ரெட்ரோ (2 )
-----------------------(சண்டே ஸ்பெஷல்)
நெல்லை தாமிரபரணி கரை ஓர கிராமங்கள் மிக அழகானவை.என் மனைவியின் ஊர் மேலதிருவேங்கடநாதபுரம் பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதர் ஆலயம் ஊரின் நடுவில்.
நான் எழுதுவது அறுபதுகளில்.என் மனைவியின் ஊர் அதுதான்.மகன் பிரசவத்திற்காக அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாள். முதல் பிரசவம் ஆனதால் சீக்கிரமாக ஊருக்கு வந்துவிட்டாள்.
என் அம்மாவும் போய் பார்த்துவிட்டு வா என்று என்னை சென்னையிலிருந்து போக சொன்னார்கள்.போனால் பக்கத்து அவள் அத்தை வீட்டில் உட்கார்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்தாள் ரேடியோவில்.அப்போதெல்லாம் ஒருசில வீட்டில்தான் கரண்ட் இணைக்க ஆரம்பித்து இருந்தார்கள்.
எங்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது. வீட்டில் என் மாமியாரும் என் மனைவியும்தான் மாமனார் காலமாகிவிட்டார். அக்கம் பக்கம் உறவினர்கள்.
எனக்கு இவள் இதற்காக அங்கே போகவேண்டுமா என்ற ஆதங்கம் வேறு! எனக்கும் ஊர் நெல்லை ஆனதால் என் தாத்தா வீடு அங்கிருந்து பத்து மைல். அப்பொழுதெல்லாம் இந்த ட்ரான்சிஸ்டர்கள் மிகவும் அதிசயமான காலம். மின்சார ரேடியோக்கள் கூட அப்பொழுது லக்ஸரி .எனக்கு மனசு கேட்கலை. இதுக்காக சென்னைக்குப் போனாலும் அங்கேயும் அது கிடைப்பது அரிது.
என் மனைவி நன்றாக பாடுவாள்.அதுவும் சினிமா பாட்டு அழகாக பாடுவாள்.அப்பொழுதெலாம் எங்கள் ஊரில் இலங்கை வானொலியும் tms பாட்டுகளும்தான் உயிர்.எனக்கு என்ன செய்வது என்றே தெரியலே. வீட்லே மின்சாரம் போடணும்னாலும் எப்படியும் கொஞ்ச நாளாகும். தவிர வீடு முழுக்க தட்டி குடைஞ்சு ஒயரிங் பண்ணனும்.
இவளோட நிலைமையில் வீட்டுலே ரிப்பேர் சத்தம் போடஎனக்கு மனசில்லை.
காலையில் என் மாமியார் சூடா தோசை சட்டினி போடும்போது நான் சரியா சாப்பிடலை.உடனே மாப்பிள்ளை சரியா சாப்பிடலை என்று சற்று தள்ளி உட்கார்ந்திருந்த என் மனைவியிடம் சொல்ல. என்ன ஆச்சு! உங்களுக்கு ! தோசை ரொம்ப பிடிக்குமே! என அவள் என முகத்தைப் பார்த்தாள்.
உனக்கு பாட்டு பிடிக்கும் ! என்னால் உனக்கு அதுக்கு கூட உடன் ஒன்னும் செய்ய முடியவில்லையே ! என உண்மையான மன வருத்தத்துடன் அவளை பார்க்க ,அவள் என்னை அன்புடன் பார்த்த அந்த பார்வை இன்றும் அப்படியே என் முன் நிற்கிறது.
சீ! என்ன சின்ன குழந்தை மாதிரி ! நான் நன்னாத்தான் இருக்கேன்!
அடுத்த வீடு அத்தை வீடு .அவங்க ரொம்ப ஆசையா எல்லாம் செய்வா! முதல்லே தோசையை ஒழுங்கா சாப்பிடுங்கோ ! என்று அந்த உடம்போடு தட்டை எடுக்கப் போனாள்! நான் உடனே தடுத்து சாப்பிட்டு முடிச்சேன்.
அதற்குள் உறவினர்கள் வந்தார்கள். நான் வெளியில் வந்து என் மனைவியின் கசின் பிரதரை பார்த்தேன், மாப்பிள்ளை ! நீங்க வந்தீங்க என்று சொன்னார்கள் ,அதுதான் ஓடிவந்தேன் என்றான்.
