Thursday, September 3, 2020

கூத்தாடிகள்

கூத்தாடிகள் (சீசன் 2இல் சுட்டுண்டு வந்தது)
#ganeshamarkalam

பெருங்களத்தூர்லேந்து பைபாஸை பிடிச்சா ஓரகடம் போர வழீலே மணிமங்கலத்துக்கு ரைட்லே திரும்ப இடம் வரும். திரும்பினதுமே ரோட்டோரத்தில் கொட்டாயக் கட்டிண்டு குறவக் கும்பல். நான் கன்சல்டிங்க் செய்யும் கம்பேனி, நாவலூரில் இருக்கு, அங்கே போரச்சே பார்த்தேன். 

வழக்கமா ஒண்ணு ரெண்டு பெர் குடிசைக்கு வாசல்லே உக்காந்திருப்பா, அன்னைக்கு திருவிழா மாதிரி நிறைய பேர் வெளீலே. என்னடான்னு பார்த்தா கூட்டத்தில் சில ஃபாரீன் டூரிஸ்ட் நின்னா. அவாகீட்டே இவா ஏதோ பொருட்களை விக்கரா மாதிரி பட்டது. டூரிஸ்ட் வரப் போர இடமில்லையே இது? அதிகம் யோசிக்காம கடந்து போனேன்.

மதுரையில் இருக்கச்சே குறத்தி வாசல்லேயே வருவா, பாசி மணி மாலை இன்னும் எதேதோ விப்பா. பேரம் பேசி வாங்கிப்பா. 8ஆவது படிச்ச ஞாபகம். ரெண்டும் கெட்டான் வயசு. கட்டுப்பாட்டோட வளர்ந்த காலம். டிவி, நெட் கிடையாது. இவாளைப் பாக்கரச்சே கிளிகிளூன்னு இருக்கும். குறத்தி போட்டுக்கர ட்ரெஸ் அப்படி. பல வருஷம் அப்புரம் “கல்நாயக்” படத்தில் கிட்டத்தட்ட அதுமாதிரி போட்டுண்டு “சோளிக்கே பீச்சே க்யா ஹை”ன்னு பாட்டு. அப்போ நான் மதுரையிலேயே இதெல்லாம் கண்டுபிடிச்சு பாத்தாச்சு, பீசே என்னன்னு நீங்கெல்லாம் இன்னும் கேட்டுண்டிருக்கேள்னு சொல்லத் தோணித்து. 

எந்த வயசு குறத்தீன்னாலும் இடுப்பில் ஒரு குழந்தை. கூர்ந்து இடுப்பை கவனிச்சா தெரியும், ரெண்டு பேரும் அத்தனை அட்டுக் கருப்பு.  அப்புரம் சினிமாவில் பாக்கரதோட சரி. பாண்டிச்சேரி போரச்சே ECRஇல் சில சமயம் பாக்கலாம். எப்போவும் நாடோடிகளா ஊர் ஊராச் சுத்திண்டு குடும்பம் நடத்திண்டு, வம்சத்தை பெருக்கிண்டு, இவாளால் எப்படி முடியறது? “மஹாநதி”யில் கமலோட காணாமப்போண புள்ளையை எடுத்து வளத்தது குறவர்கள்னு ஞாபகம்.  

ஒருக்கா மணிமுத்தாறு ஃபால்ஸ் பாத்துட்டு பஸ்ஸில் திரும்பரச்சே திருநெல்வேலிலே ஒருத்தரை இறக்கிட்டு பஸ் ஸ்டேண்ட் கிட்டே நிறுத்தி எல்லாரும் அல்வா வாங்கிக்கணும்னு போனா. நானும் கஸ்தூரியும் மட்டும் அல்வா வாங்கிக்கப் போவதில்லைன்னு பிடிவாதமா பஸ்ஸிலேயே. ஜன்னல் கிட்டே வந்த குறவன் “புலிப்பல் வாங்கலையோ”ன்னு இவள்கிட்டே கேக்க இவளுக்கு உடனே வாங்கிண்டுடணும்னு. “அதை வச்சிண்டு என்ன பண்ணுவாய்?” கேட்டேன். “வச்சிண்டா நல்லது நடக்கும்.” புருடா விட்டான். 

