67. ரயிலடி (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்” அப்படீன்னு பாரதி பாடின பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது. மாம்பலம் ரயில்வே பிளாட்பாரத்தில் உக்காந்திண்டு போரவா வரவாளைப் பாத்து இந்த பாடலுக்கு ஏத்தாப்போலே யாராவது வராளான்னு பாத்தா காணோம்.
கூட்டம்தான். ஆனாலும் ஃபுட் ஓவர்பிரிஜ்ஜில் ஏறிப் போரவா முக்கி முனகிண்டு, சைடில் கம்பியை இறுக்கப் பிடிச்சிண்டு, தன் வயதுக்கோவ்வாத முதுமையொட ஏறிப்போவது ஆச்சர்யம். ஜனத்தோகை பெருகிடுத்து. யாரும் சுவஸ்த்தமா, ஆரோக்கியமா இல்லையே! சிலர் லேட்டாகிட்டதால் விடு விடூன்னு போரா. மத்ததெல்லாம் கண்ணில் கண்ணாடியும், வளைந்த முதுகுமா. உயரத்துக்கு ஒவ்வாத பருமன். முக்காவாசிப்பேர் முதுகில் பை.
ரயிலில் வரச்சேயே சரியான கூட்டம். ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் ஜனங்கள் நசுக்கிண்டு ஏறி. எத்தனை பேர் டிக்கெட் வாங்கிருப்பா? செட்பெட் ரிடெர்ன் வாங்கினது சட்டைப் பையில் இருக்கா? தொட்டுப் பாத்துண்டேன். எல்லாரும் போனை நோண்டிண்டு, காதில் வயர் மாட்டிண்டு. ட்ரைனில் பயணம், ஆனா மனது வேறு ஒரு உலகில். பேக் பேக் வாங்கி நிச்சயம் வருஷமாகியிருக்கும். ஆனா கர்ண கவசம் மாதிரி கூடவே. தானும் குளிக்கலை, அந்த பேகுக்கு சைடில் வாடர் பாட்டில் மட்டும் ஞாபகமா வச்சிண்டவா அப்பப்போ பேகையும் சோப் போட்டு வாஷ் செய்யணும்னு தோணலை. வாஷபிளான்னு மட்டும் கேட்டு வாங்கிக்க வேண்டியது. ஒருத்தன் என் மூஞ்சிகிட்டே ஈஷரான். கப்பு தாங்கலை.
அதான் செட்பெட் போகாம, மாம்பலத்துலேயே இறங்கிட்டு ரெண்டு-மூணு வண்டி போகட்டும், கூட்டம் குறைஞ்சதும் போயிக்கலாம்னு பென்சில் உக்காந்துட்டேன். எனக்கு ஒரு அவசரமும் இல்லை, வேணப்பட்ட நேரம் கிடக்கு. அப்போதான் பாரதியார் மனசில் வந்து இன்னும் பல சமூக அவலங்களை காட்டிக் கொடுத்தார். இந்த மாதிரி ஒரு பெரீய நகரின் ரயிலடிக்கு வந்து பாத்தா பாரதியார் கண்ட கனவு என்ன ஸ்டேஜில் இருக்குன்னு புரிஞ்சிடும்.
அதே பாரதி “நிலத்தின் தன்மை பயிர்க் குளதாகுமாம்”னும் சொன்னர். தமிழ்நாட்டு மண்தான் எல்லாத்துக்கும் காரணமோ! மக்கள் இப்படி இருப்பதுக்கு நாட்டை ஏன் ஏசணும்? இல்லை மக்களையும் நாட்டையும் பிரிச்சுப் பாக்க முடியாதோ! மக்கள் இல்லாத நாடு நாடெப்படி ஆகும்? பெண்களும் ஆண்களுமா சமபங்கு தெருவில். “ஆணும் பெண்ணும் நிகரென ஆயிடுத்தோ?” அப்படீன்னா பாரதி சொன்னாப்போல “வையம் தழைச்சிருக்கணுமே!” தழைச்சது நம்ம கண்களுக்கு மட்டும்தான் தெரியலையோ? சரிதான், இப்படீ யோசிச்சா பைத்தியம்தான் பிடிக்கும்னு தோணித்து.
