Friday, September 11, 2020

பெரியவாளின் ஆங்கில மேதாவிலாஸம் 2

Concluding Chapter
ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 53
[பெரியவாளின் ஆங்கில மேதாவிலாஸம் 2 – Bhart – குருவி – computer – airport – about]

இந்தியா ஸ்வதந்த்ரம் அடைந்த பின், ஒருநாள் பெரியவா ஸன்னிதியில் ஒரு தேஸீய ப்ரச்சனை பற்றி பேச்சு வந்தது.

“இந்தியா என்பது, பிற நாட்டினர் தந்த பெயர். பரதக் கண்டம், பாரதம்…. இதுதான் நம் முன்னோர்கள் இட்ட பெயர். எனவே, நாம் ஸ்வதந்த்ரம் அடைந்ததும், பாரதம் என்றே பெயரை திருத்த வேண்டும்” என்று ஸ்வதந்த்ர இயக்கத்தின் தலைவர்கள் கருதினார்கள்.

ஆனால், நம் நாட்டிலும், மற்றும் உலக நாடுகள் எல்லாவற்றிலுமே… வெகு காலமாக இந்தியா என்ற பெயரே நிலைத்து விட்டதால், இந்தியா என்ற பெயரையும் தாற்காலிகமாக வைத்துக் கொண்டு, பாரதம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்; பின்னர் பாரதம் என்ற பெயர் புழக்கத்தில் வந்ததும், இந்தியாவிலாவது, பாரதம் என்ற பெயரை நிலைக்குமாறு செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படிதான் நம்முடைய அரஸியல் நிர்ணய ஶாஸன தொடக்கத்தில்….. “India that is Bharat”…… “இந்தியா என்பதான பாரதம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

பெரியவாளுடைய ஸந்நிதியில் இந்த விஷயம் பற்றி பேசப்பட்டது.

பெரியவாளின் திருவுளத்தை நன்கு அறிந்தவரும், நம்முடைய தேஸீய ஸமயாசார கலாச்சாரங்களில் மிகுந்த பற்று உடையவருமான ஒருவர் மிகவும் கவலையோடு கூறினார்……

“வெறுமனே பேர்ல மட்டும் பாரதம்-னு சொல்லிண்டு இருக்கறதுனால என்ன ப்ரயோஜனம்? ஜனங்கள் வர வர முழுக்க… western life style-களுக்கே தங்களை மாத்திண்டு வரா! அத மாத்தி, அவாளை பாரதீயமாக்கறதுக்கு எந்த முயற்சியும் எடுக்காம, அரஸாங்கமும் அதுலயேதான… அவாளை மேல மேல encourage பண்றது?….”

பெரியவா அழகாகச் சிரித்துக் கொண்டே…….

“ஒண்ணு பண்ணலாம்! Constitution-க்குத்தான், தெனோமும் ஒரு amendment கொணுந்துண்ட்ருக்காளே! அப்டி இன்னொரு amendment பண்ணிப்பிடலாம்!….. ”

எல்லோரும் உன்னிப்பாக பெரியவா சொல்லப் போவதை கேட்க ஆயத்தமானார்கள்…..

“India that is anything but Bharat!… [பாரதமாக இன்றி, வேறெதுவாகவும் இருக்கும் இந்தியா]…ன்னு amendment பண்ணிடலாம்”

ஆங்கிலத்தில் ஒரே போடாக போட்டுவிட்டு சிரித்தார்.

தன்னுடைய பாரிஷதர் உளறியதை, திருத்திய அழகை பார்ப்போம்….

பெரியவா தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்துவிட்டு, பெரியவாளுடன் ஆன்மீகத்தில் தனக்கிருந்த ஸந்தேஹங்கள், ஹிந்து தர்மங்கள் என்பது பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்.

அந்த ஸமயத்தில், சில நரிக்குறவர்கள் கூட்டமாக, வாஸல் பக்கமாக ரோடில் போய்க் கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசிய, கூச்சல் பாஷை… உள்ளே வரைக்கும் கேட்டதால், அந்த வெள்ளைக்காரர் திரும்பி அவர்களைப் பார்த்தார்.

இந்தியாவில், இந்த மாதிரி ஒரு உடையில், குடும்பம் குழந்தை குட்டி, டால்டா டப்பாவோடு போகும் கூட்டத்தைப் பார்த்ததும், அவருக்கு ஆஶ்சர்யம்!

” Who are they?..”

