Wednesday, September 9, 2020

ஒரு டெய்லரின் காதல் கதை

61. ஒரு டெய்லரின் காதல் கதை (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

திநகர் பனகல் பார்க்கில் என் கடை. என்னோடதுன்னா என்னுதில்லை. நான் சீஃப் டெய்லர். சொந்தக்காரன் தினம் வருவன். இங்கே, அதைத் தவிற உஸ்மான் ரோடில் அப்புரம் கோடம்பாக்கத்தில் ஒண்ணு, 3 கடை வச்சிருக்கான். அவனும் அவன் பொண்டாட்டியும் வந்துட்டுப் போவா. எல்லாம் நான்தான் பாத்துக்கறது. அதனால் என் கடைன்னு சொன்னேன்.

மெஷர்மென்ட் எடுத்து, துணி வெட்டி தைக்கத் தெரியும். ஃபேப்ரிக் தேர்ந்தெடுத்து டிசைனும் செய்வேன். இங்கே 4க்கு 12இல் கீக்கிடமான இடத்தில் என்னோட 3 டெய்லர் வேலை செய்யரா. காஜா தெச்சு பட்டன், ஹூக் வைக்கன்னு பையன். சொன்ன மாதிரி வரமாட்டான். டெலிவெரி எல்லாம் லேட். போன் வரும், “தைக்க கொடுத்தது ரெடீயா?” “நாளைக்கு வந்து வாங்கிக்கங்க, வரப்போ போன் செஞ்சுட்டு வாங்க.” நாளைக்கு கூப்பீட்டா அதையே சொல்லுவோம்."

+2 முடிச்சதும் ஃபேஷண் டெக்னாலஜீ படிக்கணும்னு ஆசை. அதுக்குக்கூட கையில் பணமில்லை. வறுமைப்பட்ட குடும்பம். சித்தப்பாதான் தத்தெடுத்து வளர்த்தர். அப்பா அம்மா சமையல் சம்பந்தமான எடுபிடி வேலைக்கு போவா. டைலரிங்க் முதல்ல கத்துண்டா கைவசம் தொழிலிருக்கும், அப்புரம் பாத்துக்கலாம்னு சித்தப்பா சொன்னர். படிச்சு ஆத்துலேயே பெடல் மெஷீன் வாடகைக்கு போட்டு வேலையை ஆரம்பிச்சேன். கைக்கடக்கமா வருமானம் வந்தது.

அப்பா சொல்வர். சாப்பாடு, போட்டுக்கர துணி, வீடு இது மூணூம் சம்பத்தப்பட்ட தொழிலில் கால் ஊணிடணும். மூணும் மனுஷணுக்கு அவசியம். வருமானம் இல்லாம போகாதும்பர். 

டைலரிங்லேயே பரிமளிக்க என்ன செய்யணும்னு யோசிக்கரச்சே முறையாப் படிச்சவா வேணும்னு எலெக்ட்ரிக் ட்ரைனில் விளம்பரம் பாத்துட்டு நேரவே போனேன். முதலாளி சிலதை வெட்டி தைச்சு காமிக்க சொன்னர். நிமிஷமா செஞ்சேன். “மஹாதேவா, வந்துவிடு! கடையைப் வீதான் பாத்துக்கொள்ளணும். ரெகுலர் கஸ்டமரை தொறத்தி அடிச்சுடாமல்.”

9க்கு கடை தொறக்கணும். மத்த டைலர்ஸும் வந்ததும் மெஷீனை செக் செஞ்சு தந்து, நேத்து முடிக்காம விட்டதை முடிக்கணும். அடுத்து இன்னைக்கு செய்ய வேண்டியதை சீக்குவென்ஸ் செஞ்சு வச்சுட்டு, காஜா பையனைத் தேடிப் பிடிக்கணும். புதுசு வெட்டித் தரவேண்டியதை நான் செய்வேன். கஸ்டமர் வர ஆரம்பிப்பா. அளவு எடுத்து சீட்டு தந்துட்டு எப்போ வந்தா கிடைக்கும்னு தோதா ஒரு பொய்யைச் சொல்லிட்டு வேலையைப் பாக்கணும். முடிஞ்சதை வாங்கிக்க வந்தவா கிட்டே தைக்கூலி வாங்கிண்டு தந்துடணும். 

