பத்மா கோபால்
திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −23
"அம்மணி.. வேறெதுவுமே வேண்டாம்!..
ஓடியாடி நீ எந்த விதமான கைங்கர்யமும் பண்ணலயேனு வருத்தப்பட்டுக்காதே!..
இருந்த எடத்துலேயே ஆசார்யனையும், பகவானையும் ஸதா த்யானம் பண்ணிண்டு இருந்து, அவா ஸ்மரணையோடயே பொழுதக் கழிச்சுடேன்..
அதுவே உனக்கு மோக்ஷ சாதனம்தானே!..
அது ஒன்னும் கஷ்டம் இல்லையே?.."
.....எப்படியேனும் இந்தப் பெண்மணிக்கு ஒரு ஆறுதல் தேடி விட வேண்டும் என்கிற முனைப்பில், பெரிய ஜீயர் திருவல்லிக்கேணி பெண்மணியை மீண்டும் பரிவோடு வினவினார்..
அதைக் கேட்டு, திருவல்லிக்கேணி அம்மையார் தன்னை எண்ணி இகழ்ச்சியாக உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்..
"ஸ்வாமி... அடியேன் லக்ஷணம் தெரிஞ்சுருந்தும், தாம் இப்படி ஒரு வார்த்தை சொல்றீரே...
மத்த விஷயங்கள்ல இருக்கற ஆர்வம், அடியேனுக்கு பகவத், ஆசார்ய விஷயங்கள்ல இல்லையே ஸ்வாமி!..
அடியேன் என்ன,
என் மனம் செல்லாதென்றெனோ திருவடியைப் போலே?..
.....என்று கேட்டு விட்டு, வழக்கம்போல் அதற்கான வ்யாக்யானத்தையும் அவளே தொடர்ந்தாள்..
தன்னோட அவதாரத்த முடிச்சுண்டு இராமன் மறுபடியும் தன்னுடைய சோதிக்கு (பரமபதத்துக்கு) எழுந்தருளச்சே, அயோத்தியில இருந்த புல், எறும்பு ஒன்னையும் விடாம, தன்கூடவே கூட்டிண்டு போகறதா ஸங்கல்பிச்சானாம்..
ஆனா, இராமனுக்குப் பேருதவி பண்ண அனுமன் மட்டும், அதுல ஆர்வமே காட்டாம ஒதுங்கியே இருந்தானாம்!..
அப்போ இராமபிரான்,
"ஹே ஆஞ்சநேயா!.. நீயும் என்னோட பரமபதத்துக்கு வந்துடறயா?.."னு கேட்டானாம்!
அதுக்கு அனுமன், ரொம்பவும் அழகா பதில் சொன்னானாம்..
"ஹே ப்ரபு!.. நீ சொல்ற மாதிரி அங்க நான் வந்தா, எனக்கு "ராமானுபவம்" கெடைக்காதே!..
நீ பரவாசுதேவனாவும், சீதாமாதா உன் பொன்னடி வருடும் மஹாலக்ஷ்மி தாயாராவும் இருக்கும் அந்த இருப்பை நான் காண விரும்பல!...
ஒன்னோட கதையப் பேசற இந்த பூமி...
ஒன்னோட திருவடி பட்ட இந்த மண்...
நீ அணைச்ச இந்த தேஹம்...
..... இது எதயுமே த்யாகம் பண்ண நான் விரும்பல!..
ஒன்னோட நாம உச்சாடணமோ,
உன் கதா ஸ்ரவணமோ
இல்லாத இடம் எதுவுமே எனக்கு வேண்டாம்!..
நான் இப்படியே... இந்த பூலோகத்துலயே... இருந்துண்டு, ராம நாம வைபவத்த அனுபவிக்கறேன்...
என்ன விட்டுடு இராமா!.."
....இப்படி தன்னை வரச் சொல்லி வலியக் கூப்பிட இராமனுக்கு, கண்ணீர் மல்க, கரம் கூப்பி விடை கொடுத்து அனுப்பினான் அனுமன்!
அந்த அளவுக்கு, அவன் தன் மனச இராமனுக்குக் கொடுத்துருந்தான்!..
அப்படி அவனுக்கு இராமன் மேல இருந்த அந்த ப்ரீதியிலேயும் பக்தியிலேயும் அடியேனுக்கு ஆயிரத்துல ஒரு பங்கும் இல்லயே ஸ்வாமி!..
....இந்த மாதிரி ஒரு ஹ்ருதயம் இருந்திருந்தா, அடியேனுக்கு மத்த விஷயங்கள்ல லயிப்பு இருக்குமா ஸ்வாமி?..
லௌகீக சமாசாரங்கள் அத்தனைக்கும் பொழுத ஒதுக்கிட்டு எப்பவோதானே ஆசார்ய த்யானமும், பகவத் த்யானமும் எனக்கு உண்டாகறது!..
இந்த மனுஷ ஜன்மாவ வ்யர்த்தம் பண்ணறதுல அடியேன மாதிரி ஒருத்தர் இந்த ப்ரபஞ்சத்துலயே இருக்க மாட்டா ஸ்வாமி.."
.....பேசிக்கொண்டே வந்தவள், தனது சேலைத் தலைப்பில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
(வளரும்..)
No comments:
Post a Comment