Wednesday, September 9, 2020

பேனா மூடி

8. பேனா மூடி (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

“மூடிபோட்ட பேனா”ன்னு தலைப்பு வச்சிருக்கலாமோ? பேனான்னா மூடி இருக்குமே! “மூடியில்லாத பேனா” சித்தே வித்யாசமா தெரியலாம். அது என்ன “பேனா மூடி”? என்ன பண்ரது, இப்படி ஏதாவது தலைப்பை வச்சுட்டு கதையை யோசிக்க வேண்டியிருக்கு.

எங்காத்தில் நிறைய பால்பாயின்ட் பேனா சீரழிஞ்சி கிடக்கும். எழுதலாம்னு எடுத்தா எழுதாது. காய்ஞ்சு கிடக்கும். ஏன்னா மூடி வேற எங்கேயாவது கிடக்கும் இல்லை தொலைஞ்சே போயிருக்கும். எங்காத்தில் யாருக்கும் பேனா மூடியை பேனாவுக்கு பின்னாடி குத்தி வச்சுக்க தெரியாது. இன்னொரு கையில் வச்சுப்பா இல்லை உக்காந்த இடத்தில் வச்சுட்டு அது கீழே விழுந்துடும், சோபா குஷனுக்கு இடுக்கில். எழுதிட்டு பேனாவை ஜன்னலில், ஷெல்ஃபில் வச்சுட்டு போயிடுவா.

காட்டுக் கத்து கத்தணும்னு தோணும். கத்தினா சட்டை செய்யமாட்டா. இவாளோட மல்லுக்கட்ட முடியாதுன்னு என் தேவைக்கு ரெண்டு பேனா என் ஆபீஸ் பேகில் வச்சுண்டாச்சு. எனக்கு வேணும்னா அதை எடுத்துண்டுடரது. ஒருநா நான் வச்சிருந்ததையும் காணோம். தேடரச்சே பேகில் அதோட மூடி மட்டும் கிடக்கு. அதைக் கையில் பிடிச்சிண்டு “என் ஆபீஸ் பையை தொறந்து யார் என் பேனாவை எடுத்தா?” சத்தம் போட்டேன்.

கடைக்குட்டி சேகர், 3ஆங்கிளாஸ், “அப்பா இதைக் கட்டிலுக்கடீலே பார்த்தேன்”. கொண்டு வந்தான். என்னுது இல்லை. சிதறிக்கிடக்கும் பலதில் ஒண்ணு. “அப்பா பேனா எங்கேடா?” “எனெக்குத் தெரியாது”. போயிட்டான். குழந்தைக்கு எப்படித் தெரியும்? 

இன்னொரு ரூமில் மூணாவது பொண் படிச்சிண்டிருந்தா. பக்கத்தில் அவள் அக்கா. கேண்டி கிரஷ். அவளுக்கும் படிப்புன்னு உண்டு ஆனா இப்போ முக்கியமில்லை. இவாளும் பேனா காணலைன்னதுக்கு பாசிபிள் சஸ்பெக்ட்ஸ். “என் பேனாவை யார் எடுத்தேள்?” கேட்டுட்டேன்.
ஒருத்தி மட்டும் தலையைத் தூக்கி எங்கேந்து சத்தம் வந்ததுன்னு பாத்துட்டு குனிஞ்சிண்டா. 

அங்கேந்து கிளம்பி கிச்சனுக்கு வந்தா என் மூத்த போண்ணும் ஆத்துக்காரியும் எதையோ செஞ்சிண்டிருக்கா. கிச்செனில் சமையல்தானே செய்வான்னு? அப்படித் தெரியலை. என்னத்தையோ கஷ்டப்பட்டுண்டு. கையில் சேவை பிழியறது இருக்கு. ஒரு பாத்திரத்தில் பிசைஞ்ச மாவு. பெரீய தாம்பாளம். ரெண்டு பேருமா அமுக்கரா, அந்தண்டை ஒண்ணும் வரலை. 

என்னைப் பாத்ததும் “அப்பா, நீதான் ஜிம்முக்கெல்லாம் போரயே, இதை சித்தே பிழி பாக்கலாம்.” அதாவது அவாளுக்கு பிழியத் தெரியுமாம், அவாளே பிழிஞ்சிண்டுட முடியுமாம், இருந்தாலும் எனக்கும் வரதான்னு பாக்கப் போராளாம்!

