பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 36
சுஜாதா&வெங்கடேசன்(6381369319)
ஆட்டோ ஸ்ரீவைகுண்டம் கிளம்பி தாமிரபரணியை ஒரு பிரதட்சணம் வந்து எட்டு திருப்பதிகளை தரிசித்தபின் ஆழ்வார் திருநகரி எனும் திருக்குருகூர் அடைகிறது..நம்மாழ்வார் அவதாரத்தலம்...
பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்
நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.
இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.
ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார்.
குருகாசேத்திர மகிமை
பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.
அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.
யானையும் வேடனும் முக்தி
முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர்.
தொடர்வது நம்மாழ்வார் வரலாறு...
No comments:
Post a Comment