பக்கத்தில் இருந்த பாரிஷதரைக் கேட்டார்.

நம்மூரில் நரிக்குறவர்களை அநேகமாக ‘குருவிக்காரா’ என்றுதானே சொல்லுவோம்?

பாரிஷதருக்கோ இங்க்லீஷ் தெரியாது!

ஆனால், அவர் அதையெல்லாம் கொஞ்சமும் mind பண்ணவேயில்லை!

எனவே படு ஸ்டைலாக “They are குருவி fellows ” என்றார்.

பாரிஷதரின், குருவிக்காராளுக்கான தடாலடி தங்க்லீஷ் translation-ஐ கேட்டுக் கொண்டிருந்த பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

லேஸாக சிரித்துக் கொண்டே “ஏய் !….”ஜிப்ஸீஸ்”ன்னு சொல்லுடா !” என்று அமரிக்கையாக திருத்தினார்.

மடிஸஞ்சியாக தோற்றமளிக்கும் பெரியவாளுக்கு, ஒருவேளை English-ல் பேசினால் புரியாமல் திண்டாடுவாரோ என்ற “திவ்யமான” எண்ணத்தில், அவரிடம் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டு முழித்தவர்களும் உண்டு!

பெரியவாளின் பக்தர் ஒருவர் ஒரு பெரிய நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த பின், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்திருந்தார்.

“இப்போ… எதுல இருக்க? என்ன வேலை பாக்கற?”

“நா…. கணக்கு போடற யந்த்ரங்களுக்கான பேப்பர் தயாரிக்கற கம்பெனில இருக்கேன்”

பெரியவாளுக்கு புரிய வேண்டுமே என்று, ரொம்ப கஷ்டப்பட்டு தமிழில் மொழி பெயர்த்து சொன்னார்.

“அதுக்கு ஏன் இவ்ளோ…. நீட்டி மொழக்கிண்டு, ஶ்ரமப்பட்டு சொல்ற? நறுக்குனு… computer stationery-ன்னு சொல்லிட்டு போயேன் !”

சிரித்துக்கொண்டே கூறினார்….. ஜகதாசார்யன்!

யுத்த காலத்தில், ஏரோப்ளேனிலிருந்து குண்டு போடுவார்கள். நம் பெரியவா ஒரு ஏர்போர்ட் அதிகாரிக்கே குட்டியாக ஒரு குண்டு மாதிரி ஒன்றை போட்டதைப் பார்ப்போம்….

பெரியவா மெட்ராஸில் முகாமிட்டிருந்த போது, பாதயாத்ரையாக மீனம்பாக்கம் வழியாக வந்து கொண்டிருந்தார்.

அவர் வருவதை கேள்விப்பட்ட விமானநிலைய அதிகாரிகள், பெரியவாளை வழியிலேயே ஸந்தித்து, விமானநிலையத்தின் அருகில் உள்ள, விமான நிலைய ஆய்வு கூடத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுப் பெரியவாளும் அங்கே விஜயம் செய்தார்.

பல்வேறு அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு பெரியவாளை அழைத்து சென்று, பல் வேறு நுணுக்கங்களை விளக்கி கொண்டிருந்தனர்.

ஒண்ணாம் க்ளாஸ் குழந்தைகள், படம் போட்ட புஸ்தகத்தை வெச்சிண்டு, “பாத்தியா….இதுதான் ஆப்பிள், இது யானை…என்று, doctorate வாங்கின அப்பாவுக்கு, explain பண்ணினால், அப்பாவும் அந்த குழந்தை மேல் உள்ள அன்பால், ‘தான், முன்னபின்ன ஆப்பிளையும், யானையையும் பாத்ததே கிடையாது’ என்ற மாதிரி படு ஸீரியஸாக கேட்பது போல, பெரியவாளும் அவர்கள் சொல்வதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டார்.

மேல்நாடு சென்று பயிற்சி பெற்ற இளமை துடிப்புள்ள ஒரு விஞ்ஞானி தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆர்வமுடன் விளக்கமளிக்க முன்வந்தார்.

“ப்ளேன்… விண்வெளில… ரொம்ப height-ல போகப் போக, ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு போனதும், விமானத்தோட சத்தம்…. பூமியை அடையாது”

பெரியவா, தன்னுடன் வந்த பாரிஷதர்களும், பக்தர்களும் விளக்கமாக தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக “எதுனால அப்டி சொல்றே?…” என்பது போல் ஓரிரு கேள்விகள் கேட்ட போது, அந்த விஞ்ஞானி, அதை scientific-ஆக விளக்கினால் ‘பெரியவாளுக்கு புரியாது’ என்று எண்ணியதோடு, அதைப் புரிய வைக்க, ஸரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல், பாவம், மென்று முழுங்கினார்.