“முதல்ல என் பேனாவை யார் எடுத்தா? சொல்லுங்கோ. அப்புரமா சேவை பிழிஞ்சிக்கலாம்.” மூஞ்சியை கடுகடுன்னு வச்சிண்டே பேசினாத்தான் கோவமா இருக்கேன்னு படும். “உங்க பேனாவை நாங்க ஏன் எடுக்கப்போரோம்! தலை எழுத்தா?” சொன்னது ஆத்துக்காரி. அதைக் கேட்டு சீமந்த புத்திரி குளுக்குன்னு சிரிச்சா.

என் பேனாவை எடுப்பது என்னவோ கெட்ட விஷயமாவும் அந்தக் காரியத்தை செய்ய ஜாதகத்தில் தோஷமிருந்தாத்தான் செய்வான்னும் ஒரு மீனிங்கில் பேச எனக்கு மூக்கு நுணி வரைக்கும் கோவம் வந்தது. “இப்போ எனக்கு என் பேனா வேணும், பேங்க்குக்கு போணம், என் சாமானை நீங்க ஏன் எடுக்கணும்? எடுத்துட்டு ஏங்கேயாவது கிடாசிடறது. நான் மாங்கு மாங்குன்னு தேடி பைத்தியம் பிடிச்சு பாயைப் பிராண்டணுமா?” 

எம்பொண், “நீங்க சேவை பிழிஞ்சு தாங்கோ, நான் உங்க பேனாவைத் தேடித்தரேன்.” இது நல்ல டீலாப் பட்டது. “கிழிச்சர்!” ஆத்துக்காரிதான். அவளுக்கு என்னால் பிழியமுடியாதுன்னு அத்தனை நம்பிக்கை. “நீ சும்மா இரும்மா, அப்பாவை ஏதாவது சொல்லிண்டு, அவர் செய்வர். வா நாம ரெண்டு பேரும் போய் அப்பா பேனாவைத் தேடித் தரலாம்.” பிழியறதை என் கையில் கொடுத்துட்டு சிரிச்சிண்டே போயிட்டா.

அச்சு போட்டே இருக்கு. மாவை திணிச்சு பிஸ்டனை வச்சுண்டு ரெண்டு கையாலேயும் பிடிச்சிண்டு தாம்பாளத்துக்கு நேர காமிச்சிண்டு அமுக்கினேன். ஸ்மூத்தா அழகா மெல்லிசா இழை இழையா சேவை நீண்டுண்டு 1 இன்ச் வந்தது. இதெல்லாம் ஒரு வேலைன்னு நம்மை செய்யக் கூப்பிட்டாளா, சீக்கிரம் செஞ்சுட்டு பேங்குக்குப் போணம்னு நினைச்சிண்டேன். அப்புரம்தான் அது முடியர காரியம் இல்லையோன்னு சந்தேகம் வந்தது.

1இன்ச் வந்தது அப்படியே நீளமா வரும்னு நினெச்சது பெரீய முட்டாத்தனம்?
அதுக்கப்புரம் மாவு பிழியவே முடியலை. அமுக்க அமுக்க கைத்தான் வலிச்சது. மாவு அசைஞ்சு கொடுக்கலையே! ஏன் இத்தனை கெட்டியா பிசைஞ்சு வச்சிருக்கா? என்னமோ கறிவடம் பிழியறது மாதிரீன்னு நினைச்சுண்டு சேலஞ்சை ஒத்துண்டுட்டொமோ? செய்யலைன்னா மானம் போகுமே! பல்லைக் கடிச்சிண்டு மூச்சை எறுக்கிப் பிடிச்சிண்டு உம்முன்னு சத்தம் போட்டுண்டே அமுக்கரேன். உஹூம். அடைச்சிண்டிருக்குமோ!

