Friday, February 18, 2022

பொம்மை மிட்டாய்

 29. பொம்மை மிட்டாய் (சிசீ 9) #ganeshamarkalam

பாலாத்தங்கரையில எங்கூர். திருப்பனங்காடு. எங்கூரு சிவன் கோவில் திருவிளா நல்லா இருக்கிம். ஆனா இந்த கொரானான்னி சொல்லுதாகளே அது எல்லாத்தையும் கெடுத்துப் போட்டிடிச்சி. 2 வருசமா ஒண்ணிம் நடக்கோல. என் வியாவாரமும் நலிஞ்சு போச்சி. என்ன வியாவாரம்பீங்க. சொல்லுதேன்.

மொம்ம மிட்டா செஞ்சு சைக்கிள்ள கொண்டாந்து வித்து புளைப்ப நடத்திட்டிருந்தன். எங்கப்பாரும் அத்தைத்தான் செஞ்சாரு. நானிம். எனக்கு அப்பால என்புள்ளைன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா? நல்லா ஏமாந்து போய்ட்டீங்களா? சொல்ல மாட்டே. ஏன்னா எனக்கு புள்ளக் குட்டீங்களே இல்ல. எங்கூரு தாளப்புரீசுவரரு எங்களுக்கு அந்த பாக்கியத்தைக் கொடுக்கல்ல. அதுவிம் நல்லதுக்குத்தேனு நினைச்சுக்கிடுதே. எங்க புளப்ப நடத்தவே இம்புட்டு கச்டமா இருக்கப்ப இன்னும் ரெவ்வெண்டு வாயும் வவூரும் யாரால் முடியிம்? சாமி எல்லாருக்கும் சரியாத்தே வச்சிரிப்பாரின்னி என் ஆத்தா சொல்லிம். இப்பத்தான் அது சொன்னதெல்லாம் விளங்குது. ஆத்தா அய்யா எங்கேன்னு கேக்குதீகளா? அவுக போய்ச் சேர்ந்தாச்சு. பல வருசமாகிப் போச்சுது. இப்ப நானிம் எம்பொஞ்சாதியுந்தே. 

கனகாம்பரம் மேலுக்கு முடியாம கிடக்குதா. உடம்பு நல்லா இருந்திச்சின்னா பம்பரமா சுத்திட்டிருப்பா. எல்லா வேலையிம் இளுத்துப் போட்டிச் செய்யும் களுத. எம்மேல அதுக்கு அம்புட்டு ஆச. “சைக்கில் வுட கத்துக்கொடு நானே மிட்டாய் வித்திட்டு வாரேன். உன்னைவிட நிறைய வியாவாரன் செஞ்சு காட்டுதே. நீ வீட்டுல உக்காந்திட்டு ராசாக் கணக்கா சாப்பிட்டலா” சொல்லும். அதீப்படி பொஞ்சாதிய வெளிவேலைக்கு அனுப்பன்னிதான் வுடலை. வுட்டா செஞ்சிபிடும். அதே சமயத்துல எங்க அப்பா சின்ன வயசில அவர் உசரத்துக்கு வாங்கி ஓட்டிட்டிருந்த சைக்கிளி. இத்தால சமாளிக்க முடியாது. இது குட்ட. நாந்தே ஓட்டோணிம். அதுதே சரியா வரிம். எனக்கு இந்தப் பிள்ளய உக்காத்தி வச்சி சோறு போடணிம்னு ரெம்ப ஆச. குளந்தை பெத்துத்தரல. அதுக்கு அதை மட்டுந்தே குத்தம் எப்படிச் சொல்ல? நேரம் வரலைன்னி விட்டாச்சி

இப்ப வியாவாரம் படுத்துப் போனதில கைய்ல அம்புட்டு காசில்ல. சின்ன வயசுல கத்துகிட்டது தென்னைமரம் ஏறுவன். அதுதான் ஒருவேளை கம்பங்கஞ்சிக்கு வளி செய்திட்டு. 3 மாசாம இது படுத்துக் கிடக்கு. கையில சேர்த்து வச்சதெல்லாம் கரைஞ்சு போச்சுது. இப்பத்தே கொஞ்ச கொஞ்சமா எல்லாம் தொறந்திட்டாகளே! நானிம் தொளில் செய்ய ஆரபிச்சாச்சி.

