Thursday, September 3, 2020

காப்பகம்

16. காப்பகம் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

ரொம்ப நாளைக்கு அப்புரம் ஹைதராபாதில் என் சிநேகிதன் பத்ரியை சந்திக்கரேன். ஆகாயத்தில் பறந்து வரச்சே அவனைப் பத்தின சிந்தனைகள். ஏர்போர்ட்லேந்து நேர ஹுசைன் சாகர் லேக்கின் கரையில் பார்க் ஹோடலுக்கு போயாச்சு.

வந்தா இங்கேதான் தங்கறது. அது என்னமோ பழக்கம் ஆச்சு. சாயங்காலம் ஏரிக்கரையில் வாக் போலாம். எடுத்துண்டு போரச்சே தண்ணிக்குள் விழுந்து அப்புரம் மெனெக்கெட்டு தூக்கி வச்ச புத்தர் சிலையை பாத்துண்டே நடந்து போலாம். இந்த மாதிரி விஷயங்களில் சின்னக் குழந்தை மாதிரி ஆசை. 

“பகலில் என்னை பிசினெஸ் விஷயமா பாக்க சிலர் வருவா, அவா வந்துட்டுப் போனதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு சாயங்காலமா உங்காத்துக்கு நானே வரேன்.” சொல்லியிருந்தேன். “வந்து டீ குடிச்சுட்டு அப்புரம்  எங்களொடத்தான் ராத்திரி டின்னர் சாப்டுட்டு போணம்”னு சொன்னான். அவன் போனை வச்சதும் அவன் ஆத்துக்காரி ஷோபனாவும் தனியா போன் போட்டு “அண்ணா மறக்காம சாப்பிடரா மாதிரி வாங்கோ”ன்னு கேட்டுண்டா.

மின்னே வந்தப்போல்லாம் இவன் இங்கே வந்துட்டான், இப்போ துபாயில் இல்லைன்னு தெரியாமப் போச்சு

பத்ரியை எனக்குப் எப்படி தெரியும்? நான் முதல் முதலில் தில்லியில் வேலை பாத்தப்போ எங்கூட ஒரே ரூமில் தங்கியிருந்தான். நாங்க ரெண்டுபேர் அப்புரம் இன்னும் ரெண்டுபேர் எங்களோட ஃப்ளாட்டில் வந்து சேர்ந்துண்டா. என்னோட அந்த திருப்பி வாங்க முடியாத பேச்சலர் டேய்ஸ் இவாளொடத்தான் கழிந்தது. அப்புரம் ஒவ்வொருத்தரும் வேலைமாத்திண்டு வெவ்வேர இடத்துக்கு போயாச்சு. பத்ரி துபாய்க்கு போய் நிறைய சம்பாதிச்சுண்டு இப்போ ஹைதராபாத்தில் ஈஸ்ட் மாரட்பள்ளியில் செட்டில். இத்தனை வருஷங்களா அப்பப்போ போனில், இல்லை ஈமையிலில்தான் கான்டாக்ட். அப்புரம் கல்யாணம் ஆகி, குழந்தைகள்னு ஆனப்புரம் சித்தே விலகிட்டோம். 

என் பொண் கல்யாணத்துக்கு வரேன்னு வாக்குக் கொடுத்தவன், வரமுடியலைன்னு அப்புரம் வருத்தப்பட்டான். அவனுக்கு ஒரே  பையன்னு கேள்விப்பட்டேன். கல்யாணம் ஆகியிருக்கணும். 
ரொம்ப நாளைக்கு அப்புரம் சிநேகிதனை பாக்கபோரேன்னு அத்தனை சந்தோஷம். அவனுக்கும் இருக்குமே!

சரியா நான் போரச்செ சாயங்காலம் 6. வாசலில் உக்காந்திண்டிருந்தவன் கால் டேக்ஸிலேந்து நான் இறங்கரதைப் பாத்துட்டு ஓடிவந்து கட்டிண்டான். அப்படியேத்தான், அன்னைக்குப் பாத்தா மாதிரி வெகுளிச் சிரிப்பு, வாஞ்சை, ஸ்நேகிதம் எல்லாம் குழைச்சுப் பேச்சு தங்கு தடையில்லாம. உள்லேந்து வந்த ஷோபனாவும் அப்படியே. என்னொத்த வயசு ஆனால் அத்தனை ஆதர்ஷ தம்பதின்னு சொல்லலாம். என் மனைவி போய் 4 வருஷம் ஆச்சு. பொண் கேலிஃபோர்னியாவில். 

“நீ மட்டும் ஏண்டா சென்னையில் தனியா?” கேட்டான். “இப்போதைக்கு உடம்பு ஃபிட்டா இருக்கு, அப்புரம் தேவைன்னா பாத்துக்கலாம். ஒரு ஹோமில் பதிவு செஞ்சு வச்சிருக்கேன். உன் கதையைச் சொல்லு!” டீ குடிச்சிண்டே கேக்க்கரேன்.
அவனுக்கு ஷுகர் போடாம டீ, அந்தக் கப் எனக்கு வந்துடுத்து. பரவாயில்லைன்னு – அதுவும் நன்னாத்தான் இருந்தது. 

அவன், அவனோடா பிசினெஸ், துபய் வாழ்க்கை, கடைசீலெ எல்லாம் அலுத்துப்போய், “நம்மூர் வந்து தெலுங்கில் பேசிண்டு சொச்ச காலத்தை கழிச்சுடணும்னு வந்துட்டேண்டா!” அதுக்கு ஷோபனா, “தெலுங்கு எங்கே பேசமுடியறது? எல்லாம் ஹைதராபாதி ஹிந்திதான்.” அதுவும் சரி. மாரட்பள்ளி நல்ல இடம். அங்கே அவன் பூர்வீக ப்ராபெர்டி டெவெலப் செஞ்சு அங்கேயே வாசம். “உன் குழந்தைகளைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே, ஒரு பையன்னு எப்பவோ நீ சொன்னது ஞாபகம் இருக்கு, அவன் எங்கே? கல்யாணம் ஆச்சா?” நான் கேக்க இவா ரெண்டுபேர் முகமும் சோகத்தில் தொங்கிப் போச்சே.

அச்சச்சோ நாம் என்ன கேட்டுட்டோம்? யாராவது காமன் ஸ்நேகிதாகிட்டே சித்தே விசாரிச்சிண்டு வந்திருக்கணுமோன்னும் வந்த இடத்தில் நாம இவாளுக்கு சங்கடத்தை தந்துட்டோமேன்னு பட்டது. ஆரம்பிச்ச விஷயம் அப்படி. அதை விட்டு விலகி அத்தனை ஈஸியா வேர சப்ஜெக்டுக்கு போக இயலாதே! அப்படி செஞ்சா அவன் குழந்தை மேலே அக்கரை இல்லைன்னு ஆகிடுமே! ஒரு வேளை குழந்தையே பிறக்கலையோ! எப்பவோ லெட்டெரில் படிச்ச ஞாபகம். இப்போ என்னத்தை பண்ண? தர்ம சங்கடத்தில் விழுந்துட்டேன்.

“இருக்காண்டா, பேஷா இருக்கான். ஆஸ்பத்திரியில். சொல்லிட்டு அடக்கமுடியாத துக்கத்தில் கண் ஓரங்களில் நீர் கசிய சோபாவில் தள்ளி உக்காந்திண்டிருந்தவன், கிட்டக்க நகந்துண்டு என் தோளில் சாஞ்சுக்கரான். எனக்கு என்ன செய்வதுன்னு புரியலை. ஷோபமா புடவைத் தலைப்பில் தன் முகத்தை புதைச்சுக்கரா. என்ன உடம்புக்கு? இப்போ 30 அல்லது 35 வயசிருக்கும். ஆஸ்பத்ரிக்கு போர வயசா?