வெளீலே மாவு ஈஸியா வந்தது. அச்சு வழியாத்தான் போகமாட்டேன்னு அடம். அச்சைப் பாத்தா ஓட்டை ரொம்பவே சின்னதா இருக்கு. எப்படிப் போகும்? ஏன் தேங்குழல் மாதிரி வச்சுப் பிழியப்பிடாது. அதை சேவைன்னு சொல்ல மாட்டாளோ! இப்போ சேவை சாப்பிடாதப் போனா என்ன ஆகும்? அதான் நீலகிரீஸில் சேவையை ரெடியா பிழிஞ்சே விக்கரானே. அதை வாங்கி ஸ்டீம் செஞ்சு திங்கப்பிடாதோ? இந்த சேவையை கண்டு பிடிச்சவாளை மரத்தில் கட்டி தோலை உரிக்கணும். பிழியரதைவிட மத்த ஐடியா நிறைய மனசில் தோணித்து.

எல்லாத்தையும் வச்சுட்டு கிச்சன்லேந்து கிளம்பி வாசலுக்கு வந்தேன். இவா ரெண்டு பேரும் ஊஞ்சலில் உக்காந்துண்டு பேச்சிண்டிருக்கா. “எங்கே என் பேனா, கிடைச்சதா?” “எல்லா மாவையும் பிழிஞ்சுட்டேளோன்னோ?” வந்த கோபத்துக்கு அளவேயில்லை. சிரமப்பட்டு அடக்கிண்டு சட்டையை மாட்டிண்டு மூடியை மட்டும் எடுத்துண்டு பேங்குக்கு கிளம்பினேன். அங்கேயே நூலில் கட்டி வச்சிருக்கமாட்டானா என்ன?

சித்தே அதிகமா கோவிச்சுண்டுட்டேன்னு தோணித்து. அவாளே பாவம் பிரேக்ஃபாஸ்டுக்கு புதுசா பண்ணிப் போடலாம்னு செய்ய என் பிர்ச்சனையை அவா மேலே ஏத்தரேனோ? இருந்தாலும் பேனாவை எடுத்தா அழகா மூடியோட எடுத்த இடத்தில் வைக்கணுமா வேண்டாமா? அவாளுக்கே ஒண்ணையும் பதவிசா வச்சுக்க தெரியலை. அதுக்காக என் சாமானை எடுத்து களேபரம் செஞ்சா? 

இப்போ அவதிப்படுவது என்னமோ நான்தான். சேவை வேற பிழியவச்சுட்டா. எங்கே பிழிஞ்சேன், அதுவும் முடியலை. என் பின்னாடி என்னைப்பத்தி என்னெல்லாம் பேசிண்டிருக்காளோ? ஆத்துக்காரி “கிழிச்சர்”னு சொன்னது இன்னும் காதில் ரீங்கரிச்சிண்டு.

கப்பு பேங்குக்கு சைக்கிளை விட்டேன். ஹாண்டில் பாரை பிடிக்க முடியலை. வலி. சேவை பிழிஞ்சதில் ரத்தம் கட்டிண்டுடுத்தோ? வெளீலே போய் உழைச்சு சம்பாதிச்சுண்டு வரவனை உடம்பிலும் உள்ளத்திலும் இப்படி காயப்படுத்தியா அனுப்புவா? மூணூம் பொண்ணாப் பிறந்ததும் நமக்கு ஆத்தில் ஆண்துணையா இருந்தாத் தேவலைன்னு ட்ரை செஞ்சு சேகர் வந்தான். அதுவும் போண்ணாப் போயிருந்தா? தெரியலை.

இத்தனை குழந்தைகளைப் பெத்துண்டதுனாலே சேவை பிழிய முடியலையோ? அப்படி இருக்காதுன்னு தேத்திண்டு சைக்கிளை நிறுத்திட்டு உள்ளே போனென். ரெண்டுநா மின்னாடிதான் வந்து ஒரு ஃபிக்ஸட் ஓபன் செஞ்சேன். டெர்ம் டெபாசிட் ரசீது வாங்கிக்கணும். காஷ் டெபாசிட் செய்யணும். இன்கம் டாக்ஸ் கட்ட ஒரு செக் எழுதித்தரணும். எதை முதல்ல செய்யலாம்னு ஃபாரம் வச்சிருக்கிர இடத்துக்கு போனா அங்கே ஒருத்தன் எனக்காகவே காத்திண்டிருந்த மாதிரி “அப்பாடா, சார் வந்துட்டேளா”ன்னு சொல்லிண்டே எங்கிட்டே வரான்.

