🎼🎻🌹கோதாவரி நதி தீரம்🌹🎻🎼
ராஜமுந்திரி-பத்ராசலம்-வாரங்கல் தெலுங்கு மண்ணில் ஒரு பயணம்
(சுஜாதா&வெங்கடேசன்)
2)இரயில் பயணம்
தாம்பரத்துல சாயந்தரம் 4.30 மணி ட்ரெய்ன். ஓலால போய் எறங்கி உள்ள போனா கச்ச கௌடா ட்ரெய்ன் எட்டாவது ப்ளாட்ஃபார்ம்னு அனௌன்ஸ்மென்ட்..வரது...
இவர்ட்ட "காகிநாடாவோ பாவாட நாடாவோ எதோ ட்ரெய்ன் பேரு சொன்னீங்களே ட்ரெய்ன்ல தோ எழுதியிருக்கேன்னு" காட்டறேன். ட்ரெய்ன்ல ஏறின ஒடனே ட்ரெய்னை எடுத்துடறான். 4.30 தானே டயம்னு இவர் குழம்பி பக்கத்துல கேட்க இது ஹைட்ராபாத் ட்ரைய்ன்னு சொல்ல நல்ல வேளையா ட்ரெய்ன் நிக்க எறங்கறோம். எங்கள மாதிரி வேற பார்ட்டி தப்பா ஏறி செய்ன் புல்லிங் பண்ணி எறங்கி ஃபைன் கட்டறா..
கொஞ்ச நேரத்துல ஒரிஜனல் காக்கி (கலர்)நாடா வந்து ஏறி ஒக்காறறோம்..
தொண்டையார் பேட்டை ,கொருக்குப்பேட்டைலாம் வேடிக்கை பாத்துண்டு வந்து தோசை விண்டு வாய்ல போட்டுண்டு தூங் கிடறோம்.
காத்தால ப்ரிட்ஜ் மேல ட்ரெய்ன் போற தடதடா கேட்டு எட்டி பார்த்தா நர்மதா…
இவர்ட்ட சொல்றேன். ..
இவர் பேசறார்...
வட இந்தியாவுக்குப் பயணம் செல்லும்போது வழியில் இருபெரும் பாலங்கள் வரும். ஒன்று கோதாவரி இன்னொன்று கிருஷ்ணா. இவ்வளவுபெரிய நதிகளா என்று மனம்பிரமித்து உறைந்து நிற்க தண்டவாளத்தின் கர்ஜனையாக அந்தக்கணங்கள் நினைவில் நீடிக்கும். தமிழகத்தில் நமக்கு பெரிய நதிகள் இல்லை. இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை. கொள்ளிடம்தான் நாம் காணும் அதிகபட்ச அகலம்கொண்ட நதி. அது ஒரு பாலைவனக்கீற்று.கேரளத்தில் பெரியாறு ஒன்றுதான் பெரிது. வேம்பநாட்டுக்காயலின் மேல் ரயில்பாலம்செல்லும்போது நீர்வெளியை காணமுடியும். ஆனாலும் அவையெதுவும் இந்த இருபெரும் நதிகள் அளிக்கும் பிரமிப்பை அளிப்பதில்லை.
ராஜமகேந்திரவரம் என்ற இன்றைய ராஜமுந்திரியைக் கட்டியவன் ராஜராஜ நரேந்திரன். அவன் வெங்கியின் கீழைச் சாளுக்கிய
மன்னன். தஞ்சாவூர் சோழர் பரம்பரையில் வந்தவன். தெலுங்கின் ஆதி கவியான நன்னயர் அவனது குரு. அவனது காலத்தில்தான் அவர் தெலுங்கு மகாபாரதத்தை எழுதினார்.
ராஜமுந்திரியில் கோதாவரிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு மைல் நீளமுள்ள பாலம் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாலம். அதற்கு மேலே மோட்டார் வாகனங்கள் போகும் பாலம். ரயில் வண்டியிலிருந்து ஜன்னலின் வெளியே பார்த்தால், மேற்கே வெகு தூரத்தில் குன்றுகளின் கூட்டம். ஆற்றின் நடுவே இரு பக்கங்களிலும் பல தீவுகள். அவற்றில் பல குடிசைகள். கோதாவரி ஆற்றைக் கடப்பது ஓர் இனிய அனுபவம். நதிக்கரையில் கெüதமி காட், கோடிலிங்க காட், புஷ்கர் காட், ஆர்யசமாஜ் சிரத்தானந்தா காட், இஸ்கான் ராதாகிருஷ்ண மந்திர், மார்க்கண்டேய சிவாலயம் முதலியன உள்ளன
நாங்கள் பயணித்த இருப்பூர்தி ராஜமுந்திரியை நெருங்க நெருங்க பச்சை வயல்களால் ஆகிய நிலக்காட்சிகள் கண்களைக் கொய்தன. கோடை தணிந்து மழை பொழியத்தொடங்கும் பருவத்தில்
சென்றிருந்ததால் வயல்களில் பனிப்புகை கூடியிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சையாக இருக்கும் இந்த பூமியில்தான் நாம் உண்ணும் அரிசிமணிகள் விளைந்து வருகின்றன. ஒரு காலத்தில் தஞ்சை பூமியும் இப்படித்தான் பச்சைவயல்களாகப் பாங்கெய்தியிருந்தது என்பதை நினைத்துக்கொண்டேன்.
ராஜமுந்திரியில் கோதாவரியின் வியாபகம் பிரம்மாண்டமானது. ராஜமகேந்திரகிரியின் மருவல்தான் ராஜமுந்திரி. ராஜமுந்திரிக்கும் மறுகரையான கொவ்வூருக்கும் இடையில் கோதாவரியின் அகலம் 5 கிமீ என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மறுகரை தெரியாத நதிதீரம். ஆந்திரத்தின் பண்பாட்டுத் தலைநகர் என்று ராஜமுந்திரியைச் சொல்கிறார்கள். தெலுங்கு மொழியின் எழுத்துரு இங்குதான் வடிக்கப்பட்டது. ஜீவநதியின் கழிமுகத்தில் உள்ள ஊர்களுக்கேயுரிய செழிப்புக்களை படிந்த ஊர். காவிரி மட்டும் காயாது பாய்ந்திருந்தால் நம் தஞ்சாவூர் ராஜமுந்திரியைப்போல் செழிப்படைந்து வளர்ந்திருக்கும்.
நீர்வளக்கரையில் இருக்கும் ராஜமுந்திரியை விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வந்தடைந்தோம்…..
‘சரி போதும் ஊரை நதிய வர்ணிச்சது ஸ்டேஷன் வரப்போறதுன்னு” என் கவனம் கலைத்து லக்கேஜ் எடுத்து வைக்கிறாள்..
No comments:
Post a Comment