Wednesday, September 9, 2020

கும்மோணத்து குசும்பு

76.  கும்மோணத்து குசும்பு (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

அப்பாவுக்கும் என் அம்மா வழி பெரீப்பா பொண் கங்காவுக்கும் இடையே விசேஷமான உறவு. அவா பேசிக்கரச்சே தள்ளி நின்னு சும்மா கேட்டிண்டிருந்தாலே பொழுது போயிடும். எங்காம் மேம்பாலம் தாண்டி திருநாகேஸ்வரம் போர ரோட்டில் உடனே லெஃப்டு திரும்பினா வருமே சுந்தர விநாயகர் கோவில், அதுகிட்டே. அவள் திருவையாத்தில், பாவாஸ்வாமி அக்ரஹாரம்.

கங்கா கதை ஏற்கனவே ஏழுவாட்டி போன சீசனில் சொல்லிட்டாயே இன்னுமா? சிலபேர் கேக்கலாம். கும்மோணத்து கதைக்குள் அவா இல்லைன்னா எப்படி? 

அப்பா ஸ்ரீராமன். அம்மா வைதேகி. சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் ஜாஸ்தி. என்கிட்டே தன் கல்யாணம் ஆன கதையை அம்மா சொல்லுவா! “பாக்கன்னு வந்த எந்த பையனும் பிடிக்கலைடா. வரவால்லாம் பொண்ணுக்கு பாடத் தெரியுமான்னு கேட்டாளே தவிர அவாளுக்கு என்ன தெரியும்னு சொல்லலை. “வைதேகி காத்திருந்தாள்”னு ஆகிடுமோன்னு பயந்தேன். 13ஆவதா உங்கப்பா. இவரும் “பாடத் தெரியுமா”ன்னர். கூடவே “எனக்குத் தெரியாது அதான் கேட்டேன்”னுட்டர். அது பிடிச்சிருந்தது.

உங்க தாத்தா “டேய் ஸ்ரீராமா, வைதேகியோட தனியாப் போய் பேசணும்னா பேசிட்டு வா”ன்னர். எங்கப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. செல்லப் பெட்டீலேந்து கும்மோணம் வெத்தலை “எடுத்துக்கோங்கோ”ன்னு நீட்டினதும் நாங்க பெசிக்கரதை தடுக்கலை.”

“ராஜமன்னார்குடி பாட்டியாத்தில் வச்சு நடந்தது. கொல்லைப்பக்கம் கிணத்தடீக்கு போணம். “நீயும் ஏதாவது கேக்கணும்னா கேளூ”ன்னர். “நீங்களே சமைப்பேளோன்னோ?” அதிர்ந்து போயிட்டர். பொண் அழகு, எல்லாம் திறண்டு வரச்சே சமைக்கச் சொல்ராளேன்னு மூஞ்சி வெளிறிப்போச்சு. இல்லை உங்களுக்கு பாடவராதுன்னுதான் பாடத்தெரியுமான்னு கேட்டேன்னேளே, சமைக்கத் தெரியுமான்னு கேக்கலையே, நீங்களே சமைப்பேள்னு நினைச்சேன்”. 

இப்படிப்பட்ட தாம்பத்தியத்தில் பிறந்தேன். நான் சந்தானம் அப்புரம் ஜனனி. ஆனா எங்களைவிட ஒண்ணுவிட்ட அக்கா கங்காவை அப்பாவுக்கு ரொம்பவே பிடிக்கும். பெரியம்மா அக்கா பொறந்ததும் போயிட்டா. சின்ன வயசுலேந்தே அப்பாவையும் ஆத்தையும் நிர்வகிக்கரா. லீவில் அங்கே போவம், இல்லை கங்கா இங்கே. அடிக்கும் லூட்டி மாளாது.

“சித்தப்பா”ன்னு ஒட்டிண்டு. “எனக்கு நீதான் நல்ல மாப்பிள்ளையா பாக்கணும், எங்கப்பா மேலே நம்பிக்கயில்லை!” பெரியப்பா திருவையாத்தில் LMP டாக்டர். “எப்பப் பாத்தாலும் வில்லேஜ் பீப்பிளோட சகவாசம், வியாதியோட வரவா, அப்பா டேஸ்டே குளறுபடி ஆகிக்கிடக்கு. அவர் பாத்து வச்ச ஆளுக்கு வாக்கப்பட்டா சாம்பாருக்கு பதிலா ரொஸ் கலர் மிக்சரில்தான் சாதம் பிசெஞ்சு ஊட்டணும்”.