செங்கல்பட்டு லோகல் ஒண்ணு வந்து நின்னது. லேடீஸ் கம்பார்ட்மென்ட்லேந்து இறங்கரா ஒருத்தி. கூடவே இறங்கின ஒருத்தி அவள் காதுகிட்டே வச்சிருந்த ஸ்மார்ட் போனை தட்டிவிடரா. கண்முன்னாடி பாத்துண்டிருக்கேன். சொந்தக்காரி என்ன ஆச்சுன்னு புரிஞ்சுக்கரத்துக்குள் ஊடே வந்த ஒருத்தன் விழுந்ததை குனிஞ்சு லவுட்டிண்டு வேகமா படீலே ஏறி போரான். தட்டி விட்டவள் கூட்டாளீன்னு நன்னாவே புரிஞ்சது. என்ன ஒரு டீம் வொர்க்? போனை தொலச்சவள் “லபோ லபோ”ன்னு கத்த, அவளை எங்கேயும் போயிடாத மாதிரி சுத்தி நின்னுண்டு துக்கம் விசாரிக்கர கூட்டம்.
எடுத்துண்டு போனவன் இத்தனை நாழி உஸ்மான் ரோடுகிட்டே போயிருப்பான். ஒரு மணிநேரத்தில் வித்து காசு பண்ணிடுவன்.
“புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்.” அந்த வரிகள் நெஞ்சில் எழும்பி தொண்டையில் உக்காந்திண்டது. தொலைத்தவளும் சரி, பொருளை அடிச்சவளும் சரி புதுமைப் பெண்கள்தான். பாரதி சொன்ன “செம்மை மாதர்” பிடிச்சு வச்சு செமத்தியா மொத்தப்பட வேண்டிய மாதர்.
என்னோட லெனோவா போன் பேன்ட் பாக்கேட்டில் பத்திரமா. பொது இடங்களில் யாருமே பக்கத்தில் இல்லைன்னாத்தான் எடுத்து பாக்கரது. அத்தியாவசியமான கால் மட்டுமே பண்ணுவது, எடுத்து பேசரதுன்னு. பாட்டு கேட்டுண்டே, வீடியோ பாத்துண்டே, முகநூல், வாட்ஸப் எல்லாம் பப்ளிக் ப்ளேஸில் நோண்டறதில்லை. அடிச்சு பிடிங்கிண்டே போக பல கும்பல் சுத்திண்டிருக்கு.
ரெண்டு ப்ளேட்பாரங்களிலேயும் வண்டி போனதும் சட்டுன்னு வெறிச்சோடிப் போன ரயிலடி அமைதியாகி, மொள்ள அடுத்த வண்டிக்கு கூட்டம் சேர புதுசு புதுசா மனுஷாளை கொட்டிக் காமிக்கறது. அப்போதான் சித்தே தள்ளி 4வது லைனில் சட சடன்னு பெரீசா ஊதிண்டே ஒண்ணு பட்டையைக் கிளப்பிண்டு. ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரெஸ். என்ன அவசரம். எப்போ போனாலும் திருச்சி அங்கேயேதான் இருக்கும்? கூட இருந்தவா எல்லாரும் சொல்லீ வச்சாப்போல போன ரயிலை கண்கொட்டாம பாத்தா. ரயிலுக்குள் உக்காந்திண்டிருந்தவா என்னைப் பாத்தாளா?
