Friday, February 18, 2022

எண்ணப்பறவை_2

எண்ணப்பறவை_2

பஸ்ஸில் ஏறியவுடன் நிற்க மட்டுமே இடம் கிடைத்தது இருவருக்கும்.

தங்கராசு சமிக்ஞை கொடுத்து ஒரு இடத்திலேயே இருவரையும் நிற்க சொன்னான்.  அந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த ஸீட்டுகளில் உட்கார்ந்திருந்த இருவர் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிவிடுவார்களாம்.

தங்கராசு இவர்கள் ஏறும் பஸ்ஸில் பலமுறை கண்டக்டராக வந்திருப்பதால் இந்த அனுதாபம்.  அது மட்டுமா, சின்னம்மா லொட லொட என்று பேசிக்கொண்டு வருவதை பல நாட்கள் ரசித்திருக்கிறான் கண்டக்டர் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு.

'பஸ் வந்துடுத்து.  உன் கதைய பத்தி கேக்க முடியல.  அந்த கதைய எழுதி முடிச்சுட்டியா?  இன்னிக்கு நரசிம்மன் மாமா வருவா bபேங்குக்கு.'

அபிராமி சொன்ன நரசிம்மன் மாமா விகடன் ஆஃபீஸ்ல வேலை பார்ப்பவர்.  அமுதா எழுதும் சிறு கதைகளை அவரிடம் கொடுப்பாள் அவ்வப்போது முடிந்தால் பிரசுரிக்கச் சொல்லி.

'எனக்கு தெரிஞ்ச பொண்ணு.  தமிழ்ல ரொம்ப ஆர்வம்.  கதையெல்லாம் எழுதுவா.  உங்க எடிட்டர் கிட்ட சொல்லி இத பிரசுரிக்க முடியுமான்னு கேளுங்களேன்.  ரொம்ப சந்தோஷப் படுவா பிரசுரம் ஆச்சுன்னா'

நான்கைந்து முறை நரசிம்மனிடம் இப்படிச் சொல்லி கேட்டிருக்கிறாள்.  ஒரு முறை மட்டும் பிரசுரமானது ஒரே ஒரு சிறுகதை.

சக பயணி என்ற விதத்தில் ஆரம்பித்த இவர்களது நட்பு நாளுக்கு நாள் சகோதரத்தில் பயணிக்கிறது.  

'அபி அக்கா.  நா வேணா உங்க ஆஃபீஸுக்கு வரட்டுமா இன்னிக்கு.  நானும் அவர பார்த்த மாதிரி இருக்கும். எத்தன மணிக்கு உத்தேசமா வருவார் அவர்?'

'பதினோரு மணிக்கு வருவார் எப்போதும்.  ஆனா உனக்கு ஆஃபீஸ விட்டுட்டு வரமுடியுமா?  எதுக்கு சிரமம் உனக்கு.  அந்த கதைய என் கிட்டயே கொடேன்.  எப்போதும் போல அவர் கிட்ட சேர்த்துடறேன்.'

'இல்ல அக்கா. இன்னிக்கு கட்டபொம்மன் கேம்ப்புக்கு போயிருக்கார்.  ஃப்ரீ தான் ஆஃபிஸுல.  அதான் நானும்

 பார்த்து பேசினா தேவல.  கதை இன்னும் ரெடியாகல.  அவசரம் அவசரமா எழுதினேன்.  ஒரு தடவ பார்க்கணும் எழுதினத.'

ஆஃபீஸ் டிஐஜிக்கு அவள் வைத்த குசும்பு பெயர் கட்டபொம்மன், மீசை அவருக்கு பெரிதாக இருப்பதால்.

'எனக்கு ஒண்ணுமில்லேம்மா 

நீ வரதுல.  அவர் வர்ரது முன்ன பின்ன இருந்தா என்ன பண்றது.  அதான் யோசிக்கறேன்.'

'பரவாயில்ல அபிக்கா.  ஒரு ட்ரை தானே!'

'சரி வா.  பதினொண்ணுக்கு வா.  அவர் முன்னாடி வந்தா புடிச்சு வெச்சுக்கறேன்.'

'ரொம்ப தேங்க்ஸ் அக்கா.'

'அது சரி.  கட்டபொம்மனுக்கு நீ பேர் வெச்சது தெரியுமா?'

'தெரியாது.  தெரிஞ்சா ஜெயில்ல போட்டுடுவார்.  ஆனா நல்ல மனுஷர்.  குருராஜன்னு பேர்.'

சிரித்தாள் அபிராமி.  'அப்ப பயந்தாங்கொள்ளி தானா நீ.' 

இப்போது சிரித்தது அமுதா.

பேசிக் கொண்டே வந்தார்கள்.  அபிராமி இஸபெல் ஹாஸ்பிடல் ஸ்டாப்பிங்கில் இறங்கினாள்.

இன்னும் நாலைந்து ஸ்டாப்பிங்கில் அமுதாவும் இறங்க வேண்டும்.

அபிராமி இறங்கியவுடன் மனதோடு சிரிப்பு.  நரசிம்மனைப் பார்த்து பேச வேண்டும்.  வெகு நாள் கனவு ஆனந்த விகடனில் ஒரு தொடர்கதை எழுத வேண்டும்.  அபிராமி அக்கா புண்ணியத்தில் மாத்திரம் இது நடந்துடுத்துண்ணா?  நினைக்கவே ஆனந்தமா இருந்தது அவளுக்கு.

கல்யாணி ஆஸ்பத்திரி ஸ்டாப்பிங்கிலிருந்து என்றும் இல்லாத வேக நடை.  சீக்கிரம்  ஆஃபீஸ் போகணும்.  கொஞ்சம் வேலை பார்க்கர மாதிரி  பாவ்லா காமிச்சுட்டு ஜஜி கிட்ட பல் இளித்து பர்மிஷன் கேட்கணும்.

நரசிம்மன பார்க்கணுமோன்னோ?

இனம் புரியாத சந்தோஷம்.  ஏதோ அடுத்த வாரமே அவளோட தொடர்கதை விகடனில் வந்துவிடுவதைப் போல.

தொடரும்.....

No comments:

Post a Comment