Thursday, September 3, 2020

ஸ்பரிசம்

35. ஸ்பரிசம் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

அப்பா என்னை டாக்டருக்கு படிக்க வைக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டர். பணம் இல்லை. அதான் SRMஇல் காமெர்ஸ் எடுத்தாச்சு. ஏதோ ஒண்ணு. இதுவும் நல்ல படிப்புத்தானே. பாத்துக்கலாம்னு. இதுக்கு கேபிடேஷன் கேக்கலை. வெத்திலை பாக்கு வச்சு காலேஜ் கேட்டுலேந்து அழைச்சிண்டு உள்ளே போனான்.

காலேஜில் சேர்ந்ததும் ஒரு டீனேஜ் பொண் என்ன பண்ணுவாள்? திடீர்னு சுதந்திரம் கிடெச்சுட்டா மாதிரியும், தான் பெரீய மனுஷி ஆகிட்டாப் போலேயும், இனிமேல் கூத்தடிச்சு கொண்டாட்டம் போடுவதே வாழ்க்கைன்னு மனசில் ஆகி என்னெல்லாம் செய்வாளோ அதையெல்லாம் நான் செய்ய ஆரம்பிச்சேன். உடனே நான் படிப்பை கோட்டை விட்டாச்சுன்னு முடிவுக்கு வந்துடப் பிடாது. அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. நோ டென்ஷன்.

எங்காத்துலேந்து காலேஜ் 7 கிமீ. நாங்க இருப்பது ஊரப்பாக்கம் வர்தமான் நகர். காலேஜ் பஸ் வந்து ஸ்டாப்பில் சிட்டு மாதிரி நின்னிண்டிருக்கும் எங்களை அள்ளிப் போட்டுண்டு காட்டாங்குளத்தூர் போயிடும். அதே மாதிரி சாயங்காலம் கொண்டு விடும். இது ரெண்டுக்கும் நடுவில்தான் நான் சொன்ன கூத்தடிப்பது, கொண்டாடுவது எல்லாம். பஸ்ஸில் ஏறினதும் ஆரம்பிச்சு சாயங்காலம் தெருக்கோடியில் இறங்கினா பெட்டிப் பாம்பு. அம்மா அப்பா பொண்ணு. ராத்திரி படுத்துக்க என் ரூமுக்குள் போயாச்சுன்னா வாட்ஸப்பில் 1 மணி வரைக்கும் போர்வையை போத்திண்டு என்னெவெல்லாமோ நடத்திக் காண்பிப்போம். அதெல்லாம் இப்போ எதுக்கு?

என் நெறுங்கிய தோழிகள் ரம்யா, சுகாசினி. என்கூடவே 5ஆவதுலேந்து  படிச்சிண்டு வரா. “என்னடீ வர்ஷா காலேஜில் சேர்ந்ததும் இப்படி மாறிட்டாய்?” அவா மட்டும் என்ன, நான் செய்யறதை ரெண்டு மடங்கு செய்வா. முதல் வருஷம் போனதே தெரியலை. நாட்கள் பறந்துன்னா போச்சு.

18 வயசுப் பொண் மனசில் என்னெல்லாம் வந்து பூந்துக்குமோ அதெல்லாம் பூந்துண்டு குடெஞ்சு எடுத்தது. ரம்யாவும் சுகாசினியும் “எங்களுக்கும் அப்படித்தாண்டீ இருக்கு”ன்னா. “எப்படீ”ன்னா “ஒரு மாதிரியா”வாம். 

நாங்க டாவடிச்ச முதல் ஆம்பிள்ளை எங்க பிசினஸ் ஸ்டடீஸ் லெக்சரர் ஆரவ். அவரும் சின்ன வயசுதான் 27 இருக்கும். ராஜகளை முகத்தில். நல்ல ஆஜானுபாகுவா சரீரம். கிளாசில் 88% பொண்கள். எல்லாருக்கும் இவர் மேல் கண். நாங்க மூணுபேரும் காலேஜுக்கு வந்ததும் சாட்பூட்த்ரீ செஞ்சு யார் வராளோ அவதான் அன்னைக்கு இவரை சைய்ட் அடிச்சுக்கறதுன்னு தீர்மானம் செய்வோம். அப்புரம் அது சரி வரலைன்னு வாரத்தில் 5 நாளையும் திங்கள் எனக்கு, செவ்வாய் உனக்குன்னு பிரிச்சிண்டோம்.