கங்கா சீரியஸா சொன்னா அதுக்கு அப்பா விளையாட்டா பதில் சொல்லுவர். இவர் முக்கியமா ஒரு மேட்டர் சொல்லிண்டிருகச்சே அவள் கமென்ட் எல்லாரையும் திசை திருப்பிடும். யாருக்கு குசும்பு ஜாஸ்தீன்னு பட்டிமன்றம் வச்சா தீர்ப்பு சீக்கிரம் கிடைக்காது. ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சுவா. 

எனக்கும் ஜனனீக்கும், கங்கான்னா உசிரு. அத்தனை நன்னா சமைப்பா. நினெச்சுப்போம், அவளுக்கு தெரியாத ஒண்ணு இருக்குமான்னு.

எங்கப்பா ஈஸிசேரில் சாஞ்சிண்டு பேப்பர் படிப்பர். இவள் அடுக்களைலேந்து காபி எடுத்துண்டு வந்து உக்காந்துப்பள். “சித்தப்பா இன்னைக்கு லேடஸ்ட் ந்யூஸ், விவரமா சொல்லுங்கோ!” இவரும் இருப்பதை விஸ்தாரமா படிச்சு அதுக்கு தன்னோட கமென்டரியும் சேர்த்து சொல்லுவர். பேப்பர்லேந்து தலையை அகற்றாம. இவள் “உம்” “உம்”முன்னுட்டு காபி தீந்ததும் சித்திக்கு ஒத்தாசை செய்யலாம்னு போயிடுவள். காயெல்லாம் நறுக்கித் தந்துட்டு வந்து இன்னும் சத்தமா செய்தி வாசிச்சிண்டிருக்கும் இவர் தோள்-துண்டை இழுத்து “குளிக்கப் போலையா?” கேப்பள். அப்போதான் இத்தனை நாழி இவள் இங்கே இல்லைன்னு அவருக்கு தெரியும்.

பதிலுக்கு இவரும் அவளை சீண்டணுமா வேண்டாமா?

அன்னைக்கு கங்கா, ஜனனி, நான் மூணுபேரும் சினிமாவுக்குப் போனம். வழீலே சண்டை. கண்டக்டருக்கும் ஒரு வியாபாரிக்கும். கூடை கத்திரிக்காயோட ஏறினவனை கூடைக்கு டிக்கெட் பொடணும்னு இவனும், முடியாதுன்னு அவனும் வாக்குவாதம். ஆச்சர்யமா பாத்த கங்காவுக்கு சித்தப்பாகிட்டே சொல்லணும்னு ஆசை. “எங்கே போயிட்டு வந்தேள்? ஒண்ணு விடாம நடந்தது, பாத்தது, சினிமா கதை எல்லாத்தையும் சொல்லணும்” அப்பா திண்ணையில் உக்காந்துக்கரர்.

இவளும் பஸ்ஸில் ஏறினோமா, டிக்கெட் வாங்கிண்டோமா, பாக்கி சில்லரை கொடுத்தானான்னு சொல்லிண்டு “கூடையோட கத்திரிக்காய் வியாபாரி வந்தான்.” அப்பா “அப்புரம் என்ன ஆச்சு?” “கண்டக்டர் திட்டினான், ஏத்திக்க முடியாதாம்”. “அதுக்கு அவன் என்ன சொன்னான்?” அப்பா. “சாமீ, இன்னைக்கு மட்டும் ஏத்திக்கங்க!” “அதுக்கு கண்டக்டர் என்ன சொன்னான்?” இப்படீப் போச்சு கேள்வியும் பதிலும். 

இவள் சொல்ல, அப்பப்போ இடைமறிச்சு அதுக்கப்புரம் என்ன ஆச்சு, அதுக்கு இவன் என்ன சொன்னான் கேட்டுண்டே அப்பா தூணில் சாஞ்சு தூங்கிட்டர். பின்னாடி இருந்த கங்கா அவரைப் பாக்காமலேயே சொல்லிண்டே போரா. இன்டெர்வல் வரைக்கும் சினிமாக் கதையும் முடிச்சுட்டா. சித்தப்பா எப்பவோ தூங்கிட்டர்னு தெரிஞ்சதும் கோவிச்சுண்டு போயிட்டா. அவள் போனதும் அப்பா கண்ணைத் தொறந்து சிரிச்சாரே பாக்கணும்! 