என் தொளிலில் தினமும் புத்சா மிட்டாய் செஞ்சு எடுத்திட்டுப் போவணிம். இல்லைன்னா செஞ்சது கெட்டிப் பட்டுத்தே போவும். கமர்கட்டா பேர் வச்சு வித்திடலாம். வீணாகாம கடைங்கள்ல கொடுத்திடுவன். காசு அப்பிரவு கிடைக்கிம். கேட்டா விக்கலைம்பானுவ. போரப்ப வரப்ப கேட்டிட்டே இரிந்தா கிடெச்சிடிம். ஆனா புது சரக்கு வாங்க மாட்டேனு சொல்லிடிவாக.

சக்கரப் பாகுதே! மைதாவும் உளுந்து மாவிம் கலந்து பிசெஞ்சு கம்புல சுத்திக்கிடுவன். பதமா செஞ்சிட்டா நாப்பூரா கிடக்கிம். வாங்கரவங்க கேட்டப்ப எடுத்தி பிச்சித் தரணிம். விதவிதமா கலர் சேர்த்து கலக்கிடிவன். 4தினுசா கலர் மிட்டாய் செஞ்சி ஒண்ணுமேல ஒண்ணா கம்புல வச்சிக்கிடணிம். பிள்ளைங்க சிவப்பூன்னிம், பச்சைன்னிம், இல்லை மஞ்சள் கொடு தாத்தான்னி பிச்சிட்டிருக்கப்ப மாத்திச் சொல்லிம். குளந்தைங்க அப்படித்தே.

கனகாம்பரத்திக்கு ரெவ்வெண்டு பன்னும் டீயும் போட்டு எடுத்தி வச்சிட்டு நான் மிட்டாய் வண்டிய தள்ளீட்டு கிளம்பிட்டேன். அக்கம் பக்கத்துல ஒரு டஜன் இடங்க சுத்தீட்டு சாயங்காலம் வந்துகிடுவேன். திருப்பூம்னூர், குன்னத்தூர், ஆலந்தாங்கல், ஹாஸனம்பேட்ட, மெர்பதவூர், தென்னம்பட்டு, சட்டுவந்தாங்கல்னு ஒரு சுத்து. அப்பிரவு வளவனூர், புலிவனம் தாண்டி பாலாத்துக்கு அந்தப் பக்கம் போயி ஒச்சேரி,  பன்னியம்மன் பட்டரை, தாமல், முசர வாக்கம், முத்தவேடு, வடைஇலுப்பை, கூத்தனூர் இன்னொரு வட்டம். மிட்டாய் வண்டீன்னு ஏன் சொல்லுதேன்னு பாத்தீங்கன்னா புரிஞ்சிடிம்.

எங்கப்பாரு ஓட்டின பளைய சைக்கிளி. பின்னாடி காரியரோட சேர்த்து மிட்டாய் சுத்திகிட கம்பு. காலங்காலமா மூங்கில்தே. அதுல மிட்டாய் கெடாம கிடக்கிம். கம்புக்கி மேல கிரிச்னர் பொம்மை. கூத்தாடி கணக்கா சட்டை மாட்டிட்டு மொட்டக் கண்ணனா. ஹேண்டில்பார் கிட்ட லிவர் இருக்கி. இளுத்தா ஜங்க் சலங்கின்னு கைகொட்டி சத்தம் கொடுப்பாரு. இந்தச் சத்தம் கேட்டிட்டு பொம்மை முட்டாய்க்காரன் வந்திட்டான்னு தெரிஞ்சிக்குவாங்க. ஒவ்வொரு சமயம் லிவர் வேலை செய்யாதி. அதுக்கித்தே ஹாரன் வச்சிருந்தேன். அடிரப்பர் பளசாப்போயிடிச்சா பிஞ்சு போச்சு. புதுசா வாங்கர அளவிக்கு வசதியில்ல. கீளே கிடந்த தண்ணிபாட்டில எடுத்தி சுத்தம் செஞ்சி மாட்டிக்கிட்டன். அத்தை அமுக்கினா ஹாரன் கணக்காவே சத்தம் வரப்ப எதுக்கி புத்சா வாங்கோணிம்? அத்தான்.

