Thursday, September 3, 2020

ஆல்பம்

ஆல்பம் (சிறுகதைகள் சீ2 – 67) 
#ganeshamarkalam

எல்லாராத்துலேயும் போடோ ஆல்பம் இருக்கும். சிலராத்தில் ரெண்டு. பசங்களுக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னா நிறைய. இப்போ போனில் போட்டோ பிடிச்சு வச்சிண்டு எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம். எங்காத்தில் பழைய ஆல்பமும் போன், கம்யூட்டர், பேக்கப் ஹார்ட் டிஸ்குன்னு படமா நிரம்பியிருக்கு. பாத்து முடிக்க நாளாகும்.

ஆனா பாக்கரதில்லை. இன்னும் எடுக்கரதில்தான் மனசு லயிக்கரது. எடுத்ததை ஒருதடவை பார்த்துட்டா அப்புரம் பாக்கத் தோணலை. நிஜமா சொல்லுங்கோ நீங்க சமீபத்துலே எடுத்துண்ட போட்டோவை, செல்ஃபீயை எத்தனை தடவை பாத்திருக்கேள்?

இந்தக் கதை ஆல்பத்தை பத்தியா, இல்லை அதில் இருந்த போட்டோவைப் பத்தியா, இல்லை போடோவில் விழுந்த மனுஷாளைப் பத்தியா? யார் கண்டா? சொல்லிண்டே போரேன் நீங்களா ஒரு வகைப் படுத்திக்கோங்கோ. என்னாலே இப்படித்தான் கதை சொல்லணும்னு நியதி வச்சிண்டு சொல்லமுடியாது. நீங்க சொல்ராப்புலே எழுதத்தெரியாது. 

நான் தனிக்கட்டை. 45 வயசிலேயே இப்படி ஆயிட்டேன். கல்யாணம் பண்ணிண்டேன் ஆத்துக்காரி புண்யவதி சீக்கிரம் இறைவனடி சேர்ந்துட்டா. குழந்தைகள் இல்லை. பெத்தவாளும் டாடா சொல்லியாச்சு. சொந்தம்னு பார்த்தா ஒரு அண்ணன், பரோடாவுலே இருக்கான். அப்பப்போ போன் செய்வான். “உங்க தம்பி தனிக்கட்டை, அதிர்ஷ்டமில்லை, ரொம்ப இழைய வேண்டாம்”னு மன்னி சொல்லி வச்சிருப்பா. 

சொன்னாளா, இல்லை நீயா சொல்ரயான்னு கேப்பேள். எனக்குத் தெரியும். அண்ணா குழந்தையும் அண்டரதில்லை. ஸ்நேகிதான்னு என்கூட வேலை பாக்கிர ரவி அப்புரம் அக்கவுன்ட்ஸில் இருக்கிர கீதா. “நீ ஏன் கீதாவை கல்யாணம் செஞ்சுக்கப் பிடாது?” நான் தனியா கஷ்டப்பட்ரதை பாத்துட்டு ரவி கேட்டான். அவளும் தனிக்கட்டை. 32வயசு. “இப்படியே இருந்துக்கரேன்”னு சொல்லிட்டேன். 

கீதாவுக்கு நாங்க இப்படி பேசிண்டோம்னு தெரியாது. அது கிடக்கட்டும், திரும்ப ஆல்பத்துக்கு வருவம்.

இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. சாதம் வடிச்சு கலத்துக்கு பருப்பு வச்சு, கத்திரிக்காய் பிட்லையும் சுட்ட அப்பளமும் செஞ்சாச்சு. கடையில் வாங்கின எலுமிச்சை ஊறுகாய் இருக்கு. தயிர் தோய்ச்சது. இன்னிப்போது போச்சுடா நாராயணான்னு நினெக்கரச்சே ஆதிசயமா அண்ணா கிட்டேந்து போன். 

“ஆத்துலே மாட்டரத்துக்கு அப்பா அம்மா போடோ ஒண்ணு வேணும், என்கிட்டே தேடினதில் கிடைக்கலை, உங்கிட்டே இருந்தா அனுப்பரையா?” கேட்டுட்டு வச்சுட்டான். “எப்படி இருக்காய், சாப்பிட்டாயா”ன்னு கேக்கலை. “குழந்தை, மன்னி சௌக்கியமா?” எனக்கும் கேக்கணும்னு தோணலை. 

