78. மரக்காணம் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
ஞாயித்துக்கிழமை லேட்டா எழுந்துக்கலாம்னு. போலீஸ் வேலையில் சனியாவது ஞாயிராவது? 7க்கே டிஐஜி(க்ரைம்) போனில். “பாலு, உடனே மரக்காணம் கிளம்புங்க”. “யெஸ் சார்!”. இந்த உத்யோகத்தில் ரெண்டு வார்த்தை முக்கியம்.
“மரக்காணம் தமிழ்நாட்டிலேன்னா இருக்கு? அதுக்கு பாண்டிச்சேரி போலீசா?” கேட்டேன். “ஒரு பொண்ணோட பாடி உப்பளத்தில் கிடெச்சிருக்காம், உங்ககிட்டே உள்ள திறமையான இன்வெஸ்டிகேடரை அனுப்ப முடியுமான்னு கேட்டாங்க. அத்தோட பாலசுப்ரமணியன் IPS வந்தா ரொம்ப நல்லதாம், அதான்.” “சார், இங்கே ஜிப்மர் மர்டெர் இன்வெஸ்டிகஷன் இன்னும் முடியலை”. “அதை ராகவன்கிட்டே ஹேண்டோவர் செஞ்சுடுங்க, நான் பேசரேன். இது தமிழ்நாடு சீஃப் செக்ரடரி லெவெல் ரிக்வெஸ்ட். மறுக்க முடியலை”. போனை வச்சுட்டர்.
சொச்சத்தை புரிஞ்சுக்கணும். எல்லாத்தையும் சொல்லமாட்டா.
ஐ ஏம் க்ரைம் ப்ரேன்ச் டிடெக்டிவ். பாண்டி கவர்ன்மென்ட். எடுத்து சால்வ் ஆகாத கேஸே இல்லை. 100% கன்விக்ஷன். ரிபப்ளிக் டேயில் தங்கப் பதக்கம் தந்தா. இப்போ மரக்காணத்தில் பொண்ணோட பாடியை துப்புத் துலக்கணும். சகா ராஜ்குமாரை அலெர்ட் செஞ்சு “போலீஸ் ட்ரைனீ சுஜான்னு சேர்ந்திருக்கா கூட்டிக்கோ உதவியா இருக்கும் நல்ல ஏஸி இருக்கும் இன்னோவா எடுத்துண்டு பொடேனிகல் கார்டென்ஸ் வாசலில் 30 நிமிஷத்தில் பிக்கப் பண்ணு!” அவா சண்டேயும் அம்பேல்.
ஸ்பாட்டில் எஸ்.ஐ யாரு, உதவிக்கு தமிழ்நாடு போலீஸில் யாரை கான்டேக்ட் செய்யலாம்னும் SMS வந்தது. மரக்காணம் 1 அவர். போனதும் மிச்சத்தை பிளான் செய்யணும்.
ராஜ்குமார், சுஜாக்காக வெயிட் செய்யரச்சே மனசில் பல எண்ணங்கள். கல்யாணம் செஞ்சுக்காம சில சௌக்கர்யம், இந்த வேலையில். “லோலோ”ன்னு அலயரச்சே நொட்டாங்கு சொல்ல யாரும் இல்லை. ஆனா எத்தனை நாள் இப்படி? காரில் அஷோக் பீச் ரிஸார்ட் தாண்டரச்சே சுஜா கேக்கரா, “என்ன கேஸ் சார்?” “டிஸ்கவரி ஆஃப் டெட் பாடி. போனாத்தான் தெரியும்”. “மேல் ஆர் ஃபீமேல் சார்?” இது ராஜ். “பொண்ணொடதாம், டீடைய்ல்ஸ் வரலை. நான்தான் வேணும்னு மேலிடத்து உத்தரவு”.