தினம் வாடிக்கையா வாங்கிக்கிரவகளை இப்பெல்லாம் காணல. ஸ்கூல் வாசல்ல நின்னிகிடுவன். மணி அடிச்சதிம் ஓடி வரூங்க. ஆசையா கேக்கரத கொடுத்திடுவன். பல பிள்ளைங்க கூட்டத்தோட கூட்டமா வாங்கி வாயில போட்டுட்டி ஓடிருவாய்ங்க. “எல்லாறிம் காசு தந்திரணம்!” பொத்தாம் பொதுவா விண்ணப்பம் வச்சிடுவேன். கொடுக்கரவங்க கொடுக்கட்டிம்னுதே. “காசில்ல, மொதல்ல காசு கொடி அப்பிரவு மிட்டாய்”னெல்லாம் கராரா பேசக் கூடாதின்னு எங்கப்பா சொல்லுவாரு. எனக்கு நல்ல மனசுன்னு இருந்திச்சின்னா அது அவர் கிட்டந்தி வந்ததுதே.

இன்னைக்கி பளையதெரு பக்கமா வந்திட்டிருக்கப்ப 3 சின்னப் பசங்க சூழ்ந்திட்டி மிட்டாய் வேணும்க, சைக்கிள நிப்பாட்டிட்டு இவிங்களிக்கி என்ன தரலாமின்னு யோசிக்கன். பசங்க இந்துர் இல்ல. சோக்கா சட்டை போட்டிருக்காங்க அதுலேந்தே தெரியிதே. வெளியூருதே. தாத்தா பாட்டி வீட்டுக்கு லீவுல வந்திருப்பாக. திண்ணையில விளயாடிட்டிருந்த இவிங்களை கூத்தாடிக் கண்ணன் கைதட்டினது கூப்பிட்டிருக்கிம். 

“என்னெ மிட்டாய் வேணிம்?” ஒருத்தன் குதிரைங்கரான். இன்னொருத்தன் யானையாம். கூட வந்திருந்த பொம்பளப்பிள்ள பட்டுப் பாவாடையில். ஐயர்மாருங்களா? அது ஒண்ணுமே சொல்லாம நிக்குது. மிட்டாய பிச்சவன் ஒண்ண குதிரை கணக்கா செஞ்சு இன்னொண்ண யானை கணக்கா செஞ்சு பெரீய காது, தந்தமெல்லாம் வச்சி நீட்ட வாங்கிட்டு சிட்டாய் பறந்திடிச்சுங்க. வீட்டுல போய் காசி கொண்டாருவாங்களோ? தெரியலை. “உனக்கு என்ன பாப்பா?” “க்ரோகோடைல்”. எனக்கி சுத்தமா ஒண்ணிம் புரியலை. “அப்படின்னா?” அதுக்கும் சொல்லத் தெரியல. நான் பொம்பளப் பிள்ளயாச்சேன்னி புறா கணக்கா ஒண்ணு செஞ்சு நீட்ட “நோ” தலைய வேகமா ஆடிட்டு அளுதிட்டே ஓடிப் போச்சு. நான் காசு கொடுப்பாகன்னு நிக்க வீட்டுக்குள்ளரிந்து யாரின்னு தெரியல அளுதிட்டு ஓடிப்போன பாப்பாவோட பாட்டியா இருக்கணம், வேகமா வந்து “பிள்ளய என்ன செஞ்ச?” அதட்டிச்சி.

நான் என்ன செஞ்சுப்புட்டேன்னு சொல்லீடிச்சோ? நடந்தத சொன்னதிம் “அது முதலை மிட்டாய் கேட்டிருக்கு. செஞ்சு கொடு!” அதட்ட என் வாள்கையில மொதத் தடவயா மிட்டாய பிச்சு பெரீய முதலையச் செஞ்சு கொடுக்க சந்தோசமா வாங்கிட்டி பாட்டீம்மா காசும் கொடுத்திட்டு போச்சி.

மத்தியானம் வரைக்கிம் சுத்தினப்பிரவு மொத்தமா 30ரூபாய்க்கு வியாவாரம். சட்டைப் பையுல வச்ச சில்லரைக் காசு இருக்கான்னி அப்பப்ப தொட்டுப் பாத்திட்டே சைக்கிள தள்ளீட்டுப் போகுதேன்.