பெரியவா நம்மிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்பது, நம்முடைய மண்டைக் களிமண்ணை கிளறி, கொஞ்சம் காற்று புக, இடம் குடுக்கத்தான்!

அந்த அதிகாரியின் கஷ்டத்தை புரிந்து கொண்ட பெரியவா, கொஞ்சமும் அலட்டிக்காமல், plane-லேர்ந்து விழும் குண்டு மாதிரி கேட்டார்….

” நீ… சொல்ல வர ஒஸரம்….. stratosphere-தானே? இல்லியோ?”

( இல்லியோவாமே! ஸ்வாமிகளே! நீங்க சொன்னதுக்கப்பறம் வேற இன்னொண்ணு இருக்கவா போறது?)

அந்த இளம் விஞ்ஞானியின் முகம் சட்டென்று வெளிறி போயிற்று.

“ஆ…ஆமா” என்று கூறிவிட்டு, பெரியவா பாட்டுக்கு, இது ஸம்மந்தமாக வேற ஏதாவது ஸங்கடமான கேள்விகளை கேட்டு, தன்னை அந்தரத்தில் பறக்கவிட்டுவிடப் போகிறாரே என்ற அச்சத்தில், அந்த இடத்தை விட்டு மெல்ல ஒதுங்கிகொண்டார்.

பெரிய College Professor-களுக்கும், அவர்களுடைய சிறு வயஸில் school head master-ஐ நினைவு படுத்திக் கொள்வது போல், பெரியவாளே head master போல், கேள்வி கேட்டு முழிக்க வைப்பார்…..

ஒருநாள் மாயவரம் காலேஜிலிருந்து இரண்டு பேராசிரியர்கள், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தனர்.

ஒருத்தர்….. Commerce Professor

இன்னொருத்தர்….. ஸம்ஸ்க்ருதம்.

பெரியவா commerce-ஐ பார்த்துக் கேட்டார்….

“ஒனக்கு எந்த ஊரு?”

“வால்டேர்……..”

“இங்கேந்து எவ்ளோவ் தூரம்?”

“about……1000 miles”

“about-ட்டா?……nearly-யா?……..”

ஆஹா! கிண்ட ஆரம்பித்தாகிவிட்டது!

Commerce முழித்தார்…!

ஸரியாக பதில் சொல்லத் தெரியவில்லை.

பெரியவாளே விளக்கினார்…..

“about…ன்னா, ஏறத்தாழ..ன்னு அர்த்தம். அதாவுது…. கொஞ்சம், கூட-கொறைய இருக்கலாம்…ங்கற மாதிரி. nearly-ன்னா, கிட்டத்தட்ட..ன்னு அர்த்தம். ஆயிரம் மைலுக்கு கீழன்னு அர்த்தம். அப்டித்தான?”…………

Commerce என்ன சொல்லுவார்?

அவருக்கே அதன் அர்த்தம் இப்போத்தானே தெளிவானது!

அடுத்து ஸம்ஸ்க்ருதம்……….

“நீ என்ன படிச்சிருக்க?”

“Sanskrit M.A “……

“அதாவுது……..ஸம்ஸ்க்ருதத்தைப் பத்தி படிச்சிருக்க! ஸெரி, அப்போ….. ஸம்ஸ்க்ருதம் எப்போ படிக்கப் போற?”

ஸம்ஸ்க்ருதம் திகைத்தார்!

பெரியவாளைத் தவிர யாரால் புரியவைக்க முடியும்?

“ஸாஹித்யம், வ்யாகரணம்..ங்கற மாதிரி “ஶிரோமணி” படிச்சாதான், ஸம்ஸ்க்ருதம் படிச்சதா ஆகும்!
History M.A, தமிழ் M.A ..ன்னா, History-யப் பத்தி, தமிழைப் பத்தி படிச்சதாத்தான… ஆகும்?”

வாஸ்தவம்தானே! புரியாத கல்வி நுட்பங்களை, அன்று அந்த இரண்டு பேராசிரியர்களும் பெரிய மஹா மஹா பேராசிரியரான ஜகத்குருவிடம் கற்றுக் கொண்டனர்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

No comments:

Post a Comment