மத்தியானமா முதலாளி வருவர். அவருக்கு டீ/ஃப்ரூட் ஜூஸ் தரணும். குடிச்சுட்டு கிளம்பிடுவர். அவர் ஆத்துக்காரி வந்தா “என்ன நடக்கறது, புதுசா யார் வந்தா?” கேட்டுத் தெரிஞ்சுப்பள். வேலையில் மும்முரமா இருக்கும் காஜா பையனை சொந்த வேலையா அனுபிச்சுட்டு “ஏன் சரியான டயத்துக்கு ரெடி ஆரதில்லை?” திட்டுவள். கேட்டுக்கணும்.

அதிகமா பொண்கள் ட்ரெஸ்தான் வரது. ஆண்களுக்கு ரெடிமேடில் கிடெச்சுடறது. 
பொண்களுக்கும் கிடைக்கும். ஆனா சல்வார், சுடி முதக்கொண்டு துணி வாங்கி தெச்சுக்கறதில் ஆர்வம் குறையலை. ரவிக்கையை தெச்சுத்தான் ஆக வேண்டியிருக்கு. சிலர் பாவாடையைக் கூட துணி கொடுத்து தெச்சுக் கொடூம்பா. பீப்பாய் மாதிரி ஒண்ணை தைக்க படிச்சுட்டு ஏன் வரணும்? என் அஸிஸ்டென்ட் பாத்துப்பானுவ. 

அன்னைக்கு ஒரு மார்வாடி பெண்மணி பாவாடை தெய்க்கணும் அளவெடுத்துக்கோன்னு வந்தா. “முடியாது! வேண்டாம், தைக்கரேன் சரியா வரும்.” கண்ணாலேயே அளவெடுத்து கண்ணாலேயே கன்வின்ஸ் செஞ்சேன். ரொம்பத்தான்!

ரவிக்கை பேட்டர்ன்ஸ் 1000 இருக்கு. புஸ்தகம் வச்சிருக்கோம். காமிப்போம். வாயப் பொளந்துண்டு பாப்பா. இது மாதிரி வேணும்னு காமிக்க அது வந்தவாளுக்கு சகிக்காதுன்னு எப்படி சொல்ரது? “இதைப் பாத்தீங்களா? “அவாளுக்கு எது தோதுப்படுமோ அந்தப் பக்கத்தை காமிச்சதும் “ஓ இதுதான் வேணும்”பா. அப்புரம் அளவெடுக்கணும். முக்காவாசிப்பேர் அளவு ஜாக்கேட் தந்துடுவா. கடை வாசலில், போரவா வரவால்லாம் பாத்துண்டே போரச்சே டேப் வச்சு அளெவெடுப்பது, அத்தனை நன்னா இருக்காது. சிலதுகள் எடுத்துக்கோன்னு வீம்பா விறைச்சிண்டு நிப்பா. நமக்கென்ன போச்சு?

சுடி போட்டுண்டு வரவாளை எடுத்துடலாம். புடவை தலைப்புன்னா இடெஞ்சலா இருக்கும்.

ஆத்துக்குப் போனதும் “ஃபிட் ஆகலை பிடிக்கறது, லூசா இருக்கு”ன்னு போனில் கம்ப்ளைன்ட் வரும். அளவு ரவிக்கை – எத்தனை பழசோ – அதை பேஸ் செஞ்சு தைச்சா? ஆல்டரேஷன் செஞ்சு தருவம். அளவெடுத்து தைச்சாலும் சிலபேர் வீம்புக்காக ஆல்டரேஷனுக்கு வருவா. என்னத்தை சாப்பிடுவாளோ? தைக்க கொடுத்து திரும்பி வாங்கிக்க வர 2 வாரத்தில் அளவு மாறிடும். எல்லாத்தையும் சமாளிச்சிண்டு சீஃப் டைலராய் தொழில் செஞ்சுண்டு. கஷ்டம்தான் அப்படீன்னு நீங்க யாராவது ஒரு தடவையாவது “துத்ஸோ” கொட்டினா நான் சந்தோஷப் படுவேன்.