சுகாசினிக்கு வெள்ளிக்கிழமைன்னு இருந்தாலும் நானும் ரம்யாவும் அவரை வச்ச கண் எடுக்காம பாத்துண்டே இருப்பது வழக்கம். ஆள் என்னமா பாடம் எடுக்கரான்? பேசும் ஆங்கிலமும், சொல்லிக் கொடுக்கும் நேர்த்தியும் உடம்பை கட்டிப் போட்டுடும். கண் மலர்ந்து மெய்சிலிர்க்க உக்காந்திருப்போம். அவர் கிளாசை யாரும் கட் செய்யமாட்டா. அக்கவுன்டன்ஸிக்கு ப்ரொஃப். அகிலா வருவள். 

ரம்யாதான் கேட்டா. “ஏன் மிஸ், எல்லா டீச்சருக்கும் எல்லா சப்ஜெக்டும் தெரியுமோன்னோ?” “அப்படீன்னா?” “அதான் எங்களுக்கு சொல்லித்தர காமர்ஸ், அக்கவுன்ட்ஸ், பிசினெஸ் ஸ்டடீஸ், மாதேமெடிக்ஸ் எல்லாம்”. “ஆமாம், நிச்சயமா, ஏன் கேக்கராய்?” “இல்லை அக்கவுன்டன்ஸியும் ஆரவ் சாரையே எடுக்க வச்சா என்னன்னு தோணித்து”. அகிலா ஒரு லுக் விட்டாளே, பாக்கணும்.

அன்னைக்கு நான்தான் ஆரவ் சாரைப் பாக்க அவர் ரூமுக்குப் போனேன். புதுசா வந்த கொஸ்சீன் பேங்க் புஸ்தகத்தை தரேன்னு சொல்லியிருந்தர். வாங்கிண்டு போய் நம்பளை தயார் செஞ்சுண்டா பரீக்ஷைக்கு ஈஸியா இருக்கும்னு. எல்லாக் கேள்விக்கும் பதில் எழுதிண்டு வந்தா அதை எல்லாருக்கும் தந்து உதவலாம், யார் செய்யத் தயார்னு கேட்டதுக்கு கையைத் தூக்கினது நான்தான். 

நான் போரச்சே தனியாத்தான் இருந்தர். மத்த ப்ரொஃபசர்ஸ், லெக்ச்சரர்ஸ் கிளாஸில். “வா உக்காந்துக்கோ”ன்னு சொல்லிட்டு எழுந்து போய் புஸ்தகத்தை எடுத்துண்டு வரர். வந்தவர் கிட்டக்க சேரைப் இழுத்துப் போட்டு உக்காந்து புஸ்தகத்தை தொறந்து சில பக்கங்களைக் காண்பிச்சு மல்டிப்பிள் சாய்ஸ் கொஸ்சீனுக்கு எப்படி எங்கே பதில் எழுதணும் டிஸ்க்ரிப்டிவ் கேள்விகளுக்கு எப்படீன்னு புரிய வச்சுட்டு “எடுத்துண்டு போ, 1 மாசத்துக்குள் எழுதிண்டு வந்தியான்னா சரி பாத்துட்டு எல்லாருக்கும் தரலாம்.” “தாங்க்யூ”ன்னு சொல்லிட்டு திரும்பரச்சே அவர் தொடை என் தொடையில் உரச, அவரும் எழுந்துக்க, என்ன தோணித்தோ நான் என் கையை நீட்ட, ஆச்சர்யமா பாத்துட்டு அதை நன்னா பிடிச்சு குலுக்கிட்டு “ஆல் தி பெஸ்ட்” சொன்னர்.