ஆத்துக்காரி இம்ப்ரெஸ்ட். “புலி நகமா பல்லான்னு கேளு.” கொளுத்திப் போட்டேன். இவள் மனசில் சந்தேகம் புகைய ஆரம்பிக்க “நீங்களே பாருங்க!” கையில் வச்சுட்டான். இவள் எத்தனை புலிக்கு பல்லைப் பிடிச்சு பாத்திருக்கா? சித்தே பாத்துட்டு “நீங்க சொல்லுங்கோ!” நானும் ஆராய்ச்சி செய்யரா மாதிரி பிடிச்சிண்டிருந்துட்டு, மூக்குக் கண்ணாடியை கழட்டியும் சித்தே பாத்துட்டு “இது நரிப்பல், ஏமாத்தரான்.” சொன்னதும் வேண்டாம்னு அவன் கையில் போட்டுட்டா. அவன் ஒரு லுக் விட்டானே பாக்கணும்! பஸ்ஸில் ஏறி கடிச்சிருப்பான்னு தோணித்து. 

வேலை முடிஞ்சு திரும்பி வரச்சே குடிசைக்கு வெளீலே யாரும் இல்லை. ஆத்துக்குப் போனதும் புலிப்பல் ஸ்டால் போட்டிருக்கா வழீலே பாத்தேன்னு சொல்லணும்னு நினெச்சிண்டேன். ஆனா அவள் எனக்கு சொல்லணும்னு ஒண்ணு வச்சிருந்தா. 

“தெருவில் கூத்து நடந்தது. எல்லாரும் பார்த்தோம், அப்புரம் காசு தரச்சே நான் 50ரூபாய் தந்தேன். இதோ பாருங்கோ வீடியோ எடுத்தேன்” காமிச்சா. குறத்தி கும்பல்தான், ஒரு 8பேர் தெருவில் நடந்துண்டே ஆட்டம் பாட்டம், கயித்துமேல் நடந்து, கொண்டு வந்ததை வித்து! “பொழுது போச்சா?” “நன்னாவே போச்சு. எல்லாம் முடிஞ்சதும் குடிக்க தண்ணி கேட்டா, கேட்டைத் தொறந்து வச்சு வா வந்து குடிச்சுக்கோன்னு ஃப்ரிட்ஜ்லேந்து தந்தேன். பெரீய அடுக்கில் ரொப்பி, குடிக்க 2 டம்ப்ளரும். கொல்லையில் கிடக்கு. கழுவணும்”. “சரி நல்ல காரியம்தான்.” அடிக்கற வெய்யலில் இதுகூட செய்யலைன்னா? 

தெருவுக்கு 100 சம்பாதிச்சிருந்தா ஆச்சர்யம். இவள் 50தந்தா, பலபேர் சில்லரைக் காசாத்தான் கொடுத்திருப்பா. வீடியோவில் குட்டியூண்டா ஒரு பொண் தட்டை எடுத்துண்டு ஒவ்வொருத்தர் கிட்டேயும் போவதை பாத்தேனே.  

மத்தாநா சாயங்காலமா ஊஞ்சலில் உக்காந்திருக்கேன். முட்டுச்சந்து நாராயணன் வாக்கிங்க் போரச்சே என்னைப் பாத்துட்டு உள்ளே வந்தான். சௌக்கியமான்னு கெட்டுண்டு. ஏன் உடம்புக்கு வராமல் இருக்கேன்னு அவன் கவலைப் படும்படியான தோரணையில். அவனுக்கு ஏகப்பட்ட வியாதி. எல்லா ஆங்கிலப் வியாதிப் பெயரும் அதுக்கு ட்ரீட்மென்டு என்னன்னு தெரியும். இதே கேள்வியை நான் கேட்டிருந்தா வாக்கிங்க் போகாம விலாவாரியா அவனுக்கு என்னன்னு சொல்லிக் காட்டுவன்.  

