Friday, February 18, 2022

எண்ணப்பறவை_1

எண்ணப்பறவை_1

மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பஸ் ஸ்டாப்.  12G பஸ்ஸுக்காக காத்திருக்கிறாள் அபிராமி.

முப்பது வயதை சற்றே கடந்தவள்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனவள்.  லேக் வ்யூ ரோடில் வீடு.

லெதர் கைப்பை.  கையிலே ஆனந்த விகடன் பிரதி.  நல்ல லக்ஷணம்.  விகடனை கொஞ்சம் பார்ப்பதும் அங்குமிங்கும் கண்களை உருட்டிப் பார்ப்பதுமாக இருந்தாள்.  இவளை யாராவது சற்று கண் கொட்டாமல் சிறிது பார்த்துக் கொண்டிருந்தால் இவள் யார் வரவுக்காகவோ காத்திருக்கிறாள் என்று புரியும்.

12G பஸ் ஒன்று வந்தும் ஏறவில்லை அதில்.  ஒரு உச் கொட்டலோடு மீண்டும் காத்திருப்பு.

மைலாப்பூர் அமிர்தாஞ்சன் கம்பெனிக்கு பக்கத்தில் உள்ள ஸ்டேட் பாங்கில் வேலை.  அஸிஸ்டண்ட் மேனேஜர் உத்யோகம்.  உத்யோக மிடுக்கு உடையிலும் தெரிந்தது.

பத்து மணிக்கு பாங்க்.  ஆனால் அரைமணி நேரம் முன்னால் சென்றே பழக்கமாகி விட்டது.  சென்டரான இடத்தில் பாங்க் இருப்பதால் கஸ்டமர்ஸ் அதிகம்.  பிரச்சனைகளும் எப்படியாவது வந்து விடும் ஒவ்வொரு நாளும்.

அஸிஸ்டண்ட் மேனேஜர் உத்யோகத்துடன் பஞ்சாயத்து உத்யோகமும் சேர்ந்து பார்க்க வேண்டும்.  கௌண்ட்டர் ஊழியர்களுக்கும் கஸ்டமர்களுக்கும் எப்படியாவது வாக்கு வாதம் வந்துவிடும்.  இவள் ராசி அவ்வப்போது வெள்ளைக் கொடி காட்டி சமாதனப் புறாவை பறக்க விடணும்.

'ஏன் இந்த லூஸை இன்னும் காணும்?  கரெக்டா வந்துடுவாளே.  எப்படியிருந்தாலும் அடுத்த பஸ் புடிச்சுட வேண்டியதுதான்.'

அபிராமிக்கு வேணா அவள் லூஸா இருக்கலாம்.  ஆனால் நமக்கு?

பெயர் அமுதா.  சாந்தோம் ஐஜி ஆஃபீஸில் வேலை.  டிஐஜிக்கு கேம்ப் க்ளார்க் உத்யோகம்.  பூர்வீகம் தஞ்சாவூர்.  ஆரம்ப கால படிப்பு அங்குதான்.  இருபத்து நான்கு வயது.

டைப்ரைடிங் ஷார்ட் ஹேண்ட் படிக்கும்போது வீட்டிலிருந்து இன்ஸ்டிட்யூட்டுக்கும் பிறகு இன்ஸ்ட்டியூட்டுலேந்து வீட்டுக்கும் பாதுகாப்போடு அழைச்சிண்டு கொண்டுவிட நாலு வயசுப் பசங்க இருக்கும் அளவுக்கு அழகு.

நல்ல துரு துரு.  கல கல.  பக்கு பக்குன்னு சிரிப்பு சூழல் கூட தெரியாமல்.  அவ்வப்போது யாராவது வால்யூமை குறைக்க சொல்லவில்லை என்றால் கேபி சுந்தராம்பாள் ரேஞ்சுக்கு உச்ச ஸ்தாயி.

கல்யாணம் ஆகவில்லை.  ஒரு விதத்தில் அவள் அக்கா குமுதா ஒரு தடை.  எப்படியென்றால் அவளுக்கும் கல்யாணம் ஆகவில்லை.

அபிராமியின் எரிச்சல் கூடுவதற்குள் லூசு, அதாங்க நம்ம கதாநாயகி அமுதா வந்து விட்டாள்.

'பைத்தியம்.  எத்தனை நேரமா வெயிட் பண்றது.  இங்க இருக்கிற ஜெய்சங்கர் ஸ்ட்ரீட்லேந்து வர இத்தனை நாழியா?  ரெண்டு பஸ் போயிடுத்து தெரியுமா உன்னால!'

'சாரி, அபி அக்கா.  எழுந்தது லேட்டு.  நேத்தி ராத்திரி ஒரு கதை சட்டுனு தோணித்து.  எழுத உட்கார்ந்தேனா, எழுதிண்டே இருந்தேனா, ஒரு மணிக்கு மேல போயிடுத்து.  அதான் அசதி.  கார்த்தால டயத்துக்கு எழுந்துக்க முடியல.'

ஆஃபீஸ் உத்யோகத்தை தவிர கதை எழுதுவதிலும் ஆர்வம்.  எழுதுவாள்.  பத்திரிக்கைகளுக்கு அனுப்புவாள்.  அத்திப் பூத்த மாதிரி ஒண்ணு ரெண்ட ஏத்துப்பாங்க.  பத்திரிக்கையில் வெளிவரும்போது கிடைக்கும் ஆனந்தம் அலாதியாக இருக்கும்.  பத்து பேர்களிடமாவது அதைக் காண்பித்து தம்பட்டமடிப்பாள் அன்று.

'அபி அக்கா.  இன்னும் கோபமா?  இனிமே கரெக்டா வந்துடறேன்.  ப்ளீஸ் ப்ளீஸ்... என் செல்ல அக்கா இல்ல.'

கன்னத்தை கிள்ளப்போன அமுதாவின் கைகளை தட்டிவிடுகிறாள்.

'ஏய், என்ன இது ரோடுல.  எல்லாரும் உன்னையே பார்க்கரா பாரு.'

12G வந்தாச்சு.  ஏறி விட்டார்கள்.

'இஸபெல் ஆஸ்பிடல் ஒண்ணு, கல்யாணி ஆஸ்பிடல் ஒண்ணு.'

முதல் ஆஸ்பிடல் ஸ்டாப்பில் அபிராமி இறங்க வேண்டும்.  இரண்டாவது ஆஸ்பிடல் நம்ம ஹீரோயின் அமுதா இறங்க வேண்டிய இடம்.

'ப்ப்ப்ப்ரீஈஈஈஈஈஈஈஈஈஈ'

கண்டக்டர் தங்கராசு அடித்த விஸில் பஸ்ஸை கிளப்பியது.

தொடரும்....

No comments:

Post a Comment