வடைஇலுப்பை வந்திட்டன். பாலாத்துப்பாலம் தரேல  மணல்மேலவே போட்டிருக்காக. உடெஞ்சுபோயிம் சேதமாகி பல இடங்கள்ல. அதுலேயிம் வண்டீங்க போயிட்டும் வந்திட்டும். போனமாசம் பெஞ்ச மளைல பாலாத்துல பெரும் வெள்ளம். இப்ப ஒண்ணுமே இல்ல. இந்த ஆத்துலவா தண்ணீ ஓடிச்சுன்னு ஆச்சர்யப்பட்டுப் போவீக. ஆனா பாதி பாலத்துல சினிமா எடுக்காகப் போல, நிறையபேர் நின்னிட்டு, கலர்கலரா குடை பிடிச்சிட்டு கேமராவும் கையிமா. என்னப் பாத்ததிம் ரெண்டு பேர் ஒருத்தி கையுல மைக் வச்சிட்டிருக்காக இன்னொருத்தன் தோள்ல காமரா. அவிங்களுக்குள்ள ஏதோ பேசிட்டி என்னை பாத்திட்டி நேரா வராய்ங்க. நானும் மிட்டாய் வாங்கத்தே வராகன்னு நினைச்சிட்டேன். இல்லையாம். பேட்டி எடுக்காகளாம்.

“இந்தக் காலத்துல இப்படிப் பட்ட பொருள இன்னுமா செஞ்சு வியாவாரம் செய்யறீங்க?” இப்படிக் கேட்டுப்புட்டி ஆரம்பிச்சு என் தொளிலப் பத்தி விலாவாரியா கேட்டு நான் பதில் சொல்லப்ப என் மூஞ்சிக்கிட்ட மைக்கப் பிடிச்சு பாக்குது அந்தப் பிள்ள. நிதானமா பதில் சொல்லக்குள்ள அடுத்த கேள்வி. அந்தாள் தள்ளீ நின்னிட்டு என்னை படம் எடுக்காக. எடுத்தத காமிப்பாகளான்னி தெரியல. கேக்கோணம். இவ பேசிட்டிருக்க அவன் சைக்கிள என் கூத்தாடிக் கண்ணன படம் எடுக்கான். “இது என்ன தண்ணீ பாட்டில் கட்டியிருகீங்க?” அமுக்கிக் காட்டுதேன். ஹாரன் சத்தத்தை கேட்டிட்டு ஷுட்டிங்க் செஞ்சிட்டிருந்த இன்னும் மக்கள் என் பக்கம் பாத்திட்டு திரும்பிக்க, யோஸிக்கன். இவிங்ககிட்ட இம்புட்டு விவரம் ஏன் சொல்லோணம், இவிங்களும் மிட்டாய் விக்கன்னு கிளம்பிட்டா நம்ப பொளப்புல மண் விளுமேன்னி. அந்தப் பிள்ள சட்டின்னு “ஒரு மாசத்துக்கு எவ்வளவு காசு சம்பாதிப்பீங்க?” கேட்டிச்சி. அதெப்படிச் சொல்ல? சொல்லக் கூடாதின்னு இல்ல. தினம் 30 இல்ல 50 கிடைக்கிம்னி தெரியிம். மாசத்துக்கின்னா? கணக்குப் போடணிமே? நேரம் பிடிக்குமே. ஒருநாளைக்கி 40ரூபாயின்னிட்டேன். கணக்க அது போட்டுக்கிடட்டிம். அது என்னவோ கேமராக் காரவுகளை திரும்பிப் பாக்குது. இதுக்கி கணக்கு வராதின்னு தெரிஞ்சிபோச்சி. என்ன படிப்பு படிக்காகளோ?

“உங்களுக்கு எத்தனை குளந்தைங்க?” குளந்தைங்களப் பத்தி விசாரிக்க மின்னாடி பொஞ்சாதியப் பத்தி விசாரிக்கணும்களா இல்லையா? இப்படி விவரம் தெரியாதவங்களா பாத்து அனுப்பிச்சிருக்காங்கன்னு பட்டிச்சி. கனகாம்பரம் பத்திச் சொல்லுதேன். அவ்ளோதான். நிறுத்திப்புட்டேன். கடைசீயா அந்தப் பொண்ணு என்னண்ட வந்து எங்கூட சைக்கிள பிடிச்சிட்டே நிக்க அவன் போடோ எடுத்துக்கிடுதான். சரித்தேன்னு பட்டிச்சி. நல்லதின்னு சொல்லி அந்தப் பிள்ள கைய நீட்ட கொஞ்சம் யோசனையா இருந்திட்டி லேசா பிடிச்சுகிடுதேன். குலுக்கிச்சி. வரேன்னிட்டு போகுது. “மிட்டாய் வாங்கலையா?”

