Thursday, September 3, 2020

பார்க்கின்சன்

பார்க்கின்சன் (சிறுகதைகள் சீ2 – 06)
#ganeshamarkalam

இந்த வார்த்தையை கேட்டப்போ ஏதோ பார்க்கில் பொறந்த ஆண்பிள்ளைன்னு நினெச்சேன். அப்புரம்தான் இது கொடுமையான வியாதியை குறிக்கும் மருத்துவச்சொல்னு புரிஞ்சது. நரம்பு மன்டலம் பாதிக்கப்பட்டு உடம்பு உருக்குலைஞ்சு போயிடுமாம். நாம நம்பளையே செயலிழந்து போரதை கண்கூடாப்பாத்துண்டு உயிரோட இருப்போமாம். சரிதான். என்னவெல்லாம் மனுஷாளைப் படுத்தறது!

இப்படியெல்லாம் ஏன் நடக்கறது? யாருக்கு இப்படியெல்லாம் வரது? குடிப்பழக்கம் இருக்கரவாளுக்கு “மேலதான்” எங்கிற பாய்சன் ஆகி இப்படி ஆகலாமாம். கெட்ட பழக்கம் இல்லாதவாளுக்கும் வருமாம். அப்படின்னா ஏன் குடிக்காம இருக்கணும், உயிரோட நன்னா ஆண்டு அனுபவிச்சுட்டு போகணும்னு தோணும். பூர்வஜன்ம பலனோ? அப்படீன்னா நம்பளாலே ஒண்ணுமே செய்யமுடியாதா? ஏன் பயப்படணும்? இப்படியெல்லாம் தோணும். தோண்ரதுக்கெல்லாம் ஆராய்ச்சி செஞ்சுண்டு, மனசை கலவரப்படுக்கிற ஆள் நான் இல்லை. “ஹாப்பி கோ லக்கி பெர்சன். ஜாலியா, ஜோக் அடிச்சிண்டு., நடக்கர விஷயங்களிலெல்லாம் ஹாஸ்யம் இருக்கான்னு தேடி துழாவி அதை பெருசுபடுத்தி அனுபவிச்சு சிரிச்சுட்டு போயிண்டே இருக்கணும்பேன். அதான் என் பாலிசி.

ஆத்துலே திட்டுவா. “சீரியஸா ஒரு முக்கியமான மேட்டர் பேசிண்டிருக்கச்சே நீங்க கூத்துலே பீத்தல் மாதிரி ஒரு கமென்ட் அடிக்கரேளே, இது உங்களுக்கே நன்னா இருக்கா”ன்னு. 

அன்னைக்கு அப்படித்தான் மச்சினியும் ஷட்டகரும் அவா பொண்ணுக்கு வரன் திகையும்போல இருக்கு சம்பந்திப்பேரைப்பத்தி விசாரிச்சுட்டு, அவா வீட்டையும் பாத்துட்டு மத்த சமாசாரங்களையும் பேசிட்டுப்போலாம்னு வந்துருந்தா. நான்தான் “எம்பொண்ணுக்கு அப்படித்தான் செஞ்சேன், சம்பந்திப்பேரை அவாத்தில் சந்திச்சு எடைபோட்டு திருப்திப்பட்டுண்டு அப்புரம் ப்ரொசீட் செய்யரது நல்லது”ன்னு எடுத்துக்கொடுத்தேன். அதான் வந்திருக்கா. நேத்து போய் பாத்துட்டு வந்துட்டோம். நன்னா உபசரணை கிடைச்சது. நல்ல மாதிரித்தான் பட்டது. அவாம் நன்னா வச்சிண்டிருக்கா. என்ன கொஞ்சம் ஆத்து வாசலில் கீக்கிடமாவும் ஒரு அகண்ட சாக்கடையும். தெரியாம ரயில்வே லைனுக்கு பக்கத்தில் ப்ளாட் வாங்கிட்டாராம். இப்போ கிட்டக்கேயே பொரம்போக்கு இடத்தில் சேரியும், ரயில் சத்தமும் சில பல சுகாதாரக்கேடுகளும் வந்து குடியேறிடுத்தாம்
பையனுக்கு தனியா ரெண்டு கிமீ தள்ளி ஃபிளாட் புக் செஞ்சு வச்சிருக்கா. 

