Wednesday, September 9, 2020

கஸ்தூ இன் கைலாசா

101. கஸ்தூ இன் கைலாசா! (சிசீ6 போனஸ்) #ganeshamarkalam

“என்ன மசமசன்னு உக்காந்திண்டு. கொஞ்சம் கையக் கால ஆட்டி ஏதாவது ஒத்தாசையா இருக்கப் பிடாதோ?”

சொல்லாமலே, பேப்பர் படிக்கரச்சே கஸ்தூரி என்னை வாங்கு வாங்குன்னு வாங்கரான்னு புரிஞ்சிருக்கும். உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. சொல்ர வேலையெல்லாம் செஞ்சிண்டிண்டுதான் இருக்கேன், சித்தே உக்காந்தா இவளுக்கு பொறுக்கலை. டாடாஸ்கை எடுத்தாச்சு. பேப்பர் மட்டும் வாங்கியாரது. இண்டிபெண்டென்ஸ் டேக்குக்கூட லீவு விடாதவன் பிள்ளையார் சதுர்த்திக்கு லீவாம். இன்னைக்கு பேப்பர் வரலை. போனவாரத்து பேபரை எடுத்து புரட்டினா பாக்காத ஏதாவது தென்படும் படிக்கலாம்னா இப்படி.

“அது என்ன மசமசன்னு?” கேட்டேன். “எல்லாரும் சொல்ரான்னு நீயும் வார்த்தை ப்ரயோகம் பண்ராய், மசமசன்னா என்ன அர்த்தம்?” “நீங்க உக்காந்திண்டிருக்கேளே அதைத்தான் மசமசன்னு சொல்லுவம்”. புரியலை. அன்னைக்கு இன்னொண்ணு சொன்னா. “இப்படியா திடுதண்டம் மாதிரி காரியம் செய்வா? அன்னைக்கு என்னாச்சுன்னு சொன்னா, உங்களுக்கு விளங்கும்.

ஊர்லேந்து பொண் சும்மா இல்லாம “கொரோனாவில் வீட்டுலேயே அடைஞ்சுண்டு நெட்டில் கிளாஸ் அட்டெண்ட் பண்ணும் உன் பேரனுக்கு ரெம்ப போரடிக்கரதாம், மைசூர் பாகு வேணும்கரான்.” போன் செஞ்சிருக்கா. பிள்ளைக்கு மைசூர்பாகு வேணும்னா பண்ணித் தந்துட வேண்டியதுதானே? அம்மா அப்பா ஞாபகம் வந்துடுத்து. சரி, தப்பில்லை, பண்ணுவதை கொஞ்சம் கூடப் பண்ணி எனக்கும் அனுப்பலாமே? அம்மாவ பண்ணி கூரியரில் அனுப்புன்னுட்டா. கஸ்தூ நன்னா பண்ணுவள். கூடமாட ஒத்தாச செய்யணும். முடியாதுன்னு சொல்லிடுவேனோன்னு “உங்க பேரனுக்கு”ன்னு சொல்லி சிம்பதி க்ரியேட் செஞ்சு கருப்பு-தபாலும் ஆரம்பிச்சுட்டா. “என்ன செய்யணும் சொல்லு.”

சக்கரைப் பாகு நன்னா கரைஞ்சு கொதிச்சு வரச்சே கடலை மாவை சல்லடைல பிடிச்சிண்டு கொஞ்ச கொஞ்சமா வாணலில போடணும்”. “பாகு கொதிச்சதும் கூப்பிடு”. “ஓடிவாங்கோ, வந்துடுத்து” ஒரு அலரல். மின்னாடியே சொல்லமாட்டாளா. வாச ஊஞ்சல்லேந்து சமையலுள் 30 அடி. அஞ்சே எட்டில் போயாச்சு. “மசமசன்னு நிக்காம தூவுங்கோ”. செய்யரேன். அது என்னமோ தெரியல எது செஞ்சாலும் எங்காத்தில் குத்தம். சல்லடை தட்டு சரியா உக்காரலையோ? யார் கண்டா? ரீப்ளேசபிள் தட்டாம். கும்மோணத்தில் வாங்கியிருக்கா. ஓரத்தில் தூக்கிண்டு. மெதுவா கைமேல் சூடா ஆவியடிப்பதையும் பேரனுக்காக பொறுத்துண்டு தூவரேன் ஒரு பெரீய குவான்டிடி கடலைமாவு பாகில் ஒட்டுக்க விழுந்துடுத்து. அதுக்குத்தான் “திடுதண்டம் மாதிரி காரியம் செய்வாளா?” திட்டு.

