Wednesday, September 9, 2020

என் குழந்தை

13. என் குழந்தை (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

நான் இதுக்கு ஒத்துக்கவே முடியாதுன்னுட்டேன். ஆன முட்டும் கேட்டுப் பாத்துட்டர், உஹூம்னா உஹூம்தான். சில விஷயங்களில் ஆத்துக்காரர் கிட்டே கராரா இருந்துடறது நல்லது.

என்ன இன்னொரு குழந்தை பெத்துக்கொடூன்னு கேட்டாரா? சின்னதா ஏதாவது ட்ரெஸ் வாங்கிண்டு வந்து மாட்டிண்டு செல்ஃபீ எடுத்துக்கலாம்னு சொன்னாரா? இல்லை அதைவிட ஏடாகூடமா ஏதாவது ஆசையைச் சொல்லி அதைப் பண்ணிப் பாக்கலாமான்னு கேட்டாரா? என்னத்தை கேட்டுட்டார் அதுக்கு நீ ஒத்துக்கவே முடியாதுன்னு சொன்னாய்னு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கும். 

சொல்லிடரேன். நீங்க எதிர்பாத்து இதுவா இருக்குமோன்னு அவர் கேட்டார்னு நினெச்சதை கேட்டிருந்தாத்தான் தேவலையே. ஒழிஞ்சு போரதுன்னு பிராம்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பேன். ஆனா அவர் அதைவிட இன்னொண்ணை கேட்டுட்டார்.

மும்பையில் இருக்கும் தன் தங்கை சுலோசனாவை கூடவே கொண்டுவந்து வச்சுக்கலாமான்னு கேட்டுட்டர்.

நாத்தனார் மேலே அத்தனை கோபமா? என்ன ஆச்சுன்னும் ஏன் அவள் வரதை நீ ஒத்துக்கலைன்னும் இப்போவே தெரிஞ்சுக்கணும்னு ஆசை வரும். கதை படிக்கரச்சே இப்படித்தான் தோணும். எல்லாத்தையும் விவரமா சொன்னா நான் எடுத்த முடிவும் என் ஆக்ரோஷமான ஆட்சேபணையும் ஏன்னு புரியும். என் நிலைமையில் இருந்தா நீங்களும் இதைத்தான் செஞ்சிருப்பேள். இத்தனை ஏன், இந்த மாதிரி ஒரு அசட்டு ஐடியாவை, அதனால் ஏற்படும் விளைவுகளை பொருட்படுத்தாம சொன்னதுக்கு நீங்களும் அவரை திட்டித் தீத்திருப்பேள்.

நான் பத்மா சுந்தர். எங்காத்துக்காரர் பெரீய வேலையில் இருக்கர். அவருக்கும் அவர் தங்கை சுலோசனாவுக்கும் 6 வயசு வித்யாசம். கும்மோணத்தில் இருக்கச்சே இத்தனை வயசு வித்யாசமாச்சே நீ முதல்ல கல்யாணம் செஞ்சுண்டுடுன்னு இவருக்கு பண்ணிட்டா. ஆனா பாருங்கோ எங்களுக்கு குழந்தையே பிறக்கலை. கும்மோணத்துலேயே எல்லாக் கோவிலுக்கும் போயாச்சு. அப்படி அல்லோல கல்லோல பட்டுண்டிருக்கச்சே சுலோவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு. நல்ல வரன், ஒரே பொண்ணுன்னு தாம் தூம்னு சிலவு பண்ணி என் மாமனார் செஞ்சு வச்சர். கல்யாணம் ஆன 10ஆம் மாசம் அவளுக்கு லட்டு மாதிரி ஆண் குழந்தை. 

என்ன நினெச்சாரோ, என் மாமனாரே அவள்கிட்டேயும், மாப்பிள்ளைகிட்டேயும் தன் கடைசீ ஆசைன்னு ப்ளாக் மெயில் செஞ்சு அந்த குழந்தையை எங்களுக்கு தத்து கொடுக்க சம்மதிக்க வச்சுட்டர்.

அவளுக்கு அப்புரமும் ஒரு பையன் பிறந்தான். அதனால் ஒண்ணும் பெரீசா பிர்ச்சனை இல்லை. அப்புரம் சுலோசனா ஆத்துக்காரர் மும்பைக்குப் போனதும், சித்தே டச் விட்டாலும் அப்பப்போ போனில் பேசிண்டு, விசேஷங்களில் பாத்துண்டு வாழ்க்கை நகந்தது. என் பையன் காமேஷ் பெங்களூரில் MBA முடிச்சுட்டு நல்ல வேலையில் இருக்கான். கல்யாணத்துக்கு பாத்திண்டிருக்கோம். அவாத்து பையன் பாஸ்கர் MS பண்ணன்னு கானடா போயிட்டான். படிப்பு முடிச்சதும் அங்கேயே செட்டில்னு பேசிக்கரா. 

