சாஸ்த்ரிகள் (lifted from season 3)
#ganeshamarkalam
பாருங்கோ நானும் கார்த்தாலேயே எழுந்து குளிச்சு பஞ்சகச்சம் கட்டிண்டு 8 ஆச்சுன்னா கோபாலன் சாஸ்த்ரிகள் வந்துடுவர்னு காத்திண்டிருக்கேன், வரலை.
கூடத்தில் மணை போட்டு, தாம்பாளம், பஞ்சபாத்திர உத்தரணி, எல்லாம் ரெடியா வச்சுட்டு கோமதி மடிசார் உடுத்திண்டு வரேன்னு உள்ளே போனா. 45 நிமிஷத்தில் வந்துடுவா, இவர் வந்தா காரியங்கள் ஆரம்பிக்கலாம்.
மித்தத்துலே துவைக்கர கல்லில் துணி கிடக்கு. வெய்யல் இப்பவே தகிக்க ஆரம்பிச்சாச்சு. கும்மோணத்தில் வெய்யலுக்கா பஞ்சம்? ஏதோ இன்னும் காவேரி இருக்குன்னு தண்ணீர் தாராளமா கிடெக்கரதோ தப்பித்தோம். இல்லைன்னா வேலூர், சென்னைன்னு நடக்கராப்போலே லாரீலே தண்ணி வாங்கணும். பேப்பரை ரெண்டு தடவை புரட்டி மூலை முடுக்கெல்லாம் ந்யூஸை படிச்சதும் நிதானமா 930க்கு சாஸ்த்ரிகள் வரர்.
“மன்னிக்கணும் லேட்டாகிடுத்து, நேத்து எதிர்பாராத விதமா ஷூட்டிங்க் வச்சுட்டன், ஆத்துக்கு வர லேட்டாச்சா, தூங்கிட்டேன், உங்காத்துக்கு வரணும்னு துண்டில் முடிஞ்சு வச்சிருந்தேன், அது தெரியாம தூங்கரச்சே எடுத்து வண்ணானுக்கு போட்டுட்டா”. சொல்லிண்டே “மாமி குடிக்க சித்தே ஜலம் கொடுங்கோ!”
கோமு அப்போத்தான் மடிசாரோட “எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்கோ!” சொல்லிண்டே கூடத்துக்கு வரா. “என்னையா கேக்கரேள்”னு இவர் வேர. நான் மட்டும்தான் இருக்கேன்னு பொத்தாம் பொதுவா கேட்டதுக்கு என்னத்தை சொல்ல. இவருக்கு மின்னாடி நன்னா இடதுபக்கம் ரொம்பவே முழங்கால் தெரிய தூக்கிண்டிருக்குன்னு சொல்லவா முடியும்? “மாமா வந்துட்டர் அவருக்கு குடிக்க ஏதாவது தா.” பேச்சை மாத்தினேன்.
“ஷூட்டிங்னு சொன்னேளே, அது என்ன?” “ஓ! மாமா உங்களுக்கு தெரியாதா? நானும் சொல்லலை. நான் இப்போ டிவீலே சினிமாவுலே நடிக்கரேன். அதான்”. “ஓ அப்படியா, என்ன ரோல்?” கேட்டுண்டே அவளும் சொம்பைத் தூக்கிண்டு வர, விவரங்களை சொன்னர். இவா ரெண்டு பேரில் யார் ஆர்வமா பேசிண்டான்னு கண்டுபிடிக்க முடியலை. “அங்கேயும் அதிகபட்சம் சாஸ்த்ரிகள் ரோல்தான். கல்யாணம் செஞ்சு வைப்பது, அப்புரம் சின்ன சின்ன பிராமின் ஃபேமிலி காரெக்டர்ஸ் இப்படீன்னு வரது, கொஞ்சம் காசு பாக்கலாம்னு போரேன் மாமா. என்ன ஒண்ணு போனோம் வந்தோம்னு ஆகிறதில்லை. டயத்துக்குப் போனாலும் உக்காத்தி வச்சுடரான். முழுநாளும் ஒண்ணுமே செய்யாம உக்காந்திண்டிருந்துட்டு அப்புரம் 10 நிமிஷம் ஷூட்டிங்க்னு 2000 ரூபாய் கண்ணில் காமிக்கரான். ஒரு முழு ஃபீச்சர் ஃபிலிம்லே முக்கிய காரெக்டரா வரா மாதிரி பேச்சு போயிண்டிருக்கு, செய்யலாம்னு இருக்கேன்.”