அப்படி விழுந்தா வேகமா கரண்டிய அழுத்திப் போட்டு கிளறினா கரைஞ்சுடப் போரது. அதை செய்யாம 39 வருஷமா இவளோட ஸ்நேகமா குப்பை கொட்டினவனை இழிவா பேசுவதா? மனசு கேக்கலை. வாய மூடிண்டு சொன்ன காரியத்தை செஞ்சு கொடுத்துட்டு தேமேன்னு வந்து வாச ஊஞ்சலில் உக்காந்தாச்சு. எதுத்துப் பெசியிருக்கலாம். “போடீ நீயாச்சு உன் மைசூர் பாகாச்சு!” போட்டுட்டு வந்திருக்கலாம். அப்படியெல்லாம் செய்யத் தோணலை. பேரனுக்கு அனுப்பிட்டு எனக்கும் ரெண்டு கொடுப்பா. அதை கெடுப்பாளா? ஆழ்மனசு புத்தி சொல்லித்து.

“தட்டில் நெய் தடவி கொட்டி வச்சிருக்கேன், பாத்துண்டிருந்து ஆறினப்பரம் தோசைத் திருப்பியால வில்லைக்கு கோடு போட்டு வைங்கோ”. “முடியாது”ன்னு வாய் வரைக்கும் வந்துடுத்து. அவளே நான் திடுதண்டமா செஞ்சதை மறந்துட்டா, நாம ஏன் ஞாபகப்படுத்தணும்னு “சரீ”ன்னு குரல் கொடுத்தேன். குளிக்கப் போராளாம். நாம பாகு கிளறின வாணலியை சுரண்டினா நிறைய மொறு மொறுன்னு மைசூர்பாகு கிடைக்கும் அதை விடுவானே! ஆறரத்துக்கு மின்னாடியே சமையளுள்ளில் போய் செட்டில் ஆகிண்டேன். சும்மா சொல்லப் பிடாது நாக்கால் திட்டினாலும் நாக்குக்குச் சுவையா பண்ணிப் போடராளே அதை மெச்சணும்

மின்னே ஒருக்கா இவள் அம்மா கோயமுத்தூர்லெந்து போனில் ரெசிபீ சொல்லச் சொல்ல இவளே கிளறினா. சரியா வரலை. கெட்டியாப் போயிடுத்து. “இப்ப என்ன செய்யரது?” உங்கம்மாவையே கேளுன்னு சொல்லத் தோணித்து. சொல்லலை. “எத்தனை வில்லை வந்திருக்கு?” 19 இருந்தது. மொள்ள வாரத்துக்கு ஒண்ணுன்னு 1 மாசத்துக்கு நாம நக்கித் திம்பம். 8 ஆச்சா. 5 வில்லையை பழைய ந்யுஸ் பேப்பருக் நடூலே ஒளிச்சு வச்சுட்டா எடை கூடுதலா காமிக்கும், காசு கிடைக்கும். சொச்சம் 5 நா எடுத்து பயன்படுத்திப்பேன்”. “என்ன செய்வேள்?” “வாசல்ல கார் நிக்கரதோனோ, 4 சக்கரத்துக்கும் முட்டுக் கொடுத்துடலாம்”. முகத்தை கடுகடுன்னு வச்சிண்டா. அவளுக்கே தெரியும் இந்த மைசூர்பாகுக்கு அதுதான் தகுந்த உபயோகம்னு. “4 வீல்தானே, 5 எதுக்கு?” “டிக்கி தொறந்து ஸ்டெப்னீகிட்டே ஒண்ணு வச்சுடுவேன், அது கோவிச்சுக்கப் பிடாதோனோ?”