ஒருதடவை அப்படி நடந்து வாக்கிங்க் போனவனைக் காணோம்னு அவாத்து மாமி தேடிண்டு பார்க்குக்கு போக, அங்கே அவன் வரலைன்னு தெரிஞ்சு பதட்டப்பட்டு “நீங்க பாத்தேளா?” கேட்டுண்டு எங்காத்துக்கு வர, அப்புரமா அவனைப் பாத்தவள் எங்களை வச்சிண்டே எப்போவும் திட்டரா மாதிரி காஞ்ச வானலியில் பச்சை மிளகாயை எண்ணை விடாம வதக்கினா மாதிரி அவனை பண்ணிட்டு இழுத்துண்டு போனா. 

அதனால் இன்னைக்கு “நீங்க சௌக்கியமா”ன்னு நான் கேக்கலை. அவன் வந்தது முக்கிய காரியத்துக்காக. 

“மாமி இல்லையா?” “இல்லை கோவிலுக்கு போயிருக்கா, உக்காந்துக்கோங்கோ.” ஊஞ்சலில் நகந்து இடம் தந்தேன். “நேத்து ஒரு விஷயம் நடந்தது, உங்ககிட்டே சொலலணும்னு வந்தேன். கோவிச்சுக்கப் பிடாது”. “கோவிச்சுக்கலை, சொல்லுங்கோ”. என்னவா இருக்கும்னு பாத்தா, நேத்து கூத்து நடந்ததையும், குறத்தி ஃபேமிலீயை எங்காத்து மாமி காம்ப்பவுண்ட் உள்ளே விட்டு கொண்டாடினதையும், எதுத்தாத்து சந்தானம் உங்காத்தில் 50ரூபா தந்தான்னும் தெரியப்படுத்தினான். “அப்படியா?” வியந்து போனாப் போலே நடிச்சேன். தெரியுமேன்னு சொன்னா இவனுக்கு சப்புன்னு போயிருக்கும், இன்னும் சொல்ல வந்ததை சொல்லாம போயிடுவான்னு தெரிஞ்சதா காமிச்சுக்கலை. 

“இப்போல்லாம் காலம் கெட்டுக் கிடக்கு, இவாளை ஏன் உள்ளே விடணும்? 20 நிமிஷம் கூத்தாடினதுக்கு 50ரூபாய் பிச்சை ஜாஸ்த்தி. எதுக்கும் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன், நான் சொன்னதா இருக்கவேண்டாம், மாமி கிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்கோ.” கிளம்பிட்டான். அடடா, என்ன கரிசனம் இவனுக்கு! 

பாவம் அந்த கூத்தாடிகள். ஏதோ வயித்துப் பிழைப்புக்கு. பிச்சைன்னு எடுக்காம, தங்களுக்கு தெரிஞ்ச வித்தையை காமிச்சு கொடுத்தா கொடுங்கோன்னு அலுமினியத் தட்டையோ இல்லை கட்டிண்ட பாவாடையையே தூக்கிப் பிடிச்சு போட்டதை வாங்கிண்டு, ரெண்டு மாசத்தில் வேற எங்கேயாவது புலம் பெயர்ந்துண்டு. அவாளுக்கு தெரியுமா சந்தானமும், நாராயணனும் பின்னாடி பெரீய சதி செய்யறதை? 

கஸ்தூரி வந்ததும் நாராயணன் வந்ததையும் பெசிட்டுப் போனதையும் சொன்னேன். “ஆமாம், கோவீல்லேந்து வரச்சே அவாத்து வாசலில் நின்னுண்டூ நமுட்டுச் சிரிப்பு சிரிச்சரே! மாமா சிரிச்சதுக்கு அர்த்தம் விளங்கிடுத்து!” உள்ளே போனா. 

