பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 35
(சுஜாதா&வெங்கடேசன்)
மீண்டும் ஆட்டோ தாமிரபரணி வாய்க்கால்கள் வயல்கள் வழியே பயணித்து தென்திருப்பேரை திருப்பதி அடைகிறது. தாமிரபரணியாற்றின் தென் கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் திருச்செந்தூருக்கு அருகில், ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் தென்திருப்பேரைத்தலம் அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்து பேருந்திலும் நடந்தும் வரலாம். வாருங்கள் பெருமாள் ஏன் மகரநெடுங்குழைக்காதர் என்றழைக்கப்படுகின்றார் என்று காணலாம்.
தோழி உருவில் ஆழ்வார் பேசுகிறார்....
தோழீ! எம்பெருமானிடத்து நான் கொண்டுள்ள காதலின் தன்மை எவ்வளவு பெரியது தெரியுமா? அவனை நான் காதலித்ததால் என் உடம்பில் பலவகை மெய்ப்பாடுகள் தோன்றின. அவற்றைப் பார்த்த பலரும் ஒன்று கூடி கரிய நிறம் கொண்ட கடல் போன்ற எம்பெருமானிடத்தில் நான் வைத்துள்ள காதலைப் பற்றி இழிவாகப் பேசினார்கள். ஊராரெல்லாம் இதனைக் காரணமாகக் கொண்டு என்னை பழித்தார்கள். இதனால் என் காதல் குறைந்ததா? இல்லை: மாறாக அது மேன் மேலும் வளர்ந்தது, எவ்வளவு பரந்து வளர்ந்தது தெரியுமா? மண் நிறைந்த இப்பூவுலகமும், ஏழு கடல்களும், மற்றும் நீண்ட வானமும், ஆக இவையாவும் எவ்வளவு பெரியவையோ, அவற்றை விடவும் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே அக்காதலுக்கு உரியவனாகிய பெருமான் வீற்றிருக்கும் தெளிந்த அலைகளையுடய நீர் சூழ்ந்த தென்திருப்பேரெயில்என்னும் தலத்தை நான் அடைவேன்: ஆள் விடுதல், அவன் வரவு பார்த்தல் செய்யாமல் நானே அங்குச் சென்று சேர்வேன். என்கிறாள்
தல வரலாறு
ஸ்ரீமத் நாராயணன் திருமகளை (லஷ்மி)விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகும் நிறமும் இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.
தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபேரை(லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன்... (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்)
வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
படம் கோபுரம் ,தென் திருப்பேரை பவித்ரோஸ்தசவம்
No comments:
Post a Comment