“அப்படீன்னா அடையாளம் கண்டுபிடிச்சுட்டாங்களா சார், பெரீய இடமா?” “இருக்கலாம், இன்னொரு ஸ்டேட்லேந்து கூப்பிட்டா வேற காரணமும் இருக்கும்”. “அப்படியா! என்ன சார்”. சுஜாவுக்கு நிறைய கத்துக்கணும். ராஜ் வண்டியை வேகமா ஓட்டினான். “க்ரைம் செஞ்சு பாடியை ஒளிச்சவன் பெரிய இடமா இருக்கும், ஆம்படாது, யார் கண்ணுலேயும் படாதுன்னு இருந்தவன், இப்போ மாட்டிக்கப் பிடாதுன்னு பெரீய லெவெலில் மூவ் செய்வான், ப்ராக்ரெஸ் கெட்டுத் தெரிஞ்சுப்பான். துப்பு துலக்க முடியாம, தான் மாட்டிக்காத மாதிரியும் பாத்துப்பான். செத்தது யாருன்னு தெரிஞ்சா மிச்சது தெரிஞ்சுடும்”.
“சார், நீங்க ஜீனியஸ்!” ரெண்டு பேரும் கோரஸா. என் கூடவே ராஜ் 4 வருஷமா, சுஜா 8 மாசமா. புகழ்ந்தா மண்டைக்குள் ஏத்திக்கப் பிடாது. எனக்கென்னமோ இந்த கேஸ் என்னை “நீ அத்தனை ஜீனியஸ் இல்லைடோய்”னு சொல்ல வச்சுமோன்னு பட்டது. கொலை செஞ்சவன் உயிரோட இருந்தா சிக்காம போமாட்டான். நாளைக்கா இல்லை நாளன்னைக்கான்னுதான் கேள்வி. விடமாட்டேன்.
ஜிப்மர் கான்டீனில் குக் மண்டையில் அடிபட்டுக் செத்துக் கிடந்தான். விடிகாலம்பர பாடி கிடெச்சது. மர்டெர் வெப்பன் ஒரு நீண்ட இரும்பு பூந்தி கரண்டி. பக்கத்துலேயே கிடந்தது. கைரேகை சிக்கலை. விசாரணை எல்லாம் ஆச்சு. ரெண்டு நாளில் செஞ்சவனை பிடிச்சுடுவேன். யாருன்னு தெரியும். கோலாபொரேடிவ் எவிடென்ஸ்காக வெயிட்டிங். மரக்காணம் முடிச்சதும் ராகவன்கிட்டேந்து திரும்ப வாங்கிக்கலாம்.
ஆனா நினைச்சாப் போல ஆகலை. ஆகப்போரதில்லைன்னு தெரிஞ்சுடுத்து.
மரக்காணம் உப்பளங்களுக்கு ஃபேமஸ். கடல் அழகா உள்ளே வந்து ரெண்டு இடங்களில் ஏரிமாதிரி தேங்கி, நடுவுலே வாய்க்கா வெட்டி, சால்ட் பேன்களுக்கு நீர் இறைச்சு சூரிய வெப்பத்தில் காத்தா போக, அடீலே உப்பு. குமிச்சு வச்சதை சுத்தம் பண்ண அனுப்புவா. காலம் காலமா, குத்தகை விட்டு கிரேனைட் போலவே காசு பாக்க. ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் போரச்சே பாக்கலாம். பல இடங்களில் சின்ன குவியலா உப்பு அழகா. மரக்காணத்தில் வரதராஜப் பெருமாளும்.
டோல்ரோடில் வரச்சேயே கார்மேலே ரெட் லைட்டைப் பாத்துட்டு ஒரு கான்ஸ்டெபிள் கை அசைக்க திரும்பினோம். தேடாம ஸ்பாட்டுக்கு போயாச்சு.
