.இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் கும்பகோணம் டவுனில் உள்ள ஆலயம் சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி
பெருமானின் வலக்கரத்தில் எப்போதும் திகழும் சுதர்ஸனர், எல்லா வைணவ கோயிலுக்குள்ளும் பெருமானோடு காட்சி தருகிறார்.
என்றாலும், சில கோயில்களில் சுதர்ஸனருக்குத் தனி சந்நிதி உள்ளது.
அங்கே யோக நரசிம்மராக ஒருபுறத்திலும் சுதர்ஸனராக மற்றொரு புறத்திலும் எழுந்தருளி காட்சி தருகிறார்.
அப்படிப்பட்ட கோயில்களில் சுதர்ஸனர் தனிக் கோவிலில் எழுந்தருளி காட்சி தரும் இடம் கும்பகோணம் சக்கரபாணிப்பெருமான் கோயில். மேலும் திருமோகூர்.
திருவரங்கம், காஞ்சிபுரம் போன்ற கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் அமையப் பெற்று புகழுடன் திகழ்கின்றன.
கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி:
கும்பகோணம் என்று அழைக்கப்படும் திருக்குடந்தை திவ்வியதேசத்தில் தனிக் கோயிலில் சக்கரப்பாணிப் பெருமானாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுதர்ஸனாழ்வார்.
உலகுக்கு ஒளிதரும் சூரியனில் ஒரு கரும் புள்ளி விழுந்தது. ஆம், அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. கர்வம் மிகுந்தது.
அபரிமிதமான பிரகாசத்தாலும் தன்னைப் பற்றிய கர்வம் மிகுந்தது. சூரியனுக்கு ஏற்பட்ட அகந்தையால், அவன் மற்றவருக்குத் துன்பம் இழைக்கலானான்.
அபரிமிதமான வெப்பத்தால்; தேவர்களையும் மற்ற உயிரினங்களையும் கோள்களையும் தகிக்கத் தொடங்கினான்.
சூரியனின் வெப்பத்தைத் தாள முடியாமல் எல்லோரும் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர்.
இதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பின்னடைவைப் போக்க எண்ணினார் விஷ்ணு. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது?
தீமைகள் மலியும்போது அவதரித்து அந்தத் தீமையைக் களைவேன் என்றான் பகவான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் என்ற வகையில், தீயவனை அழித்து, நல்லவனைக் காப்பது என்பது அவன் விரதம்.
இப்போது தீமை முளைத்துள்ளது. ஆனால் அந்தத் தீமையைச் செய்பவன் சூரியன். அவன் ஒன்றும் தீயவன் இல்லையே.
உலகுக்குப் பயன் தருவதற்காகப் படைக்கப்பட்டவனல்லவா? ஆகவே அவன் அழிக்கப்பட்ட வேண்டியவனல்லன்; அவனுடைய அகந்தை குணம்தானே அழிக்கப்பட்ட வேண்டியது?
இங்கே சூரியனும் பகவானின் ஆணைப்படி இயங்குபவனாயிற்றே. அதனால் சூரியனுக்குப் புத்தி புகட்ட தன் அதிகாரி ஒருவனிடம் ஒப்படைத்தார் பகவான். அந்த அதிகாரி சக்கரத்தாழ்வார்.
தன்னிடம் பிரார்த்தனை செய்த தேவர்களிடம் பெருமான் கூறினான்; எம்திருவாழிக்கு இந்தப் பணியைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ஜலந்தராசுரன் என்ற அசுரனை அடக்க சுதர்ஸனரைப் பூலோகத்துக்கு அனுப்பியுள்ளேன்.
நீங்கள் அனைவரும் பிரம்மாவுடன் பூலோகத்தில் உள்ள காவிரிகரைக்குச் சென்று சுதர்ஸனரைத் தியானம் செய்யுங்கள்.
சுதர்ஸனர் உங்களுக்குக் காட்சிதந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார் என்று அருள் செய்தார். அப்படி அவர் காட்டிய காவிரிதீரம் கும்பகோணம்.
பகவான் விஷ்ணுவின் ஆணைப்படியே, பிரம்மா முதலானோர் காவிரிக்கரையில் பிரார்த்தனை செய்தனர். சுதர்ஸனர் தோன்றினார். அவரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைபோல், சுதர்ஸனர் சூரியனிடம் இருந்து ஒளியைக் கவர்ந்து, அதை மறைத்துச் சூரியனை சஸ்பெண்ட் செய்தார்.
அவ்வளவுதான்! சூரியனின் மமதை இருந்த இடம் தெரியாமல் போனது. தன்னால் ஒன்றும் இல்லாது என்பதை உணர்ந்த சூரியன், சுதர்ஸனாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டான்.