இப்படி இருக்கச்சே இவர் மாப்பிள்ளை தவறிவிட்டர். சுலோசனா நமக்கு எவ்வளவு பெரீய உதவி பண்ணியிருக்கா, அவளை மும்பையில் தனியா விடாம, கும்மோணத்தில் நம்ம கூட அழைச்சு வச்சுக்கணும்னு இவருக்கு ஆசை. அதைத்தான் செய்யலாமான்னு கேட்டர்.

பெரீய வீடு. அரசு கலைக் கல்லூரிகிட்டே. இவரும் நன்னா சம்பாதிக்கரர். கூட வச்சுக்கரதில் வேற ஒண்ணும் பிர்ச்சனையில்லை. ஆனா இவள் ஆத்தொட இருந்தா தத்து கொடுத்த பிள்ளை மேலே ஒட்டிண்டுட்டாள்னா? 

இன்னி வரைக்கும் காமேஸ்வரனை அவளொட சேர்ந்து 10 நிமிஷத்துக்கு மேலே விட்டதில்லை. அதுவும் இவாத்து கல்யாணம், புண்யாவசனம், கிருஹப்பிரவேஸம்னு சேர்ந்து பாத்துண்டதில் நடந்ததுதான். அப்போல்லாம் கூடவே நானும் நிப்பேன். என் பிள்ளையை பாக்கரச்சே அவள் கண்ணீல் வாஞ்சை தூக்கலா தெரியும். “உடம்பை பாத்துக்கோ”ன்னு சொல்லுவா. அது சாதாரணமா ஒரு அத்தை மருமானுக்கு சொல்ராப்புலே தெரியாது. இப்போ அவன் பெங்களூரில் இருந்தாலும் லீவுக்கு வருவானே, வந்தால் 10நா இருப்பன். இவளையும் கூட வச்சிண்டா ஆகாது.

“இங்கே பாருங்கோ! சுலோ தனியா கஷ்டப்படரான்னு யோசிச்சிண்டு மருகிண்டு இங்கே மூஞ்சியை உம்முன்னு வச்சிண்டு சுத்தினா எனக்குப் பிடிக்காது. வேணும்னா நீங்க அடிக்கடி போய் பாத்துட்டு வாங்கோ, சிலவுக்கு தேவைப் பட்டா தாங்கோ. அதுக்கெல்லாம் நாம் கடமைப் பட்டவா. நீங்களே சிலவு செஞ்சு அவளை கானடாவுக்கு பிள்ளையோட அனுப்பி வையுங்கோ. இங்கேயே கும்மோணத்தில் கூடவே வச்சுக்கரத்துக்கு நான் அனுமதிக்க மாட்டேன்.”

“ஏண்டி இப்படி பிடிவாதமா சொல்ராய், என்னதான் உனக்கு பிராப்ளம்? நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையாத்தானே இருப்பேள்? போனில் பெசரச்சே நீயே அத்தனை இழையராய்! பாவம்டீ. ஒரே அண்ணா, நான் கவனிச்சுக்கலைன்னா யார் அவளை பாத்துப்பா?” இப்படி கேட்டதும் என் மனசில் இருக்கிர கவலையைச் சொன்னேன். சரிதான் இவ சொல்ரதுலேயும் விஷயம் இருக்கு. 

சித்தே யோசிச்சவர், “அப்ப்படியெல்லாம் நீயா பீதிச்சுக்கரத்துக்கு ஒண்ணும் இல்லை. காமேஷுக்கு இப்போ 26 வயசு. இந்த வயசில் அவனுக்கு அத்தை மேலே இருக்கர பாசம் அம்மா பாசமா மாறப் போரதில்லை. அப்படியே ஏதாவது தோணித்துனாலும் உன்னை எப்படி அம்மாவா நினைக்காம இருக்கமுடியும், 6 மாசத்திலேந்து நீதானே அவனை வளர்த்தாய். அதுவுமில்லாம சுலோசனாவுக்கு குழந்தையே இல்லைன்னா நீ பயப்படரா மாதிரி அவள் நடந்துக்கலாம். இத்தனை நாளா வந்துண்டும் போயிண்டும் இருந்தவள் அப்படி மனசில் ஏதாவது ஆசை இருந்தா நமக்குத் தெரிஞ்சிருக்கும். அவளுக்கே ஒரு பையன் பிறந்து சீராட்டி வளர்த்துட்டவளுக்கு தத்து கொடுத்த பையனை திரும்பப் பிடிங்கிக்கணும்னு தோணுமா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. விஷப்பரீக்ஷை எதுக்கு?” நான் இத்தனை பிடிவாதமா இருக்கச்சே சித்தே விட்டுப் பிடிப்போம்னு அவருக்கு தோணித்தோ இல்லை இந்தப் பேச்சையே விட்டுடலாம்னு பட்டதோ தெரியலை கம்முன்னு வேற வேலை பாக்கன்னு போயிட்டர். அப்பாடான்னு இருந்தது. ஆனா ஒண்ணு விளங்கித்து நான் இப்படி செஞ்சது அவருக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கும். காமிச்சுக்கலயே தவிர எனக்குப் புரிஞ்சது. சித்தே வருத்தமா இருந்தது. 