நாங்க நினைக்கரதை காதில் கேட்டுட்டாமாதிரி “உங்காத்துப்பொண் கல்யாணம் ஆகி அந்த ஃபிளாடில்தான் குடித்தனம் வைக்கப்போரா”ன்னு சொன்னா. அப்புரம்தான் என் ஷட்டகர் முகத்தில் சிரிப்பு வந்தது.

திரும்பி வரச்சே இதைப்பத்தித்தான் பேசிண்டே வந்தோம். இவாகிட்டே நிச்சயதார்த்தத்துக்கு நாள் சொல்லணும். ரெண்டு டேட் சொல்லியிருக்கா. அதுனாலே “என்ன அத்திம்பேர்! நீங்க என்ன சொல்ரேள் ப்ரொசீட் செய்யலாமோன்னோ”ன்னு மச்சினி கேக்கரா. அப்போதான் நான் விவஸ்த்தையில்லாமல் ஜோக் அடிக்கப்போய் என் ஆத்துக்காரிகிட்டே திட்டு வாங்கினேன். என்ன ஜோக்குன்னு தெரிஞ்சுக்கா ஆவலா? இருக்காதா பின்னே? “நம்மாத்து பொண்ணும் பாத்திருக்கிர மாப்பிள்ளை பையனும் வாட்ஸப்பில் குடுத்தனமே நடத்திண்டிருக்கா நீங்களும் நானும் ப்ரொசீட் செய்யலாமான்னு பேசிண்டிருக்கோம்”னு சொல்லிட்டேன். இது எல்லாருக்கும் தெரியும்தான். இருந்தாலும் இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிருக்கப்பிடாதுதான்.

இப்படி நிறைய நடக்கும் ஆத்தில். அன்னைக்கு ஷட்டகர் அவ்வளவா என் ஹாஸ்யத்தை ரசிக்கலை. “சார், கோவிச்சுண்டுட்டேளா”ன்னு கேட்டேன். அதுக்கு அவர் “இல்லை இந்த ஃபிளாட் பத்தி சம்பந்தி மாமி சொன்னாளே அது எப்போ அல்லாட் ஆகி எப்போ என் பொண்ணு குடிபோறது, அங்கே பில்டர் அஸ்திவாரம் பொடர வேலையே இன்னும் ஆரம்பிக்கலையே”ங்கிரர். ஃபிளாட் கட்டவேண்டிய இடத்தில் இன்னும் புல்லு முளைச்சது அப்படியே இருக்கு. இன்னும் 3 மாசத்துலெ முஹூர்த்தம் வச்சிண்டா, அஸ்திவாரம் போட்டு எப்போ 8 மாடி எழும்பறது, எப்போ இவர் மாப்பிள்ளைக்கு அலாட்மென்ட் கிடைக்கரது? அதுவரைக்கும் இவர் சீமந்திர புத்ரி, கண்ணும் கருத்துமா வளர்த்துட்டு அந்த சாக்கடையைத் தாண்டிக் குதிச்சுப்போய் குடித்தனம் வச்சுண்டு, பெட்ரூம் ஜன்னல்லேந்து சேரியைப்பாத்துண்டு இருக்கணுமான்னு அவருக்கு வாஸ்தவமான கவலை. 

நான் அதுக்கும் ஜொக் அடிச்சேன். என் சுபாவம் அப்படி. என்ன ஜோக்குன்னு சொன்னா நீங்களும் சிரிக்கலாமே. சொல்ரேன். “நீங்க கவலைபடாதீங்கோ இன்னும் 2 மாசத்தில் உங்க பொண்ணுக்கு நான் ஹைஜம்ப் லாங்க்ஜம்ப் எல்லாம் சொல்லித்தரேன்”னு. அவர் பாவம் வெகுளின்னா அப்படி ஒரு வெகுளி. “எதுக்கு”ன்னு கேட்டர். இதுகூட புரியலையா, சாக்கடையைத் தாண்டத்தான்”னு என் மச்சினி பின் சீட்டுலேந்து எடுத்துக்கொடுத்தாள். அவள் சூடிகையான பொண். அவள் அக்கா மாதிரி!