அப்புரம் சித்தே சுதாரிச்சுண்டு, “இத்தனை வருஷங்கள் கழிச்சு சந்திச்சிருக்கோம், நான் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்கப் பிடாதுதான். அடக்க முடியலைடா!” அவன் இன்னும் அழ, நானும் அவனை தாங்கிப் பிடிச்சிண்டு, “நீ ஓண்ணும் சொல்லவேண்டாம். பேசாமல் இரு.” சமாதானப் படுத்த முயற்சி செஞ்சு தோத்துப்போரேன். அப்புரம் மொள்ள அவன் சொன்ன விவரங்கள் என்னை அசைச்சுப் போட்டது.

“துபாயிலேந்து வந்ததும் பையன் நல்ல வேலை இங்கேயே கிடைச்சு ஒரு பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சானாம். அவன் சமுத்துடா, காதல் கல்யாணம்தான் செஞ்சுக்கணும்ன்னு பிடிவாதமா, ஆனா நம்படவா பொண்ணா ஒரு நல்ல பொண்ணைத் தேடிப்பிடிச்சு அவளை காதலிச்சு ஒருநாள் ஆத்துக்கு அழைச்சிண்டு வந்துட்டான். இவள் சித்தே கோவிச்சுண்டா, எனக்கு இந்த சம்பந்தம் நன்னாவே பிடிச்சிருந்தது. அப்புரம் அவளையே பண்ணி வைக்கரோம்னு சொல்லி அவாத்துலேயும் பேச்சு வார்த்தை ஆரம்பிச்சோம். நல்ல குடும்பம், நிச்சயமும் ஆச்சு." 

"ஆனா கல்யாணத் தேதிக்கு 1 வாரம் முன்னாடி ஸ்கூட்டரில் போரச்சே அந்த பொண்ணு மேலே லாரி இடுச்சு ஸ்பாட்டுலேயே போயிட்டா. இவன் அன்னிலேந்து ஒருமாதிரி ஆயிட்டான். யாரொடையும் பெசறதில்லை. தனக்குத்தானே பேசிண்டு, சரியா சாப்பிடாம, உடம்பு ரொம்பவே மோசமாகி. எத்தனயோ டாக்டர் கிட்டே காமிச்சாச்சு, ஒண்ணும் குணமாகலை. கிட்டக்க போனால் வயலன்ட்டா பிஹேவ் செய்ய ஆரம்பிச்சான், அன்னைக்க்கு ஷோபனாவை மாடீலேந்து தள்ளிவிட இருந்தாண்டா! என்ன செய்ய? அப்புரமதான் அவனை ஒரு மனநல காப்பகத்தில் வச்சுப் பாத்துக்கரதே நல்லதுன்னு சேர்த்துட்டோம்.”

“என்னடா, இத்தனை நடந்திருக்கு. என்னாலேயே தாங்கிக்க முடியலை, நீங்க பெத்தவா, எப்படிடா இத்தனையும் கடந்து வந்தேள்?” “கடந்து எங்கே  வந்தோம், கடக்க முடியலைடா.” அதுக்குள்ளே ஷோபனா இலை போட்டாச்சுன்னு கூப்பிட, கையைப் பிடிச்சு இழுத்துண்டு போனான். 

என்னத்தை சாப்பிடறது? ஆனா அத்தனை நடந்தும் நான் வந்திருக்கேன்னு அத்தனை உபசரணை. நான் விரும்பிச் சாப்பிட்டா இவாளுக்கு சித்தேயாவது சந்தோஷம் கிட்டும்னு சாப்பிட்டேன். நானே வலிய பேச்சை மாத்தி, இவாளை கொஞ்ச நாழியாவது, நான் கிளம்பிப்போர வரைக்குமாவது சிரிச்சிண்டு இருக்கட்டும்னு சில விஷயங்கள், பழைய ஜோக்குகள்னு நேரம் போச்சு. 

கிளம்பரச்சே, நாளைக்கு உன் ப்ரொக்ரேம் என்னன்னு கேட்டான்.