கிளாசுக்கு வந்தவள் மூஞ்சி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்கவே சுகாசினி “என்னடீ விசேஷம், இவளுக்கு என்னவோ ஆகிடுத்து.” ரம்யாவை அலெர்ட் செய்ய, இவாகிட்டேந்து தப்பிக்க நடந்ததை சொல்லிட்டேன். ரெண்டும் பொறாமையாப் பாத்ததுகள். இதெல்லாம் வயசுக் கோளாறுன்னு தெரியாம இல்லை. இருந்தாலும் எல்லாத்துக்கும் ஃபர்ஸ்ட் டைம்னு உண்டே! நாங்கள் எல்லாரும் விரும்பும் ஆண்மகனின் ஸ்பரிசம் என்னை அன்னைக்கு மட்டுமில்லாம பலநாட்களுக்கு வாட்டி வதைச்சது.

எங்க எல்லாரையும் துக்கப் படும்படியாக அந்த வருஷம் ஒண்ணு நடந்தது ஆரவ் சொந்தத்தில் ஒருத்தியை கல்யாணம் செஞ்சுண்டுட்டர்.

படிப்பை முடிச்சுட்டு ஃபெடெரல் பேங்கில் அப்பா உத்யோகம் வாங்கித் தந்தர். கொச்சியில் போஸ்டிங்க். அங்கே விமன்ஸ் ஹாஸ்டலில் ரூமெடுத்துண்டு ட்யூடி ஜாயின் செஞ்சாச்சு. அப்பாதான் “இந்தக் காலத்தில் தைரியமா பொண்கள் வாழக் கத்துக்கணும், எந்த ஊர் போஸ்டிங்னாலும் போய்க்கோ”ன்னு. ரம்யாவும் சுகாசினியும் “நீ முதல்ல போடீ, நாங்களும் கொச்சியில் இல்லை கேரளாவுக்கே வேலை தேடிண்டு வந்துடரோம்.” சூளுரைத்தார்கள். 

வேலையும் செர்ந்து நாங்க மூணு பேரும் கையில் காசையும் கண்டுட்டா ஒண்ணா இருந்தா என்னெவெல்லாம் கூத்தடிப்போம்?

எர்ணாகுளம் MG ரோட்டில் ஷெனாய் ஜங்க்ஷனில் எங்க பேங்க். பெரீய ஆபீஸ். எனக்கு ட்ரைனிங்க். அங்கேதான் மாதவன் அறிமுகமானார். பாக்கரத்துக்கு நம்ப “இறுதிச் சுற்று” மாதவன் மாதிரீயே. பாத்ததும் பிடிச்சுப் போச்சு. மலையாளம் கலந்த தமிழ், “நீயும் மலையாளம் பேசினா இங்கே முன்னுக்கு வரலாம்”னு சொல்ல நானும் அதுக்காக அவரையே சுத்தி வந்து. 

மனுஷர் HR மானேஜர். புதுசா சேர்ந்த எல்லார் மேலேயும், குறிப்பா தனியா கொச்சியில் வந்து தங்கி இவா நிறுவனத்தில் இருக்கும் நான் நல்லபடியா செட்டில் ஆகணும்னு அதிகப்படியான கரிசனம். இவர் உதவியோட ஆபீஸ் பாலீடிக்ஸ் கடந்து வேலையை சரியாச் செஞ்சு நல்ல பேர் எடுத்தேன்னு வச்சுக்கலாம்.

சேர்ந்து 10 மாசம் ஆச்சு, ஆபீஸ் பிக்னிக்குன்னு கொடனாடு யானை பயிற்சி முகாமுக்குப் போனோம். 60 கிமீ இருக்கும். பஸ்ஸில் முன்னாடியே ஏறி தன் பக்கத்தில் எனக்கும் சீட் போட்டு வச்சிண்டு காத்துண்டீருக்க, நானும் பக்கத்தில் உக்காந்திண்டா தப்பில்லைன்னு. கேரளாவில் இப்படி பயணிப்பது சுகானுபவம். பெரியார் நதிக்கரையில் இந்த இடத்துக்கு நாங்க போய்ச் சேருவதற்கு 1.5 மணி நேரம் ஆச்சு. 