ஆனாலும் இந்த ஒரு விஷயத்தில் சித்தே ஜாக்கிரதையா இருந்துடரது நல்லது. இதெல்லாம் ஆம்பிள்ளைகளுக்கு புரியாது. அப்படியே ஒரு கோல்ட் வார் மாதிரி ரெண்டு வாரம் போச்சு.

ஒருநா காமேஷ்கிட்டேந்து போன். “என்னடா செல்லம், என்ன விசேஷம், ஜாபெல்லாம் எப்படிப் போரது?” விசாரிச்சிண்டே என் பையன் இப்போ தனியா சமைச்சு சாப்பிட்டிண்டிருக்கானே எப்படி இருப்பானோன்னு கவலையோட விசாரிச்சேன். “ஒண்ணும் பிராப்ளம் இல்லைம்மா, நான் நன்னாத்தான் இருக்கேன், நீயும் அப்பாவும் எப்படி இருக்கேள்?” அட குழந்தை நன்னா விசாரிக்கத் தெரிஞ்சு வச்சிண்டிருக்கான்னு பட்டது. அப்போதான், இன்னொண்ணும் கேட்டான். “நான் இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லு பாப்பம்?”

மணி கார்த்தாலே 9. வேலைக்கு கிளம்பிண்டிருப்பான் இல்லை கான்ஃபெரான்ஸ் காலுன்னு சீக்கிரமே கொரமங்களாவில் இருக்கும் ஆபீஸுக்குப் போயிருப்பன். “ஏண்டா, ரூமில் இல்லையா, ஆபீஸா?” சொல்ல, அம்மா நான் பெங்களூருலேயே இல்லையாக்கும்.” “அப்படீன்னா எங்கேடா?” “மும்பை.” “ஓ, அங்கே என்ன செய்யராய்? எப்போ போனாய்?” 
“அம்மா, ஆபீஸ் விஷயமா ஒரு கஸ்டமரை பாத்துப்பேசணும் நீ போன்னு என்னை திடுதுப்புன்னு அனுபிச்சுட்டா, விடிகாலை ஃப்ளைட் பிடிச்சு இங்கே வந்துட்டேன். ரெண்டுநா வேலை, அப்புரம் திரும்பிடுவேன். ஆனா இன்னும் நீ நான் எங்கே இருக்கேன்னு சொல்லலை!” 

“ஏண்டா அதான் மும்பைன்னு சொல்லிட்டயே!” “மும்பைலே எங்கே? ஹோட்டலா?” “இல்லைம்மா நான் அத்தையாத்துக்கு வந்துட்டேன்.”

தூக்கி வாரிப்போட்டது.

அச்சச்சோ, இவன் அங்கே ஏன் போனான்? எது நடக்கக்கூடாதோ அதுன்னா நடந்துடுத்து. அவனே சொல்ரான். “அம்மா நன்னா பெரீய ஹோட்டலில் தங்கிக்கலாம், ஆனா வீட்டுச் சாப்பாடு கிடைக்குமா, அங்கேயும் கைச் சமையல்னு ஒண்ணு பண்ணி சாப்பிடரேன். சகிக்கலை, அதான் ஏர்போர்டுலேந்து நேர அத்தை ஆத்துக்கு போன் போட்டு சொல்லிட்டு இங்கே வந்துட்டேன். நாளைக்கு சாயம்காலம் திரும்பப் போயிடுவேன்.” இதை கேட்ட எனக்கு எப்படி இருக்கும் பாத்துக்கோங்கோ!

ஓண்ணும் சொல்லத் தோணலை. “அத்தையை ரொம்பப் படுத்தாதே. முடிஞ்சா சாப்டுட்டு இன்னைக்கு சாயங்காலம் ஹோட்டலில் ரூமெடுத்து தங்கிக்கோ. அதான் சௌக்கர்யம். நீயும் ஃப்ரீயா இருக்கலாம்.” சொல்லிட்டு வச்சுட்டேன்.