அடுத்த 60 கிமீக்கு காரில் என்னோட யாரும் பேசலை. எனெக்கென்ன போச்சுன்னு நான் ரோட்டை பாத்து காரை ஓட்டிண்டு வந்தேன்.

அசாத்திய தைரியம் இருந்தாத்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்னு எங்க அப்பா சொல்வர். அதே மாதிரி நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இருந்தால் அப்படி முன்னேரரச்சே என்ன கஷ்டங்கள் வந்தாலும் “பூ”ன்னு ஊத்தித்தள்ளிட்டு போயிண்டே இருக்கலாம்னு அவரே சொல்வர். எனக்குத்துணிச்சல் இருக்கோ இல்லையோ, வாழ்க்கையில் என்ன ஆனாலும் சிரிக்கத்தெரியும். இடுக்கண் வருங்கால் நகுக. குறள் 621. 

நான் நகுக பண்ணிட்டு மத்தவாளையும் நகுக வைக்கத்தெரியும். 

அனால் சில ஜந்துக்கள் எப்போவும் சீரியஸ். யொசிச்சுப்பாத்தால் நானும் என்னோட ஹ்யூமர் வெளிப்பட்டே ஆகணும்னு முயற்சி செஞ்சு பலசமயம் சிலரை மகிழ்விச்சும் சில தடவை பலரை நோகவும் அடிச்சிண்டு வந்திருக்கேனோன்னு தோணித்து. ஒவ்வொரு சமயம் விவஸ்த்தை இல்லாம ஜோக் அடுச்ச எனக்கே அடுத்த விநாடியே நாம செஞ்சது தப்புன்னு விளங்கும். அதுக்குள்ள டேமேஜ் நடந்து முடிஞ்சிருக்கும். 

நினெச்சுப்பேன் நம்ம நாக்குத்தான் நமக்கு முதல் எதிரின்னு. பல விதத்திலும் இது சரியாகத்தான் இருக்கு. நாக்கை அடக்கிட்டா பாதி பிராப்ளம் சால்வ்ட். ஆனால் சொல்லணுமே வேண்டாமா, சொன்னா சரியாப்படுமான்னு யோசிக்கரத்துக்கு முன்னாடி நாக்கு பேசிடுறது. அதுக்கும் ஒரு குறள் உண்டு. யாகாவாராயினும்.

இப்படி லைஃப் போயிண்டிருக்கச்சேதான் ஒண்ணு நடந்தது.

அன்னைக்கு அசதியா இருந்ததுன்னு சீக்கிரம் சாப்டுட்டு படுத்துண்டு தூங்கிட்டேன். ராத்திரி பாத்ரூம் போலாம்னு எழுந்துண்டா, கைகாலெல்லாம் கட்டை மாதிரி, கொஞ்சநாழிக்கு அசைக்க முடியலை. முதல்லே பகலில் தூங்கினா நம்மை வந்து அழுத்துமே முனீஸ்வரனோன்னு பயந்தேன். அப்படி இருந்தால் அப்படியே கொஞ்சநாழி படுத்துண்டு இருந்தால் அசந்து தூங்கரேன்னு போயிடும். கார்த்தாலே வியர்த்துகொட்டியிருந்தது. அப்புரம் காபி டம்ப்ளரை கையில் பிடிக்கரச்சே கையில் ஒரு நடுக்கம். ஒரு உதறு உதறிட்டு குடிச்சேன், ஒண்ணும் பிராப்ளம் இல்லை.

இப்படி காலம் நேரம் தெரியாம குதற்கமா பேசிண்டு மத்தவாளை கஷ்டப்படுத்தினதுக்கு பகவான் மீளமுடியாம ஏதோ தண்டனை கொடுக்கப்போராரோ?. ஜோக் அடிக்கறதையே குறைச்சிண்டேன். என்னை அறியாம மூஞ்சி உம்முன்னு ஆகிடுத்து.