இப்போலாம் விசேஷம், பண்டிகைன்னாத்தான் புதுத்துணின்னு கிடையாது. அடிக்கடி புதுசு வாங்கிக்கரவா நிறைய. எங்கள் தொழிலுக்கு நல்லது. காசு பாக்கரோம். ரவிக்கை தைக்க 550ரூபாய், லைனிங்க் இல்லாம! 

அன்னைக்கு கூட்டம் இல்லாத ஒரு நாள். அதிகமா வேலை இல்லை. ஒரு டைலர் லீவு வேணும்னான், போய்க்கோடான்னுட்டேன். அப்போதான் அந்த பொண் வந்தா. கையில் கட்டைப்பை. வயசு 30க்கு கம்மியாத்தான் இருக்கும். 3 ரவிக்கைத்துணி எடுத்துண்டு. புது கஸ்டமர்.

அட்ரெஸ் எழுதுங்கோன்னு பில் புக்கை கார்பன் வச்சுத் தந்தேன். பார்வதி கிருஷ்ணன்னு எழுதி வலசர்வாக்கத்தில் வீட்டட்ரெஸ். முழி முழியா எழுத்து அவள் கண்கள் போல. செல் நம்பரும். டெய்லரா இருந்தா எத்தனை ஈஸியா பொண்கள் நம்பர் கிடெச்சுடுறது பாருங்கோ. சினிமாவில் ஹீரோயின் நம்பருக்கு ஹீரோ நாயா பேயா அலையறதை காட்டுவா. தமிழ் சீரியல் ஒண்ணை சொல்லி “அதில் வர பேட்டர்ன் வேணும், படங்கள் இருக்கா? எனக்குத் தெரியும் எதுன்னு. பக்கம் 234இல். காமிச்சேன். அங்கே பாத்த மூணை டிக் செஞ்சா.

டிக் செஞ்சது எல்லாம் முதுகை ஏக்கர் ஏக்கரா காமிக்கும். அதுக்குத் தகுந்தா மாதிர் உள்ளாடை வேணும். லைனிங் வச்சாத்தான் சொன்ன இடத்தில் நழுவாம நிக்கும். இவள் வாங்கிண்டு வந்த துணி அத்தனை நன்னா இல்லை. லைனிங்கில் சமாளிச்சுடலாம். ரெண்டு ஹூக் பின்னாடி. “அளவு ரவிக்கை கொண்டு வந்திருக்கேன். கழுத்து, உயரம், இடுப்பு, கை அளவு மட்டும் பேட்டர்ணுக்கு தகுந்தாப்போல எடுத்துக்கோங்கோ” அடேங்கப்பா, சாமர்த்தியக்காரிதான். எடுத்து குறிச்சிண்டு “12நாளில் கிடைக்கும், போன் செஞ்சுட்டு வாங்கோ”. அனுப்பிச்சேன்.

இறங்கிப் போய் RMkVகிட்டே உஸ்மான் ரோடு மேம்பாலத்துக்கு அடீலே கிராஸ் செய்யரவரைக்கும் பாத்துண்டிருந்துட்டு தலையில் அடிச்சுக்கரேன். கிருஷ்ணன் யார்னு தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே? கணவரா, அப்பாவா?