போடோ இருக்கும், தேடி அனுப்பிச்சுடலாம். அப்புரம் கூப்பிடவே மாட்டானே. அனுப்பாம டிலே செஞ்சா ரிமைண்ட் செய்யன்னு திரும்பவும் கூப்பிட சான்ஸ் இருக்கே! அத்தனை தனிக்கட்டையா ஃபீல் செய்யரேனோ?  தேடிப் பாக்கலாம்னு சீக்கிரம் சாப்டுட்டு அலமாரியை தொறந்து ஆல்பத்தை எடுத்து வச்சிண்டு உக்காந்தேன்.

அண்ணா கல்யாண ஆல்பம் ஒண்ணுமே எங்கிட்டே இல்லை. எடுத்துண்டு போயிட்டான். என் கல்யாண ஆல்பம் கிடெச்சது. ரெண்டு வால்யூம். ரீசெப்ஷன் + முஹூர்த்தம். இதில் எப்படியும் இருப்பா. ஆனால் 20 வருஷம் முந்தயது. எல்லாரும் குலதெய்வம் கோவிலுக்கு போரச்சே எடுத்தது தனியா இருக்கணும். அதுதான் சமீபத்தில் எடுத்ததா இருக்கும். அது கிடைச்சுதுன்னா அனுப்பிடலாம்.

அப்பாவுக்கு சித்தே உடம்பு முடியாம கிடந்தர். நன்னா ஞாபகம் இருக்கு. அம்மாதான் சீக்கிரம் குணமாகணும்னு 5 ரூபா காசை மஞ்சத்துணியில் முடிஞ்சு குலதெய்வம் சன்னிதிக்கு குடும்பத்தோட வரோம்னு பிரார்த்தனை பண்ணிண்டா. வழீலே வைதீஸ்வரன் கோவில்லே அண்ணா பொண்ணுக்கு முடி இறக்கிடரதுன்னும் பிளான். அப்போ எல்லோரும் அப்பாவோட பெரீய வீட்டில் ஒண்ணா.

அப்பவே அண்ணாவும் மன்னியும் இந்தூரிலேயே தனிக்குடுத்தனம் போணம்னு அழிச்சாட்டியம் செஞ்சிண்டிருந்தா. ஒரு வருஷம் சொல்லிப் பாத்துட்டு கேக்கலைன்னதும் அப்பாவுக்கு குணம் ஆகட்டும் அப்புரம் போய்க்கோங்கோன்னு அம்மா சொல்லிட்டா. வேடிக்கை என்னன்னா என் ஆத்துக்காரியும், என் காதை கடிக்க ஆரம்பிச்சா. கல்யாணம் ஆகி 2 வருஷம்தான் ஆகியிருந்தது. நான் கண்டுக்கலை.

அப்பா குணமானதும் வேன் அரேஞ்ச் செஞ்சுண்டு கிளம்பிட்டோம். சூரியனார் கோவில்கிட்டே பேராவூர் போகணும். காமாக்ஷி அம்மன் பிரசித்தம், தீமிதி திருவிழா வருஷா வருஷம் நடக்கும். அவள்தான் எங்க குலதெய்வம். வழீலே சிதம்பரம், சீர்காழி, பாத்துட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாயங்காலமா வந்துட்டோம். ஒரு சாஸ்த்ரிகள் “எங்காத்தில் தங்கிக்கோங்கோ, கார்த்தாலே முடி இறக்கிட்டு குளிச்சுட்டு தரிசனம் ஏற்பாடு செய்யரேன், நீங்க கோவில்லேந்து வரச்சே சாப்பாடு ரெடியா இருக்கும், அப்புரம் நீங்க எங்கே போணமோ போயிக்கலாம்”னு சொல்லியிருந்தர்.