நன்னா கணக்குப் பண்ணிப் பாத்துட்டு “இதெல்லாம் சேர்ந்து 18 வில்லை ஆச்சு, இன்னும் ஒண்ணு மிஞ்சரதே? என்ன செய்யலாம்”. “அதை எடுத்து உங்கம்மா மேலே விசிறி அடி. இனிமேல் ரெகிபி சொல்லுவாளா பாப்பம்”. நல்ல சஜெஸ்சன் சொல்லிட்டம்னு பெருமிதப் படத்துக்குள்ளே தீர்க்கமா முறைக்கரா. ட்ரேன்ஸ்லேட் செஞ்சா 3நாளைக்கு பூவா கட்டுன்னு அதில் அர்த்தம் வந்ததை பாத்தேன். உடனே “வேண்டாம், அடிபட்டுதுன்னா வலிக்கும், இன்னொண்ணு செய்யலாம், மேக் இன் இந்தியான்னு அரசாங்கம் குதிக்கரது, அதுக்கு இந்தியவில்தான் செஞ்சம்னு சேம்பிளா அனுப்பிச்சா இந்திய ராணுவம் சமயோஜிதமா நம்மாத்து மைசூர்பாகை உபயோகப்படுத்திக்கும்”. கேட்டுண்டே காதுலே விழாத மாதிரின்னா போரா!

அன்னைக்கு அப்படிப் போச்சு. ஆனா இன்னைக்கு நன்னாவே சாஃப்டா. சரியான ப்ரொபோர்ஷன். கைக்காரி. ட்ரயல் பண்ணிப் பண்ணி பண்டங்களை கொட்டி வீணடிச்சு எப்படியோ பெர்ஃபெக்ஷன் வந்துடுத்து. எனக்கு 2 வில்லையாவது கிடைக்கும். அந்த சந்தோஷத்தில் வாணலியை சுரண்டிண்டிருக்கேன். பாத்ரூம்லேந்தே சத்தமா சொல்ரா, “ரெம்ப சுரண்டினா அலுமினியமும் வரும், உடம்புக்கு கெடுதல், பாய்சன்”.

செஞ்சதை நன்னா பேக் செஞ்சுட்டு கூரியருக்கு கொடுத்துட்டு வந்தாச்சு. உள்ளே ராத்திரி சாப்பாட்டுக்கு துவையல் அரைச்சு ரசம் பண்ணியாரது என்னமோ தெரியலை திடீர்னு ஹாலுக்கு வந்தவள் “லோகத்தில் சிலர் என்னெல்லாம் செய்யரா நீங்களும் இருக்கேளே!”. இப்போ இது என்ன புதுசான்னு பட்டது. இன்னைக்கு எழுந்துக்கரச்சே யார் மூஞ்சீலே முழிச்சேனோ? இவதான் பக்கத்துலே படுத்திண்டிருந்தா?

லோகம்னு இவள் எதைச் சொல்ரா, யார் என்னெல்லாமோ செஞ்சு இவளை மட்டும் இம்ப்ரெஸ் பண்ணி அசத்திட்டா? சும்மா உக்காந்திருந்தா அவளே வந்து சொல்வான்னு தெரியும். நாமளா ஆர்வம் காமிக்கப் பீடாது. 39வருஷ தஜுர்பா.

“நித்யாநந்தான்னு ஒருத்தர் தினம் ஒரு புது வீடியோ அனுப்பிண்டு, எங்கே இருக்கார்னே தெரியலை, போலீஸ் தேடரதாம், கைலாசம்னு ஒரு தேசத்தில் ராஜாவா, கரென்ஸி, சட்டதிட்டம், பார்லிமென்ட்டுன்னு ஜமாய்ச்சிண்டு. இப்போ மதுரைக் காராள மட்டும் அங்கே ஹோட்டல் கட்டிக்க ட்யூரிஸ்ட் கொண்டுவரன்னு பலத்த ஏற்பாடு ஆகிண்டிருக்கு. இருந்த கெத்தா அப்படி இருக்கோணும். ரிடயர் ஆகியாச்சுன்னா வாழ்க்கையே முடிஞ்சுட்டாப்போல் சாதிச்சு காட்டரதை விட்டுடப் பிடாது” ஓ அதுதான் மேட்டரா?