“வாங்கிக் குடுடா” இவ காமராக்காரவுகளை கேக்க அவன் “இதெல்லாம் நீ சாப்பிடுவையா?” “வாங்கிக்கலாம்”. “என்ன மிட்டாய் வேணும்?” நான் கேக்க அவன் “சாக்லேட்”. “அதெல்லாம் இல்ல. என்ன பொம்மை செஞ்சு தர?” அதென்னமோ இந்த வயசுலேயும் பொம்மைன்னதிம் யானைதான் எல்லாரும் கேக்குதாக. வாட்ச் கணக்கா செஞ்சி கையில கட்டிவிடலாம். ரெண்டு குட்டியானை சிவப்பும் மஞ்சளுமா செஞ்சு நீட்ட அந்தப் பொண் “எவ்வளவு தரணம்?” 10ரூபா கேட்டிருக்கணம். என்ன தோணிச்சி? இம்புட்டு நேரம் நம்பளையும் மனுசனா மதிச்சி பெசிட்டிருந்த இவிங்ககிட்ட காசு கேட்டா நல்லா இருக்கிமான்னி “வேணாம், சாப்பிட்டுக்கிடுங்க, வாரேன்” மேட்டுல ஏறி வந்திட்டன்.

சாயங்காலமாச்சுதா கனகா தனியா கிடக்கிம். அதுக்கு எதுநாச்சியும் மருந்து வாங்கிட்டு போயிடலாம்னி எங்கூர்கிட்ட வந்ததிம் சுகாதார மையத்துல வந்து சைக்கில நிப்பாட்டிட்டி கவுன்டர்ல போய் விவரம் சொல்லுதே. மருந்தக் கொடுக்காம சீட்ட எளுதி நீட்டராய்ங்க. போன 4 வாட்டியும் இப்படித்தே. ஜனங்க கேக்கர மருந்து மாத்திரைங்களை இனாமா கொடுக்காம பக்கத்து இங்கிளீசு மருந்துக் கடைல வாங்கிக்கிடுங்கன்னு சொல்ராய்ங்க. ஸ்டாக் இல்லன்னு சாக்குப் போக்கு. சிட்டை வாங்கிட்டு வந்திட்டன். மின்னமே விசாரிச்சதுல தெரியும் இந்த 2 மாத்திரை வாங்க 70ரூவா வேணிம். அதுக்கெங்க போவ?

வளீல இன்னைக்கி சம்பாதிச்சதில் பன்னும் டீப்பொடியும், நாளைக்கு செய்யவேண்டிய மிட்டாய்க்கு கொஞ்சமா சக்கரையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாச்சி. கனகாம்பரம் முனகிட்டே படித்திருக்கி. காலேல வச்சிட்டுப் போன டீத்தண்ணிய மட்டிம் குடிச்சிட்டு பாதி பன்ன கடிச்சி வச்சிருக்கி. பசிக்கலையா? வவுத்த வலிக்குதோ?

“ஏதுநாச்சியும் சாப்டீங்களா? நான் பாதி சாப்டீட்டு மிச்சம் பன் இருக்கி. சாப்டுக்கிடுங்க. மருந்து வாங்கிட்டு வந்தீங்களா?” கொஞ்ச நேரம் அவளையே பாத்திட்டிருக்கன். “மருந்து கிடெச்சிடிச்சு. இரு தாரேன்”

அது பாக்காதப்ப சமயமா பாத்தி கூத்தாடிக் கண்ணன் பாவாடைய விலக்கி உள்ளேரிந்திச்சி சின்னதா மிட்டாய பிச்செடுத்து சிவப்பு கலருல சின்னச் சின்ன மாத்திரைங்க கணக்கா உருட்டுதேன். உருட்டினத கையிலேயே வச்சிருந்து கெட்டியானப்பரம் தண்ணீப் பானைலிருந்து ஒரு குவளை தண்ணீய மொண்டி கையுல பிடிச்சிட்டு “இந்தாபிள்ள மொள்ள எளுந்து உக்காந்திட்டு இந்த மாத்திரைய போட்டு தண்ணீ குடிச்சிரு. எல்லாம் சரியாப் போயிடிம்.”

எங்காத்தா சொல்லிம். தாலப்புரீசுவரர நினைச்சிட்டு விபூதிய பூசிகிட்டா நோவு தீந்திடும்னி. அவர நினைச்சிட்டே நானா செஞ்ச மாத்திரைங்கள நீட்டுதேன். இந்த பாளாப்போன பொறப்புல கையுல காசில்லையே!



No comments:

Post a Comment