“அப்போ புரோகிதத்தை விட்டுடுவேளா?” “அச்சச்சோ! அப்படியெல்லாம் கிடையாது மாமா. இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு, காத்து அடிச்சா சித்தே தூத்திக்கலாம்னுதான். எங்கப்பா திருவாரூரில். நடிக்கரேன்னு தெரிஞ்சா பெல்டை கழட்டிடுவர்”. “உங்களை சினிமா, டிவீலே பாத்துட்டார்னா?” “இல்லை அவருக்கு அதெல்லாம் பிடிக்காது. நான் இதுக்கு போக ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணம் எங்காத்து மாமிதான். உசுப்பி விட்டு தொளைச்சு எடுத்து அனுப்பி வச்சான்னா பாருங்கோ.”
அவர் சம்பாவனை வாங்கிண்டு கிளம்பிப் போனதும் “பாத்தியாடி கோமதி, மாமா சினிமாவில் வருவர். நாமும் ஒரு சினிமா ஸ்டார் வந்து நம்மாத்து திவசம் செஞ்சு வைக்கரர்னு கும்மோணம் பூரா தம்பட்டம் அடிச்சுக்கலாம்”.
“அதுவும் சரிதான். எனக்கு இவர் இப்படி கொஞ்ச நாளா பண்ரர்னு மின்னாடியே தெரியும். இவாத்து மாமி ராஜீ அன்னைக்கு கோவிலில் பாக்கரச்சே பீத்திண்டு சொன்னா. ஏதோ விளையாட்டு பண்ரான்னு நினெச்சிண்டேன். உண்மைதான் போலேருக்கு”.
ரெண்டு வாரம் ஆச்சு, வெளீலே போயிருந்த கோமதி எக்ஸைடடா வரா. சீப்பா வெள்ளரிக்காய் கிடெச்சிருக்கும்னு பாத்தா, “நாமெல்லாம் நாளைக்கு நாச்சியார் கோவில் போரோம்”. அங்கே என்ன விசேஷம், பொன மாசம்தானே போனம்? என் மைண்ட் வாய்ஸ் கேட்டதோ இல்லை அவளாவே சொல்ராளா தெரியலை. கொஞ்சம் சஸ்பென்ஸுக்காக கேப் விட்டுட்டு “ஷூட்டிங்க் பாக்க”. அது சரி?
“சிவகுமார் பையன் சூர்யா வரானா?, அனுஷ்காவுமா?” வந்தா நன்னா இருக்குமேன்னு நப்பாசை. வெக்கத்தை விட்டு கேட்டேன். “ஆஹா, அது ஒண்ணுதான் குறைச்சல், நாம பாக்கப்போறது கோபாலன் சாஸ்த்ரிகள் நடிக்கும் சினிமா ஷூட்டிங்க். ஒரு கல்யாண சீன், ஒரு பாட்டும். ராஜீயோட தம்பி 16 பேருக்கு வேன் அரேஞ்ச் செய்யரான், ரெண்டு சீட்டுக்கு சொல்லிட்டேன். கார்த்தாலே 8 மணிக்கு ரெடியாகிடுங்கோ”
கும்மோணத்தில் ரிடைர்மென்டுக்கு அப்புரம் வந்து செட்டில் ஆன எனக்கு இதைவிட வேற என்ன முக்கியமான ஜோலி இருக்கும்? மர பீரோவைத் தொறந்து நல்ல மில் வேஷ்டியும், வெள்ளைச் சட்டை அங்கவஸ்திரம் எடுத்து மேல் தட்டில் வச்சிண்டுட்டேன். டக்குன்னு தேடாம எடுத்து மாட்டிண்டு போலாம். தூங்கப்போரச்சே “ஏண்டி நிச்சயமா 2 சீட் ரிசெர்வ்டோனோ?” கன்ஃபர்ம் செஞ்சுண்டேன்.