ஒருநா கங்கா வந்திருக்கச்சே, “நிலத்தைப் பாக்க பேராவூர் போரேன் நீயும் வா”ன்னு எல்லாரையும் அழைச்சிண்டு போனர். வரப்பில் உக்கார வச்சு நாத்து நடுவதை காட்டி, பாத்துண்டிருங்கோ, இதோ வரேன்னுட்டு குத்தகைக்காரனிடம் பேசிட்டு வந்தர். வந்தவர் “ஏண்டீ கங்கா குழந்தை, உனக்கு ஒரு பழமொழி தெரியுமோ?” “நிறையவே தெரியும். எதைச் சொல்ரேள்?” “அதான் ரஜினி படத்தில் வருமே! இவா சோத்தில் கால் வச்சாத்தான் நாம சேற்றில் கை வைக்க முடியும்”. “தப்பா சொல்ரேளே!” அவள். “ஓ அமாம்! இவா சோத்தில் கை வச்சாத்தான் நாம சேற்றில் கால் வைக்க முடியும்”. “திரும்பவும் தப்பு”. “இது சரியான்னு பாரு. இவா சேற்றில் கால் வச்சாத்தான் நாம அதே சேற்றில் கை வைக்க முடியும்”. சித்தப்பா குசும்புன்னு இவளுக்கு லேட்டா புரிஞ்சது.

ஒருதடவை திருவையாறு போயிருக்கச்சே ஆட்கொண்டார் சன்னிதி மின்னாடி ஒரு பொண் சாமி வந்துட்டா மாதிரி ஆடிண்டு, சுத்தி ஒரு கூட்டம் ரோட்டுலே போரவாகிட்டே உண்டியலை காமிச்சு காசு போட வற்புறுத்திண்டு தமாஷ். “சித்தப்பா, உன்கிட்டே காசிருக்கா, கொடுங்கோ நான் போடரேன்”. 

இவர் என்ன பண்ணினர், பக்கத்துலேயே ஒரு அரிசி மண்டி, உள்ளே போய் மூட்டைக்கு இடையில் ஓடின ஒரு கரப்பான்பூச்சியை யாருக்கும் தெரியாம பிடிச்சுண்டு வந்து சாமி ஆடின பொண் கிட்டே போய் கும்பிடரா மாதிரி செஞ்சுட்டு ரெண்டு கையையும் விரிச்சுக் காட்டியிருக்கர். பூச்சியைப் பாத்தவ “ஐயோ அம்மா தாயீ”ன்னு ஓடினா.

“என்ன பண்ணினேள் சித்தப்பா?” “சாமி ஓட்டிட்டு வந்தேன்”. “எப்படி?” “ஆத்துக்கு வா உனக்கும் ஓட்டி விடரேன்”. ரொம்ப நாளைக்கு எப்படிப் பண்ணினார்னு இவளுக்கு சொல்லலை. என்னைக் கேப்பள். சத்தியமா தெரியாதுன்னு சொல்லிட்டேன். ஜனனி, “அக்கா பாவம் அண்ணா, சொல்லிடலாம். அப்பாகிட்டே ஏதோ சூபர் நேச்சுரல் பவர் இருக்குன்னு நினைக்கரா”. “நினைக்கட்டும், அப்புரம் பாத்துக்கலாம்”.

“ஜனனிக்கு வரன் பாக்கப் போரேளா இல்லையா?” அம்மா ஒருநா அப்பாவை அதட்டினா. “18 தானே ஆரது, படிக்கட்டும், சித்தே போகட்டும். சந்தானமும் இப்போதான் தலை தூக்கியிருக்கான். கையில் கொஞ்சம் காசு சேரட்டும்”. இதெவிட கங்காவுக்கும் நல்ல வரனாப் பாத்து முடிச்சுடணும்னு இவருக்கு ஆசை. என்னைவிட 2 வயசு பெரியவள். அம்மா ஸ்தானத்தில் நீதான் முயற்சி எடுக்கணும் வைதேகி. மறந்துடாதே!” சொன்னதும் அம்மாவுக்கு நன்னா உறைச்சது. பெரியப்பா என்ன சொல்வர்னு தெரியலை. இதைப் பத்தி பேசினா, பேச்சை மாத்தி வேற ஏதாவது வம்பளப்பர்.

“ஏன்னா? கங்கா புக்காத்துக்கு போயிட்டா விட்டை யார் பாத்துக்கறது, இவருக்கு யார் பொங்கிப் போடுவான்னு கவலையோ?” அம்மா சொல்ல, “அதுக்கேன் கவலைப் படணும், நம்பளோட வந்து நம்மில் ஒருத்தரா தங்கிண்டு இங்கேயே ப்ரேக்டீஸ் செய்ய வேண்டியதுதானே! இன்னும் நிறைய பேஷென்ட்ஸ் கிடைப்பாளே” ஷட்டகரை கூடவே வச்சுக்க அப்பா சித்தே கூட யோசிக்கலை.

