ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 52
[பெரியவாளின் ஆங்கில மேதாவிலாஸம் 1- Heart – generation gap – equipoise – gloss]
பெரியவாளுடைய ஆங்கிலப்புலமை அபாரமானது! பெரியவா ஸாதாரணமாக ஆங்கிலத்தில் ஸம்பாஷிக்கமாட்டார். ஆனால் ஸம்பாஷணையில், பெரிய பெரிய ஆங்கில ஷேக்ஸ்பியர்களே கொஞ்சம் முழிக்கும் போது, ஸரியான ஆங்கிலச் சொல்லை, ஸரியான உச்சரிப்புடன், குறிதப்பாமல், ராமபாணம் போல் எடுத்து ப்ரயோஹித்து விடுவார்!
பெரிய பெரிய ஆங்கில மேதைகளும், வெள்ளைக்காரர்களுமே அந்த அபாரமான ஸர்வஜ்ஞத்வத்தில் அஸந்து போய்விடுவார்கள்.!
இதில் வேடிக்கை என்னவென்றால், சில ஸமயம் translate பண்ணுபவர், பெரியவா சொன்னதை தப்பாக மொழி பெயர்த்து சொல்லுவார். அப்படி சொன்னதும், பெரியவா உடனே ” நா…. சொன்னது அது இல்ல!..” என்று கூறி, அதற்கு மிகச் ஸரியான English வார்த்தையை கூறுவார். பல ஸமயங்களில், பெரியவாளே… தான் தமிழில் சொன்ன கருத்தையும்… தானே English-ல் கூறிவிடுவார்.
ஸாதாரணமாக காலை ஸ்நானம் முடிந்ததும், ஒருமணிநேர ஜபத்துக்கு பெரியவா அமரும் வரை, யாருடனும் பேச மாட்டார். அப்படியே ஏதாவது சொல்ல வேண்டிய அவஶ்யம் வந்தாலோ, அல்லது பெரியவாளுடன் யாருக்காவது அந்த நேரத்தில் அவஸரமாக பேச வேண்டி இருந்தாலோ, ஸம்ஸ்க்ருதத்தில் மட்டுமே பேசுவார்.
இதனால், அநேகமாக யாருமே அந்த நேரத்தில் பேச மாட்டார்கள்.
பெரியவா, ஶ்ரீ பரணீதரனிடம் தன் ஸ்கூல் days பற்றி ஆனந்தமாக உரையாடியது. [Pls refer சரித்ரம் – 20 ]
“நாலாவுது ஃபாரத்ல [9th std] படிக்கறச்ச…. ஷேக்ஸ்பியரோட “King John” ட்ராமால, Arthur எளவரசனா பேசி, நா….. நன்னா நடிச்சேன்னு எனக்கு “Old English” [Bible] பொஸ்தகம் ஒண்ணு ப்ரைஸா குடுத்தா… வேஷம்-லாம் கெடையாது! வஸனங்கள, நன்னா நெட்டுரு [மனப்பாடம்] பண்ணி, பேசி நடிக்கணும்…..
அதோட அந்த ஸ்கூல்ல படிக்கறச்ச, The Swiss Family Robinson-ங்கற பொஸ்தகமும் கெடச்சுது. Alexander Selkirk-ங்கறவரைப் பத்தி, English poet… William Cooper எழுதின “The Solitude of Alexander Selkirk”… எனக்கு இன்னுங்கூட ஞாபகம் இருக்கு….!”
இதோ!….அவ்வளவு தெளிவான, மதுரமான ஆங்கில உச்சரிப்பில், பெரியவா சொல்லிக்காட்டிய poem…
“O Solitude! Where are the charms
That sages have seen in thy face?
Better dwell in the midst of alarms
Than reign in this horrible place..”
ஶ்ரீ பரணீதரன் பெற்ற பாக்யத்தை நாமும் பெற்றோம்….