பல கோவில்களில் இப்போ சினிமா ஷூட்டிங்க் நடத்த அனுமதி தரது வழக்கமாய்ப் போச்சு. இன்னைக்கு கோவிலுக்கு வெளீலே மண்டபத்தில் ஒரு சீனும், அப்புரம் மணிமுத்தாறு தீர்த்தத்துலேயும், அதான் கோவில்குளத்தில் பெர்மிஷன் தந்திருக்காளாம். அங்கே பாடல் காட்சி பதிவாம். இதெல்லாம் வர வழீலே சாஸ்த்ரிகள் மச்சினன் சொல்லிண்டே வந்தான்.
“அத்திம்பேர் என்ன ரோல் செய்யரார்?” “அவர் ஒரு ஏழை பிராம்ண சாஸ்த்ரிகள் கதையில் – பணக்கார பொண்ணை காதலிக்கரார். அப்புரம் அவளைப் பெத்தவா இவரை தூக்கிண்டு போய் அடிச்சு சித்ரவதை செஞ்சு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு கடைசீலே அவா ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் சம்மதம் தரான்னும் அத்திம்பேர் சொன்னர், ஆனா கதை அவுட் ஆகப்பிடாது, யாராவது காபி அடிச்சுடரான்னு வேணும்னே மாத்தி திரிச்சு சொன்னேன்னும் சொல்லிச் சொன்னர்.” வேனில் எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சுட்டோம். நல்ல மச்சினன், நல்ல அத்திம்பேர்னு பட்டது.
போய் சேர்ந்த எங்களை ஒரு ஓரமா நிக்க வச்சுட்டா. ஷூட்டிங்க் பாக்கன்னு ஒண்ணும் பெரீய கூட்டம் சேர்ந்துடலையாக்கும். இதே சென்னைலேந்து பெயர் போன ஹிட் கொடுத்த நடிகான்னா அலை மோதும். நம்ப கோபாலன் சாஸ்த்ரிகள் நடிச்சது எதுவும் வெளிவரலை.
இப்படி யோசிச்சிண்டு இருக்கச்சே தூரக்கே கல்யாணம் நடக்கரா மாதிரி மேடை ஜோடிச்சு வச்ச இடத்தில் ஒவ்வொருத்தரா வந்து உக்காந்துக்கரா. கோபாலனும்தான். அவர்தான் கல்யாணத்தை பண்ணி வைக்கப்போரரோ? அப்படித்தான் பட்டது.
அதோ ஹீரோயின் வரான்னு கைகாமிக்கா எல்லாரும் கூர்ந்து கண்ணை இடுக்கிண்டு பாக்க, நம்ப ஹன்ஸிகா மாதிரி ஒரு மார்வாடி பொண், நகைகள் ஜொலிக்க வந்து நின்னுக்கரா. நடக்கப்போரது அவள் அண்ணா கல்யாணமாம். அங்கேதான் பண்ணிவைக்க வந்த சாஸ்த்ரிகளை பாத்து இவள் காதலில் விழரா. அக்னி வளர்க்க கெரொசின் ஊத்தி பத்தவச்சான் ஒருத்தன். அப்புரம் மாப்பிள்ளை பையன் வர, எல்லாரும் கீழேந்து சட்டுன்னு மேலே ஏறி சுத்தி நிக்க, டைரெக்டர் எல்லாரையும் அவன் இஷ்டப்படி மாத்தி நிக்க வைக்க, நம்ப கோபாலன் நிமிர்ந்து உக்காந்துண்டர். “லைட், காமரா ஏக்ஷன்.” ஒருத்தன் கிளாப்படிக்க, இவர் “முஹூர்த்த நேரம் நெறுங்கிடுத்து பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ.” சொல்லி முடிக்கலை “கட்”டுன்னுட்டான். அவனுக்கே இந்த டயலாக் அலுத்துப் போயிருக்கும்.