அந்த பயணத்தில் பக்கத்து சீட்டில் கிடச்ச ஸ்பரிசம் மாதவனுக்கு வர்ஷாவை நன்னாவே ஒருத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்தி இருக்கணும். அங்கேயும் அவர் என்னையே சுத்தி சுத்தி வந்து. “இன்னும் கொஞ்சம் போனா அதிரபள்ளி நீர்வீழ்ச்சி வரும். இன்னொரு நாள் நாம மட்டும் போயிட்டு வருவமா? அவர் கேக்க, நான் போலாம்னு மென்னு முழுங்கிண்டு சொல்ல மனசுக்கு அத்தனை ஹிதமா இருந்தது.

நாம பாட்டுக்கு சரீன்னுட்டோமே, அப்புரம் தட்டிக் கழிக்க முடியாதே, தப்பா எடுத்துண்டுட்டா? அதிரபள்ளி போனா ஒரு ராத்திரி தங்க வேண்டியிருக்கும். இவரோட ஒரே ரூமில் எப்படி? ரம்யாவுக்கு போன். நடந்ததை சொல்ல, அவள் “ஜாக்கிரதை”ன்னு வார்ன் செய்ய, அப்புரம் சுகாசினிக்கும் போன் போட்டு கேக்க, “ஜமாய்டீ”ன்னுட்டா. நான் ஜாக்கிரதையா எப்படி ஜமாய்க்கறது? புரியலை. அப்புரம் அதெல்லாம் வேண்டாம்னும் லீவில் என் ஃப்ரெண்ட்ஸ் வந்தா அவாளொட போயிக்கலாம்னும் நினெச்சிண்டேன். மாதவனும் ஒண்ணும் ஞாபகம் வச்சுண்டு கேக்கலை. 

அது சித்தே வருத்தமா இருந்ததே!

ட்ரைனிங்க் முடிஞ்சு 2 வருஷம் கொச்சியில் இருந்துட்டு எனக்கு 100ஃபீட் ரோடில் போஸ்டிங்க் கிடைக்க, ஊரப்பாக்கம் வந்தாச்சு. இப்போ தன்னிச்சையா எனக்கு கொடுத்த வேலையை என்னால் கவனிக்க முடிஞ்சது. 

ரம்யாவுக்கு அவள் அப்பா கல்யாணம் செஞ்சு வச்சுட்டர். படிச்சது போதும், வேலையெல்லாம் உன் புக்காத்தில் சொல்ரபடி சேர்ந்துக்கோன்னு. அவள் இப்போ  மதுரையில். சுகாசினியோ இங்கேயே தாம்பரத்தில் ஒரு ஆடிட்டரிடம் செக்ரெடரியா வேலையில் சேர்ந்து CA இன்டெர்ன்ஷிப் படிக்க தன் எதிர்காலம் ஒளி மயமாகப் போரதுடீன்னு பாட்டுப் பாடிண்டு. 

எல்லாரும் வாட்ஸப்பில் சகஜமா பெர்சொனல் விஷயங்களை பகிர்ந்துக்கறதும், தினம் எங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு ஷேர் செஞ்சுக்கரதுமாய் ஒண்ணாவே வளர்ந்தோம்னு சொல்லலாம்.

ஊரப்பாக்கத்திலேந்து என்னோட ட்ரைனில் கார்த்திக் வருவான். அவனை எப்படித் தெரியும்? அப்பாதான் “பக்கத்துத் தெருவில் என் நண்பனோட பையன், தினம் ட்ரைனில் நுங்கம்பாக்கம் வரை போரான், அவனோட நீ கிண்டி போய் அங்கேந்து பஸ் பிடிச்சு வடபழனீ போய்க்கோ”ன்னு அனுப்பி வச்சர். எனக்கு வழித்துணை ஏற்படுத்தித் தந்தாராம். பகலில் எலெக்ரிக் ட்ரைனில் போக துணை எதுக்கு? அவர் செஞ்சது அத்தனை நன்னா படலை. கொச்சிக்கு தனியா ஹாஸ்டலில் தங்கிக்க அனுமதி தந்தவர் இங்கே இப்படி செஞ்சது ஆச்சர்யமா பட்டது.

அப்புரம்தான் அம்மா சொல்ரா, அந்த கார்த்திக் ஜாதகம் எனக்கு பொருந்திப் போச்சாம். ரெண்டு பேரும் பழகட்டும், பிடிச்சுப் போச்சுன்னா பண்ணி வச்சுடலாம்னு அப்பா யோசிச்சிருக்கர். “இது நன்னா இருக்கே”ன்னு பட்டது.