ரெண்டுநா போச்சு. இன்னும் பாரு கொண்டு வந்ததை எடுக்கலை. போன் அடிச்சது. “காதர் டைலர்ஸ், மாதவன் ஹியர்.” “நான் பார்வதி, என் துணி தைக்க ஆரம்பிச்சாச்சா?” இப்படி கேட்டா பில் நம்பர் சொல்லுங்கன்னு கேப்போம். ரொம்ப நாழி காக்க வைப்போம். அதுக்குள்ளே அவாளே டிஸ்கனெக்ட் செஞ்சுடுவா. 

இவளைப் பத்தியே நினெச்சிண்டிருந்தது பார்வதீன்னதும் தெரிஞ்சுடுத்து. “நாளைக்குத்தான் எடுப்பம், மிஸஸ் க்ரிஷ்ணன், நீங்க ரொம்ப அவசரப் படரீங்களே?” என் சாமர்த்தியம் பாருங்கோ! “நான் மிஸஸ் கிருஷ்ணன் இல்லை. அது எங்க அம்மா!” சொல்லிட்டு “அப்புரம் போன் செய்யரேன், ரெடியானதும் சொல்லுங்கோ.” அப்பாடா! இவளுக்கு கல்யாணம் ஆகலை.

ரவிக்கை தைக்க வரவாளை எல்லாம் இப்படி ஆராய்ச்சி செய்யறதில்லை. என்னமோ தெரியலை இவள் என் மனசை உள்ளே பூந்துண்டு பிசையரா மாதிரி பட்டது. அன்னைக்கே அவள் துணியை மெதுவா ஆசையா எடுத்து, கவனமா எத்தனை நேரம் எடுத்துக்க முடியுமோ அத்தனை எடுத்துண்டு அளவுக்கு மெல்லிசா கோடு போட்டு துணிக்கு வலிக்குமோன்னு யோஸிச்சிண்டே கத்திரிக்கோலால் வெட்டினேன். 

இதை நாமளே தெச்சா என்ன? ஆத்துக்கு எடுத்துண்டு போய்? இங்கே க்யூவில் வச்சா 15நா ஆகும். சீக்கிரம் முடிச்சு நாமளே போன் செஞ்சு ரெடீன்னு சொன்னா பாருவை சீக்கிரம் பாக்கலாம்னு பட்டது. ஐடங்கள் வெளீலே போய் தைச்சு வரது சகஜம்தான். முதலாளிகிட்டே சொல்லவும் தேவையில்லை.

நாளைக்கு ஞாயித்துக் கிழமையாவும் போச்சு. ஒரே நாளில் தைச்சுடலாம்னு எடுத்து பையில் வச்சுண்டேன். காஜா பையன் பாத்துண்டே இருக்கான். அப்புரம் மத்த டைலர்ஸுக்கு சூசகமா என்னவோ சொல்ரான்னு பட்டது. இவன் கிட்டே ஜாக்கிரதையா இருக்கணும்.

ஞாயித்துக்கிழமை மெதுவா எழுந்துப்பேன். சித்தி திட்டுவா. ஆனா 6 மணிக்கு குளிச்சு சாமி கும்டூட்டு மெஷீனை துடெச்சு வேலையை ஆரம்பிச்சாச்சு. சரியான கலர் நூல் மாட்டி, துணியை கையில் எடுத்து மெஷீனில் நுழைச்சு அது ஆர்வமா முன்னேறும் அழகையும் கொஞ்சம் கொஞ்சமா பாருவின் வடிவம் அதில் உருவாவதும் கண் முன்னாடி. அவள் கேட்ட டிசைன் ரவிக்கை போட்டுண்டு அதே சீரியல் இன்னைக்கு டிவீயில் சாயங்காலம். ஆனா எங்காத்தில் டிவீ கிடையாது. மானசீகமா அவள் இதை போட்டுண்டு வரா மாதிரியும் வசனம் பெசரா மாதிரியும், என்னோட பாட்டுப் பாடிண்டு பார்க்கில் சுத்தரா மாதிரியும் நினெச்சிண்டே ரெண்டு ரவிக்கை முடிச்சேன்.