எப்படியோ தாலி கட்டறது, அப்புரம் இவர் ஹன்ஸிகாவைப் ஆசையா பாக்கரா மாதிரி அப்புரம் அவள் இவரை வெறியோடப் பாக்கரா மாதிரியும் குளோஸப் எடுத்தா. இவர் போய் மானிடரில் எப்படி வந்ததுன்னு பாத்துண்டு நின்னர். அங்கேந்தே எங்களைப் பாத்துட்டு கை ஆட்டினர். எங்களுக்கெல்லாம் ரொம்பவே பெருமிதமாப் போச்சுன்னா பாத்துக்கோங்கோ. அப்புரம் லன்ச் ப்ரேக். கோபாலன் மச்சினன் கோவில் ஸ்டால்லேந்து புளியோதரையும் மிளகுவடையும் வாங்கித் தந்தான். எல்லோரும் குளக்கரைக்குப் போனம்.
எங்கே வெளிச்சம்னு சுத்தி சுத்தி வந்து கடைசீலே இடம் தேர்ந்தெடுக்க நேரமாச்சு.
முழுப்பாட்டும் எடுக்கலையாம். அதில் சில சீக்குவன்ஸ்,. மத்ததை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைகிட்டே எடுப்பாளாம். அத்தனை தூரத்துக்கு இவன் வேன் அரேஞ்ச் செய்வான்னு படலை. யோசிக்கரச்சே பாட்டை போட்டான்.
ஆடியோ டெஸ்டிங்க். “காதலில் கனிந்த இதயம், பிரிவில் வாடிய தேகம், கண்ணாளனே என் தாகத்தை தணி, சுவைத்துப்பார் உனக்காக இதோ பழுத்த கனி.” பல்லவியா அனுபல்லவியா? இந்த ரெண்டு வரி மட்டும்தான் இன்னைக்காம். “அப்படீன்னா 3 மணிக்கு முடிஞ்சுடும் ஆத்துக்குப் போதோடப் போயிடலாம்.” நான் இவகிட்டே சொன்னேன். “ஆமாம் சீக்கிரமா ஆத்துக்குப் போய் என்னத்தை வெட்டி முறிக்கப் போரேள், கம்முன்னு பாருங்கோ.” அதட்டினா. எல்லாரும் என்னையே பாத்தா.
இப்போ கோபாலன் ஜீன்ஸ், டீ ஷெர்ட் சகிதம் ஹன்சிகா கையைப் பிடிச்சிண்டு வரர். அவள் மாட்டிண்டிருந்ததை என்னன்னு சொல்ல! லெக்கின்ஸ், சட்டை மாதிரி ஒண்ணு, அங்கங்கே டைட்டா, அப்புரம் ஸ்டோல் சுத்திண்டு. மேக்கப் மேன் வந்து ரெண்டு பேரையும் டச்சப் செஞ்சு கண்ணாடி காமிச்சதும் டைரக்டர் வந்து என்ன செய்யணும்னு சொன்னர்.