அவன் ஒரு நல்ல பிசினஸ் செய்வதுடன் எல்லாம் தெரிஞ்ச நல்ல உள்ளம் கொண்டவன். அவனை மெதுவா தெரு முனை வரைக்கும் போய் மணி! எனக்கு ஒரு உதவி செய்வாயா ! என்றேன்,
என்ன வேணும் மாப்பிள்ளை ! உடனே செய்யறேன் ! உங்களுக்கு தான் எல்லாம் என்று சொன்னவுடன் எனக்கு எப்படியாகிலும் ஒரு டிரான்சிஸ்டர் வாங்கி தருவாயா ! நம்ம வாங்கறது உன் தங்கைக்கு தெரிய கூடாது ! தெரிஞ்சா வாங்க விட மாட்டா! அவன் உடன் பதில் சொல்லாமல் கொஞ்சம் யோசிச்சான். என்ன மணி ! யோசிக்கறே ! என்றேன். இல்ல! இப்பகூட என பிரண்ட் ஒருத்தர் அலையா அலைஞ்சு திருநெல்வேலி முழுக்க கிடைக்காம கேரளா போய் வாங்கி வந்தார்,
ஒரே கெடுபிடி கஷ்டம் சொன்னார். இந்த லோக்கல் செட்டெல்லாம் லாயக்கில்லே ! ஒரு நாள் டயம் கொடுப்பேளா ! என்றான்.
இல்லை மணி ! இப்பவே வா ! உன் பிரண்டு போய் பார்க்கலாம் ! என்று நச்சரிக்க உடனே அவன் ஐயோ மாப்பிள்ளை ! என தங்கை ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவ ! உடனே எப்படி தவிக்கிறீங்க ! சரி ! தங்கைகிட்ட சொல்லிட்டு வாங்க ! சும்மா டவுன் வரைக்கும் என்னோட அதற்குள் நான் மோட்டார் சைக்கிள் ரெடி பண்ணிக்கிறேன்.வேற எதுவும் சொல்லாதீங்க ! என்றான்
நானும் வீட்டுக்குப் போய் என் மனைவியிடம் நெல்லை டவுன் வரைக்கும் மணியோட போறேன் சொல்லிட்டு வந்தேன். நேர அவன் பிரண்ட் பார்க்கப் போனோம் அவர் டிரான்ஸ்போர்ட் பிஸினெஸ்மான்.
விஷயத்தை சொன்னோம். கவலைப் படாதீங்க ! மணிக்கு தங்கச்சி மாப்பிள்ளைன்னா எங்களுக்கும் மாப்பிள்ளை முறைதான் நீங்க ! நல்ல ஒரிஜினல் ட்ரான்ஸிஸ்டர் உங்க வீட்டுக்கு வரும். நானும் உங்களுக்கு மணி மாதிரி உறவுமுறைதான்,என்று சொல்லி காபி வரவழைச்சு உபச்சாரம் பண்ணினார். இந்த அன்பு எங்க ஊர் முறை.நிறைந்த உள்ளன்பு கொண்டவர்கள்.
நன்றி சொல்லிவிட்டு போத்தி ஹோட்டலில் அவளுக்குப் பிடிச்ச ஸ்வீட் ,எல்லாம் வாங்கிண்டு வீட்டுக்குப் போய்ட்டோம்.
வாசலிலேயே திண்ணையில் இருந்த என் மனைவி மணியை பார்த்து மணி ! என்ன இவர் ! ஸ்வீட் எல்லாம் வாங்கிண்டு வரார், என் கேட்க இல்லை சும்மா டவுன் வரைக்கும் போனோம் ! என்று அவனும் சமாளிக்க அவள் சுவீட் பொட்டலம் பிரிச்சு அங்குள்ளவர்கள் பங்கு வைத்தாள்.
அடுத்த நாள் அழகா ஒரு பானாசோனிக் டிரான்சிஸ்டர் வந்தது. என் மனைவிக்கு ஒரே பிரமிப்பு! எதுக்கு இவ்வளவு செலவழிச்சு வாங்கினீங்க ! என்று சொன்னாலும் பிரமிப்பு அடங்கலே!
நான் சொன்னது ! நான் ஊருக்குப் போய்ட்டாலும் உனக்கு கம்பெனி இதுதான் ! என்றேன். பேட்டரி தீர்ந்ததுனா மணி வாங்கி தருவான் !
அந்த அழகான டிரான்சிஸ்டர் அப்பொழுது பாடிய பாட்டு " இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே " அப்பொழுது பேமஸ் பாட்டு என மனைவி தன்னை மறந்து கூட பாடிக் கொண்டிருந்தாள் .
எங்கள் அன்பு உள்ளங்களுக்கு இறைவன் ஒரு மகன்தான் கொடுத்தான் .
சங்கரன் அஸ்வதி
No comments:
Post a Comment