போலீஸும் இன்னும் வில்லேஜ் பீப்பிள் நிக்கரா. பாடி ஒரு குவியல்குள்ளே கிடச்சுதாம். உப்பை 3 மாசத்துக்கு ஒருக்காத்தான் அள்ளுவாளாம், எத்தனை நாளாய் அள்ளலைன்னா தெரியலை. உப்புக்குள் பாடம் செஞ்சாப்போலே சுறுங்கி அதிகம் கெட்டுப் போகாம. 25 இருக்கும், மாடெர்ன் ட்ரெஸ், நிறைய இடத்தில் கிழிஞ்சு. சுஜாவுக்கு ஒரு மாதிரி ஆகித்து. அள்ரச்சே பாத்தவன் இழுத்து 10 அடி தள்ளி சமதரையில் வச்சானாம். “க்ரைம் சீனை ஏண்டா டிஸ்டர்ப் செஞ்சாய்?” “எனெக்கென்ன தெரியும், முதலாளிக்கு போன் போட்டுச் சொல்லிட்டு நானே வெளீலே எடுத்தேன். அவரும் அதைத்தான் செய்யச் சொல்லுவார்”. சரியாப்போச்சு
லோகல் எஸ்.ஐ முழிச்சான். “பாண்டி க்ரைம் ப்ரேன்ச்லேந்து பாலுன்னு வருவீங்கன்னு சொன்னாங்க. இந்த பொண் பாண்டிச்சேரி போண்ணா சார்?” முட்டாள். போடோ எடுத்தோம், இடத்தை கார்டன் செஞ்சு “சொல்ரவரைக்கும் கிட்டக்க போகப்பிடாது” சொல்லிட்டு, “போன 4 மாசத்தில் மிஸ்ஸிங்க் கம்ப்ளைன்ட் இருக்கா, விசாரி”. “மரக்காணத்தில் யாரும் காணாமப் போகலை சார்.” எஸ்.ஐயை அறையணும் போல வந்தது. “தமிழ்நாடு பூரா கேளு மேன்! மாமல்லபுரத்தில் கொன்னு இங்கே போட்டிருக்கலாமே”. அசடு வழிஞ்சான்.
ராஜ்ஜையும் சுஜாவையும் “உப்பளத்து கான்ட்ராக்டர், ஓனர், எல்லாரையும் விசாரி, ஊருக்குள் ரேண்டமா சிலரை கேளு. எதையும் முக்கியமில்லைன்னு எழுதிக்காம விடாதே.”
ஸ்டேஷனில் உக்காந்துண்டு எல்லாரையும் “தெரிஞ்சதை சொல்லுங்க.” கேக்க ஆரம்பிச்சேன். இங்கே பாடி கிடெச்ச தகவல் அரை மணீலே தமிழ்நாடு சீஃப் செக்ரடரி வரைக்கும் எப்படி போச்சு? அதை நானே கண்டு பிடிக்கணும். ஸ்டேட்டில் எங்கே பிணம் பாத்தாலும் தகவல் போகுமா என்ன? அங்கேதான் கேஸுக்கு தீர்வு இருக்கு.
பாடியை மார்ச்சுவரி சோதனைக்கு அனுப்பிட்டு, சாயங்காலமா இன்னைக்கு இங்கேயே தங்க இடம் வேணும்னு கேட்டதும் சுஜாவும் ராஜ்ஜும் “போயிட்டு நாளைக்கு வரலாமே சார்”ன்னா. முறைச்சதும் “தங்கரோம்”னுட்டா. “நாளைக்குள் சால்வ் செஞ்சாத்தான், ஒருநா இழுத்தாலும் செஞ்சவன் தப்பிச்சுடுவன்”. ஆச்சர்யமா பாத்தா.
ராத்திரி 11இருக்கும் ஒரு கான்ஸ்டெபிள் கதவைத் தட்டி “திண்டிவனத்துலேந்து நாளைக்கு பிஎம் ரிபோர்ட் வந்துடும் சார், ஆனா பாடீலேந்து ரிகவர் செஞ்ச ஐடம்ஸ்” ப்ளாஸ்டிக் பையை நீட்டினான். “எஸ்ஐ கிட்டே தரலையா?” “அவர் வீட்டுக்கு போயிட்டர், நீங்க பாக்க விரும்புவீங்கன்னு கொண்டு வந்தேன்”.
ரெண்டு கவரிங்க் வளையல், ஒரு பாசிமணி மாலை, பிணத்தில் கையில் பிடிச்சிண்டிருந்ததா லேபல் போட்ட ஒத்தை புலிப்பல். அட! கான்ஸ்டெபிள் “சார் இப்படி இந்தப் பக்கம் கழுத்தில் ஆம்பளை மாட்டிப்பாங்க சார், ஆனா ஜோடிப்பல் இருக்கணும், பொண் கையில் ஒண்ணுதான், அவளோடது இல்லை” தடயங்களை பரப்பி, போடோ எடுத்து வச்சிண்டு, “ஸ்டேஷனில்தான் இருக்கணும் எடுத்துண்டு போ, எனக்கு காமிச்சதை யார்கிட்டேயும் சொல்லாதே!” அட்வைஸ் செஞ்சு அனுப்பினேன்.
கார்த்தாலே போனதும் எஸ்.ஐ இதே எவிடென்ஸை எனக்கு காமிக்க அதில் புலிப்பல் காணலை. கேஸ் பாதி தீந்ததுன்னு நினெச்சேன். ஆனா செஞ்சவனை பிடிச்சா தண்டனை வாங்கித் தருவது கஷ்டம். எவிடென்ஸை காணாமப் பண்ணியாச்சு.
பொண்ணை மானபங்கப் படுத்தி கழுத்தை நெறிச்சு. பிஎம் ரிப்போர்ட் சொல்லித்து. உப்பளத்துக்கு அந்தப் பக்கம் போட் செய்யர தொழில்.. அங்கேயும் விசாரிக்கணும். நானும் சுஜாவும் கிளம்பினோம். ரோட்டை கிராஸ் செய்யரச்சே ஒரு முண்டாசு கட்டின ஆள் மெலிஞ்ச உடல், கையில் ஒரு பையோட காரை நிப்பாட்ட, லிஃப்ட் கேக்கரான்னு
“போலீஸ் வண்டி, எங்கே போணம்?” உதவலாம்னு. காரில் ஏறிண்டவன், “நேர போங்க சார், பேசணும்”.
இவன் மனைவியை 4 மாசமா காணோமாம். அழ ஆரம்பிச்சுட்டான். “காணொம்னு புகார் எழுதிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க சார். நேத்து ஒரு பாடி கிடெச்சதுன்னு சொன்னாங்க. ஸ்டேஷன்லே தொரத்தி விட்டுட்டாங்க. பாடியையாவது காமிக்க சொல்லுங்க சார். ஒரு கார் நம்பர் இருக்கு. அதில்தான் லிஃப்ட் கேட்டு ஏறிப்போனான்னு இளநீர் வித்தவன் பாத்ததா சொன்னான். அதுக்கப்புரம் காணலை”.
அவனை ஆசுவாசப்படுத்தி “பாடி காமிக்க சொல்ரேன். உன் மனைவி காரில் ஏன் ஏறணும்?” “அன்னைக்கு பஸ் ஸ்ட்ரைக். இவ அம்மா முடியாம பாண்டி ஆஸ்பத்ரீயில். அவசரத்துக்கு கை காட்டி ஏறியிருப்பா”. “நீ கூட போகலையா?” இல்லை சார் நான் படகு கம்பேனியில் வேலை. போயிட்டேன்.” “இளநீர் வித்தவன் எங்கே?” “ஊரை விட்டுட்டு போயிட்டான். கண்டுபிடிக்க முடியலை. இந்தாங்க கார் நம்பர்.”
இவனை “ஸ்டேஷனில் ராஜ்குமார்னு இருப்பார், போய்ப் பாரு”. இறக்கிவிட்டேன். சுஜா கார் ட்ரேஸ் செய்ய 20நிமிஷத்தில் எல்லாம் விளங்கித்து. ஹம்மர் கார். ரொம்பவே காஸ்ட்லீ. மந்திரி பையன் ஜாலியா சுத்தன்னு வாங்கித் தந்தது. கூகிளில் அவன் பேரைப் போட்டு இமேஜஸ் தேடினா அத்தனை போடோக்கள். ப்ளேபாய்னு சொல்லலாம். ஒரு படத்தில் டாஜ் ஹோட்டல் பப்பில் கழுத்தில் புலிப்பல் செயினோட. என்கிட்டே இருந்த எவிடென்ஸ் போடோவோட மேட்ச்சிங்.
கேஸ் சால்வ்ட். ஆனா கன்விக்ஷன்? இந்த ஏழை கார்பென்டருக்கு எப்படி நீதி வாங்கித் தருவது?
பாண்டிச்சேரின்னா நானே இழுத்துண்டு வந்து விசாரிக்கலாம். இப்போ மந்திரி வீட்டில் போய் விசாரிக்க ரெண்டு ஸ்டேட்டிலும் பெர்மிஷன் கேக்கணும். எவிடென்ஸும் இல்லை. கார் நம்பரை இருக்குன்னா, பாத்த இளநீர்காரனைக் காணலை. அவனை எந்த உப்பளத்தில் அமுக்கி வச்சிருக்காளோ? ஊருக்கு வந்து ரிப்போர்ட் தந்துட்டு என்ன ஆர்டர்ஸ்னு கேக்கணும். பூந்தி கரண்டி கேஸ் மாதிரி இது இல்லை.
என் ரிபோர்ட்டை பாண்டி டிஐஜி(க்ரைம்) தமிழ்நாடு சீஃப் செக்ரடரீக்கு அனுப்ப. 2 வாரத்தில் படிச்சுட்டு “நன்றி, இனிமேல் நாங்க பாத்துக்கரோம்”னுட்டா. என்னை வேற வேலைலே பிஸி ஆக்கிட்டா. பாண்டிச்சேரிலேயே க்ரைம் இல்லையா என்ன?
2 வருஷம் கழிச்சு எனக்கு கல்யாணம். கொடைக்கானல் ஹனிமூன். ஓரு வாரம் கூத்தடிச்சுட்டு ட்ரைனில் ஃபர்ஸ்ட் ஏஸியில் திரும்பரோம். டாய்லெட் போயிட்டு வரச்சே கோச் கதவை தொறந்து வச்சிண்டு சிகரேட் பிடிச்சிண்டு ஒரு பையன். அன்னைக்கு போடோவில் டாஜ் ஹோடல் பப்பில் புலிப்பல் செயினோட இருந்தானே அவன். போலீஸ் மெமரியாச்சே!
“ஹாய்!” சிரிச்சான். நானும் “ஹாய்” சொன்னேன். கழுத்தில் இப்போ செயின் இல்லை. எனக்கு அந்த ஏழை கார்பென்டர் முகம் ஞாபகம் வந்தது. கண்ணீர் வழிய அவன் தவிச்சுண்டு சொன்ன கதை காதில். என்ன தோணித்தோ “ஹே மேன்! உன் புலிப்பல் செயினில் ஒரு பல்லைக் காணோம்?” அதிர்ந்து போனவன், ஒரு கையில் சிகரேட்டும் ஒன்னொரு கையால் தன்னை அறியாம கழுத்துக்கு செயினைத் தேடிப் போக, நிலை தடுமாறி ட்ரைன்லேந்து தண்டவாளத்தில் விழுந்தான்.
நான் எட்டிப்பாத்துட்டு தேமேன்னு என் கூப்பேக்கு வந்தேன். “ஏன் இத்தனை லேட்டு?” புதுப் பொண்டாட்டி சிணுங்கரா.
No comments:
Post a Comment