ஏர் பேக் (சிறுகதைகள் சீ2 – 83)
#ganeshamarkalam
நம்மூரில் மோசமாப் போன விஷயங்களில் டிராஃபிக்கும் ஒண்ணு. படுமோசம்னு சொல்லணும். தாம்பரத்துலே கிளம்பி குரோம்பேட்டை தாண்டினதும் டிராஃபிக் நகராம நிக்கரது தெரியும். கண்கொள்ளாக் காட்சியா விரியும்.
திநகர் போலாம்னு 9 மணிக்கு கிளம்பினேன். காரில்தான். பிரேமாவுக்கு தைக்கக் கொடுத்த ரவிக்கைத் துணி வாங்கணும், அப்படியே மயிலாப்பூரில் “தளிகை”யில் சாப்டுட்டு திரும்பலாம்னு. வழக்கமா சரவணபவன் போரது. ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு. போய் ஒரு கட்டு கட்டணும்னு காபி குடிச்சுட்டு கிளம்பியாச்சு. டிராஃபிக் நகந்தான்னா?
பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டரான். வேலை நடக்கராப்புலே தெரியலை. இருந்தாலும் எல்லாத்தையும் திருப்பிவிட்டு, அந்த ஸ்பாட்டை கடக்கரத்துக்கே 30 நிமிஷமாச்சு. பரங்கிமலை, கதிப்பரா, கிண்டின்னு நின்னு நின்னு திநகர் வரச்சே மணி 11. வழீலெல்லாம் சண்டை. “காரில் வந்திருக்கப் பிடாது, ட்ரையினில் 25 நிமிஷத்தில் போயிருக்கலாம்.” நான் சொல்ல, “நீங்க எங்கேயாவது போணம்னா காரை எடுத்துண்டு கிளம்பிடரேள், எனக்கு ஒண்ணுண்ணா ரயிலா?” “நான் பைபாஸில் அம்பத்தூருக்கு வேலையாப் போவேன். இப்படி யாரும் ட்ரேஃபிக்கில் அல்லல்பட மாட்டா”.
சித்தே கொயட்டா இருந்தா. அதுக்காக நாம ஆர்க்யூமென்ட் ஜெயிச்சதா நினெச்சு புளகாங்கிதப்பட்டுட கூடாது. இதே மேட்டர் வேர ரூபத்தில் வெடிச்சு கிளம்பும். “திரும்பி போரச்சே ஸ்மூத்தா போயிடலாம்.” அவளை சமாதானப்படுத்திட்டு காரை பார்க் செய்யரேன்.
பனகல் பார்க் இந்தியன் பாங்க் வாசலில். “நீ போய் ரவிக்கை வாங்கிண்டு வா, வண்டியிலேயே நான் இருக்கேன்னுட்டேன். கார் வாங்கின புதுசில் இங்கே காத்தாடும். இப்போ கார்த்தாலே 7 மணிக்கு மேல் வந்தா எங்கேயும் நிறுத்தமுடியாது. வண்டியிலேயே இருந்தா அப்படி இப்படி நகத்தி சமாளிக்கலாம்.
இவள் போனதும் எதுத்தசாரியில் அவளைப் பார்த்தேன். கூட வேலை பார்க்கும் கௌசல்யா.
ஆத்துக்காரர்கூட. ஷப்பிங்க் வந்தாளோ? நடந்து போயிண்டிருக்கா. பாத்தாலும் ஹாய் சொல்ல சாத்தியம் இல்லை. வீட்டுக்காரர் இருகச்சே யாரும் செய்யமாட்டா. முட்டராமாதிரி எதுக்கே வந்தா வேர விஷயம். நாளைக்கு “திநகரில் பார்த்தேன்”னு பேச்சை ஆரம்பிக்கலாம்.
சித்தே கழிச்சு ரியர்வ்யூ மிரரில் பிரேமா வரதைப் பாக்கரேன். கூடவே கௌசல்யா, அவள் புருஷனும். ஆச்சர்யமா இருந்தது. இவளும் அவளும் எப்படி? சேர்ந்துன்னா வரா! “பாருங்கோ உங்க ஃப்ரெண்டை அழைச்சிண்டு வந்தேன், இவாளை தெரியுமா?” இப்போ “ஹாய்”னுட்டு அவள் கணவனிடம் அறிமுகமாகிரேன். கௌசல்யாவும் அதே டைலர்கிட்டே போக, இவா பரிச்சயம் ஆகி, எங்கே வேலைன்னு தெரிஞ்சு என் ஹஸ்பென்டும் அங்கேன்னு சொல்ல, பேரைக்கேட்டு புரிஞ்சிண்டு, நானும் இருப்பது தெரிஞ்சு பாக்காமப் போனா நன்னா இருக்காதுன்னு. அப்புரம் கிளம்பினோம்னு வச்சுக்கோங்கோ.