பெரியவாளுடைய ஆங்கில ஸ்லேடைகளும் மிகவும் ரஸிக்கக்கூடியதாக இருக்கும்.
சிலவற்றை ரஸிப்போம்….
பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் பெரியவாளின் பக்தர். ஒருநாள் பெரியவாளிடம் தன் பெண்ணுடைய மெடிகல் ரிப்போர்ட்டை கொண்டு வந்து காட்டி அழுதார்..
“எம்பொண்ணுக்கு heart-ல ஓட்டை இருக்காம் பெரியவா! டாக்டர் சொல்றதைக் கேட்டாலே குலை நடுங்கறது… பெரியவாதான் காப்பாத்தணும்”
“அதாவுது…. ஒன்னோட பொண்ணுக்கு ஹார்ட் ‘ஹோலா’ இல்ல; அதுல ‘ஹோல்’ இருக்கு…ன்னு சொல்றியா!”
ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை.
எப்போதுமே கேள்வி கேட்கும் பக்கமே இருந்ததால், பதில் சொல்லும் பக்கம் இருந்த பழக்கம் இல்லியே!
“புரியலியா?… ஒம்பொண்ணுக்கு….. heart… whole-லா இல்ல! அதுல hole இருக்குன்னு சொல்ற… இல்லியா?”
பெரியவா அவரை பெஞ்சு மேல்தான் நிற்க வைக்கவில்லை!
“ம்… ஸெரி….. நீ…. வேற….. என்ன வேலை பண்ற?..”
அந்த “வேற”வில் ஒரு அழுத்தம் குடுத்தார்.
ஆசிரியர் அதிர்ந்து போனார்!
“டீச்சர் வேலை தவிர, வேற வேலை எதுவும் செய்யல…ன்னு சொல்லிட்டா போறது! பெரியவா என்ன கொடைஞ்சுண்டேவா இருக்கப் போறார்?”
அவருடைய அல்ப மனஸு சொன்னாலும், உள்ளே இருக்கும் ‘ஏதோ ஒன்று’ அதைத் தடுத்தது.
தெய்வ ஸந்நிதானத்தில் பொய்யா!!
“தங்கம், வைரம்….. வ்யாபாரம் ..”
மென்று முழுங்கினார்.
கனிவான குரலில் பெரியவா சொன்னார்…..
“பெரிய பெரிய வ்யாதியெல்லாம் கூட, தான தர்மம் பண்ணினாப் போய்டும்..! இங்க எங்கிட்ட நெறைய ஏழை ஜனங்கள் வந்து, கல்யாணத்துக்கு திருமாங்கல்யம் கேக்கறா… நீ…. எனக்கு நூத்தியெட்டு திருமாங்கல்யம் பண்ணிண்டு வந்து குடு! இல்லாதவாளுக்கு குடுக்கலாம்… என்ன? பண்ணித் தருவியா?”
அழகாக சிரித்துக் கொண்டே கேட்டார்.
“பரம பாக்யம்! பண்ணிண்டு வரேன்….”
நமஸ்காரம் பண்ணிவிட்டு, ப்ரஸாதத்துடன் medical report-ஐ எடுத்துக் கொண்டு போனார்.
ஆசிரியரின் பெண்…. whole hearted-ஆக, அந்த hole மறைந்து ஸௌக்யமாக வாழ, அந்த க்ஷணமே பெரியவா அவளுடைய medical report-ஐ, progress ஆவதற்கான progress report-டாக மாற்றி, தன் ஆஶிர்வாத கையெழுத்தையும் போட்டுவிட்டார்.
அடுத்த ஒரு மாஸத்துக்குள் 108 திருமாங்கல்யம் பண்ணிக் கொண்டு வந்து ஸமர்ப்பித்தார் அந்த தங்கமான ஆசிரியர்!
பெரியவா, புன்னகையுடன்…. அவர் ஸமர்ப்பித்த திருமாங்கல்யங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, ப்ராஸாதம் அனுக்ரஹித்தார்.
