"நீ காசிக்கு போவதற்கு முன்னால் ஒரு சமாராதனை செய்து விட்டுப் போக வேண்டும் என்று தான் இப்படிச் செய்தேன்.."
பெரியவா ஆந்திரா கார்வேட் நகரில் இருந்த பொழுது, பெரியவாளிடம் பக்தி கொண்டு, எண்ணிலா தொண்டு செய்தவர், சென்னை மேற்கு மாம்பலவாசி திரு. ஜெயராமன்.
அவரது மனைவி திருமதி பட்டம்மாள் தன் மூன்றாவது பெண்ணுடன் பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.
தான் காசிக்குப் போக உத்தரவு தந்து அருளுமாறு' வேண்டிக் கொண்டார்..
அதற்கு மஹா பெரியவா, " காசிக்கு போறயா? நீ போகும் பொழுது சங்கரிப் பாட்டி ன்னு என் பக்தை ஒருத்தி காஞ்சியில் இருக்கா.. அவளையும் அழைத்துக் கொண்டு போறாயா?" என்று கேட்டார்..
அவர்களும் பெரியவா உத்தரவுப்படியே செய்வதாக தெரிவித்ததவுடன், மகிழ்ந்த பெரியவா ப்ரசாதம் அருளி விட்டு, "நீ உடனே ஒரு வேலை செய்கிறாயா? இங்கு உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மடப்பள்ளியில் 40 பேருக்கு சமையல் செய்" என்று உத்தரவிட்டார்.
எதற்கு 40 பேருக்கு சமையல் என்று புரியவில்லை.. இருப்பினும் பெரியவா ஆணையை மீற முடியுமா?
உதவிக்கு சிலரை அழைத்துக் கொண்டு பெருமாள் கோயிலுக்குச் சென்று சமையல் செய்து முடித்தார்கள்.
சமையல் முடிந்து, வெகு நேரமாகியும் சாப்பிட ஒருவரும் வரவில்லை. கவலையுடன் பெரியவா விடம் சென்று தெரிவிக்கும், அதே நேரத்தில், சில கார்களில் திருப்பதி செல்லும் பக்தர் கூட்டம் வழியில் கார்வேட் நகரில் பெரியவா இருப்பதை கேள்வியுற்று, தரிசிக்க வந்தனர்.
அவர்களை ஆசிர்வதித்த பெரியவா அவர்களிடம், " இந்த அம்மா உங்களுக்கெல்லாம் சாப்பாடு போடுவா.. போய் சாப்பிட்டு விட்டு திருப்பதி க்கு போய் வாருங்கள்.." என்று உத்தரவிட்டார்..
அவர்கள் எல்லோரும் வயிராரச் சாப்பிட்டு விட்டு வாழ்த்திச் சென்றனர்.. வந்தவர்கள் 35 பேர் இருந்தது தான் அதிசயம்.
பிறகு பெரியவா, பட்டம்மாவை அழைத்து," ஒருவரும் வரவில்லை என்றாயே, இப்பொழுது பார்த்தாயா.. "என்று புன்னகையுடன் வினவினார்.
"நீ காசிக்கு போவதற்கு முன்னால் ஒரு சமாராதனை செய்து விட்டுப் போக வேண்டும் என்று தான் இப்படிச் செய்தேன்.." என்றும் சொல்லிச் சிரித்தார் பெரியவா.
இதைக் கேட்ட பக்தை உள்ளம் பாகாய் உருகியது.
கருணைக் கடல் என்றால் பெரியவா தான் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment