பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் இறுதிப்பகுதி
(சுஜாதா&வெங்கடேசன்) போன் 6381369319
நம்மாழ்வார் வரலாறு:
பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர்.
இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.
திருப்புளிய மர வரலாறு
ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது.
பல்லாயிரம் ஆண இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது.
இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.
திருக்கோயில்
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
(எங்களை நவ திருப்பதி அழைத்துச்சென்ற ஆட்டோ நண்பர் முருகன் 9443682827)
No comments:
Post a Comment