கொஞ்ச நாளைக்கப்புரம் கஸ்தூரி “மணிமங்கலத்துக்கிட்டே ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளொட மதுராபுரி ஆஸ்ரமத்தில் நாமசங்கீர்த்தனம் பண்ரா, போலாம்னு இருக்கேன்.” “நான் கொண்டு போய் விடணுமா? கூட யாரு?” “5 பேர் வரா, டாடா சுமோ வச்சுக்கப் போரோம்.” 

இவள் கிளம்பிப் போனதும் அந்தக் கம்பேனிலேந்து போன். “ஒரு மெஷீன் பிர்ச்சனையா இருக்கு வந்து பாத்துத் தரமுடியுமா?” சரீன்னு சட்டையை மாட்டிண்டு காரை எடுத்துண்டு கிளம்பினேன். கிளம்பரச்சே எதுத்தாத்து சந்தானமும், முட்டுச்சந்து நாராயணனும் ஸ்கூட்டரில் டபுள்ஸ் கிலம்ப, நான் ரெட்டை பிராம்ணாத்தானேன்னு யோசிக்கலை. அவா என்னை ஒத்தைன்னு யோசிச்சாளோ! அவாளுக்கே வெளிச்சம். 

படப்பை ரோட்டில் போய் மணிமங்கலம் ஏரிகிட்டே திரும்பரேன் ரெண்டு குறத்தி ஓடிவந்து வழி மரிச்சு கையைக் காட்டி காரை நிறுத்துன்னு சொல்ரா. அட, அன்னைக்கு வீடியோவில் பாத்தவளும் இருக்காளேன்னு பட்டது. குறத்தியெல்லாம் பாக்க ஒரே மாதிரி இருப்பாளே உமக்கு எப்படீங்காணும் இத்தனை துல்லியமா அடையாளம் தெரிஞ்சதுன்னு கேக்கப் பிடாது. நீங்க கதை படிக்கரச்சே நான் குறுக்கே ஏதாவது கேக்கரேனா? அ

தில் ஒருத்தி “யாரும் வண்டியை நிறுத்த மாட்டேங்கராங்க சாமீ, உடனே உதவி செய்யமுடியுமா? குடிசையில் புள்ளை ஜுரத்தால் கஷ்டப்படுது, ஆஸ்பத்ரீக்கு அழைச்சிண்டு போணம்.” அழரா. இறங்கி அவாளொட போரேன். குடிசை வாசலில் நின்னுண்டு “குழந்தை எங்கே? தயங்கரேன். “உள்ளே வாங்க சாமீ!” உள்ளேந்து ஒரு குரல். வயசான ஒருத்தி மடீலே அந்த வாடின பிஞ்சு முகம். அப்படியே கையில் ஏந்திண்டு “கூட யார் வரீங்க?” ரெண்டு பேர் ஏறிக்க, நேர ஹிந்து மிஷன் ஆஸ்பத்ரீக்கு வேகமா 20 நிமிஷத்தில். 

“அட்மிட் செய்யுங்கன்னுட்டா. ஒண்ணும் பயமில்லை ட்ரிப்ஸ் தந்து மருந்து சாப்டா 2 நாளில் சரியாகிடும்”. “இவதான் சாமி கயித்தில் நடப்பா, ரெண்டுநாளா புழைப்பும் இல்லை, கையில் நூறு ரூபாத்தான்.” கசங்கிய நோட்டை ரவிக்கைக்குள்லேந்து எடுத்து காமிக்க - சோளீக்கு பீச்சே அத்தனை வறுமையோன்னு பட்டது. 

“உக்காந்துக்கங்க!” நானே பணத்தை கட்டி வாங்கச் சொன்ன மருந்தை டிஸ்பென்சரீலேந்து வாங்கிண்டு வந்து தந்துட்டு இவா கையிலேயும் ஒரு 3000 ரூபாய் வச்சு, ஆபத்துக்கு இருக்கட்டும்னு சொல்லி என் போன் நம்பரைத் தந்துட்டு வரேன். வழீலே திரும்பவும் குடிசைக்கிட்டே நிறுத்தி அந்த பாட்டி குறத்திகிட்டே “ரெண்டு நாளில் உன் பேத்தி வந்துடுவா.” சொல்லிட்டு என் வேலையைப் பாக்கப் போனேன். 

அன்னிப்போது அப்படிப் போச்சுன்னு வச்சுக்கலாம்தான். ஆனா எப்பவுமே நாம எதிர்பாக்காதது நடந்தே தீரும்பா. 

ஆத்துக்கு வரச்சே மணி சாயங்காலம் 7. வாச ஊஞ்சல்லேயே கஸ்தூரி காலை ஆட்டிண்டு ஹாய்யா. “நாம சங்கீர்த்தனம் முடிஞ்சு பிரசாதம் பிரமாதமோ?” “அரிசி உப்புமாதான். ஆனா திவ்யமா இருந்தது. கிளம்பி வரச்சே இளநீர் வெட்டித் தந்தா.” ஆஹா, அதுன்னா உண்மையான நாம சங்கீர்த்தனம்னு பட்டது.  இன்னிக்கு இன்னொண்ணும் நடந்ததே!. “என்ன சொல்லு!” பிரஸாதம் பாதி மிளகுவடை உள்ளே வச்சிருக்கேன். எடுத்துண்டு இங்கே வந்து என் பக்கத்தில் உக்காந்துக்கோங்கோ, சொல்ரேன்!” அட இதுவும் நன்னா இருக்கேன்னு உக்காந்திண்டேன். 

“எதுத்தாத்து மாமாவும் நாராயணனும் நாமசங்கீர்த்தனத்துக்கு வந்திருந்தா. என்னைத் தனியா அழைச்சிண்டு போய் ஒரு முக்கியமான விஷயம்னு ஒண்ணு சொன்னாளே!”. காது என்னை அறியாம கூராச்சு. “ஸ்கூட்டரில் வரச்சே உங்களை வழீலே பாத்தாளாம். ஏதோ குடிசைக்கு பக்கத்துலே இளவட்டமா ரெண்டு குறத்தியோட நின்னு ஜாலியாப் பேசிண்டிருந்தேளாம். அப்புரம் அதில் ஒருத்தி கூப்பிட்டான்னு குடிசைக்குள் போயிட்டு ரொம்ப நாழீ வெளீலேயே வரலையாமே!” “அப்படியா சொன்னா?” “ஆமாம். என்னை ஜாக்கிரதையா இருந்துக்க சொன்னா”. “கேட்டுட்டு நீ என்ன சொன்னாய்? “இங்கே வந்த வேலையைப் பாத்துண்டு சும்மா இருங்கோன்னு சொன்னேன்.” “அதான் சரீ. ஓங்கி ஒண்ணு விட்டிருந்தாலும். தப்பில்லை. நினைச்சுண்டேன் - 

இந்த ரெண்டு பிராம்ணா-கூத்தாடிகள் கிட்டேந்துதான் இவள் ஜாக்கிரதையா இருக்கணும். குறவர்கள் வருஷத்துக்கு ஒருக்கா வந்துட்டு கண்காணாம போயிடுவா, இவனுகள் பக்கத்துலேயே ஆயுசுபூரான்னா சுத்திண்டிருக்கானுவ. 

நடந்ததை விவரிச்சதும் “அது கிடக்கட்டும், இவா சொல்ரதை அவா காதுலெயே திருப்பி அப்பிடணும்”. அதான் என் கஸ்தூரி. அந்த பாதி மிளகுவடையை ரெண்டா உடெச்சு இவளொட ஷேர் பண்ணிக்கரச்சே ஜன்ம சாபல்யம் அடைஞ்சுட்டா மாதிரி பட்டது.

No comments:

Post a Comment