சித்தே தள்ளி ஒரு நடுத்தர வயசு பொண், அழுக்குத்துணி சுத்திண்டு கையில் நொஞ்சானாக ஒரு 3 வயசுப் பையனோட. ஸ்டேஷன் மாஸ்டர் அவளை “இங்கேல்லாம் உக்காரப் பிடாது!” விரட்டினான். புவர் பீப்பிள் எங்கே போவா? சாப்பிட என்ன பண்ணுவா? இவளுக்கும் கைய்யில் ஒரு பையைத் தூக்கிண்டு, லெக்கின்ஸ் மாட்டிண்டு செல்போன் வச்சிண்டு ஆபீஸுக்குப் போணம்னு ஆசை இருக்குமா? புருஷன் உண்டா? என்ன பண்ணரான்? அவன் எந்த ஸ்டேஷனில் உக்காந்திருக்கானோ! ராத்திரி மட்டும் மீட் செஞ்சுப்பாளா? அப்படித்தான் இருக்கணும். இல்லைனா கையில் குழந்தை எப்படி?
எழுந்து போய், ரெஃப்ரெஷ்மென்ட் ஸ்டாலில் 4 வாழைப்பழம் வாங்கிண்டு வந்து அவாகிட்டே தரேன். ஆசையா அந்தக் குழந்தை வாங்கிண்டது. இவள் நிமிந்து பாத்துட்டு குனிஞ்சிண்டா. தேங்க்ஸ்னு சொல்லுவான்னு மனசில் ஒரு மூலையில் தோணினது என்னவோ நிஜம். நான் உக்காந்திண்டிருந்த இடத்தில் இப்போ வேற யாரோ. தர்மம் தலைகாக்குமோ இல்லையோ உக்காரவே இடமில்லாமப் பண்ணிடுத்து.
அடுத்து வர ரயிலில் ஏறிடலாமா? பாப்போம், கூட்டம் இல்லைன்னா. இத்தனை வெய்யலிலும் இங்கே நன்னா காத்து வந்தது. உக்கார இடம் கிடெச்சா சித்தே இருந்துட்டே போலாம்னு தோணித்து. குறைந்த பட்ச டிக்கெட்டுன்னு செட்பெட்டுக்கு வாங்கினேன். 5 ரூபா. அங்கே ஸ்பெசிஃபிக்கா ஒண்ணும் நெட்டி முறிக்கும் வேலையில்லை. அடுத்த ட்ரைனும் வரவே நன்னா சாஞ்சு உக்காந்துக்கரா மாதிரி சீட் கிடெச்சது. நகரவே பிடாது.
உக்காந்திண்ட இடம் ஆதே கரெக்டா தாம்பரம் போர வண்டி லேடீஸ் கம்பார்ட்மென்ட் வந்து நிக்கர இடம். அதான் மின்னாடி சொன்ன டெகாய்ட்டீ பாக்க முடிஞ்சது.
மாம்பாலத்தில் நிறைய பொண்கள் யூனிஃபார்மோட இறங்கரா. புடவைதான், ஆனா ஒரே மாதிரி புடவை. இங்கே இருக்கும் பல துணி, நகைக் கடைகளில் வேலை பாக்கரவாளோ? நாம போரச்சே நமஸ்த்தேன்னு சொல்லி குனிஞ்சு உச்சந்தலையைக் காமிப்பா. குளுகுளூன்னு ஏஸி காத்து கடைக்குள் நுழையற நம்மேல் அடிச்சு “வா வா வந்துடு”ன்னு உள்ளே இழுத்துப் போடும். பவுன் விலை நம்பளை தூக்கிச் சாப்டுடும்.
இவாளுக்கெல்லாம் என்ன சம்பளம் இருக்கும்?
ட்யுடி முடிஞ்சு போரச்சே எல்லா இடத்துலேயும் கை வச்சு செக் செஞ்சு அனுப்புவாளோ? குந்துமணி தங்கம்கூட எடுத்துண்டு போக முடியாதாமே! பாவம் இந்த பெண்கள். சுத்தி விதவிதமான நகைகள். கழுத்தில் மட்டும் பாசி மாலை. உசத்தியா இருப்பது “உடுத்திண்டு நில்லு”ன்னு கொடுத்த அந்த டிசைன் புடவை மட்டுமே. ஆனா ஒண்ணு, நாள் பூரா டைட் ஏஸியில் உத்யோகம். அடிக்கடி சுத்தியுள்ள கண்ணாடிகளில் தன்னையே பாத்துக்கலாம்.