“Good hearted..ன்னு இங்க்லிஷ்ல சொல்லுவா..! தெரியுமோ? நீயும் ஒன்னோட புத்ரியும் good hearted !”
அப்பாவும், மகளும் நமஸ்காரம் பண்ணினார்கள்.
அபயக்கரம் தூக்கி ஆஶீர்வதித்தார்.
மற்றொரு ஆங்கில அலஸல்…..
பெல்காமில் பெரியவா முகாம். அப்போது ஹூப்ளியிலிருந்து ராமஸ்வாமி என்ற பக்தர் குடும்பத்துடன் வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.
அவருடைய அப்பா பெரியவாளை நமஸ்காரம் பண்ணும்போது, பக்கத்திலிருந்த பாரிஷதர், பெரியவாளிடம் introduction குடுத்தார்.
“ஹூப்ளி ராமஸ்வாமியோட தகப்பனார்…”
“ஒம்பேர் நாராயணன்தானே?….”
“ஆமா……பெரியவா”
பின்னர் ஹூப்ளி ராமஸ்வாமி நமஸ்காரம் செய்தபோது, அதே பாரிஷதர், அடுத்த introduction…
“ஸ்வாமிநாதனோட அப்பா….”
பெரியவா அவர்களிடம் பொதுவாக சில விஷயங்களை கேட்டுவிட்டு, ராமஸ்வாமியிடம் அழகான புன்னகையோடு கேட்டார்…..
“நீதான் பெரிய்ய labour officer ஆச்சே! Generation Gap-ன்னு சொல்றாளே, அப்டீன்னா என்ன? சொல்லு பாப்போம்…”
“ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும்….. கிட்டத்தட்ட முப்பது வர்ஷம்…gap இருந்தா….generation gap….”
இப்படியாக ஆரம்பித்து ஏதேதோ விளக்கங்கள் குடுத்தார்.
ஒருவழியாக அவர் சொல்லி முடித்ததும், கோடி கோடி generation-க்கும், gap-ப்பே இல்லாமல், ஸதா ‘[பாது]காப்பாக’ இருக்கும் நம் பெரியவா சிரித்துக் கொண்டே …….
“பழைய காலத்ல, ஒத்தரை introduce பண்றச்சே, இவன், இன்னாரோட பையன்…. அப்டீன்னு சொல்லுவா…….
…….பூண[ல்] போட்டுண்டவா, அபிவாதயே சொல்லி நமஸ்காரம் பண்றச்சே, அவா, இன்ன கோத்ரம், ஸூத்ரம், நாமதேயம்-ன்னு சொல்லி self introduction குடுத்துப்பா!…….
இப்போ என்னடான்னா…எப்டி மாறிடுத்து பாரு! இன்னாருடைய பிள்ளை-ன்னு சொல்றது போயி, இன்னாருடைய அப்பா.. இவர்-னு….. தலகீழ் நெலமை வந்துடுத்து பாத்தியா?……..
……இதான் Generation Gap …!”
அச்சு வெல்லம் மாதிரி அழகாக, கச்சிதமாக, இனிமையாக சொல்லிவிட்டு ப்ரஸாதம் வழங்கினார்.
பெரியவாளை தர்ஶனம் பண்ண வெளிநாட்டில் வாழும் ஒரு இந்திய பக்தர் ஸ்ரீமடத்துக்கு வந்தார். பெரியவா அவருடன் ஏதோ விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார். அதிக கூட்டமில்லை.
“Equipoise”…ன்னா என்ன?…ஒனக்கு தெரியுமோ?….”
பக்தருக்கு தெரிந்திருந்தால்தானே சொல்வதற்கு?
கொஞ்சம் தள்ளி, சுவர் ஓரமாக ஒரு வயஸான பாட்டி கண்களை மூடிக்கொண்டு, மிகவும் அமைதியாக த்யானம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
பெரியவா அந்த பக்தரிடம், அந்தப் பாட்டியை சுட்டிக் காட்டினார்.