மூணாவது சித்தே காம்ப்ளிகேடட். ஆனா என்னை விட பாருவோட ரவிக்கையை இத்தனை சிரத்தையோட தைச்சுக் கொடுக்க யாரால் முடியும்?

மூணையும் முடிச்சுட்டு பாத்தா மணி 3. ஒவ்வொண்ணா எடுத்து தூக்கிப் பிடிச்சு வெளிச்சத்தில் பாக்கரேன். இப்பவே அத்தனை அழகு கொஞ்சித்து. அதுக்குள்ளே பாருவை நுழைச்சுப் பார்த்தா? நாளைக்கு கடைக்குப் போனதுமே போன் போட்டு “ரெடீ, வந்து பணம் கட்டிட்டு வாங்கிக்கோங்கோ.” சொல்லிடலாம். மத்தவா என்னை வினோதமா பாக்கலாம். ஏதோ வில்லங்கம்னு முதலாளி வரச்சே போட்டுக் கொடுக்கலாம். அதையும்தான் பாப்பம்.

இது ஒரு பெண் மேலே வந்துட்ட காதலா, இல்லை வெறும் மோகமா? அவளைப் பத்தி ஒண்ணும் தெரியாது. அவளுக்கு நான் டைலர்னு மட்டும் தெரியும். மனசில் இருப்பதை அவ கிட்டே சொன்னா ஏத்துப்பாளா? நம்ப அந்தஸ்து நமக்குத் தெரியும். அவளோடது? அட்ரெஸ் இருக்கே, ஒரு தடவை போய் பாத்தால் தெரிஞ்சுடும். எப்படிப் போவது? ஆஹா! தைச்ச ரவிக்கையை நாமளே நேரில் போய் தந்துட்டு வந்தா? இன்னொரு நாள் சமயம் பாத்து விருப்பத்தை சொல்லலாம். பதில் என்னவா இருந்தாலும் ஏத்துக்கணும்.

திங்கட்கிழமை 11மணிக்கு சித்தே பெர்சனல் வேலை 2 மணிலே வந்துடுவேன்னு கிளம்பியாச்சு. வலசர்வாக்கம் தூரமில்லை. பாருவாகம் கண்டுபிடிச்சு போனா, பெரீய வீடு. வாசலில் இன்னோவா. மனசு அப்பவே சப்பிப்போச்சு. கதவைத் தட்ட ஒரு பெரியவர் வரார். 

“சார் நான் டைலர், பார்வதி மேடம் ரவிக்கைக்கு துணி தந்திருந்தா”. சொல்லி முடிக்கலை “ஆஹா, நல்ல காரியம் செஞ்சேள். இவளுக்கு வர புதன்கிழமை நிச்சயதார்த்தம். திடீர்னு ஃபிக்ஸ் ஆச்சு. ரவிக்கை தெச்சுவர இன்னும் 10நா ஆகுமேன்னு வருத்தப்பட்டா. புதுசு உடுத்திக்கணுமோனோ. கொடுங்கோ!” வாங்கிண்டு ஓடரர். அப்புரம் அவளே குதிச்சிண்டு வெளீலே வந்து “ரொம்ப தாங்க்ஸ்.” சொல்லிட்டு காசை எண்ணிக் கொடுத்து அனுப்பினா. 

என் பாரு இப்போ என் பாரு இல்லாமப் போக நாலே நாள்தான் எடுத்துண்டா.

ஆடை, அணிகலங்கள் பெண்களுக்கு அழகையும் தெய்வீகத்தையும் கொண்டு சேர்க்கும். அதில் நம்மூர் ரவிக்கையும் புடவையும் பிரதானம். மானத்தை காத்து, அழகை கூட்டிக் கொடுத்து என்னவெல்லாமோ செய்யும் அந்த ரவிக்கை என் மனசையும் என்னமா புறட்டிப் போட்டதுன்னு நினெச்சுண்டேன்.

No comments:

Post a Comment