துவயலும் ரசமும் திவ்யமா இருந்தது. பேப்பர்தான் வரலையே, திரும்ப ஒருக்கா படிக்கலாம்னு கையில் பிடிச்சுக்க ஒண்ணும் இல்லை. தூங்கிடலாம்னு இவ சமையலுள்ளில் பங்கிடு பண்ணிட்டு வரத்துக்குள் படுத்துண்டாச்சு. அசந்து தூங்கிட்டேனா? சல்லடைய உசக்க பிடிச்சிண்டு கீழேந்து சூடு பறக்க கண்டுக்காம கடலைமாவு தூவினது அப்பரம் மாஸ்க் மாட்டிண்டு கூரியர் மூடிண்டு போயிடப் போரானேன்னுட்டு வேகமா புஸ்புஸ்ஸுன்னு மூச்சு விட்டூண்டு நடந்தது, இவகிட்டே வாங்கிக் கட்டிண்டது எல்லாமுமா சேர்ந்து அப்படியே ஆழ்ந்த நித்திரையில் தள்ளிட்டது வாஸ்த்தவம்தான். இந்த வயசில் தூக்கம் வரதே கடவுள் வரம்.

ஆனா பாருங்கோ கனவில் வந்தது கைலாசம். நித்யானந்தாவோட தெசம். பனி சூழ்ந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்குகள். தூக்கம் விழித்து மொள்ள நடந்து போயிண்டிருக்கேன். ஆங்காங்கே சைன்போர்ட் வச்சிருக்கா. ரிசெர்வ் பேங்க் ஆஃப் கைலாசா. கைலாசா நேஷணல் பார்லியமென்ட். கைலாசா மின்ட் ஸ்ட்ரீட். ஜனாதிபதி ஆஸ்ரமம்னு. இன்னும் என்னெல்லாமோ. யூட்யூபில் வராததெல்லாம். ஒரு இடத்தில் “கைலாசா இஸ் கொரோனா ஃப்ரீ. லெட் அஸ் கீப் இட் தேட் வே!” பக்கத்தில் நித்யாநந்தா படத்துடன் ஃப்ளெக்ஸ் போர்ட். இருமல் வந்தா தூக்கி உள்ளே போட்டுடுவாளா?

ஆனா பாருங்கோ டெம்பரேச்சர் நம்முர் பாதிரி இல்லை. செம குளிர். சட்டுன்னு வேஷ்டி பனியனோட தூங்கிண்டிருந்தவன் அப்படியே கிளம்பி வந்துட்டேனா, சில்லுன்னு எலும்பு வரைக்கும் தாக்கித்து. நம்மூர் மார்கழி, ஏன் தில்லி ஜனவரிக் குளிரெல்லாம் இதுக்கு முன்னாடி ஜுஜுபி. என்னையும் அறியாம சின்னதா ஒரு தும்பலும் இருமலும் வரவே அடக்கிக்க முடியாம. அப்பத்தான் அது நடந்தது.

எங்கேந்து வந்தான்னு தெரியலை, 4 பெண்கள். எல்லாரும் 18 – 21 வயசுதான் இருக்கும், காவிப்புடவை, நோ ரவிக்கை சூழ்ந்துண்டு குண்டுக் கட்டா அலேக்கா தூக்கிண்டு போய் ஒரு ஆஸ்பத்ரீ மாதிரி இடத்துக்குள் போயிடரா. இதுக்கு மின்னாடி அப்போலா மாட்டுக் கொட்டாய் மாதிரின்னா பாத்துக் கோங்கோ! அங்கே மாடு மேய்க்கர பசங்க, இங்கே நிஜ டாக்டர்ஸ். நர்ஸ் டாக்டர் எல்லாரும் பெண்கள், ஏற்கனவே சொன்ன யூனிஃபார்ம் போட்டுண்டு. தூக்கிண்டு வந்தவா இவாகிட்டே என்னை ஒப்புவிச்சுட்டு காணாமப் போயிடரா. போட்டம் பரவாயில்லைன்னு விட்டுட்டேன். ஏன்னா இவாளுக்கும் 18 – 21தான் வயசு.