தளிகையில் கூட்டமில்லை. ஆர்டர் செஞ்சுட்டு உக்காந்திருக்கச்சே பிரேமாவுக்கு வெடிச்சிண்டு வரது கேள்விகள். “இவளொட நெறுங்கின பழக்கமா? இவ எந்த டிபார்ட்மென்ட்? எத்தனை நாளா உங்க ஆபீஸில் இருக்கா?” சரமாரியா விழ எதுக்கு முதலில் பதில் சொல்லலாம்? கேள்விக்கு பின்னணி இருக்குமே, அதைப் புரிஞ்சிண்டா பதிலே சொல்லாம எப்படித் தப்பிக்கரதுன்னு யோசிக்கலாம். சாப்பாட்டில் மண் என்பது மட்டும் நன்னா புரிஞ்சது. பொதுவா இப்படி ஒண்ணுக்குமேலே கொஸ்டீன் செஞ்சா நாமளும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டுடரது நல்லது. அதுக்கு பதில் சொல்லியே ஆகணும். அவா சொல்ர நேரத்தில் நாம முன்னாடி கேட்ட கேள்விகளுக்கு பதில் யோசிக்கலாம்.
“நீதானே அவளைப் பாத்து கூட்டிண்டு வந்தாய்? ஏன் கேக்கராய்?” நான் கேக்க, அவள் அப்படியே ஸ்தம்பிச்சுப்போய் பதில் சொல்ல முடியாம திணறுவான்னா அது நடக்கலை. டக்குன்னு சொல்லிட்டா. “இல்லை, உங்களை பார்த்ததும் கூட ஆத்துக்காரர் வந்திருக்கார்னுகூட விவஸ்தையில்லாம அத்தனை இழைஞ்சாளே அதான் கேட்டேன். ஆபீஸில் என்னதான் நடக்கறதுண்னு தெரிஞ்சுக்கலாம்னு”.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, கொலீக்தான், அவ வேர ஃப்ளோர், நான் வேர. மீட்டிங்கில் பாத்து பேசரதுதான்”னு ஓரு தப்பும் செய்யாமலேயே மென்னு முழிங்கினேன்.
“அடிக்கடி கை குலுக்கரது எல்லாம் உண்டா? ரொம்ப மாடெர்னா அவ?” எனக்கு புரியலை. நான் கையை பிடிச்சு குலுக்கினது அவள் கணவன் கையைன்னா? இன்னைக்கு கௌசல்யா கையை குலுக்கலையே? குலுக்கினேனோ? சரியா ஞாபகம் வரலை. இல்லை ஆபீஸில் பண்ணராப்புலே கையை நீட்டிட்டேனோ? இவள் இத்தனை ஷ்யுரா சொல்ராளே? செய்யாததை செஞ்சதா இவள் வீடியோ எடுத்து வச்சிருக்காப்புலேனா இருக்கு?
“இல்லைடி, லேடீஸ் கூடெல்லாம் கை குலுக்கரதில்லை. அவாளும் கொடுக்க மாட்டா!” சொல்லி வச்சேன். “அதென்னவோ எனக்கு நம்பிக்கை வரலை”.
அதாவது நாங்க பொம்மனாட்டியோட கை குலுக்க மாட்டோம்னு சொன்னதை அவளால் நம்பமுடியலையாம். என்னாலேயே நான் சொன்ன பொய்யை நம்ப முடியலை.
ஏக்சுவலா ஆபீஸில் இன்னும் என்னென்னவோ நடக்கும். முதுகில் தட்டரது, கிட்டக்க வந்து கம்ப்யூடர் ஸ்க்ரீன் பாக்கிராமாதிரி முகத்தோட முகத்தை உரசறது எல்லாம். கான்ஃபெரென்ஸ் நடக்கரச்சே துடையில் கை வச்சு, மூஞ்சி கிட்டே வந்து கொயட்டா சங்கதி பரிமாரிக்கரது எல்லாம். இப்போ அதையெல்லாம் இவளுக்கு சொல்ல நான் என்ன முட்டாளா? சில சமயம் பொய் சொல்ல வேண்டியிருக்கு.
அப்போன்னு சொல்லிவச்சா மாதிரி ஆர்டர் செஞ்ச சாப்பாட்டை செர்வ் செய்ய ஆரம்பிக்கரான். கடுகடுன்னு என்னை லுக்கிண்டிருந்த பிரேமா டக்குன்னு அவனுக்குன்னு ஒரு ஸ்மைலை உதட்டில் கொண்டு வந்து, “தாங்க்ஸ்” சொல்லி – அசந்து போயிட்டேன். “பேசாம சாப்பிடுங்கோ மிச்சத்தை அப்புரம் பெசிக்கலாம்!” அப்பாடான்னு பட்டது.
