#காதல்
ராதா (அல்லது) கண்களின் வார்த்தைகள் புரியாதா?
ராதாவை நான் காதலித்தேன் என்பது செய்தி. ராதாவும் என்னைக் காதலித்தாள் என்பது ப்ரேக்கிங் நியூஸ். ந்யூட்டனுக்கு ஒரு ஆப்பிள் விழுந்ததால் ஸயின்ஸ் உயிர்த்தது. ராதா என்னைப் பார்த்து சிரித்ததால் என் வாழ்க்கை உயிர்த்தது.
நாங்க இருந்த தேரடித் தெருவுக்கு அழகியர் தெருன்னே பேரு வக்கலாம். அவ்ளோ அழகப் பாத்தும் என்னை மாதிரி இளவட்டங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராதது இன்னி வரைல எனக்கு ஆச்சரியம் தான்.
எங்க வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தா எதிர் சாரில இருந்த ராதா வீடு (single portion) நல்லாத் தெரியும். கொறஞ்சது ஒரு பத்து வாட்டியாவது அவள தினம் பாத்துடுவேன். துணி உலர்த்ததும் போது ந்யூஸ் பேப்பர் எடுக்கும் போதுன்னு.
என் எழுத்துக்கள படிச்ச எல்லாருமே யூகிச்சு இருப்பீங்க ராதா ரொம்ப அழகுன்னு. மிஸ் அல்லிக்கேணின்னு அந்த நாள்ல போட்டி வச்சிருந்தா unopposed ஆக ஜெயிச்சுருப்பா. மேனி கொஞ்சம் கூட வெளில தெரியாம எப்படி பாவாடை தாவணி போடறதுன்னு அவகிட்டதான் கத்துக்கணும். ஆனாலும் அப்பப்ப சட்டுன்னு வெளில தெரிஞ்சு மறையும் வெளீர் பாதமும், ஒன் உசுர எனக்குத் தாடான்னு சொல்லும் கண்களும் தான் என்னக் கட்டிப் போட்டுது.
அந்தக் கண்ண ஒரு சுழற்று சுழட்டினாலே என்னோட பல ராத்திரி தூக்கம் போயிடும். நான் பெரிசா அழகெல்லாம் இல்ல. ஆனா மச்சக்காரன். இல்லேனா ராதா என்னையப் பாத்து ஏன் சிரிக்கப் போறா?
அன்னிக்குக் காலைல காப்பிய எடுத்துகிட்டு கர்ம ஸ்ரத்தையா பால்கனி வந்தேன். ஒரு வாய் குடிச்சிருப்பேன். அப்பத்தான் அது நடந்துது. ராதா வெளில வந்தா. அழகா ஒரு கவிதை போல வெளேர் கைகள தூக்கி கண் மூடி ஒரு சோம்பல் முறிச்சா. கண்ணத் தொறந்தா நான் காப்பி டம்ளரும் கையுமா விரிஞ்ச கண்ணோட எங்க வீட்டு பால்கனில நிக்கறத பாத்துட்டா. சட்டுன்னு கையக் கீழ எறக்கி உள்ள ஓடிட்டா.
எனக்கு ச்சேன்னு ஆயிடுத்து. அப்புறம் ஒரு ரெண்டு நாள் அவ கண்லயே படல்ல. மூணாம் நாள் ஐஸ் ஹவுஸ் பஸ் ஸ்டாண்டில அவள பாத்தேன். கொஞ்சம் பயந்து தள்ளிப் போயி நின்னேன். மொகம் குப்புன்னு வேர்த்துவிட்டுது. யாரோ பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு பீலிங். திரும்பினா ராதா!
"என்னடா அன்னிக்கு என்ன அப்படி பாத்துக்கிட்டு இருந்த?"
எனக்கு வார்த்த வரல. வாயத்தொறந்தா காத்துதான் வந்துது.
"தொர பதில் சொல்ல மாட்டீங்களோ?"
எங்கிருந்து அந்த தைரியம் வந்துதுன்னு இன்னி வரைல தெரியல.
" பார்த்தசாரதி கோவில் தேர பார்த்தா என்ன பண்ணுவே?"