பிர்ச்சனை என்னன்னா இப்போதான் அப்பாவுக்கு மருத்துவம், ஆஸ்பத்திரி சிலவுன்னு நிறைய ஆகிடுத்து. கோவில் ட்ரிப்புக்கு அப்பா கிட்டே காசில்லை, நாங்க பாத்துப்போம்னு அம்மா கிளம்பிட்டா. நான் கேஷ் வச்சிருந்தேன், அப்பாகிட்டே கொடுத்துட்டேன். அண்ணா கண்டுக்கவேயில்லை. அவன் சாமர்த்தியமா அப்பா டிஸ்சார்ஜ் ஆகிர டயத்தில் “ஆபீஸில் ஆடிட், நான் போயே ஆகணும்”னு கிளம்பிட்டான். நான் பணம் செட்டில் பண்ணி அழைச்சிண்டு வந்தேன். இப்போ இந்த ஷேத்ராடணத்துக்கு சிலவாகுமேன்னு தெரியாதா என்ன? அண்ணா உதவுவான்னு எதிர்பார்த்தோம். 

மன்னி என்ன சொன்னாளோ, “நீங்க தேமேன்னு வந்தாப் போதும், பர்ஸ் கிட்டே கை போகப் பிடாது”ன்னு அதட்டி வச்சிருப்பள். 
வேனுக்கு அங்கங்கே பெட்ரோல், வழீலே நிறுத்தி ஹோட்டலில் சாப்பாடு டிபன், தங்கிண்ட இடத்தில் வாடகை, சாஸ்த்ரிகள் ஃபீஸ், ஏன் அவன் பொண்ணுக்கு முடியிறக்கரதுக்கும் கூட பின்னாடி கட்டிண்ட கையை அசைக்கவேயில்லை. எல்லாத்தையும் அம்மா கொயட்டா கவனிச்சிண்டுதான் வந்தா, சீமந்த புத்திரனை தனியா கூட்டிண்ட்டு போய் வாய் வார்த்தையா புரியவைக்க மாட்டாளோ? செய்யலை. 

என்னெல்லாம் போடோ கிடெச்சது? குழந்தை மொட்டை போட்டுண்டு தாத்தா மடீலே தலைபூர சந்தனத்தை அப்பிண்டு சிரிக்கரது. அந்த மொமென்ட் மறக்க முடியாதது. காதில் இருந்த ஜிமிக்கியா இல்லை அவளுக்கு முளைச்ச பல்லா எது வெள்ளையா ஜொலிக்கரதுன்னு பட்டிமன்றம் பெசலாம். அன்னைக்கு என்னவோ தெரியலை சித்தப்பான்னு ஒட்டிண்டே வந்தா வேனில். இப்போ வளர்ந்தாச்சு பேசரதேயில்லை. வைத்தீஸ்வரன் கோவில் யானைகிட்டே பாகனுக்கு காசு தந்துட்டு எடுத்திண்ட க்ரூப் போட்டோ. பின்னாடி இருக்கர யானை ஏதும் செய்துடக் கூடாதுன்னு பயத்தில் சிரிப்பே வராம சிரிக்கரா மாதிரி மூஞ்சியை வச்சிண்டு எடுத்துண்டது. கோவிலுக்குள் இருட்டில் சரியா வரலை. அப்புரம் குளத்து படிக்கட்டில் எடுத்தது சித்தே தேவலை. ஆங்கிளும் சூரிய வெளிச்சமும் அவ்வளவு சிலாக்கியமா படலை. சரியா விழணும்னா நான் முங்கிப்போய் நடுக்குளத்துலேந்து படியை பாத்து எடுத்திருக்கணும்.

அப்புரம் கோவிந்தபுரம் கோபுரத்துக்கு முன்னாடி எல்லாரும் நின்னுண்டு எடுத்தது. பூரா கோபுரமும் விழணும்னு பின்னாடி நகந்து நகந்து போய் ரொம்பவே தள்ளி வந்துட்டோம்னு தோணாம எடுத்தது. மானுஷாள்லாம் சிக்குனூண்டா தெரியரா. அப்பா அம்மா எல்லாரும் இருக்கா. என்னைத் தவிர. அண்ணா கேட்டான்னு இதுலேந்து அவாளை பிரிச்சு எடுத்தா அவனுக்கு உபயோகப் படாது. 