ஆனா கையும் ஓடலை காலும் ஓடலை. அத்தை சமைச்சுப் போடுவா சரி. ஆனா இவனோட தனியா இருக்கச்சே என்னெல்லாம் தகவல் சொல்லுவாளோ, என்னெல்லாம் பேசுவாளோ? சித்தே முன்னே ஆபீஸுக்குப் கிளம்பிப் போன என் ஆத்துக்காரருக்கு விஷயத்தை சொல்லியே ஆகணுமே! போனைப் போட்டேன். நாட் ரீச்சபிள்னு வந்தது. ஒருவேளை ட்ரைவிங்க்லே இருக்கரோ என்னமோ, அப்புரமா பேசிக்கலாம்னு வச்சேன். 

மத்தியானம் 12 இருக்கும், சுலோவே போனில். “மன்னி நீ நன்னாத்தான் பிள்ளையை வளர்த்திருக்காய். சமுத்தா இருக்கன். வரச்சே பழம் வாங்கிண்டு வந்தான் கமேஸ்வரன். ஆசையா அத்தை எனக்கு சாயம்காலம் வரச்சே மைசூர் போண்டா வேணும், ராத்திரி துகயல் அரைச்சு சாதம் வடிச்சு வைன்னுட்டு போயிருக்கான். அவன் இப்படி பழகறது ரம்மியமா இருக்கு மன்னி. இங்கேயே நிறைய தெரிஞ்சவா, நம்மடவாளாத்தில் கல்யாணத்துக்கு காமேஸ்வரனுக்கு பொருத்தமான பொண்கள் இருக்கா, பாக்கட்டுமா?” என் நாத்தனார் கேக்க எனக்கு என்ன சொல்ரதுன்னு பிடிபடலை.

அப்படீன்னா இவன் சயாங்காலமும் அத்தையாத்துக்குத்தான் போவன். ராத்திரி அங்கேதான் சாப்பிடப் போரான். அங்கேதான் தூங்குவன். இவளோட இன்னும் பேசிண்டிருப்பன். இவள் வேர அவனுக்கு வரன் பாக்கட்டுமான்னு என்னையே விசாரிக்கரா. மும்பைப் பொண்ணாய்ப் பாத்து அடிக்கடி அங்கே வந்து போரா மாதிரி பண்ணிக்கப் போராளோ! இல்லை வாய்க்கு வக்கணையா சமைச்சுப் போட்டாள்னா, நீ மும்பையில் தனியாத்தானே இருக்காய், என்னோட பெங்களூருக்கு வந்து இரேன்னு சொல்லிட்டு கூடவே அழைச்சிண்டு போயிட்டானா? மனசில் விதவிதமான எண்ணங்கள் வந்து அமுக்க என்ன செய்யரதுன்னு தெரியலை.

அன்னைக்கு பூரா பசியே எடுக்கலை, சாப்பிடவும் இல்லை. சமைச்சான்னா? நறுக்கிவச்ச காயை அப்படியே ஃப்ரிட்ஜில் எடுத்து வச்சுட்டு சாயங்காலம் நாலேமுக்காலுக்கு சாரங்கபாணீ கோவிலுக்கு நடை தொறந்ததும் போய் வேண்டிண்டு வந்தேன். என் பிர்ச்சனைக்கு அவர்தான் ஒத்தாசை செய்யணும்னு. சரியா 7 மணிக்கு எங்காத்துக்காரர் வந்தர். சுலோசனாவுக்கு அண்ணன்

“ஏன்னா, எனெக்கென்னமோ நீங்க சொன்னது யோசிச்சுப்பாத்ததில் சரீன்னு பட்டது. உங்க தங்கை அத்தனை பெரீய ஊரில் தனியா, ஒரு கோயில் உண்டா குளம் உண்டா, ஹிந்தீலே பெஸிண்டு, தனக்கு மட்டும் சமைச்சு சாப்டுண்டு. உடம்புக்குன்னு வந்தா நாம சட்டுன்னு போய் பாத்துட்டு உதவவும் கஷ்டம். என்னைக் கேட்டா நீங்க போய் அவளொட பேசி, அவா இருக்கர ஃப்ளேட்டை வாடகைக்கு கொடுத்துட்டு, சாமானெல்லாம் கட்டி ஒரு ரூமில் போட்டுட்டு, கையோட உங்க தங்கையை கும்மோணத்துக்கு கூட்டிண்டு வந்துடுங்கோ. எனக்கும் கூட மாட ஒத்தாசையா இருக்கும்.”

என்ன நான் இப்படி மாறிட்டேன்னு ஆச்சர்யமா என்னையே பாத்திண்டிருந்தர்.

No comments:

Post a Comment