"என்னடா ஒளர்ற?"
"இல்ல சொல்லு"
"கொஞ்ச நேரம் நின்னு பாப்பேன்"
"ஏன்?"
"ஏன்னா அது அழகு"ன்னு சொன்னவ கன்னம் சட்டுன்னு காஷ்மீர் ரோஜா மாதிரி செவந்து போச்சு.
நான் ஏற வேண்டிய பஸ் வந்துது. ஏறி படில நின்னுக்கிட்டு "ஐ லவ் யூ"ன்னு சொன்னேன்.
அதோட immediate result அடுத்த நாள்லேர்ந்து அவ வெளில வந்தா அவ அம்மாவும் கூடவே வந்தா. அவ அம்மாக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தா (நல்ல வேளை அவங்க வைஷ்ணவர்) நான் பஸ்மம் ஆகிருப்பேன். பஸ் ஸ்டாண்டுக்கு கூட அம்மா வந்தா.
பாவி ராதா! பிடிக்கலேனா சொல்ல வேண்டியதுதானே? அதுக்கப்புறம் எப்படியெல்லாமோ அவள பார்க்க ட்ரை செஞ்சு தோத்தேன். என்னோட எந்த முயற்சியும் பலன் தரல. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு அவள தனியா கன்னிமாரா லைப்ரரில வச்சுப் பாத்தேன். ஆனா கதை அதில்லை.
" என்னப்பா பலத்த யோசனை?" என்று கேட்டுக்கொண்டே என் பெண் சந்த்யா ரெண்டு காப்பி கப் எடுத்துக்கிட்டு வந்தா. நான் என் அடையார் வீட்டு பால்கனில சேர்ல உக்காந்து இருக்கேன்.
"ஒண்ணும் இல்லடா செல்லம். ஏதோ பழைய எண்ணங்கள்" என் கண்கள் தன்னிச்சையாக எதிர் வீட்டில் மாடியில் எக்சர்ஸைஸ் செய்து கொண்டிருந்த இளைஞன் மீது விழுந்தது.
"எண்ணமெல்லாம் இல்லடி! ஒனக்கு பாதுகாப்பா பாடிகார்ட் வேலை பாக்கறார் உன் டாடி" என்று பின்னாலிருந்து ஒரு குரலும் களுக்கென்று ஒரு சிரிப்பும் கேட்டது. நானும் பெண்ணும் ஒருசேர திரும்பினோம்.
"எங்கம்மா என்கூட நின்னப்போ அவ்ளோ கோவப்பட்டீங்க அன்னிக்கு. இப்ப நீங்க மட்டும் என்ன செய்யறீங்களாம்?" என்று கேட்டாள் ராதா.
அன்னிக்கு பஸ் ஸ்டாண்டுல வச்சு ஆன மாதிரியே எனக்கு வார்த்த வரல. வாயத்தொறந்தா காத்துதான் வந்துது.
சந்த்யா குழப்பத்துடன் எங்களைப் பார்த்தாள். கொஞ்சம் புரிஞ்சா மாதிரியும் புரியாத மாதிரியும் ஒரு expression. காப்பி கப்பை அருகில் இருந்த குட்டி டேபிள் மேல வச்சுட்டு என் கிட்ட வந்தா.
" dad! உங்க பயம் புரியறது. எனக்கு அந்தப் பையன நாலு வருஷமா தெரியும். நாங்க ஒரே கோச்சிங் சென்டர் தான். வீ ஆர் குட் பிரெண்ட்ஸ். தட்ஸ் ஆல். இப்ப என் focus எல்லாம் ஸ்டடீஸ் தான். எப்ப என் மனசுல இவன் தான்னு ஒருத்தனப் பாத்து தோணுதோ you'll be the first one to know. என்னையும் நம்பணும் நீங்க. " என்றாள்.
நான் அவளைப் பார்த்தேன். "வாடி என் செல்லம் " என்று அவளை அணைத்து உச்சி முகர்ந்தேன்.
நிமிர்ந்தால் பனித்த கண்களுடன் ராதா.
வீயார்
சித்திரம்: இணையம்
No comments:
Post a Comment