கோவிந்தபுரம் கோஷாலா போட்டோல்லாம் நன்னா வந்திருக்கு. “மாட்டொட போட்டோவைன்னா உங்க தம்பி அனுப்பிச்சிருக்கர்”னு மன்னி நொட்டு சொல்லுவா. தள்ளி வச்சுட்டேன்.

குலதெய்வம் கோவிலில் மாவிளக்கு ஏத்தி, அம்பாளுக்கு புடவை சாத்தி, அர்ச்சனை செஞ்சுட்டு, பூசாரி அவாத்தில் செஞ்சு எடுத்துண்டு வந்து நெய்வேத்தியம் பண்ணின சக்கரைப் பொங்கலை இலையில் வச்சுண்டு எல்லொரும் சாப்பிடரச்சே விதவிதமா போடோ எடுத்த ஞாபகம். அதில் கடைசீயா சாப்பிட்டு முடிச்சதும், அப்பாவும் அம்மாவும் அங்கே கொட்டாயில் கயித்துக் கட்டிலில் ஏகாந்தமா உக்காந்திண்டிருந்தப்போ எடுத்த போட்டோ ரொம்பவே நன்னா இருக்க, அதை எடுத்து தனியா வச்சிண்டேன். வேர கிடைக்கலைன்னா இதுதான் சரி. அப்படியே பெருசு பண்ணலாம், ஸ்கேன் செஞ்சு இவா மூஞ்சியை பட்டும் பெருசு பண்ணி ப்ரின்ட் போட்டு பிரேம் செஞ்சுக்கலாம்.

அவாளுக்கு அன்னைக்கு தெரியுமா இதான் குலதெய்வம் கோவிலுக்கு கடைசீயா வரோம்னு? இல்லை இதுக்கப்புரம் குடும்பம் பிரிஞ்சு சின்னாபின்னமா போகும்னு? அண்ணன் தம்பியை ஒதுக்கிடுவான்னு? தம்பி தனிமரமா நிப்பான்னு?

கயித்துக் கட்டிலை பூசாரியோட பையன்தான் கொண்டு வந்து போட்டான். எதுத்தாப்புலே வயலும் பசுமையுமா கண்ணுக்கு எட்டின தூரம் வரை, அத்தனை அழகு. கட்டிலுக்கடியில் ஒரு வான்கோழி. யார் வந்திருக்கான்னு பாக்க வந்தா மாதிரி ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி. பக்கத்தில் ஒரு கூண்டு நிறைய வெண் புறாக்கள். அந்தண்டை அல்லி பூத்த குளம். குளக்கரையில் நீள நீளமா காய்ச்சு தொங்கின முறுங்கைமரம்.

“காய் விலைக்கு கொடுப்பாங்களா?” அம்மா கேக்க ஒரு கிழவி தொரட்டியை எடுத்துண்டு வந்து சர சரன்னு 20 காய் பறிச்சுட்டா. “எடுத்துகிட்டு போங்கம்மா, விலைக்கு எதுக்கு?” ஆச்சர்யமா இருந்தது. பூசாரி சம்சாரம்தானே என்னத்தை பிரசாதம் செஞ்சிருப்பான்னு பார்த்தா இப்பவும் வாயில் இனிக்கிர பொங்கல் அன்னைக்கு.

அப்பா குணம் ஆகியும், குலதெய்வம் தரிசனம் ஆனந்தமா கிடெச்சும் அண்ணா மன்னி பக்கத்துலேயே நின்னுண்டு போடோ எடுத்துண்டாலும், உணர்வுகள் ஒட்டாம காசு பணம் இடையில் சுவராய் எழும்பி நின்னுண்டு உறவை மறைச்சிண்டு, மனசுக்கு பாரமா இருந்தது இன்னும் ஞாபகம். அங்கேந்து கிளம்பி கும்பகோணத்தில் ஒருநாள் தங்கிட்டு ஊருக்கு திரும்பி வந்தப்புரம் இவா சட்டுன்னு தனிக்குடுத்தனம் போனதும் கெட்ட கனவு போல நெருடிண்டு. இன்னும் கனவு கலையலை. அப்பா அம்மா ஒவ்வொருத்தரா கிளம்பினதும் அண்ணா பட்டும் படாம காரியங்கள் செஞ்சதும், காரியம் முடிஞ்சதும் “அப்பா இருந்த வீட்டை வித்துடலாம், பணத்தை பிர்ச்சுக்கலாம்னு மன்னி அடம் பிடிச்சு ஆசையை நிறைவேத்திண்டதும் கிடு கிடுன்னு நடக்க எல்லாம் நீண்ட நடுநிசி கனவா விரிஞ்சு கிடக்கு.

