Wednesday, September 2, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 30


பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 30 
சுஜாதா&வெங்கடேசன்

ஆட்டோ அங்கிருந்து கிழக்கே 3 கிமீ போய் வரகுணமங்கை எனும் நத்தம் எனும் ஊரில் நிற்கிறது. 

வரகுணவல்லி ,வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும். அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுண மங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது. அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். அக்னிக்கு இந்தப் பெருமாள் காட்சி தந்து அருள் புரிந்த தலம். தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்களைக் கொண்ட தலம். இந்தத் தலத்தில் பெருமாள் விஜயகோடி விமானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் ‘விஜயாசனர்’ என்ற திருநாமத்தோடு அமர்ந்து அருள்புரிகிறார்.

சந்திர தோஷ நிவர்த்தி ஸ்தலம் :

வரகுணமங்கை விஜயாசன பெருமாள் திருக்கோவில் என்றழைக்கப்படும் இந்தத் திருக்கோவில், நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தலம் ஆகும். வரகுணமங்கை என்று சொல்லுவதை விட, ‘நத்தம் கோவில்’ என்று கேட்டாலே பொதுமக்கள் எளிதில் அடையாளம் காட்டுகிறார்கள்.
இத்தல பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க, கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பகவான் பள்ளிகொண்ட கோலத்தை விட, நிற்கின்ற கோலத்தை விட, வீற்றிருக்கின்ற திருக்கோலம் சிறப்பானது. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.
இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment