60. வாராக் கடன் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
கடன் வாங்கினவன் அட்ரஸில் போனால் அங்கே யாரும் இல்லை. பொன வருஷம் வரைக்கும் EMI ஒழுங்கா கட்டினவன், 10 மாசமா கட்டலை. அதான் போனம். விசாரிச்சதில் ஊரைவிட்டு போயிட்டானாம். இங்கே தொழில் பண்றதில்லை. வாங்கின கடன் 175 லக்ஷம். கட்டினது வட்டி மட்டும்தான். பேங்குக்குப் போயிட்டு ரிபோர்ட் கொடுத்துட்டுதான் ஆத்துக்கு போணம்.
என் நேரம். இந்த மாசம் இது மூணாவது கேஸ். கடன் வாங்கின 10க்கு 4 இப்படி.
75ல வாங்கிண்டு ஒருவருஷத்தில் கம்பி நீட்டினவனை போன வாரம் தேடிண்டு சௌக்கார்பேட்டையில் அவன் அட்ரஸுக்கு போனால் கையை குலுக்கிட்டு, வாங்கவே இல்லைன்னுட்டன். எங்க ரிகார்டில் அவன் போடோவும் கையெழுத்து பத்திரமும். ட்ரை ஃப்ரூட்ஸ் பிசினெஸ், பெரீய கடை. வருஷம் 2 கோடிக்கு வியாபாரம். வீட்டுப் பத்திரங்களை வச்சுண்டுதான் தந்தோம். அடகு வைக்கர பத்திரங்களை சரிபாத்து செர்டிஃபிகேட் செஞ்ச லா-ஃபெர்ம் சரியா இருக்குன்னு சொன்ன லெட்டர். இவனோ தன்கிட்டே இருக்கும் ஒரிஜினல் ப்ராபர்டீ பேப்பர்ஸை காமிச்சு “இது எப்படி உங்ககிட்டே? இருக்கமுடியாதே!” இந்த கேஸ் நிறையவே இழுத்துண்டு போகும்.
கடன் வாங்கின இன்னொருத்தன் ஜாகை வாஷர்மேன் பேட்டையில் ஓல்ட் ஜெயில் ரோட்டில் போய் தெய்யப்பன் தெருவில் நுழைஞ்சு நேரே பெரீய பாளையம்மன் கோவில் கிட்டக்க போனா வாசலில் பந்தல் போட்டு சிலர் சோகமா உக்காந்திருக்கா. புரிஞ்சது. நம்மாளான்னு தெரிஞ்சுக்கணும்னு செறுப்பை கழட்டிட்டு பவ்யமா உள்ளே ஒருத்தர் காதுகிட்டே போய் கேக்க அவர் நாங்க கேட்டதை விட சாஃப்டா விவரங்கள் சொல்ல போய்ச் சேர்ந்தது நம்ம ஆள்தான்னு புரிஞ்சது.
இதை வாராக் கடன்னு அருண் ஜேட்லீக்கு சொல்லிட வேண்டியதுதான். கொஞ்ச நாழி நின்னுட்டு கிளம்பினோம். ஆத்துக்கு போய் குளிச்சு ரிபோர்ட் அனுப்பரேன்னு கூட வந்தவனை போன்னுட்டேன்.
இந்த கேஸ் எப்படிப் போகும்னு தெரியும். நாணயமா இருந்துட்டுத்தான் போயிருக்கன். வாங்கின 50லவில் 10தான் பாக்கி. அதுக்கும் செக்யூரிடி இருக்கு. காரியங்கள் முடிஞ்சு அவர் பிள்ளைகளே இவர் போயிட்ட செய்தியை பேங்க்குக்கு சொன்னா அதுக்குத் தகுந்தா மாதிரி இவா பேருக்கு லோனை மாத்தி ரிஸ்ட்ரக்ச்சர் செய்யணும். வாங்கினதை இவா அனுபவிக்கராளே! அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னுட்டா, செக்யூரிடியை என்கேஷ் செய்யணும். அப்போ குறுக்கே வருவானுவ. பாத்துக்கலாம்.
ஆனா மத்த ரெண்டும் என் உசிரை வாங்கப்போறதுன்னு மட்டும் நன்னாவே புரிஞ்சது.
காணாமப் போனவனை அடியாட்கள் வச்சு தேடுவோம். கிடெச்சதும் அவன் கையில் நோடீஸ் வைக்கணும், எடுத்துண்டு ஓடின பணத்தைப் பொறுத்து போலீஸையும் கூப்பிட்டுக்கலாம். செக்யூரிடியா என்ன இருக்குன்னு பாக்கணும். ஒருத்தன் கடன் வாங்கவே இல்லைன்னுட்டான். அவனுக்கு வக்கீல் நோட்டீஸோ? எனக்கு இப்படி இதான் முதத் தடவையாக்கும். எப்படி டீல் செய்யணும்னு கத்துக்க ஒரு அவகாசம்.
இப்படியெல்லாம் நடக்கரத்துக்கு நான் காரணமில்லைதான். இருந்தாலும் பேங்கை சிக்கல்லேந்து விடுவிக்க நான்தான் பொறுப்பு.
லீகலா மூவ் செய்யணும், அதாவது சட்டத்துக்கு புறம்பா எதுவும் செஞ்சு பேங்க்கை மாட்டி வைச்சுடப் பிடாது. அப்படியே செஞ்சுட்டா மாட்டிக்கப் பிடாது. தனியார் வங்கிங்கரத்துனாலே தீவிரமா செயல் படுவா. ஆகக்கூடி என் கதை கொஞ்ச நாளைக்கு கந்தலாத் தொங்கும். வெய்யலில் சுத்தணும், நாயா பேயா அலையணும்.
நான் வெங்கடேஸ்வரன், அடையாரில் ஜாகை. என் ஆத்துக்காரி சுந்தரி. ரெண்டு பசங்கள் செட்டிநாடு வித்யாலயாவில் படிக்கரா. கை நிறைய சம்பளம். வசதியா இருக்கம். சொந்த வாழ்க்கை ஜோரா போயிண்டிருக்கு. பிர்ச்சனை ஆபீஸில்தான்.
பக்கத்து சீட்டில் ரம்யா “வெங்கீ உன்னால் முடியாதது ஒண்ணுமே இல்லைடா!” அன்னைக்கு ரம்யாவுக்கு அவளுக்கும் அவ பாய்ஃப்ரெண்டுக்கும் கபாலி படத்துக்கு ரெண்டு டிக்கெட் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஏற்பாடு செஞ்சு தந்தேன். அதான் என் மேல் அத்தனை நம்பிக்கை! பொண்கள்!
சௌக்கார்பேட்டை கேஸ் டாகுமென்ட்ஸ் எல்லாத்தையும் ட்ரெஷரீலேந்து எடுத்து பாக்கரச்சே வீட்டுப் பத்திரம் கொலேட்டரலுக்கு வாங்கி வச்சது அப்படியே அவன் ஆத்தில் போயிருந்தப்போ பாத்தா மாதிரியே இருக்கு. அப்படீன்னா ரெண்டு ஒரிஜினலா? அதெப்படி சாத்தியம். லோன் வாங்கிட்டப்புரம், கொஞ்சநா EMI கட்டினதும் பத்திரம் காணலை, இல்லை டேமேஜ் ஆகிடுத்துன்னு இன்னொண்ணு வாங்கிண்டுட்டானா? அப்படின்னா டூப்ளிகேட் இஷ்யூ செஞ்சதுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெகார்ட் இருக்கும். கிடெச்சா இவனை ஜெயிலில் தள்ளலாம். இல்லைன்னா சரிபாத்து நல்ல பத்திரம்னு சொன்ன லாயரை பிடிச்சு உள்ளே தள்ளலாம்.
யோசிச்சிண்டிருக்கச்சே கன்யாகுமரீலேந்து அம்மா போன். என் செல் நம்பருக்கு போன் போட்டதேயில்லை. ஆச்சர்யமா இருக்கு. சனி ஞாயரில் ஆத்து லேன்ட் லைனில்தான் கூப்பிடுவள்
“கண்ணா வெங்கடேசா எப்படிடா இருக்காய்? ஆத்தில் குழந்தைகள் சௌக்கியமா?” இருந்த கலவரத்தில் “என்னம்மா இது? ஆபீஸில் இருக்கச்சே போன் போட்டுட்டாய். என்ன வேணும்?” “ஒண்ணுமில்லைடா கேக்க சங்கடமா இருந்தது, ஆத்துக்கு போன் செஞ்சா சுந்தரி எடுப்பாளோன்னுட்டு. கொஞ்சம் பணம் தேவைப்படறதுடா, ஒரு 20ஆயிரம் அனுப்புவியா?” “ஏம்மா அப்பா பென்ஷன் வரலையா. 6 மாசம் மின்னாடி 5ஆயிரம் அனுப்பினேனே”. “சித்தே மருந்து மாயம்னு ஆகிட்டது. கோவிச்சுக்காதே செல்லம்! அனுப்ப முடிஞ்சா அனுப்பு இல்லைன்னா இங்கே யார் கிட்டேயாவது கேக்கரேன்”. “அங்கேயே பாத்துக்கோம்மா, முதத்தேதி ஏதாவது அனுப்பரேன்”. வச்சுட்டு லாயர் நம்பரைத் தேடரேன்.
ஆத்துக்கு கிளம்பரச்சே அம்மா போன் ஞாபகம் வந்தது.
முடக்கு வாதம், ஷுகர், பீபீ எல்லாருக்கும் வரதுதான். அலட்டிக்க வேண்டாம். அப்பாவுக்கு பென்ஷண் 12ஆயிரம். கன்யாகுமரீலேந்து 5 கிமீ வடக்கே கொட்டாரத்தில் இருக்கா. வாடகை வீடுதான், மூவாயிரம் ஆகிடும். அம்மா டீவீ பாப்பள், சீரியல் பைத்தியம். கரண்ட் சிலவு ஆகும். சாப்பாடு ஒண்ணும் ஜாஸ்த்தி ஆகாது. என்ன பணமுடை?
கூட்டிண்டு வந்து வச்சுக்கப்பிடாதோன்னு கேக்கலாம். கேக்கரது ஈஸி - மனுஷா கஷ்டம் புரியறதில்லை.
ரெண்டு பெட்ரூம் அப்பார்ட்மென்ட். நானும் EMI கட்டியாறது. இன்னும் 12 வருஷம். அதுக்குள்ளே அம்மா எல்லா சொந்தக்காராளுக்கும் பிள்ளை வீடு வாங்கிட்டன்னு பீத்திண்டாச்சு. என் மாமா சிவகங்கைலேந்து குடும்பத்தோட போன வருஷம் காணும் பொங்கலுக்கு வந்து தங்கிட்டுப் போனர். வீட்டை ரெண்டு பண்ணிட்டர். “இனிமேல் உங்காத்து மனுஷா வந்தா செங்கல்பட்டோட திருப்பிட்டு வாங்கோ இல்லைன்னா அவாளோடயே போயிடுங்கோ.” சுந்தரி சொல்லிட்டா. ஒரு பெட்ரூம் பசங்களுக்கு. ஒண்ணு எங்களுக்கு. ஹாலில் டேஸ்டியா அழகு செஞ்சு வச்சிருக்கா. யாரும் எதையும் தொட்டுடப்பிடாது.
“மாமாவும், பெத்தவாளும் ஒண்ணா?” “வந்தா எங்கே படுத்துப்பா? உங்கம்மாவுக்கு கீழே உக்காந்து எழுந்திருக்க முடியாது. கட்டில் வாங்கணும். வாங்கி எங்கே போடுவேள்? என் தலைலேயா?” கேட்டள். போடணும்னா சொஃபாவையும், ஃப்ரிட்ஜையும், நடுநாயகமா இவள் வச்சிருக்கிற நடராஜர் சிலையையும் வெளீலே அனுப்பணும். EMI கட்டினப்புரம் மிஞ்சினதை ஸ்கூலில் பிடிங்கிண்டுடரா. என்னத்தை அப்பா அம்மாவை கூட வச்சுக்கறது?
அவா பிர்ச்சனையை அவா பாத்துப்பா, நாம பேங்க் மேட்டரைப் பாக்கணும் அதெப்படி கடன் வாங்கினவன் வாங்கலைன்னு சொல்லலாம்? கொஞ்ச நஞ்சம் இல்லை. மூணு உதாரணம் சொன்னேன். மொத்தம் 7 கோடியே 80 லக்ஷம். ஒரு 12 கேஸ் துப்பு துலக்கணும். தாவு தீந்துடும்.
இந்த ரம்யா வேர அப்பப்போ வித்யாசமா லுக் விட்டுண்டு. அவள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாய்ஃப்ரெண்ட் விட்டுட்டுப் போயிட்டானாம். தனியாத்தான் இருக்கா. அப்பா பெரீய இண்டஸ்ட்ரியலிஸ்ட், கோயமுத்துரில். கொஞ்ச நாள் பேங்கில் வேலை செஞ்சு நடப்பு கத்துண்டு வந்து பிசினஸ் கவனிக்கட்டும்னு அனுப்பிச்சிருக்கர். நடப்பு கத்துக்கணுமா வேண்டாமா? பக்கத்தில் உக்காந்துண்டு நான் பதட்டமா விறுவிறுப்பா அங்கேயும் இங்கேயும் போயிண்டு, போனில் பேசிண்டு இருப்பதை நோட்டம் விட்டுண்டிருக்கா.
ஒரு கேஸ் விஷயமா பாண்டிச்சேரி போணம்னு பேசிண்டிருக்கச்சே “நானும் கூட வரட்டா”ன்னு கேக்கரா. கூட்டிண்டு போனா என்னவாகும்னு சொல்லவே வேண்டாம். செஞ்சு பாக்கணும்னு சபலம் இருக்கு. ஒத்துக்கரேன்.
இப்படியே ஒரு மாசம் போச்சு. நடுவுலே எங்க மின்ட் ஸ்ட்ரீட் பிரான்ச் மானேஜர் என்னைக் கூப்பிட்டு விடு விடுன்னு விட்டான். ரெண்டு மாசத்தில் கடனை திருப்ப வாங்க தோதா எல்லா கேஸையும் சால்வ் செஞ்சுத் தரணும், மத்ததை பேங்க் பாத்துக்கும்னு சொல்லி அனுப்பிச்சான்.
ஒருநா ஆத்துக்கு வர லேட்டாகித்து. கடுகடுன்னு மூஞ்சியை வச்சுண்டு சுந்தரி. ரெண்டு காரணம். அன்னைக்கு பேரன்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டுக்கு பசங்களோட ஸ்கூலுக்கு போயிருக்கணும். மறந்துட்டேன். அவளே போய் டீச்சர் இவள் பெத்துப் போட்டதை பத்தி சொன்னதை உள்வாங்கிண்டு வந்துட்டாளாம். அடுத்தது அம்மா போன் செஞ்சு 20ஆயிரம் கேட்டிருக்கா. அதுதான் இவளை சூடேத்திடுத்து. “என்ன நினெச்சிண்டிருக்கா உங்காத்தில்? நாம காசு அச்சடிக்கர மெஷீன் வச்சிருக்கோமா?” ஆனா அவள் சொல்லாம விட்டது அப்பாவை ஆஸ்பத்ரீயில் சேர்த்திருப்பதை.
மறுநாள் ஞாயித்துக் கிழமையாப் போச்சு. மத்தியானம் நல்ல தூக்கம். திங்கட்கிழமை பாண்டிச்சேரி ட்ரைவ் செஞ்சுண்டு போணம். அதான். செல் 4 தடவை அடிச்சு நின்னுருக்கு. ஒவ்வொரு தடவையும் 30 செகண்ட். கேக்கலை. எல்லாம் சிவகங்கை மாமா. சென்னை வந்திருக்காரோ என்னமோ! நல்லவேளை எடுக்கலை. மறுநாள் பேங்கில் நுழையரேன் போன். மாமாதான்.
“அப்பாவுக்கு உடம்பு சித்தே சீரியஸ் உடனே கிளம்பி வரமுடியுமா?” கேக்கரர். “அக்கா சுந்தரிகிட்டே சொல்லியிருக்கா. நேத்து நானும் நிறைய தடவை கூப்பிட்டேன் நீ எடுக்கலை. வெங்கடேசா, நீ வரமாட்டாயோன்னு அக்கா எனக்கு போன் செஞ்சா. நான் இங்கே வந்துட்டேன். ஆனா கைக் காசை போட்டு செய்ய முடியலை. சரீரத்தால் செய்யத் தயார்.” அதிர்ச்சியாயிருந்தது. எப்படி எனக்கு தெரியாமப் போச்சு? இன்னும் பேசிண்டிருக்கர் மாமா.
“பெத்த கடன் உனக்குத்தான். உடனே வா. உங்க பேங்கில் கடனை வாங்கிண்டு ஏமாத்திட்டுப் போரவனை தொரத்திண்டு நீ போராப்போலே எல்லாம் பெத்தவா உன் பின்னாடி வக்கீல் நோட்டீஸோட வரமாட்டா. ஆனா நீதான் உனக்கு உனக்கே தெரியாம அவா அள்ளி அள்ளீக் கொடுத்த பாசக்கடனை இந்த வயசில் எவ்வளவு முடியுமோ அத்தனையயும் கணக்குப் பாக்காம வட்டியோட திருப்பித் தரணும். அம்மாவைக் கேக்க வச்சுட்டாயாம், சொல்லி வருத்தப்பட்டா. பெத்தவா மனசில் இந்த கடனை வாராக் கடன்னு பட்டுடுத்துன்னா அந்த சாபம் உன்னையும் உன் குழந்தைகளையும் உண்டு இல்லைன்னு பண்ணிடும். இப்படின்னு புரியவே வருஷங்கள் ஆகிடும். உடனே கிளம்பி வா”.
ஓருவாரம் லீவு போட்டேன். சுந்தரியை “என்னோட வா, கன்யாகுமரி போரோம், குழந்தைகளை கொஞ்சநாள் உங்கம்மாவை பாத்துக்க சொல்”. “கன்யாகுமரியில் என்ன வச்சிருக்கு?” “ஒரு லோன் மேட்டர்.” கிளம்பச் சொல்ரேன். செய்ய வேண்டியதை செஞ்சு அப்பாவை ஸ்வஸ்த்தம் பண்ணி ஆத்துக்கு கூட்டிண்டு வரணும்.
சுசீந்திரம் கோவிலுக்கு இவளையும் அழைச்சிண்டு போய் இனிமேல் இப்படி நடந்துடாம இருக்க வேண்டிக்கணும்.
No comments:
Post a Comment