'
லேசாக கண்ணடித்துக் கொண்டே அபிராமி சொன்னதின் உள் அர்த்தம் அந்த பருவப் பெண்ணுக்குப் புரியாதா என்ன?
அவன் தன் அத்தை பையன் இல்லைனு சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை. தான் பொய் சொல்லியிருக்கிறோம் என்று அபி அக்கா அறிந்தால் என்ற உணர்வு அவளை தடுத்தது.
அபிராமி சொன்னதைப் போல அவன் ஹேண்ட்ஸம் தானே?
தனக்குத்தானே சிரித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி கிளம்பினாள்.
அவன் ஷர்ட்டிலிருந்து வந்த அந்த ஸென்டின் ஃப்ராக்ரன்ஸ் மீண்டும் இவள் சுவாசத்தில் எப்படியோ கலந்தது.
தொடரும்.....
No comments:
Post a Comment