” அதோ….அங்க ஒக்காந்துண்டிருக்காளே..! அந்த பாட்டி எப்டி இருக்கா-னு சொல்லு?”
“பாக்கறதுக்கு ரொம்ப ஶாந்தமா…. எந்த சலனமும் இல்லாம… ரொம்ப அமைதியா இருக்கறாப்ல தெரியறது பெரியவா”
அந்தப் பாட்டி யாருன்னு தெரியுமோ ஒனக்கு?”
“தெரியாதே……”
“ஒனக்கு கே.எஸ் வெங்கட்ரமணியை தெரியுமோ?…… அவர் ஒரு பெரிய writer ! நெறைய்ய பொஸ்தகங்கள் எழுதிருக்கார் ! Kandan, the patriot, Murugan, the tiller இதெல்லாம் அவரோடது… ரொம்ப ப்ரஸித்தம்! நானும் படிச்சிருக்கேன்! இந்த நாவல்ல, rural settings வந்து….. ரொம்ப natural-லா இருக்கும்..! ஒனக்கு….. பால் ப்ரண்டன்…. தெரியுமோ?”
“தெரியும் பெரியவா!..”
“அந்த French-காரரை திரு[வண்]ணாமலைக்கு இவர்தான் அழைச்சிண்டு போனார்! அதுக்கு முன்னாடி எங்கிட்டயும் அவரை, இவர்தான் அழைச்சிண்டு வந்தார்! பால் ப்ரண்டனுக்கு நம்மளோட தத்துவங்கள்ள ரொம்ப பிடிப்பு!….
இந்தம்மா….. வெங்கட்ரமணியோட ஸம்ஸாரம் ! இவாளுக்கு ஒரே பிள்ளை! வெங்கட்ரமணியும் போய்ச் சேந்துட்டார்! பிள்ளையும் பாவம்…. ஸர்க்கார் விருந்தாளி! …….”
பக்தர் முழித்தார்…..
“புரியலியா?… mental ஆஸ்பத்ரில இருக்கான்! ஸொந்தபந்தம், ஸொத்து ஸ்வதந்த்ரம் எதுவும் கெடையாது! பாவம் ! இவளுக்கோ…. மலை மலையா ஶோகம்!….. ஆனா, அந்த பாட்டியை பாத்தா… இவ்ளோ கஷ்டம் இருக்கறாப்ல…. எதாவுது தெரியறதா பாரு! மொகத்ல துளி கூட, அந்த ஶோகத்தோட ரேகையே காணோம் பாத்தியா?……
இதுதான்….. Equipoise! Mental Equanimity!..”
அம்மாடீ!…. என்ன ஒரு துல்லியமான வார்த்தை ப்ரயோஹம்!
Equipoise-க்கு அர்த்தத்தையும், அந்த உயர்ந்த ஶாந்தமான நிலையையும் பெரியவாளேதான் அனுக்ரஹம் பண்ணணும்!
1982-83-ல் பெரியவா, கர்நாடகாவில் குல்பர்கா பக்கத்தில் இருக்கும் மஹாகாவ்ம் என்ற க்ராமத்தில் முகாம். ஸ்ரீ சிதம்பரேஶன் என்ற பக்தர் பெரியவாளை தர்ஶனம் பண்ண சென்றார். இவர் சென்ற ஸமயம், பெரியவா ஸ்ரீ வித்யாரண்யரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
“வித்யாரண்யர்…. நாலு வேதத்துக்கும் பாஷ்யம் பண்ணியிருக்கார். Maxmullar-ங்கற German-காரரும் பாஷ்யம் பண்ணியிருக்கார். நெறைய western scholers-ல்லாம் கூட, வேதத்தை பத்தி, நெறைய பொஸ்தகங்கள்ள எழுதியிருக்கா!…..
வேதம்-ங்கறது…. ஶப்த ப்ரதானமானது [சத்தம்-உச்சரிப்பு முக்யத்வம்]!!