நாமதான் நமக்கு நாமேன்னு டாக்டர் ஆகி எல்லா மருத்தவமும் செஞ்சுப்போமே, அதில் நான் கில்லாடி. எனக்கு சுக்கு கஷாயம் வச்சுக்கொடுன்னு வாங்கி குடிச்சாச்சு. வைத்தியம் அங்கேந்துதான் ஆரம்பிக்கும். சாயங்காலம் கொஞ்சம் உடற்பயிற்சி. தாத்தாவுக்கு என்ன ஆச்சு பாருன்னு என் பேரனைக்கூப்பிட்டு நான் செய்யறதை காட்டினா என் மாட்டுபொண். “என்ன தாத்தா பண்ராய் புஸ் புஸ்னு மூச்சு விடராய்”ங்கிரான் அவன். அவன்கிட்டே ஜம்பமா என் வலது கையை மடிச்சு வச்சிண்டு “பார் தாத்தா எவ்வளவு ஸ்ட்ராங்க், என் கையை பிடிச்சிண்டு ஊஞ்சல் ஆடு”ங்கரேன். செய்யரான். எப்போடா இவன் இறங்குவான், தெரியாத்தனமா இவனை கூப்பிட்டு என் பூஞ்சையான கையில் தொங்கச் சொல்லிட்டோமேன்னு பட்டது. அவன் பிடிச்சிருந்த இடம் சிவந்து போய் ராத்திரி படுத்துக்கரச்சே ஆத்துக்காரி ஒத்தடம் வைக்கணுமான்னு கேட்டா.

மூணு மாசம் கழிச்சு என்னன்னு தெரியலை உக்காந்து எழுந்துக்கரச்சே முடியாம போறது ஆரம்பிச்சது. அப்படியே எழுந்துட்டாலும் நடக்கரச்சே கால் தரையில் தேய்க்கிரா மாதிரி பட்டது. ரெண்டு நாள் ஆனப்புரமும் எதுக்கு இத்தனை பெரீய வீட்டை கட்டினோம்னு தோணித்து. தில்லி பிரசாத் நகரில் 8க்கு 8 ரூம் ரெண்டு, காலை கொஞ்சம் எட்டி வச்சா தெருவில் வந்துடுவோம் அப்படி இருந்திருக்கலாமேன்னு பட்டது. சாப்பிடும்போதும் கொஞ்சமா தலை சுத்தராப்புலே, சப்பாட்டை முழுங்கவே கொஞ்சம் சிரமமாயும். ஒண்ணும் பெரீசா சமையல் இல்லை – பருப்புத்துகையல் சுட்ட அப்பளம்தான், அதை விரலில் வழிச்சு வாயை தொறந்து நாக்கை நீட்டி தடவி முழுங்கறதே சிரமமாப்போச்சு.

நாம க்ரிப்பிள் ஆகப்போரோமா, ஆஸ்பத்திரியிலே போய் அட்மிட் ஆகணுமான்னெல்லாம் தோணித்து. அப்போதான் நெட்டில் இப்படியெல்லாம் இருந்தால் என்னவா இருக்கும் தேட ஆரம்பிச்சேன். அப்போ கண்டுபிடிச்சதுதான் அந்த வார்த்தை – பார்கின்சன். அவன் போட்டிருந்தது எல்லாமே எனக்கு நடக்கிராப்போலவே. அப்போத்தான் ஞாபகத்துக்கு வரது, எங்காபீஸில் குப்தான்னு ஒரு பெங்காலி அவருக்கு 59 ஆரச்சே பார்கின்சன் வந்துடுத்து. 6 மாசத்தில் படிப்படியா அவர் தள்ளாடர நிலைமைக்கு வந்துட்டர். அவர் பேசினா யாருக்கும் புரியாது. அவர் நடைவண்டி மாதிரி வச்சிண்டு வருவர். எதிரில் வரவாளை அடையாளம் தெரியும் ஹலோ சொல்லி சிரிக்க முடியாது. அவர் காதுகிட்டே போய் எப்படி இருக்கேள்னு கேட்டால் கண் எங்கேயோ பாக்கும் தலைமட்டும் நடுங்கும். நன்னா இருக்காராம்.