ஆரம்பமே படுஜோர் வெத்தல் குழம்பும் புடலங்காய் கூட்டும். என்னால்தான் ருசிச்சு சாப்பிடமுடியலை. இவள் அப்பப்போ இலையிலேந்து கண்ணைத் தூக்கி என்னை பாக்கரச்சே “மவனே நீ இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டலை, நான் கேட்ட கேள்விகளுக்கு திருப்தியா பதில் சொல்லலை, இன்னைக்கு இருக்கு உனக்கு”ன்னு சொல்ராப்புலே. இப்படி இருகச்சே ஒரு மனுஷன் எப்படி நிம்மதியா சாப்பிடரது?
எப்படியோ மென்னு முழுங்கிட்டு பில்லைக் கட்டிட்டு வெத்திலை பாக்கு வைப்பானா, சின்னதா மலை வாழைப்பழம்னு எத்தையாவது கண்ணில் காமிப்பானா, இல்லை சக்கரைபோட்ட ஜீராவாவது வரும்னு உக்காந்திருந்தேன்.
ரவிக்கை கடையில் வெறும் ரவிக்கையைன்னா வாங்கிண்டு வரணும்? இவளைப்போல ரவிக்கை தைக்க வந்தவாளொட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு? அது என்னமோ லெடீஸ் டாய்லெட்டில் அல்லது ரவிக்கைக் கடையில், போடிக்கில், ப்யூடி பார்லரில் கூட இருக்கரவாளொட இழைஞ்சுட்டு நம்மேல் விழுந்து பிடுங்கினா? எப்படி பெச்சை ஆரம்பிச்சிருப்பா?
“இப்போல்லாம் சரியா ஃபிட்டா தைக்கரதில்லை”ன்னுதான். அப்புரம் “நீங்க இங்கேதான் வழக்கமா தைக்க கொடுக்கரதா”ன்னு. அவள் என்ன சொல்லியிருப்பா? “இல்லை எனக்கு ஃபிட்டா வரதே! உங்களுக்குத்தான் உடம்பில் கோளாரு, தைக்கரவன்மேல் தப்பில்லை”ன்னா சொல்லுவா? நிச்சயம் கிடையாது. “ஆமாம், நானும் பல இடங்களில் கொடுத்துப் பாத்துட்டேன், நன்னா வரலை, அதான் ஆத்துலேந்து தூரமானலும் இங்கே வந்துடரது”ன்னு சொல்லியிருப்பா. உடனே “நீங்க எங்கேந்து வரேள்”. அவள் “நீங்க வேலை பாக்கரேளா?” “இல்லை நான் ஹவுஸ் வைஃப், எங்காத்துக்காரர் இன்ன இடத்தில்”னு சொல்ல, அவள் கண் விரிய “நானும் அங்கேதான், உங்காத்துக்காரர் பேர் என்ன?” விஷயம் இப்படி விபரீதமா போயிருக்கு.
இதெல்லாம் நடக்கரச்சே கௌசல்யா ஆத்துக்காரன் என்ன செஞ்சான்? நகத்தை கடிச்சிண்டு போர வர காரெல்லாம் எண்ணிண்டு. இல்லை என் ஆத்துக்காரியை சைட் அடிச்சிருப்பான். இப்போ அதுவா முக்கியம்?
காரை எடுத்துண்டு திரும்பி வரச்சே சித்தே நாழி பேசாம வந்தவள், கத்திப்பாரா தாண்டினதும் மெல்ல கௌசல்யா மேட்டரை எடுக்கரா. சாப்பிட்ட களைப்பு தீர்ந்துத்து போலேருக்கு.
“எனக்குத் தெரியாம ஆபீஸில் கூட வேலை பாக்கிர பொண்களோட சிரிச்சுப்பெசி, இழையர வழக்கமெல்லாம் வேண்டாம். அப்புரம் எனக்கு கெட்ட கோவம் வரும். இன்னைக்கு எதெச்சயா இவளைப் பாத்தேன் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இன்னும் எனக்கு தெரியாம என்னெல்லாம் இருக்கோ! ஒரு நாளைக்கு நானே ஆபீசுக்கு வரணும். வந்தா எல்லாத்தையும் சரி செஞ்சுட்டு திரும்பலாம்”. சீரியசா மண்டகப்படி இப்போதான் ஸ்டார்ட்னு நினெச்சுண்டேன். இன்னும் 20 கிமீ போகணுமே. இன்னும் என்னத்தையெல்லாம் புலம்பிண்டே வரப்போராளோ!