இவாளைப் பாத்ததும் ஞாபகம் வந்தது. ஒரு வாரமா ஆத்துக்காரி சரோஜா தொந்திரவு தாங்கலை. மூக்குத்தி 4 கல் வச்சது போட்டுண்டிருக்கா. “பழைய ஃபேஷணாப் போச்சு. வைதேகி மாமி பண்ணிண்டுட்டா. இதை கழிச்சு ரெண்டு கல்லை மணித்தோடா பண்ணி காது மடலில் துளை போட்டு மாட்டிண்டுடு, மிச்சத்தை சின்னதா ஒரு மூக்குத்தி செஞ்சு மாட்டிக்கோ எடுப்பா இருக்கும்னு சொல்ரா, செஞ்சுக்கவா?”
என் பொண்டாட்டிக்கு எது எடுப்பா இருக்கும்னு பக்கத்துத் தெரு மாமி சொல்லணுமா? முதலில் இந்த ஐடியாவை சொன்னப்போ காதில் விழாத மாதிரி நடிச்சேன். போயிட்டா. ஆனா திரும்பவும் சாப்பிடரச்சே ரசம் குத்தாம, கரண்டியை தட்டுக்கு மேலே அப்படியே சஸ்பெண்ட் செஞ்சு வச்சு பேச்சை தொடர்ந்தால்?. “உம்” கொட்டலைன்னா பிசைஞ்ச சாதத்தில் ரசம் விழாது. உம்முன்னுட்டா போச்சு, சம்மதம் சொன்னா மாதிரி ஆகிடும். என்ன ஒரு ரசவாத கஷ்டம்! ரஸாபாசமான்னா ஆகிண்டிருக்கு!
நகையெ அழிச்சு பூதுசா பண்ணிப்பது முட்டாத்தனம்னு என் அபிப்ராயம். எங்கம்மா மூக்குத்தி. பழசுதான். ஓல்ட் ஃபேஷன். ஒத்துக்கரேன். யார் இல்லைன்னு சொன்னா? பிடிக்கலைன்னா பிடிச்சாப்போல மாடெர்னா வாங்கிண்டு தொலையறதுதானே? இதில் அந்தக் காலத்து வைரக்கல், இது மாதிரி இப்போ கிடைக்காதாம். இவள் கொண்டுபோய் கொடுத்துடுவா. அவன் சேதாரம், செய்கூலீன்னு அதே கல்லை ரொப்பி கொடுத்தாலும் 8ஆயிரம் பில் போடுவன்.
எப்படிப் பாத்தாலும் அவனுக்கு லாபம். இவளுக்கு காதில் ஓட்டை. வைதேகிக்கு காமிச்சுட்ட அல்ப திருப்தி. வைதேகி மூக்குலேயே குத்தணம் போல ஆசை வந்தது
எங்கப்பா, அம்மாவுக்கு கல்வச்ச மூக்குத்தி செஞ்சு தந்தப்போ ஆத்து வராண்டாலே தட்டானை உக்காத்தி வச்சு தானும் ஈஸிசேரை போட்டுண்டு அவனை முறைச்சுப் பாத்துண்டு செய்யச் சொல்லி வாங்கினர். இப்போ கடையில் தந்துட்டு வந்துட்டா அவன் அதே கல்லைத் தான் திருப்பி தருவான்னு என்ன நிச்சயம்? பொம்மனாட்டிகளுக்கு புரியவே மாட்டேங்கிறது.