கங்காவும் அப்பாவும் சேர்ந்தா வீடே கலகலப்பாகும். கங்காவைப் பத்தி பெச்செடுத்தாலும் ஜாலியா பொழுது போகும். ஆனா கங்காவோட கல்யாணப் பேச்சுன்னா எல்லாரும் சீரியஸ் ஆகிடரா. புரியலை. ஒருநாள் “நாங்க ரெண்டுபேரும் திருவையாத்துக்கு போய் பெரியப்பாவை பாத்து பேசிட்டு வரோம், மனசில் என்ன வச்சிருக்கர்னு தெரிஞ்சுக்கணும். அவர் சம்மதமில்லாம நாம வரன் பாக்கப்பிடாது. சரீன்னுட்டர்னா கிடுகிடுன்னு ஆகவேண்டியதை செய்யலாம்.” கிளம்பினா.

சாயங்காலம் திரும்பி வந்தவா முகத்தில் சுரத்தே இல்லை. 

“பெரியப்பா ஏதாவது சொன்னாரா?” “இல்லைடா, நீங்கெல்லாம் இப்படி வந்து பிரியமா கங்கா கல்யாணத்தை முன்னாடி நின்னு பாத்துச் செய்யரோம்னு சொன்னது சந்தோஷமா இருக்கு. ரெண்டு பெரும் சேர்ந்தே பாக்கலாம், சீக்கிரம் பண்ணிடணும், சிலவுக்கு சேர்த்தது இருக்கு, அவ அம்மா நகைகளும் வேணப்பட்டதுன்னு சொன்னர். கங்காதான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்லைன்னு ஒத்தைக் காலில் நிக்கரா. சித்தப்பாதான் மாப்பிள்ளை பாக்கணும்னு பேசினவள் இப்படி மாறிட்டாடா.” களைச்சுப்போய் சொன்னர்.

“நீங்க கவலைப் படாதீங்கோ. நானும், ஜனனியும் அக்காவொட பேசி சம்மதிக்க வைக்கரோம்.” சொல்லிட்டோமே தவிர எப்படீன்னு தெரியலை. வாரக் கடைசீலே கிளம்பி திருவையாத்துக்கு போயாச்சு. பலாக்கொட்டை முதலில் தணலில் போட்டு எடுத்து அப்புரமா ரோஸ்ட் செஞ்சு, உப்பு-காரம் தூவி எடுத்துண்டு தியாகராஜர் சமாதிகிட்டே காவிரி படித்துறைக்கு போணம். இங்க கொஞ்சம் அங்கே கொஞ்சம்னு தண்ணி. நடுவுலே ஒரு திட்டில் கொண்டு போனதை பிரிச்சாச்சு.

ஜனனீதான், “ஏன்கா அப்பா அம்மா வந்தப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாய்? பெரீப்பாவே சொன்னப்புரம், உனக்கென்ன தயக்கம்?” “அப்பா அப்படித்தான் சொல்லுவர், மனசுக்குள் நான் இல்லைன்னா எப்படி சமாளிப்போம்னு கவலை. தூக்கத்தில் பினாத்தறதை கேட்டேன். அவரை தனியா விட்டுட்டு நான் சுகமான வாழ்க்கையைத் தேடிப் போவது சரியாப் படலை” “அதுக்கு சித்தப்பா ஒரு சொல்யூஷன் தந்தர். உன் கல்யாணத்துக்கப்புரம் பெரியப்பா கும்மோணத்தில் எங்களோடா இருப்பார்.” கேட்டதும் ஆச்சர்யம், 

“நீங்க ப்ராமிஸ் செஞ்சா நான் ரெடீ.” 

சீக்கிரமா மேட்டர் சால்வ் ஆனதில் எல்லோருக்கும் சந்தோஷம். வாட்ஸப்பில் அம்மாவுக்கு சொல்லியாச்சு. “அப்பா உன் ஜாதகத்தை எடுத்துண்டு ஜோஸியராத்துக்கு கிளம்பிட்டராம்க்கா!” சொன்னதும் பதைத்துப் போனவள், “டேய்! போனைக் கொடு!” வாங்கிண்டா. உடனே சித்தப்பாவை கூப்பிடரா.

“சித்தப்பா எங்கே இருக்கேள்?” “ஏம்மா, சுவாமிமலை போக பஸ்ஸுக்கு நின்னிண்டிருக்கேன், என்ன விஷயம்.” நீ ஜாதகத்தோட தெருத் தெருவா அலைய வேண்டாம். எனக்கு கல்யாணம் பண்ரது சுலபம். ஒரு பையன் போடோவும், அவாத்து தஞ்சாவூர் அட்ரெஸ்ஸும் அனுப்பரேன். அவாத்தில் பேசி அவனையே பண்ணிவை.”

“அக்கா!” அசந்துபோய் அவளையே பாத்தோம்.

No comments:

Post a Comment