“உங்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யணும்”. “பேஷா செஞ்சுக்கோங்கோ. அவசரமே இல்லை, ஒருமாசம் 10நா தங்கி டெஸ்ட் செஞ்சுண்டு போரேன். கொரோனா இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்கோ!” கெஞ்சரேன். சேம்பிள் எடுத்துண்டப்பரம் என் கட்டிலுக்கு பக்கத்துலேயே - தலைமாட்டில் ரெண்டு நர்ஸ் கால்மாட்டில் 2ன்னு என் மனம் கோணாம பாத்துக்க அப்பாயின்டெட். “எல்லாரும் அவாவா பேர் சொல்லி இன்ட்ரொட்யூஸ் செஞ்சுக்கோங்கோ. நான் ஜகதீஸன், நீங்க?” சொல்ரா. “நந்திதா, நித்யா, ரஞ்சிதா, நாரதி”. “இந்தூரில் எல்லார் பேரும் ஒரே மாதிரியா இருக்கே?” “ஆமாம். உங்க பேரையும் மாத்திடுவம்”. “என்ன யோசிச்சு வச்சிக்கேள்”. “இன்னீலேந்து இங்கே இருக்க வரைக்கும் கோகுலபாலர்”.

“சரி, வச்சுண்டுட்டா ஆச்சு. இப்போ என்ன செய்யணும்?” “நீங்க ஒண்ணும் செய்யேண்டாம். நாங்க செய்வம்”. என்ன செய்யப் போரான்னு பயமும் ஆர்வமும் 50:50 வந்தது. “சரி இங்கேயே உக்காந்திண்டிருப்பேள்னு சத்தியம் செஞ்சு தந்தா நான் விட்ட தூக்கத்தை தொடருவேன்”. “எங்கேயும் போ மாட்டம்.” சொல்லீட்டு ஆளுக்கு ஒரு பக்கமா தொட்டுக்கரா மாதிரி நெறுங்கி உக்காந்துக்கரா. வரணும்னா இவாளத் தாண்டீன்னா கொரோனா வரணும்! சாத்தியமேயில்லை. எத்தனை பெரீய கண்கள். மை இட்டூண்டு நேத்தீலே பெரீய பொட்டு. தலை நிறைய பூ வச்சிண்டு.

10நிமிஷம் தூங்கியிருப்பேனா? தெரியலை, யாரோ உலுக்கி எழுப்பரா? “டெஸ்ட் ரிசல்ட் வந்துடுத்தா, பாஸிடிவ்வா?” கேட்டுண்டே கண்ணத் தொறக்கரேன். சின்னதா தட்டில் ரெண்டு மைசூர்பாகு மட்டும் தெரியரது. அதைக் கையில் பிடிச்சிண்டு கஸ்தூ.

“என்ன அத்தனை சீக்கிரம் தூக்கம்? பண்ணி வச்சதை யார் சாப்பிடரது. அத்தனை கை சுட்டும் பொறுமையா மாவு தூவினேளேன்னு ரெண்டு வில்லை உங்களுக்காக எடுத்து வச்சேன். ஆசையா கொண்டு வந்தா இப்படியா தூங்குவா? எழுப்பினா பாவமில்லைன்னு செஞ்சுட்டேன். கோவிச்சுண்டேளா?” “அவசரப் பட்டுட்டாய். இத்தனை நாழி எங்கே போயிருந்தேன் தெரியுமா?” “எங்கே?” “நீ சொன்ன அந்த நித்யானந்தா இருக்கும் கைலாச தேசத்துக்கு”. “அங்கே என்ன பாத்தேள்?” சொன்னா மொத்துவள். “கொரோனா டெஸ்ட் பண்ண சேம்பிள் எடுதுண்டா”.

“என்ன நடக்கரதுன்னு எனக்குத் தெரியும், நான் ஒரு விடீயோ பாத்தேன். கிரிஜா மாமி வாட்ஸப்பில் அனுப்பிச்சிருந்தா. அங்கெல்லாம் சொப்பனத்திலும் போவேண்டம் கேட்டேளா? எதாவது வேணும்னா என்னண்டை கேளுங்கோ!” “கிட்டக்க வா, உன்னண்டை ஒரு முக்கியமான மேட்டர் சொல்லணும்”. இப்படித்தான் சொல்லி பல விஷயங்கள ஆரம்பிக்கர வழக்கம். அவளும் என்னத்துக்கு கூப்பிடரேன்னு தெரிஞ்சிண்டு தேவைக்கதிகமா நெறுங்குவள்.

“இன்னைலேந்து நீ மிஸஸ் கஸ்தூரி கோகுலபாலர்.!” அப்பரம் கிரிஜாமாமி அனுப்பிச்ச வீடியோவெல்லாம் பிச்சை வாங்கித்து.

No comments:

Post a Comment