அதைச் சொல்லப்போய் இன்னைக்கு கார்த்தாலே 7மணிக்கே சண்டை. “நான் செஞ்சுப்பேன்”. “இல்லை வேண்டாம், கூடாது”. “அது என்ன முதல்லேயே அஸ்து மாதிரி வேண்டாம்னு?” “என் பேச்சை மீறி செஞ்சுண்டாயான்னா கிளம்பிப் போயிடுவேன்”. “போய்க்கோங்கோ!” கிளம்பி வந்துட்டேன்.
யோசிச்சுண்டே ரெண்டு ரயில் போயிடுத்து. அடுத்து வரப்போரதில் ஏறிக்கலாம்னு எழுந்துக்கரச்சே பேன்ட் பையில் போன் வைப்ரேட். சுத்தி முத்தும் பாத்துட்டு எடுத்தால் 23 மிஸ்ட் கால். எல்லாம் ஆத்து BSNL லேண்ட் லைன்லேந்து.
சரோஜாவாத்தான் இருக்கும். இப்போ என்ன செய்யறது? திருப்பிக் கூப்பிட்டு என்ன மேட்டர்னு கேக்கலாமா? கோவிச்சுண்டு ஆத்தை விட்டு கால்போர போக்கில் போயிடலாம்னு சாப்பிடாம வந்தது தலையை சித்தே கனக்கரா மாதிரி ஃபீல் ஆச்சு. ரெண்டாம் டோஸ் காப்பிக்கும் நேரம்.
அவளே திரும்பவும் கூப்பிட்டா. எடுத்து காதில் வச்சிண்டு மௌனமா நின்னுண்டேன்.
“ஏன்னா, எத்தனை தடவை கூப்பிடறது? அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்? எல்லாரும் பண்ணிக்கறதை நானும் பண்ணிப் போட்டுண்டா என்னன்னு கேட்டேன். உங்க அனுமதியில்லாம நானா நகைக் கடைக்கு போவேனா? இப்படி சண்டை போட்டுட்டு சொல்லாம கொள்ளாம எங்கேயோ போயிட்டேளே! அழுகை அழுகையா வரது. எங்கே இருக்கேள்? ஏதாவது பேசுங்கோ! உங்களுக்கு பிடிச்ச சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பண்ணி வச்சிருக்கேன் சீக்கிரம் வந்துடுங்கோ!”
யோசிக்கரேன். சேப்பங்கிழங்கு டெம்ப்டிங்க் பட் அது கிடக்கட்டும் கழுதை. இவள் இஷ்டப்படி விட்டுக் கொடுத்துட்டா என்ன? எதுக்கு அசட்டுப் பிடிவாதம்? “சரோ. நான் கிளம்பி வந்துட்டது என்னமோ உண்மைதான். அப்படி ஒண்ணும் பெரீசா வருத்தம் இல்லை. செட்பெட்டுக்கு ட்ரையின் ஏறிட்டு மாம்பலத்தில் உக்காந்திண்டிருக்கேன். நீ ஒரு காரியம் செய்.”
“என்னண்ணா?” “நீயும் ஆத்தை பூட்டிண்டு ட்ரைன் ஏறி மாம்பலம் வந்துடு. GRTக்கு போலாம்.” “இதோ கிளம்பிடரேன்.” போனை வச்சா. அவள் முகம் பிரகாஸமா மலர்ந்து பூத்துக் குலுங்குவதை பாத்து ரசிக்க முடியாம இங்கே ரயிலடியில் நான். திரும்பவும் போன் செஞ்சு “ஓரு டப்பாவில் செப்பங்கிழங்கு பண்ணினதை எடுத்துண்டு வா!” பிளேட்ஃபாரத்துலேயே சாப்டூட்டு ஒரு பொவேன்டோ வாங்கி குடிச்சுட்டு கடைக்குப் போனா ஆச்சு. அப்புரமா சங்கீதாவில் லன்ச் பண்ணிக்கலாம்.
ரயிலடிதான் எத்தனை விதம் விதமான மனுஷாளை நிமிஷமா கொண்டு வந்து கொட்டிக் காமிச்சுடறது?
No comments:
Post a Comment