பிரேமாகிட்டே ஒரு குணம், எந்த ஆர்குமென்டுலேயும் அவளொடதுதான் கடைசீ ஸ்டேட்மென்டா இருக்கணும். அதாவது விவாதத்தில் அவள் சொன்னது எல்லார் காதிலேயும் கடைசீயா விழணும். அப்பத்தான் அவள் ஜெயிச்சதா அர்த்தம்னு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கா. அதுக்காக நாம ஒண்ணுமே பேசாம அவளை பெசவிட்டுட்டா அவளாவே டயர்டாகி கடைசீ வார்த்தைகளை சொல்லிட்டு அடங்கிடுவான்னு நினெச்சா அதைவிட பெரீய முட்டாத்தனம் கிடையாது. நானும் அப்பபோ அவள் கேக்கரத்துக்கு ஏதாவது சொல்லணும் வெறுமனே “உம்” கொட்டினாப் பத்தாது. அவள் சொல்லுக்கு மறுப்பு சொல்லணும் அதுக்கு அவள் மறுப்புசொல்லி என்னை அடக்குவா. அப்போதான் திருப்தி.
கௌசல்யா மேட்டர் எப்படி திரும்பும், எப்படி முடியும்னு தெரியலை.
ஆத்துக்காரர் மேல் இன்னைக்கு சந்தேகப்பட்டுடரதுன்னு கார்த்தாலே எழுந்ததுமே தோணியிருக்கு. கிளம்பரச்சேயே அதைப்பத்தி யோசிச்சாளா இல்லை தையற்கடையில் அவள் என்னோட வேலை பாக்கரான்னு தெரிஞ்சதும் ஐடியா வந்ததா, இல்லை கௌசல்யா நிஜமாவே என்னை பாத்துட்டு இழைஞ்சாளா, அதைப் பாத்துட்டு இவளுக்கு பொறி தட்டிச்சா, நான் அவளோட கைகுலுக்கரச்சே என்னையும் அறியாம சித்தே நேரம் அவ கையை விடாமல் பிடிச்சுட்டேனா, கையை குலுக்கினேனா இல்லையான்னு ஒரே குழப்பம். ஆதியும் அந்தமும் இல்லாத பிர்ச்சனையான்னா போயிடுத்து.
ஏர்போர்ட்டை தாண்டரச்சே “அதோ பாரு இங்கேதான் சீலிங்க்லே கண்ணாடியெல்லாம் ஒவ்வொண்ணா விழறதாம், பேப்பரில் நீகூட படிச்சாயே!” பேச்சை மாத்தலாம்னு. அசரலையே! “எனக்குத் தெரியும்”னுட்டு அந்தப்பக்கம் பாத்துண்டே வரா. அப்போதான் என் செல் அடிச்சது.
நான் எப்படி எடுக்கரது? இங்கே டிராஃபிக் போலீஸ் வேர நிப்பன். மாட்டிண்டா செமத்தியா ஃபைன் போட்டுடுவன். “எடு, யாருன்னு பாரு”ன்னு இவளை சொல்ல, எடுக்கரா, “கௌசல்யா”ன்னு பேர் திரையில் வர, இவள் முகம் சிவக்க, அது இப்படின்னு நான் புரிஞ்சுக்கரத்துக்குள்ள, இவள் “அந்த கேணச்சிறுக்கி, என்னை இறக்கி விட்டுட்டு நீங்க தனியா வெராண்டாவில் உக்காந்திண்டிருப்பேள்னு போன் செய்யரா”ன்னு கத்த, யார் அந்த கேணச்சிறுக்கின்னு மண்டை குழம்ப எதுத்தாப்புலே கிராஸ் செஞ்ச ஒரு பாட்டியையும், பின்னாடியே ஒரு தக்காளி வண்டியை தள்ளிண்டு வந்த பெரியவரையும் கவனிக்கலை.
டக்குன்னு பார்த்தா எதுத்தாப்புலே அவா, ப்ரேக்கை போட்டு, ஸ்டீயரிங்கை வெடுக்குன்னு திருப்பரேன். வண்டி ஏர்போர்டுக்கு முன்னாடி அகலமான ரோட்டில் சித்தே வேகம் எடுத்ததில் எப்படி சாத்தியம்? டமால்னு திருசூலம் ஸ்டேஷன் காம்பவுண்டில் என் கார் முட்டி நிக்க, முன்னாடி கண்ணாடியெல்லாம் உடைஞ்சு சிதற.....
ரெண்டுபேரும் சீட் பெல்ட் போட்டுண்டு வந்ததால் இழுத்துப்பிடிச்சு புஸ்ஸுன்னு கிளம்பி பெரூசா விரிஞ்ச ரெண்டு பலூனுக்குள் ரெண்டுபேரோட மூஞ்சியும் புதைஞ்சிண்டுது.
No comments:
Post a Comment