என்னை டாக்டர்கிட்டே காமிச்சுடலாம்னு தோணித்து. அவர் என்ன சொல்வாரோ அப்புரம் என்னன்னு தெரியும். ஆத்துக்காரிகிட்டே சொன்னேன். கூட துணைக்கு வரணுமே! அவள் செஞ்ச பருப்புத்துவையலை வேண்டாம்கிரா மாதிரி அன்னைக்கு தட்டிலேயே வச்சுட்டு எழுந்துண்டதுக்கே இன்னும் கோவம் தீரலை. எல்லோரும் சப்புக்கொட்டிண்டு சாப்பிட்டதை இந்த மனுஷன் ஒதுக்கி வச்சிருக்கான் அதுக்கே டாக்டர்கிட்டே இவனை காமிக்கணும்னு நினெச்சிருப்பா.

எங்க ஃபேமிலி டாக்டர் நிறைய படிச்சிருக்கர். எங்கப்பாவை அவர்தான் கவனிச்சுண்டர். அம்மா விஷயத்தில்தான் அவரால் ஒண்ணும் செய்யமுடியலை. அதுக்காக அவரை கையாலாகத டாக்டர்னு சொல்லமாட்டேன். நிதானமா டயக்னைஸ் செஞ்சு வேணும்கிர மருந்தைத்தான் எழுதிக்கொடுப்பர். “ஒரே ஒரு கண்டிஷன், நீயே உனக்கு என்னன்னு நெட்டில் பாத்துட்டு வந்து பினாத்தப்பிடாது, உன் வழக்கமான வரட்டு ஜோக்கெல்லாம் என் கிளினிக்குக்கு வந்தால் அடிக்கப்பிடாது”ன்னு சத்தியம் வாங்கிண்டிருக்கர். 

ஆத்துலேயே முன் ரூமில் கிளினிக். எங்களுக்கு டிபன் டயம்னா சரவணபவன் மாதிரி எல்லாமே கிடைக்கும். அவாத்து காபி அப்படி இருக்கும். போரச்சே அவாத்து மாமி பேரனுக்கு கொடுங்கோன்னு ஏதாவது டிபன் பாக்ஸில் வச்சுத்தருவா.

அப்பாயிட்மென்ட் கிடெச்சு போய்ச்சேரரத்துக்கு கொஞ்சம் நாழியாச்சு. “உக்காந்துக்கோ, இதோ வரேன்”னுட்டு என் ஆத்துக்காரியை மட்டும் அவாத்துக்குள்ளே அழைச்சிண்டு போனர். எனக்கு என்ன பண்ணரதுன்னு முதல்லே அவள் கிட்டே கேட்டுத்தெரிஞ்சுண்டு அப்புரம் எங்கிட்டே வரர். என்னையும் கேக்கரர். நான் ஒண்ணுவிடாமல் சொல்ரேன். “பார்கின்சனா இருக்குமோ”ன்னு பட்ரதுன்னேன். ஒரு முறை முறைச்சாரே பாக்கணும். “அதை நான் சொல்லணும். நான் சொல்ரத்துக்கே நிறைய உனக்கு டெஸ்ட் எடுக்கணும். இன்னும் உன் பல்ஸ் கூடப்பாக்கலை. சும்மா கிட”ன்னுட்டு கண்ணை விரிக்கச்சொல்லி, தொண்டையை காண்பிக்கச்சொல்லி எல்லாம் நடந்தது.

கடைசீல சில டெஸ்டும் எடுத்துட்டு சாவகாசமா சொன்னர். உனக்கு கேல்ஷியம் டெஃபிஷியன்ஸி, வாரம் ஒரு ஊசி போட்டுக்கோன்னு முதல் ஊசியைப்போட்டர். உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருந்தது. “என்னா நன்னா ஃபீல் ஆறதா, அதுக்காக தினம் போட்டுக்கபிடாது, இந்த வயசில் வாரம் ஒண்ணு போதும். மூஞ்சியை இனிமேல் சாதாரணமா வச்சுக்கோ. பார்கின்சனெல்லாம் கிடையாது, சந்தோஷமா எப்பவும்போல ஜோக் அடிச்சிண்டு ஜாலியா இரு. எல்லோரையும் ஜாலீயா வச்சுக்கோ”ன்னுட்டர்.

ஆத்துக்குப்போய் ஷட்டகருக்கு போன் செய்யணும். அவர் பின்னம்மண்டையில் விழிந்த வழுக்கையைப்பத்தி அடக்கி வச்சிருக்கிர ஜோக்கை சொல்லணும்.

No comments:

Post a Comment