“எனக்கு நாளைக்குன்னு ஒண்ணும் வச்சுக்கலை. மத்தியானம் 3 மணிக்குத்தான் ஃப்ளைட். ஏன் கேக்கராய்? நீயும் ஷோபனாவும் நான் தங்கியிருக்கும் பார்க் ஹோட்டலுக்கு வந்துடுங்கோ, என்னோட சாப்டுட்டு நான் ஏர்போர்ட்டுக்கு கிளம்பர வரைக்கும் பேசிண்டிருக்கலாமே!” நான் இன்வைட் செய்ய, “இல்லைடா நாளைக்கு நாங்க ஆஸ்பத்திரிக்குப் போர நாள், ஆனா உனக்கு ஏதாவது தேவைன்னா உதவலாமேன்னுதான் கேட்டேன். இங்கே சீட்லெஸ் க்ரேப்ஸ் கிடைக்கரது. வாங்கித்தரட்டுமா? அப்புரம் எப்போ நாமமீட் செய்யப்போரோம்னு தெரியலை.” 

அவன் அப்படிச் சொல்ல என்ன தோணித்தோ, “உங்களோட கூட நானும் உன் பையனைப் பாக்க வரலாமா?” கேட்டுட்டேன்.

மூணாம் மனுஷா இப்படிப்பட்ட தறுணங்களில் கூட வரதை யாரும் விரும்ப மாட்டா. அதான் தயங்கித் தயங்கி நான் விசாரிக்க அவன் சித்தே யோசிக்க ஆரம்பிச்சது புரிஞ்சது. பலநாள் கழிச்சு சந்திச்ச நண்பனுக்கு இவன் என் பிள்ளை, இன்ன வேலை பாக்கரான், இத்தனை படிச்சிருக்கான், அவன் ஆத்துக்காரி இவள், குழந்தை இவன்னு அறிமுகப்படுத்தி சந்தோஷிப்பது எப்படி, இந்த கம்பியைப் பிடிச்சுண்டு மோட்டுவளையைப் பாத்து தனக்குத்தானே பேசிண்டு, பச்சை சட்டை போட்டுண்டு தூரக்க நாலுபேர் அமுக்கிப் பிடிச்சிண்டு ஊசி போட்டுக்கரவன் அதோ பாரு, அவன்தான் என் பையன்னு அறிமுகப்படுத்துவது எப்படி? அதான் யொசிக்கரானோ?

“டேய் பத்ரி, ஏதோ பாக்கணும்னு தோணித்துடா, அதான் சட்டுன்னு யோசிக்காம கேட்டுட்டேன், மன்னிச்சுடு, நான் வரலை.” சட்டுன்னு சொன்னேன்.

ஷோபனாவோ, “அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க வந்தா அவர் சந்தோஷப்படுவர். எப்படி வந்து உங்களையும் பிக்கப் செஞ்சுண்டு போரதுன்னுதான் மனசுக்குள் யோசிச்சிண்டிருக்கர்.” சாதூர்யமா அவனுக்கு ஒரு முடிவெடுக்க உதவினாள். அவனும் சட்டுன்னு, “சரி கார்த்தாலே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு சரியா 9 மணிக்கு ஹோடல் லாபியில் காத்துண்டிரு, நான் வந்துடரேன். மனோவிகாஸ் நகர்னு போவேன்பள்ளீ போணம்”.

சொன்னபடி காரெக்டா வந்துட்டன். எனக்க்கு வழீலே குடிக்கன்னு ஃபிளாஸ்கில் பாபி போட்டு எடுத்துண்டு வந்திருந்தா ஷோபனா. “நேஷணல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் ஹெல்த்னு இருக்குடா, நன்னா கவனிச்சுக்கரா, அங்கே போரோம்.” வழீலே சொல்லிண்டு வந்தான். “போனாத்தான் தெரியும் அவனை கிட்டக்க போய் பாக்க முடியுமா, இல்லை பெசலாமான்னு.” புதிர் வச்சான். ஒருநாள் மாதிரி இன்னொரு நாள் இருக்கரதில்லையாம். பையில் பழம், இன்னும் சில தின்பண்டங்கள் எடுத்து வச்சிண்டு வந்திருந்தா ஷோபனா. “கொடுத்துட்டு வருவம், அங்கே இருக்கரவா எல்லாரும் பிரிச்சு எடுத்துப்பா.” இவள் சொல்ல எனக்கு என்னவோ மனசை அப்படி பிசைஞ்சு எடுத்தது.