என் ஆத்துக்காரி பத்தே நாள் முடியாம இருந்துட்டு மஞ்சக் காமாலைன்னு கண்டு பிடிக்கரத்துக்குள்ளே போனா. நான் தனிக்கட்டை ஆனேன். அண்ணா போனிலேயே துக்கம் விசாரிச்சான். அதுக்கப்புரம் உறவு இருந்தும் இல்லாம. போன் இருந்து யாரும் கூப்பிடாம. வாசக்கதவு திறந்து கிடக்க, யாருமே நுழையாம. ஆபீஸ் உண்டு என் வேலை உண்டு, போனோமா, வந்தோமா, வாய்க்கு பிடிச்சதை ஏனாதானோன்னு செஞ்சு சாப்டுண்டு.

எல்லாத்தையும் திரும்ப எடுத்து அடுக்கி வச்சுட்டு அலமாரியை மூடிண்டு எழுந்துக்கரேன். கையில் அந்த போடோ மட்டும். அண்ணாவுக்கு அனுப்பிடலாம்னு. வாச வராண்டாவுக்கு வரேன், இங்கே சித்தே வெளிச்சமா இருக்க எங்கப்பாவை இன்னொரு தடவை நன்னா பாக்கணும்போல மனசுக்கு பட்டது. 

எங்கப்பா நல்ல உயரம். ராஜா மாதிரி. தலை தும்பைப்பூவா வெளுத்து, அஸ்பத்திரி கட்டிலில் கிடந்த உடம்பு சித்தே மெலிஞ்சு. கண்ணாடி போட்டுப்பர், வெள்ளெழுத்துதான். அப்பா அவர் காலத்தில் ஆணழகனா இருந்திருக்கணும். பொம்மனாட்டிகள் சுத்தி சுத்தி வந்திருப்பா. ஆனால் நான் நினெச்சுப்பேன் அப்பாவுக்கு அழகு பக்கத்திலே அம்மாதான். இந்தப் படத்தில் அப்படித்தான் தோணித்து. பின்னாடி கோவில் முகப்பும் படிகளும். கட்டில் குழியில் உடம்பு பொருந்திட கால் மண் தரையில் படலை. 

கூர்ந்து பாத்திண்டே இருக்கச்சே அப்பா ஜாடையில் என் அன்ணாதான் தெரிஞ்சான். ஆனால் அப்பாவுக்கு அம்மா மாதிரி இவனுக்கு மன்னி இல்லையே!

மறுநாள் திங்கட்கிழமை. ஆபீஸுக்கு ஒரு வாரம் லீவு சொல்லிட்டேன். எடுத்து வச்ச போடோவை ஸ்கேன் செஞ்சு பரோடாவுக்கு ஈமெயில் செஞ்சாச்சு. அண்ணா இதை என்னவோ பண்ணிக்கட்டும். இதுக்காக அவன் இன்னொரு தடவை போன் செய்யப்பிடாது. தேவையில்லை. 

ஆத்தை பூட்டிண்டு வாசலில் வந்து என் காரை ஸ்டார்ட் செய்யரேன்.

குலதெய்வம் கோவிலைப் பாக்க. அம்மாவும் அப்பாவும் உக்காந்துண்ட கயித்துக்கட்டில் இன்னும் இருந்தால் அதில் சித்தே படுத்திண்டிருந்துட்டு வரணும். ஏன் வரணும்?

No comments:

Post a Comment