Sunday, February 20, 2022

இது பிரேமம்

 இது  பிரேமம்

-----------------------------

 இந்த ரேவதி பொண்ணு நமக்கு மூணு வேளையும் படி அளக்கறா !
 அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி வரணும் ! அப்புறம் நமக்கு 
 பகவான் விட்ட வழி !

 இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே ரேவதி வந்தாள்.
 தாத்தாவும் பாட்டியும் ரொம்ப அழகா பேசிக்கறேள்! நான் 
 தட்டுலே வெச்ச உப்புமா ஆறப்போறது !

 ரேவதி! கொஞ்சம் இந்தப் பக்கம் வா! அந்த வயதிலும் பாட்டியின் 
 தீர்க்கமான கண்கள் வாஞ்சையுடன் ரேவதியின் கைகளை 
 அன்பாக பிடித்துக் கொண்டு  " பக்கத்தாத்து தாத்தா பாட்டின்னு
 பாக்காமே இவ்வளவு ஆசையா எங்களை பாத்துக்கறே !

 நாளைக்கு நோக்கு கல்யாணம் வரும் ! எங்க ரெண்டு பேரையும்
 உனக்கு தெரிஞ்ச விடுதிலே சேர்த்து வீட்டேன்னா புண்ணியமா 
 இருக்கும் ! 

  பாட்டி! இன்னைக்கி நடக்கறதை பாக்கலாம் ! முதல்லே இந்த 
 உப்புமாவை சாப்பிடுங்கோ ! நாளைக்கி நடக்கறதை அப்புறம் 
 பாக்கலாம் ! என்று உப்புமாவை ஆசையா பாட்டிக்கு ஒரு வாய் 
 ஊட்டிவிட்டு அவள் கையில் தட்டை கொடுத்துவிட்டு போனாள்.
   பாட்டி சாப்பிடும்போது அந்த உப்புமாவுடன் பாட்டியின் அன்பில் 
 விளைந்து வழிந்த கண்ணீரும் உப்புமாவுடன் சென்றது !

 அந்த நாள் வந்தது ! படித்த பண்புள்ள ரேவதியை யார் வேண்டாம் 
 என்று சொல்லுவார்கள்! 

  பெண்பார்த்த அன்று அந்தப் பையனிடம் ரேவதி தனியாகப்  பேசினாள். சிறிது அமைதிக்கு பின் இருவரும் சிரித்துக் கொண்டே  வந்தார்கள்.

 கல்யாணம் முடிந்து ,நேராக அந்த பக்கத்துவீட்டு தாத்தா பாட்டியிடம் 
 இருவரும் ஆசிர்வாதம் வாங்க வந்தார்கள் . பாட்டிக்கு ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் பிரிய போகிற துக்கம் ! நமஸ்காரம் பண்ணின ரேவதியையும் மாப்பிள்ளையையும்  ஆசிர்வாதம் பண்ணிட்டு  , " ரேவதி ! அந்த "பொட்டாத்தில்" ( பெட்டி) இருந்து தாத்தா எனக்கு போட்ட வளையல் இருக்கு ! அதை எங்க  ஞாபகமா வச்சுக்கோ! என்று கண்ணீர் பெருக்கத்தோடு சொன்னாள்.

  எடுத்துக்கறேன் பாட்டி! நாளைக்கு வந்து எடுத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு போனாள்  .

                 அடுத்த நாள் ! பாட்டி ! தாத்தா ! வாங்கோ ! விடுதி கேட்டேளே! அதை பாக்காப் போறோம் என்று பாட்டியையும் தாத்தாவையும்  கூட்டிக் கொண்டு போனாள் 

 மாப்பிள்ளைதான் கார் ஓட்டினார் . ரேவதி அவருடன் உட்காராமல்  பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து வந்தாள் . பாட்டியின் தொய்வுற்ற  கைகள் ரேவதியை வாஞ்சையுடன் இறுக்கினாலும் , அந்தப்  பிரியும் நடுக்கம் இருந்தது.

 ரேவதி மெதுவாக பாட்டியிடம் " பாட்டி ! உங்க விடுதியை பார்ப்பதற்கு  முன் எங்க வீட்டை உங்களுக்கு காண்பிக்கிறோம். என்று ஒரு பெரிய  காம்ப்ளெக்ஸ் போர்டிகோவில் கார் நின்றது. பணி ஆட்கள்  வீல்சேரில் தாத்தா பாட்டியை அழைத்து லிப்டில் ரேவதி  மாப்பிள்ளையுடன் ஒரு பெரிய "வில்லா " வாசலுக்கு வந்தார்கள்.

 அது சகல வசதி கொண்ட நான்கு பெட் ரூம்  லிப்ட் வசதி கொண்ட  வில்லா .  வாசல் கதவை திறந்து " பாட்டி !தாத்தா ! நீங்கள் முதல்  காலடியை வைத்து எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கள் என்று  உள்ளே கூட்டிக் கொண்டு போனார்கள்  ரெண்டு பெரும் கையை  கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு பெரிய வரவேற்பு அறை தாண்டி  கிச்சன் தாண்டி விஸ்தாரமான ஒரு ரூம் முன்னால் நின்று  மாப்பிள்ளை பாட்டி தாத்தாவிடம்"

   " உள்ளே போங்கள்! இதுதான் இனிமேல் உங்கள் விடுதி ! நாங்களும்  இங்குதான் இருப்போம்.  இது இனிமே நம்ம வீடு ! நான்தான்  ரேவதியிடம் அன்னைக்கி முதல்நாள் பிராமிஸ் பண்ணினேன்.

 இன்னையிலிருந்து அது ஆரம்பம். பாட்டி தாத்தாவுக்கு நம்பவே முடியவில்லை !  மௌனத்தை கலைத்து ரேவதி பாட்டியிடம் " பாட்டி ! உங்க "பொட்டாத்தில் " இருந்து வளையல் இப்போ தாருங்கள் . நமஸ்காரம்  பண்ணி வாங்கிக்கிறேன் " என்றாள்

 இந்தக் காலத்தில்  வசதிகள் மிகவும் அதிகம். அது நிறைய பேரிடம்  மிக அதிகமாக உள்ளது.  ஆனால்  மனது மிகவும் குறுக்கிப் போய்விட்டது. ரேவதி ,அவள்  மாப்பிள்ளை போல கருணை மனிதநேயம் இருந்தால் எப்படி இருக்கும்!                 இதுதான் " பிரேமம் " தெளிவான அன்பு .

              சங்கரன் அஸ்வதி

No comments:

Post a Comment