எங்கேயோ பாத்தமாதிரி இருக்கேன்னு யோசிச்சிண்டே அவனைப் பாக்கிரேன்.

“சார் என்னைத் தெரியலையா?” “இல்லையேப்பா, நீ யாரு?” ஒரு 40 இருக்கும், மீசை வச்சிண்டு, ஜீன்ஸ் டீஷெர்ட் மாட்டிண்டு. ஜீன்ஸில் கிழிஞ்சிருந்த இடத்தைப் பாத்ததும்தான் இவனை எங்கேயோ பார்த்தாப்போல் இருக்குன்னு பட்டது. எங்கே? ஞாபகம் வரலை. “என்ன சார் நீங்க! ரெண்டுநா மின்னாடீ இதே பாங்கில் மீட் செஞ்சோமே?” அப்படியா, இவனை இங்கே பார்த்தோமா? எதுக்கு பாத்தோம்? நாம வர டயத்தில் எத்தனை பேர் வரா. இவனைப் பார்த்ததை ஏன் இப்படி சிலாக்கியமா சொல்ரான்?

சுத்தமா ஞாபகமே வரலை. நான் இருக்கிர மூடில் ஓங்கி ஒண்ணு கொடுத்தா தேவலையோன்னு பட்டது. இருந்தாலும் அடக்கிண்டு “நீங்களே சொல்லிடுங்கோ”ன்னு அதிக்கபடியான மரியாதையை வரவழைச்சிண்டு கேக்க, அவன் அதுக்கு பதிலே பேசாமல், தன் சட்டைப் பையிலேந்து ஒரு பேனாவை எடுத்து, “இதைப் பாத்தா சட்டுன்னு ஞாபகம் வரும், இப்போ சொல்லுங்கோ”ன்னு சொல்ரான்.

என் பேனா!

அடடா, அன்னைக்கு பேங்க்குக்கு வந்தப்போ இரவல் கேட்டவனுக்கு பேனாவைத் தந்துட்டு மூடியை மிக சாதூர்யமா என் கையிலேயே வச்சிண்டு (அப்போதான் திரும்ப தருவான்னு) அப்புரம் மூடியை பையில் போட்டுண்டு அவன்கிட்டே பேனாவை திருப்பி வாங்கிக்காம மறந்துபோய் ஆத்துக்குப் போனது இப்போதான் ஞாபகம் வரது. அவனும் மூடியில்லாத பேனாவை இரவல் வாங்கினதுங்கிரதை மறந்துட்டு தன் பாக்கேட்டில் வச்சிண்டு கிலம்பியிருக்கான். இப்போ திருப்பித் தரான்.

“தாங்காஸ்!” வாங்கி ஆசையா அதோட மூடியை சொருகி பையில் வச்சிண்டு என் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். “அன்னைக்கு தெரியாம எடுத்துண்டு போயிட்டேன் சார், மன்னிச்சுடுங்கோ.” இதுக்காகவா இத்தனை தூரம் வந்து காத்திண்டிருந்துட்டு தந்தான்னு பட்டது. “மூடியோட கொடுத்திருந்தீங்கன்னா நானே வச்சிண்டிருப்பேன்.” சொல்லிட்டு சிரிச்சான்.

என்ன தோணித்தோ, “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுத்தா?” கேட்டுட்டேன். “ஆமாம் சார்”. “எத்தனை குழந்தைகள்?” “ஒரே பையன் சார் 7த் படிக்கரான்”. சரிதான் ஒருவேளை இவன் சேவை ஈஸியா பிழிஞ்சுடுவானோ?

ஆத்துக்கு திரும்பிப் போரச்சே சைக்கிளை மிதிச்சிண்டே பேனா கிடெச்சதை நினைச்சு சந்தோஷப்படரதா இல்லை சேவை பிழிய தெம்பில்லைன்னு கவலைப்படரதான்னு தெரியலை. ஆனா ஒண்ணு. பேனா கிடைச்சுட்ட விவரம் ஆத்தில் சொல்லவேப் பிடாது. 

சொன்னா நம்பளை சேவை அச்சில் போட்டு பிழிஞ்சுடுவா!

No comments:

Post a Comment