அடிக்கடி இவா வரதுனாலே பத்ரியொட காரைப் பாத்ததும் காவலாளி கேட்டை தொறந்துவிட்டான். “இது மிகப்பெரீய படிப்பு சொல்லிக்கொடுக்கர இடமும் கூட, ரிசேர்ச் செய்யரா, நிறையவே, ஆனா நாம போகப்போர இடம் மனோரஞ்சனம்னு இதுக்குள்ளேயே இருக்கிர காப்பகம். அங்கேதான் என் குழந்தை இருக்கான்.”

முதல்ல ட்யூடி டாக்டரை பாத்துட்டு அப்புரம் வார்டுக்குப் போக கதவுக்கு வெளீலேந்து இவன் காமிக்க சிநேகிதன் பத்ரியோட 32 வயசு குழந்தையை நானும் பார்த்தேன். மெலிஞ்சுபோய், கிட்டத்தட்ட பத்ரியின் அப்பா மாதிரி பட்டது. அவனும் இன்னொரு ட்ரீர்ட்மென்ட் எடுத்துக்கர ஒருத்தரும் ஏதோ செஞ்சிண்டிருந்தா. என்ன செய்யரான்னு கேட்டதுக்கு வார்ட் பாய், செஸ் விளையாடரான்னு சொல்ல, அப்போதான் பார்த்தேன், காயின் வச்சுக்காம செஸ் போர்ட் மட்டும் இவா ரெண்டு பேருக்கும் நடுவுலே படுக்கையில் பிரிச்சு வச்சிருந்ததை.

சித்தே நாழி நின்னுண்டிருந்துட்டு கிளம்பினோம். ஆனால் இவா ரெண்டு பேர் முகத்துலேயும் ஒரு சொல்லொண்ணா ஆத்ம திருப்தி. பையனை பார்த்ததில், அவனை ஒதுக்கி வச்சுடலை, அவன் ஏதோ விதத்தில் நன்னா நம் கண் முன்னாடித்தான் இருக்கான்னு. ஷோபனா கண்ணைத் துடைச்சுண்டு நகர, பத்ரி அவள் கையை பிடிச்சிண்டு தன்னையும் அவளையும் சமாதானம் செஞ்சுக்கரதையும் என்னால் காண முடிஞ்சது.

திரும்பி வரச்சே கையில் கொண்டுவந்ததை கிட்சனில் தந்துட்டுப் போலாம்னு ஷோபனா கிளம்பிப்போக, நானும் பத்ரியும் அங்கே மரத்தடியில் ஒரு பென்சில் உக்காந்துக்கரோம். அப்போதான் எங்களைப் பாத்துட்டு ஒருத்தர் “ஹலோ”ன்னு சொல்லிண்டே நடந்து வந்தர். 

பத்ரியும் “அட, நீங்களா, சௌக்கியமா இருக்கேளா, இங்கே எப்படீன்னு?” கேக்க, நான் யாரா இருக்கும் இவர், பத்ரிக்கு நல்ல பழக்கம் மாதிரி தெரியரதேன்னு யோசனையில் ஆழ்ந்தேன்.

அப்புரம் பத்ரி இன்ட்ரடயூஸ் செஞ்சான். “இவர்தான் எனக்கு சம்பந்தியா வந்திருக்க வேண்டியவர். பேர் ராமகிருஷ்ணன். சார் நீங்க எப்படி இங்கே?”

“நான் என் மாப்பிள்ளையைப் பாக்க ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா வருவேனே, உங்களுக்குத் தெரியாதா? டாக்டர் சொல்லியிருப்பார்னு நினைச்சேன்.”

No comments:

Post a Comment