கோபாலன் முதப் பாதிக்கு வாயசைச்சுண்டே ரெண்டு படி இறங்கணும், அவள் சிணுங்கிண்டு ரெண்டு படி மேலே போய் மிச்சத்தை பாடுவா, இவர் அவள் கையப் பிடிச்சு இழுத்து இறுக்கி கட்டிக்கணும். அவ்ளோதான் டைரக்டர் கட்டிண்டு காமிச்சதை பாத்துட்டு ராஜீக்கு என்னவோ போல ஆச்சு. இவள் ஆத்துக்காரர் அதை அப்படியே செஞ்சு நடிச்சார்னா இவளுக்கு ஸ்ட்ரோக் வரும்னு எனக்கு பட்டது. இதையேத்தான் கோமதியும் நினெச்சாளொ என்னமோ, சித்தே நகந்து ராஜீ கையைப் ஆறுதலா பிடிச்சுண்டா.
அங்கே பாட்டைப் போட ஏக்ஷன் சொல்லியாச்சு. படி ஏறரது, இறங்கரதெல்லாம் சரி, ஆனா திரும்பரச்சே தப்பான திசையில் ஹன்சிகா உடம்பைத் திருப்பினான்னுட்டும் அதனால் கோபாலன் அவள் இடது கைக்கு பதிலா வலது கையை சித்தே அதிகமான ஆர்வத்தோட பிடிச்சுட்டார்னு திரும்ப எடுத்தான். 4 தடவை ட்ரை பண்ணிட்டுதான் காமராவை ஓடவே அனுமதிச்சா. அப்புரம் தாகத்தை தணிக்கணும், பழம் சாப்பிடணுமே! அதுக்கு முன்னாடி ப்ரேக்.
எனெக்கென்னமோ கோபாலன் அதிர்ஷ்டக்காரன்னு பட்டது. கையைப் பிடிச்சு இழுத்து அந்த ஃப்ளோலேயே ஒரு கையை இடுப்புக்கும் இன்னொண்ணை கழுத்தை சுத்தியும் வளைக்கணும். தப்பா செஞ்சான். 3 டேக் ஆச்சு. இன்னும் ஒருதடவை தப்பா செஞ்சா அவன் மச்சினனும் நானும் கும்பலை விலக்கிண்டு சட சடன்னு போய் செஞ்சு காமிச்சிருப்போம்னு பட்டது. நல்லவேளை அப்படி எல்லாம் செய்ய தேவையில்லாம எங்காத்து சாஸ்த்ரிகளே கரெக்டா ஹன்சிகாவை தன் கட்டுக்குள் கொண்டு வந்து கட் சொன்னதுக்கப்புரமும் சித்தே நாழி பத்திரமா வச்சிண்டு நாச்சியார் கோவில் குளக்கரையை அசிங்கப்படுத்தினர்.
ஒரு 3 மாசம் ஓடித்துன்னு வச்சுக்கோங்கோ - ஷூட்டிங்க் பாத்ததை ஆத்தில் அப்பப்போ சிலாகிச்சு பேசிண்டு. காணாததை கண்டுட்டா மாதிரி. அடுத்த திவசத்துக்கு திதி பாத்து, கோபால சாஸ்த்ரிகளுக்கு போன் போட்டேன். “8 மணிக்கு வந்துடுவேன்”. மனுஷர் கரெக்டா 745க்கே கதவை தட்டினர். ஆச்சர்யம்
“சௌக்கியமா இருக்கேளா?” கோமதியும் ஆஜர். “ஷூட்டிங்கெல்லாம் எப்படிப் போரது? அன்னைக்கு எடுத்த படம் எப்போ ரிலீஸ்? “ஐய்யோ மாமா அதை ஏன் கேக்கரேள்? அன்னைக்கு ஆத்துக்கு வந்ததுமே ராஜீ ஒரே அழுகை. இனிமேல் சினிமான்னு போனேள்னா தற்கொலை செஞ்சுண்டுடுவேன்னு ஆர்ப்பாட்டம். ஏண்டின்னு கேட்டா சொல்லத் தெரியலை”.
“ஆனா ஒண்ணு சொன்னா மாமா. சாகிறத்துக்கு முன்னாடி என்னை போட்டுட்டுத்தான் போவாளாம். இப்போ புரோகிதம் மட்டும்தான்.”
No comments:
Post a Comment