அப்போது சுதர்ஸனர், சூரியதேவா, நீயும் உன் போன்ற பிரபஞ்ச சக்திகளும் உலக நலன்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்ட சக்திகள் உங்களுடையவை அல்ல. எல்லாம் வல்ல பரம்பொருளினுடையது. பரம்பொருளே அந்தச் சக்தியை உங்களின் மூலமாக உலகுக்குக் கொடுக்கிறது.
ஆனால் நீங்களோ உரிமையாளன் போல் செருக்குறுதல் தகுமா? அப்படிச் செருக்குற்றால், உங்கள் சக்தியைப் பரம்பொருள் மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்று சொன்னார்.
தன் நிலை நினைத்து வருந்திய சூரியன், அவரைப் பணிந்து மீண்டும் அந்தச் சக்தியைத் தர வேண்டினான். அவன் வேண்டியபடிச் சூரியனுக்கு அந்தச் சக்தியை வழங்கினார் சுதர்ஸனர்.
சுதர்ஸனர் கூறிய பரம்பொருள் யார் என்று தெரிந்து கொள்வதில் சூரியனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை வாயுவிட்டுக் கேட்டே விட்டான் சூரியன். சுதர்ஸனர் சொன்னார்; நீயும் உன் காரணமாக உலகமும் உணர்ந்துகொள்ள அந்தப் பரம்பொருள் என்னில் காட்சி தருவார் என்றார்.
உடனே அங்கே கோடி சூரியப் பிரகாசத்தோடு சக்கரம் பிரம்மாண்டமாக விரிவடைந்து. அதில் விஸ்வரூபியாகப் பெருமான் காட்சி தந்தார். அந்தக் காட்சியைப் என்றென்றும் வணங்க, மக்கள் அவரைத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்கள்.
இன்றும் இந்தக் கோலத்தில் சுதர்ஸனாழ்வார் சேவை சாதிக்கக் காண்கிறோம். சாரங்கபாணிப் பெருமானால் அனுப்பி வைக்கப்பெற்ற சக்கரத்திலிருந்து சக்கரராஜனாக மூன்று திருக்கண்களுடன், எட்டுக் கைகளுடன், அக்னி மயமான கேசத்துடன் (ஜ்வாலாகேசம்) தோன்றி, ஆதவனின் ஆணவத்தை அடக்கி திரும்பவும் சூரியனுக்கு ஒளி தந்து, திவ்விய அருளுடன் திருக்காட்சி அளிக்கிறார்.
ஆதவனே சக்கரராஜனுக்குத் தனி கோயிலை நிர்மானித்து, பல உற்சவங்களை நடத்தி வருவதால் திருக்குடந்தை (கும்பகோணம்) பாஸ்கர க்ஷேத்திரம் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
இன்றும் காவிரியில் சக்கர தீர்த்தம் என்ற சக்கரப் படித்துறையில் உற்சவங்கள் முடிந்ததும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.
எல்லாக் கோள்களுக்கும் நாயகனான அந்தச் சூரியனே, இந்தத் தலத்தின் பெருமானிடத்தல் சரணாகதி அடைந்து பயன் அடைந்ததால், இந்தச் சக்கரராஜனைத் தூயமனத்துடன் வழிபடும் அடியார்களின் எல்லாத் துன்பங்களும் சகல கிரக தோஷங்களும் விலக்கப்பட்டு, பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன என்பதை இன்றும் நேரடியாகக் காணலாம்.
சக்கரராஜனுக்குத் திருத்துழாய் புஷ்பங்களோடு வில்வ அர்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்யப்படுவது தனிச்சிறப்பு.
திருமாலின் மேன்மையை, தெளிவாகத் தம்முடைய பாசுரங்கள் மூலம் நிலைநாட்டியவர், சக்கரத்தாழ்வாரின் அம்சமாக அவதரித்த திருமழிசைப்பிரான்.
இவர் பரமனின் ஆழியைத் தரித்த ஆழியானாகத் திருவுள்ளம் கொண்டு, அமரர்கள் அதிபதியாகக் கண்டு நிரூபித்தார். அவர் அருளிய திருப்பாசுரங்களில் ஒன்று.
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கள் மாலையாய்
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ! நின்
நாம தேயம் இன்ன தென்ன வல்ல மல்ல மாகிலும்
சாம் வேத கீதனாய் சக்ரபாணியில்லையே
சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆனதால் சக்கரதாரி, சக்கரபாணி எனும் திருநாமங்களையும் பெற்றுள்ளார் திருமால். திருக்குடந்தையில் ஆழியாழ்வான் அம்சம் கொண்டு அரிச்சாவதாரமாகக் கோயில் கொண்டுள்ள சக்கரபாணியைப் போற்றும் பாசுரம்.
தோடவிழ் நிலம் மணங்கொடுக்கும்
ஆழ்புனல் சூழ்குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கமுமேந்திப்
பாடகமெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தோடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்குதோளும்
அச்சோ ஒருவர் அழகியவர்.
ஸ்ரீ சக்கரபாணி சுவாமி திருக்கோயில்
கும்பகோணம்
மூலவர்: சக்கரபாணி
தாயார்: விஜயவல்லி தாயார்
தீர்த்தம் சக்கர படிதுறை
காவிரி ஆறு
ஸ்ரீசக்கரம் திருமாலின் அம்சமாக இருப்பதால் இச்சுதர்சனரை சக்கர ரூப விஷ்ணு எனவும் குறிப்பிடுவர்.
பஞ்சாயுதங்களுக்கும் அரசனாக விளங்குவதால் அவருக்கு ஹேதிராஜன், சுதர்சன ராஜன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன.
திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான சக்கரத்திற்கு உரிய சுதர்சனர் உக்கிர வடிவானவர்.
இவரே சக்கரத்தாழ்வார், சக்கர ராஜர், சக்கரபாணி சுவாமி என வழிபடப்படுகிறார்.
புருஷார்த்தங்கள் நான்கினையும் வழங்கும் வள்ளலாக திகழும் ஸ்ரீசுதர்சனர் முக்கிய மூர்த்தியாக நின்று அருள்பாலிக்கும் கோவிலே சக்கரபாணி சுவாமி கோவில் என வழங்கப்படுகிறது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.
அமிர்தபுஷ்கரணி
கோவில் உள்ளே உள்ள தீர்த்தம்
பிரகாரத்தின் உள்ளேயே ஈசான்ய மூலையில் குளம் உள்ளது.இதில் தெப்போத்சவம் நடைபெறுகிறது.
அமிர்தபுஷ்கரணி தீர்த்தம் காசியை விட மகிமை கூடியது
ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.
பிரம்மாவும், அக்னி மற்றும் மார்க்கண்டேயர் இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர்.
தல சிறப்பு:
இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார். கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். .
வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில்.
இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது.
மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.
படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.
கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.
ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.
அவரின் எநிரே கருட பகவான்.
உட்பிரகாரத்தில் விநாயகர் சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார்.
யோக நரசிம்மர் மற்றும்
வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
உலம் உருக வேண்டினால் வேண்டுபவை மட்டுமின்றி வேண்டாததையும் அருளும் தாய்
நம் கண்ணீரை உடனடியாக துடைக்க ஓடோடி வரும் மகாலெட்சுமி.
தல வரலாறு:
ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்க பாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது.
பிரம்மன் ஸ்ரீசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.
இந்த சக்கரம் சூரியனை விட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான்.
தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான்.
உடனே சக்கரம் அவனது ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிகொண்டது.
சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்ற வனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான்.
வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீசக்கரராஜன் அருட்காட்சி தத்தார்.
சூரியனின் கர்வத்தை அடக்கி
சூரியனுக்கு ஒளி கொடுத்தார். . இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியன்.
கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும்.
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோஷங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும்.
.
சுதர்சனம்
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு.
அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம்.
சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான்.
இதன் சிறப்பைச் சொல்லும்போது, ‘எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி’ என்பார்கள் பெரியோர்.
‘ஆதிமூலமே’ என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்தச் சக்கரத்தாழ்வார் தான். சினங்கொண்ட துர்வாசரால் ஏவப்பூட்ட பூதத்தை வீழ்த்தி, மன்னன் அம்பரீஷன் நினைக்கும் முன்பே, துர்வாசரையும் துரத்திச் சென்றவர் இந்த சுதர்சனர்.
சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள்…உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர் ஸ்ரீசுதர்சனர். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.
ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-
ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||
மூர்த்தியை, ‘ஷோடசாயுத ஸ்தோத்திரம்’ சொல்லி வழிபடுவது மிகச்சிறந்த பலனைத் தரும். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். இதைப் போன்றே, ஸ்ரீகூர நாராயண ஜீயர் அருளிய சுதர்சன சதகமும் விசேஷமானது.
செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும்.
இக்கோயிலை பக்தியுடன் பிரதட்சணம் செய்தால் திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி இருப்பதால் பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வஅர்ச்சனையும் செய்யப்படுகிறது
சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்தால் மிகுந்த நலன் தரும்.
திருவிழா:
மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருடசேவை நடக்கும். அட்சய திருதியை அன்றும், ரத சப்தமி அன்றும் திருக்கல்யாணம் நடத்தப்படும். வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
No comments:
Post a Comment