அம்மா சொன்னதுலேந்து இந்த கார்த்திக் புதுசா தெரிய ஆரம்பிச்சான். அவாத்தில் என்னை அவனுக்கு பாக்கரான்னு சொல்லலையோ! அவனுக்கும் தெரியுமான்னு கேக்கலாம்னு ஆசை. ஆனா அந்த விஷயம் ரெண்டு பேருக்கும் சுவாதீனமா பழக அனுமதிக்காம ஒரு இறுக்கம் தந்துடுமோன்னு பட்டது. அவனும் இந்த ஜாதகம் மேட்டர் தெரிஞ்சுட்டதாவும் அதுக்காக இயல்பை மாத்திண்டு இம்ப்ரெஸ் செய்யரா மாதிரி நடந்துக்கரான்னு சொல்ல முடியலை.

வழக்கமா தினம் கார்த்தாலே ஊரப்பாக்கம் ஸ்டேஷனில்தான் பாத்துப்பம். நான் லேடீஸ் கோச்சில் ஏறிடுவேன். பாவம் அவன் பாட்டுக்கு எங்கேயாவது தொத்திண்டு அப்புரம் நாங்க மீட் செஞ்சுக்கரது அபூர்வம். நான் திரும்பி வர டயமும், அவனோடதும் வெவ்வேற. இப்படிப் போயிண்டிருக்கச்சே லன்ச் டயத்தில் ஒருநா அவன்கிட்டேந்து போன். 

“என்ன செஞ்சுண்டிருக்காய்?” “இப்போதான் லன்ச் முடிச்சேன், வேலை ஆரம்பிக்கணும்”. “அரைநாள் லீவு போடுவியா?” “ஏன் என்ன விஷயம்?” “நீ ஆபீஸ்லேயே இரு, நான் பைக்கில் வரேன். உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிண்டு போரேன்”. என்னை இவன் இப்படி முதத் தடவையா கூப்பிட்டது அதிசயமாவும் போய்த்தான் பாக்கலாமேன்னு தோணவே “சரி வா”ன்னுட்டேன். 

அண்ணா நகர்லேந்து நேர எங்காபீஸுக்கு வர நான் சுவாதீனமா அவன் பின்னாடி ஏறிக்க சர்ருன்னு நேர அசோக் பில்லர், ஈகாட்டுத்தாங்கல், கதிப்பரா, மீனம்பாக்கம், பல்லாவரம்னு போரான். 
முதத் தடவையா என்னை அழைச்சிண்டு பீச்சுக்கு, மாலுக்குப் போவான்னு பார்த்தா நேர தாம்பரம் ஹிந்து மிஷன் ஆஸ்பத்ரீக்கு! “இங்கே எதுக்கு வந்தோம்?”

“ஓண்ணும் பயப்ப்படாதே, உங்கப்பாவுக்கு நெஞ்சு வலீன்னு எங்கப்பா இங்கே அழைச்சிண்டு வந்து அட்மிட் செஞ்சிருக்கா. செஞ்சுட்டு என்னை கூப்பிட்டு வர்ஷாவை பதட்டப் படுத்திடாம பத்திரமா அழைச்சிண்டு வரச் சொன்னார்.” கார்த்தீ சொல்ல, எனக்கு என்ன செய்யரதுன்னு தெரியலை. “நான் இருக்கேன். எங்காத்தில் எல்லாத்தையும் கவனிச்சுண்டுட்டா, உங்கம்மாவும் வந்தாச்சு.” 

சொன்னவன் ஆறுதலா என் கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சிண்டு போக, இந்த ஆண் மகனின் ஸ்பரிசம் மட்டும் அத்தனை மனோதைரியத்தையும் ஹிதத்தையும் தந்தது. 

இந்தக் கையைப் பிடிச்சிண்டா எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு பட்டது. அந்தக் கையே தானா வந்து என் கையைப் பிடிச்சிண்டிருக்கச்சே இந்த ஒரு கையை ஆயிசு பூரா விட்டுடப் பிடாதுன்னு தோணித்து.

No comments:

Post a Comment