அர்த்த ப்ரதானமானது இல்ல! இந்த விஷயம்….. western philosophers-க்கு தெரிய ஞாயமில்ல!
ஆனாலும், அவா.. வேதம் படிக்கற விஷயத்ல ஶ்ரத்தை காட்டி, அதப்படிச்சு…. அதுல சொல்லப்பட்டிருக்கற விஷயங்களை தெரிஞ்சுக்கறதுல மனஸு வெச்சு, அதுக்கு வேணுங்கறபடி, தங்களோட…. ஸம்ஸ்க்ருத பாஷாஞானம், நம்ம தேஸத்தோட பண்பாடு இதுலெல்லாம்….. தங்களோட அறிவை வ்ருத்தி பண்ணிண்டு, பொஸ்தகம் எழுதியிருக்கா! இது அநேகம் இருக்கு!
அவாவாளோட cultural background-ஐ பொறுத்து, வேதத்துல சொல்லியிருக்கறதை, அவாவா அறிஞ்சிண்ட விதமும், அவாளோட பொஸ்தகங்கள்ள அதை குறிச்சு எழுதின விஷயங்களும், மொறைகளும் வித்யாஸப்பட்ருக்கும்.
வித்யாரண்யரோட பாஷ்யத்துக்கும் இந்த மாதிரி, occidental philosophers எழுதின விஷயங்களுக்கும் நெறைய வித்யாஸம் இருக்கறதுனால, வித்வான்களை கொண்டு….. அதப்பத்தி ஆராய்ச்சி பண்ணச் சொல்லி, அவாளுக்கெல்லாம் த்ரவ்ய ஸஹாயம் பண்ணி, வேதத்துல வித்யாரண்ய பாஷ்யத்துக்குண்டான Gloss-ஐ வெளில கொணுந்தாத்தான்…… நம்மவாளுக்கு உபயோஹமா இருக்கும். இதுக்குன்னு…. ரெண்டு-மூணு வித்வான்களை இதுல ஈடுபடுத்தணும்…”
அப்போது வேதரக்ஷண நிதி டிரஸ்ட்-ன் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ அண்ணாத்துரை ஐயங்கார், Delhi Central Government Education Department-ன் அப்போதைய Secretary ஸ்ரீ ஸி.ஆர். ஸ்வாமிநாதன் ஆகியோரும் அங்கு இருந்தனர்.
பெரியவா…. அப்படியே….. ice cream வழுக்கிக் கொண்டு தொண்டைக்குள் போவது போல், cool-லாக ப்ரயோஹித்த ‘Gloss’…… என்ற வார்த்தையின் ஸரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள, அங்கிருந்த அனைவருமே வீடுகளுக்குப் போனதும் dictionary-ஐ புரட்ட வேண்டியிருந்தது!
ஸ்ரீ ஸ்வாமிநாதனிடம் பெரியவா கேட்டார்…..
“இந்த மாதிரியான research-க்கு…. நம்ம central government-டோட education department-லேந்து… funding பண்ண எடம் உண்டோ?…”
“உண்டு பெரியவா! வாரணாஸி பனாரஸ் ஹிந்து யூனிவெர்ஸிட்டிக்கு…. இந்த மாதிரியான research-க்கு ஒதவி செஞ்சிண்டிருக்கோம்!..”
இந்த விவாதத்தின் விளைவாகத்தான்…. ஶ்ரீ வித்யாரண்யர் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது…..
இதைப் படிக்கும் போது, இந்தக் காலத்தில் படே படே மந்த்ரிகள், பெரிய கம்பெனி chairmen-கள், IT company-களோட top officials எல்லோரும் கலந்து கொள்ளும் மீட்டிங்குகளில் இல்லாத ஒரு தெளிவான கம்பீரமும், மற்றவரை மதிக்கும் அலட்டல் இல்லாத மர்யாதை பண்பும் நிறைந்திருப்பதை உணரலாம்.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
No comments:
Post a Comment